நீராவியடி என்றால் நினைவுக்கு வந்து காட்சி தந்து நினைவுகளை மீட்டெடுத்து கதைசொல்ல வைக்குமிடங்களாய்; நீராவியடி பிள்ளையார் கோயில்.' செங்கை ஆழியான்' வீடு.சந்திக்கடை(ஐயாத்துரை கடை)தாழ்வாரத்தை உயர்த்தி இரண்டு பக்கமும் முட்டு வைத்து நடத்திய வடிவான சின்னக்கடை.பக்கத்தில சினிமா போஸ்ரர் ஒட்டிய பிரகாஸ்லோன்றி.கே.ஆர்.மில்(ஆலை) பிள்ளையார் கோயில் பின்வீதி.அந்த வெளி.அந்தக்குளம். குளத்தைச்சுற்றிப்பாதுகாப்பாக 4 பக்கமுமாய் அணைக்கட்டுகள்.அருகே வாசிகசாலை.
அந்த அரசமரம்.அதற்குள் அமர்ந்த அழகான அந்த சின்ன வைரவர்.அந்த வைரவரை வைத்துப்பராமரித்த நரைத்த நீண்ட தாடி கொண்ட முத்தையா.முத்தையா என இருவர் அயலில் வாழ்ந்தார்கள். இரண்டாம் பேர்வழியான கோவணத்துடன் குளத்துக்குள் இறங்கி குளிக்கும் இவர் கொட்டாக்கு முத்தையா என பேசப்பட்டார். அரசமரத்திற்குப்பின்னால் ஒடுக்கமான ஒரு கால்வாய்.அதற்குள் மழைக்காலத்தைத்தவிர நீர் வழிந்து ஒடுவதென்பது அரிது.அநேகமாக,அதற்குள் நாம் இருபக்கக்கட்டுகளிலும் எதிரும் புதிருமாக இருந்துகொண்டு கால்களை அதற்குள் நீட்டியபடி கதைத்துச்சுகம் காண்பது வழக்கம்.மார்கழியில் மழைநீர் வசந்தா ரெக்ஸ்டைல்ஸ் முன்றலில் தேங்கி நிற்காது இறங்கி கடைச்சுவாமி கோயில் ஒழுங்கைக்குள்தான் கூடுதலாக வழிந்து ஓடிக்கொண்டேயிருக்கும்.அதுகூட ஓர் அழகுதான்.
காற்று வீசும்.வீசும் காற்றும் சும்மா வராது.இலங்கை வானொலியிலிருந்து சுகமான இதமான பாட்டொன்றைத்தந்து மனசை இலேசாய் உரசிவிட்டுப்போகும். அரசமர இலைகள் சரசரக்கும். மார்கழியில் குளம் நிரம்பி வழியும்.சிலர் அதில் நின்றபடி சருவச்சட்டியால் அள்ளி உடம்பில் ஊத்திக் குளிப்பார்கள்.ஒருத்தர் மட்டும் பயமில்லாமல் நீந்துவார்.அவர்தான்'ராதா'.
நாங்கள் அவரை வேடிக்கை பார்ப்போம்.அநேகமாக அக்கால கட்டத்தில் நீராவியடியைச்சுற்றி வாழ்ந்த அனைவரும் கூடுமிடம் நீராவியடி வாசிகசாலை. வாசிகசாலையின் தலைவராக பரமானந்தம். காரியதரிசியாக மோகன்.பக்கபலமாக ராதா மற்றும் யோகானந்தம். சமூகத்தின்மீது இவர்கள் கொண்ட பற்றாலும்,பங்களிப்பாலும் விடிந்தால் பொழுதுபடும் வரைக்கும் மாறிமாறி வாசகர் கூட்டத்தின் வருகை நிரம்பி வழியும். பொதுவாக அயலட்டம்,நண்பர் கூட்டமெனக்கூடிவாழ அந்த அரசமரத்தடி எம்மை சந்தோசமாக வாழவைத்தது என்றே சொல்லலாம்.மொத்தத்தில் முக்கால்வாசி இந்துக்கல்லூரி இளசுகள் கூடுவதும் இங்குதான். குளத்தோடு சேர்ந்த வீட்டில் வாழ்ந்த 'பாலு'வின் முழுநாள் சந்தோசமும் இந்த வாசிகசாலையென்றும் சொல்லலாம்.
ஒவ்வொரு வருடமும் வைரவருக்கு ஒரு நாள் சிறப்பாக மாவிலை,தோரணம்கட்டி வடைமாலை சாத்தி,பொங்கிப்படைச்சு வைரவர் மடைபோட்டு, தேவாரம் பாடி,பூசை செய்து,வைரவரைக்கும்பிடுவோம். 'நாலு சுவற்றிற்குள் நாமடைந்த பரவசம்போல' நீராவியடி சன சமூக நிலையம் வாரி அள்ளித்தந்த சந்தோசம் சொல்லி மாளாது.அதற்குக்காரணம் சுத்திவர வாழ்ந்தவர்களின் ஒற்றுமை!
