முன்னுரை

’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று தன்மைஅணி அணியாகும். தண்டியலங்காரத்தின் தன்மை அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.

தன்மைஅணி

எப்பொருளையும் அதன் இயல்பும் தன்மையும் மாறாமல் இயற்கையாகவும் உண்மைத் தன்மையுடன் விளக்குவது தன்மையாகும்.

“எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும்
சொன்முறை தொடுப்பது தன்மை ஆகும்”
(தண்டியலங்காரம் 2)

இதற்கு தன்மை நவிற்சி அணி என்ற பெயரும் உண்டு.

தன்மை அணியின் வகை

தன்மையணி பொருள் தன்மையணி, குணத்தன்மையணி, சாதித்தன்மையணி, தொழில் தன்மையணி என்று நான்கு வகைப்படும்.



“அதுவே
பொருள் குணம் சாதி தொழிலொடு புலனாம்”
(தண்டியலங்காரம் 3)

1. பொருள் தன்மையணி

தன்மையணி ஒரு பொருளிடத்து காணப்படும் பல்வேறு இயல்புகளை உள்ளது உள்ளவாறு காட்சிப்படுத்துவதாகும்.

கம்பராமாயணத்தில் வேடர்களின் தலைவனான குகனின் தோற்றம் குறித்து கூறும்போது, கழகம் அரைக்கால் சட்டை எனும் உடை அணிந்த துறைகளை உடையவன். கங்கை ஆற்றின் ஆழத்தைக் கண்டறிந்த பெருமையை உடையவன். இடுப்பிலிருந்து தொங்கவிடப்படும் தொங்கலிட்ட செந்நிறத் தோலை உடையவன். இடுப்பைச் சுற்றிக் கட்டிய ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட புலி வாலை உடையவன்.

“காழம் இட்ட குறங்கினன் கங்கையின்
ஆழம் இட்ட நெடுமையினான் அரை
தாழ விட்ட செந்தோலன் தயங்குறச்
சூழவிட்ட தொடு புலி வாலினான்”
(குகப்படலம் 640)

குகனின் பல விதமான தன்மைகள் குறித்து விரித்து உரைக்கப்பெற இது பொருள் தன்மையாயிற்று.

2.குணத்தன்மையணி

ஒன்றின் குண இயல்பை உள்ளவாறு விளக்குவது. கம்பராமாயணத்தில் நீலமாலை எனும் தோழி வில் முறிந்தது கண்டு சீதை இருக்கும் இடத்திற்கு வந்தால் வந்தவுடனே வழக்கம் போல, சீதையின் திருவடிகளை வணங்கவில்லை. மாறாக ஆரவாரம் செய்தாள். எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டவர்களாக ஆடினாள். பாடினாள். அதைக் கண்ட சீதை உன் மன மகிழ்ச்சியையும் அதற்கான காரணத்தையும் சொல்லுக என்றாள்.

“வந்து அடி வணங்கிலள் வழங்கும் ஓதையள்
அந்தம் இல் உவகையள் ஆடிப் பாடினள்
சிந்தையுள் மகிழ்ச்சியும் புகுந்த செய்தியும்
சுந்தரி சொல் எனத் தொழுது சொல்லுவாள்”
(கார்முகப்படலம் 671)

இராமனைக் காண வந்த மகளிரின் தன்மை குறித்து கூறும்போது, அந்த நகரத்துக்கு சிறந்த அணிகலன்கள் போன்ற அம் மகளிர் விரைந்து வந்த போது அவிழ்த்து தொங்கிய கூந்தலைப் பார்க்கவில்லை. மேகலாபரணங்கள் அருந்து விழுந்ததைக் கவனிக்கவில்லை. அவிழ்ந்து நழுவும் பூ போன்ற ஆடையைத் தழுவிப் பிடிக்கவில்லை. நுண்ணிடை நோவதை உணர்ந்து விரைந்து செல்லுதலை தாமதிக்கவில்லை. இவ்வாறு வருபவர் இராமன் வரும் இடத்தை நெருங்கினர். மேலும் நெருங்கி செல்ல கூட்டத்தில் புகுந்து வழியில் இருந்தவரை விலகுங்கள் என்று கூறி விலக்கிக் கொண்டு, தேனைப் பருக வரும் வண்டுகள் போல சூழ்ந்து கொண்டனர்.