வாசிகசாலையைச்சுற்றி மணலும்,அந்தத்தெருவும் எப்பொழுதும் துப்புரவாக இருக்கும்.
முற்பகல் ஒளியும்
பிற்பகல் நிழலும்
மனதுக்கு நிறைவாய்
எம்மை நாடி வந்து
நித்தம்
நம் முற்றம் பதிக்கும்.
75 ஆம் ஆண்டு.அந்த ஆண்டில் சமூகசேவையாக பலரும் இணைந்து தெருக்கள்தொட்டு குளத்தையும் துப்புரவாக்கி,குளத்தின் நடுவே கமுகமரம் நட்டு, மரத்திலிருந்து குளத்தின் நான்கு மூலைக்கும் கயிறு கட்டிச்சோடிச்சு,கூடு கட்டி,அதற்குள் லைற்றும் பூட்டி,பிள்ளையார் கோயிலடிப்பின்வீதியில் மேடை போட்டு வெள்ளி விழா கொண்டாடினோம்.ஏன் தெரியுமா?நீராவியடி வாசிகசாலை ஆரம்பித்தது 1950 ஆம் ஆண்டு பிறவுண் ரோட் சந்தியிலுள்ள அமரசிங்கம் சயிக்கிள் கடையாக இருந்த இடத்தில்தான்.காலப்போக்கில் அது நீராவியடிக்கு இடம்மாறியது.25 ஆவது ஆண்டைக்கொண்டாடத்தான் 75 ஆம் ஆண்டு குளத்துக்குள் மரம் நட்டு,கூடுகட்டி அத்தனைஅலங்காரம்!குளத்தைச்சுத்தி ரியூப் லைற்றுக்களும் எரிய, வானத்தில நட்சித்திரங்களும் மின்ன,தண்ணிக்குள்ளால் சோடினையும், வெளிச்சக்கூடும்,ரியூப் லைற் வெளிச்சங்களின்ர விம்பங்களும் தெறிக்க விழாக்காண வந்திருந்த சனமெல்லாம் பார்த்து பூரிச்சுப்போனதை என்றைக்குமே மறக்கேலாது.எங்களால் முடிந்த அந்தக்காலத்தின்ர ஹைலைட் அதுதான் என்றும் சொல்லலாம்.
முதலாம் நாள் பிரவுன்றோட், நாவலர் றோட், கஸ்தூரியார் வீதி, ஐயாத்துரை கடைச்சந்தி, கடைசியாக நீராவியடி என மரதன் ஓட்டப்போட்டி. இரண்டாம்நாள் பறை முழக்கத்துடன் முடிவில் கடைச்சுவாமி கோயில் வீதியூடாக நீராவியடி வாசிகசாலை என வினோத உடைப்போட்டி. கடைசியாக 3ம் நாள் இரவு மேடையில் நாடகம்,கலாலயா இசைக்குழுவின் இசைக்கச்சேரி என வலுவானதும், திடமானதுமான திட்டங்கள் வகுத்து பார்த்தும்,கேட்டும்,ரசித்தும் கொண்டாடினோம்!
ஊருக்குள் எம்மைச்சுற்றி இருந்த வயலோ வாய்க்காலோ கோயிலோ குளமோ,இல்லை இதுபோன்ற அரசடியோ,வேப்ப மரத்தடியோ எதுவானாலும்,அல்லது கிளித்தட்டு விளையாடும் சிறு நிலமானாலும் இதுபோதும் என இருப்பதைக்கொண்டு கூடிக்குலாவி மகிழ்ந்தோமே!
எங்கே போனது எல்லாமே?
என்ன ஆனது அவற்றிற்கு?
நீராவியடி வாசிகசாலை என ஒன்றிருந்தது.
அதனருகே அரசமரம் ஒன்றும்,
அங்கே வைரவரும் இருந்தார் என்பதற்கு
அடையாளமாய் இன்னுமொரு
சின்னதாய் ஒரு அரசமரம் மட்டுமே
அங்கே தனியாக.
அதையும் அன்றைய
காரியதரிசி எங்கட மோகன்தான்
கொண்டு வந்து நட்டாராம்.
நெஞ்சார்ந்த நன்றி மோகன்.
2024 சித்திரையில்
ஊர் போனேன்.
நீராவியடியில் கால்
பதித்தேன்.
நண்பர்கள் கூடி
ஓடி விளையாடி
அவ்விடத்திலேயே காலாறி
அரட்டை அடிச்சுச்சிரிக்க வைத்த
அந்த அரசமரத்தடியும்
வாசிகசாலைக்கட்டிடமும்
வெட்டை வெளியாய்
வெறிச்சோடிப்போய்க்
கிடந்ததைப் பார்த்ததும்
என் கண்கள் கசிய
"பார்க்காமலே அன்றைய
பசுமை நிறைந்த நினைவுகளுடன்
வாழ்நாள்வரை வாழ்ந்திருக்கலாமே"
என்றது என் மனசு.