“விரிந்து வீழ் கூந்தல் பாரார் மேகலை அற்ற நோக்கார்
சரிந்த பூந்துகில்கள் தாங்கார் இடை தடுமாறத் தாழார்
நெருங்கினர் நெருங்கிப் புக்கு நீங்குமின் நீங்குமின் என்று
அருங்கலம் அனைய மாதர் தேன் நுகர் அளியின் மொய்த்தார்”
(உலாவியற்படலம் 10 11)

மகிழ்ச்சியில் திழைத்த மகளிரின் குணம் குறித்துக் கூறப்பட்டுள்ளதால், இது குணத்தன்மையணி ஆகும்.

3.சாதித்தன்மையணி

பொதுத் தன்மையில் பல பொருட்கள் இருந்தாலும் ஒவ்வொரு பொருளிலும் பல இனங்கள் சாதிகள் இருக்காம். அத்தகு சாதியின் அடிப்படையில் ஒன்றின் இயல்பை விளக்குவது சாதித்தன்மையணி ஆகும். கம்பராமாயணத்தில் பரத்வாஜ முனிவர் கையில் குடையைப் பெற்றவன். நீண்ட திரி தண்டத்தை ஏந்தியவன். கமண்டலம் கை கொண்டவன். பெரிய ஜடை முடியை உடையவன். மானினது உரித்த தோலைப் போர்த்தவன். நல்ல மர நாரால் செய்யப்பட்ட ஆடையை உடுத்தவன். மயிர் நீண்டு தொங்கும் வடிவம் உடையவன். முக்தி நெறியை விரும்பும் ஒழுக்கம் உள்ளவன். நான்கு வேதங்களும் நடனம் செய்யும் நாவினை உடையவன்.

“குடையினன் நிமிர்கோலன் குண்டிகையினன் மூரிச்
சடையினன் உரி மானின் சருமன் நல்மரநாரின்
உடையினன் மயிர் நாலும் உருவினன் நெறி பேணும்
நடையினன் மறைநாலும் நடம் நவில் தரு நாவான்”
(வனம் புகுபடலம் 701)

முனிவரைப் பற்றி பாடியுள்ளதால் சாதித்தன்மையாயிற்று.

4.தொழில் தன்மையணி

பல்வேறு வகையான தொழிலை உள்ளவாறு விளக்குவது தொழில் தன்மையணி ஆகும். இராமன் சீதையுடன் வனத்தில் நடந்து வரும்போது பெண்ணே வண்டுகள் பெரிய அரும்புகளைக் குடைந்து ஒலி எழுப்புவனவாகி மெல்லிய பூக்கள் தாமே மலர்ந்துள்ள கோங்க மரத்திலே சுற்றிலும் மலர்ந்துள்ள பூக்களில் அமர்ந்து தேனை உண்டு, அங்கேயே உறங்குகின்றன. அவ்வாறு உறங்கும் வண்டுகள் என்று கூறுகிறார்

“முற்றுறு முகை கிண்டி முரல்கில சில தும்பி
வில் திருநுதல் மாதே மென் மலர் விரி கோங்கின்
சுற்று உறு மலர் ஏறித் துயில்வன சுடர் மின்னும்
பொன் தகடு உறு நீலம் புரைவன பல காணாய்”
(வனம்புகு படலம் 692)

இங்கு வண்டின் தொழில் தன்மை உரைக்கப்பெற்றது.

முடிவுரை

எப்பொருளையும் அதன் இயல்பும் தன்மையும் மாறாமல் இயற்கையாகவும், உண்மை தன்மையுடன் விளக்குவது தன்மையாகும். பொருள் தன்மையணி, குணத்தன்மையணி, சாதித்தன்மையணி, தொழில் தன்மையணி என்று நான்கு வகைப்படும்.இதன் மூலம் தண்டியலங்காரத்தின் தன்மைஅணியின் வகைகள் கம்பராமாயணத்தில் வருவது குறித்து நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

துணைநூற்பட்டியல்

1.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.

2.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம், சென்னை,2016.

3.நடராசன்.பி.ரா. தண்டியலங்காரம்,சாரதா பதிப்பகம், சென்னை,2012.

4.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R