- கவிஞர் இக்பால் அலி -
ஆய்வுச் சுருக்கம்
ஈழத்தின் சிறார் இலக்கியப் பரப்பில் கவிஞர் இக்பால் அலியின் வகிபாகத்தைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ‘இக்பால் அலியின் சிறார் இலக்கியத்தின் பாடுபொருள் மற்றும் எடுத்துரைப்பு பிற சிறார் இலக்கியங்களிலிருந்து வேறுபடுகிறது.’ என்ற கருதுகோளினைக் கொன்டு இக் கட்டுரை அமைகிறது. இக்கட்டுரைக்கு இதுவரை வெளிவந்துள்ள இக்பால் அலியின் சிறார் பாடல்கள் கொண்ட நூல்களை முதன்மைத் தரவுகளாகவும் இப்பாடல் நூல்களுடன் தொடர்புடைய திறனாய்வுகள், கட்டுரைகள் மற்றும் ஆய்வேடுகள் துணைமைத் தரவுகளாகவும் அமைகின்றன. கட்டுரையானது விபரிப்பு மற்றும் உள்ளடக்கப் பகுப்பாய்வு முறையியல்களைப் பின்பற்றியும் விளக்கப்படுகின்றது. ஈழத்து சிறார் இலக்கியத்தின் வழி மனித குலத்தின் மேம்பாடுதான் இக்பால் அலியின் வலியுறுத்தல் என்பதே இக்கட்டுரையின் முடிவாகும்.
பிரதான சொற்கள்: சிறார் இலக்கியம், அன்பு பெருக, மூன்று சக்கரக்காரன், குரங்குத் தம்பி, செல்லக் குட்டி
அறிமுகம்
இக்பால் அலி 1984ஆம் ஆண்டு முதல் இலக்கிய படைப்பாக்க முயற்சிகளில் ஈடுபட்டு வரும் ஒரு கவிஞர், எழுத்தாளர்இ ஊடகவியலாளர், மானுட சமத்துவச் சிந்தனையை கலை இலக்கியங்களின் வழி முன்னெடுத்து வருபவர். இவர் இலங்கை சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும் தொழில் நிமித்தம் காரணமாக பறகஹதெனிய மற்றும் கண்டியை வாசிப்பிடமாகவும் கொண்டவர். இலக்கிய உலகிற்கு இக்பால் அலியை அறிமுகம் செய்தவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் துரைமனோகரன் ஆவார். குறிப்பாகஇ பேராசிரியர் துரைமனோகரன் எழுதிய ‘இலங்கையின் இலக்கிய வளர்ச்சி’ என்ற நூலிலும் இக்பால் அலி வெளிக்கொணர்ந்த பல நூல்களுக்கு அவர் எழுதிய அணிந்துரைகளிலும் இதனை அறியலாம்.
சமகாலத்தில் சிறார் குறித்து அதிகம் பேசுகின்ற துறைகளுள் சிறார் இலக்கியத்திற்கும் தனியிடம் உண்டு. இத்தகைய சிறார் இலக்கியம் குறித்துப் பேசுகின்ற கவிஞர் இக்பால் அலியின் பாடல்கள் பெரும்பாலும் சிறார்கள் தங்களுடைய சூழலில் அனுபவிக்கின்ற சமூகம் சார்ந்த பிரச்சினைகளை மையப்படுத்தியதாகவும், அவர்களின் எதிர்கால செயலாக்க மேம்பாட்டை நோக்கியதாகவும் இன ஒருமைப்பாட்டை மேம்படுத்தக் கூடியதாகவும் தார்மீக விழுமியங்கள் மற்றும் அறிவியல் சார்ந்ததாகவும் அமைந்துள்ளன. இவரின் ‘நான் மூன்று சக்கரக்காரன்’ என்ற சிறுவர் பாடல்கள் (2002)இ ‘அன்பு பெருக’ என்ற சிறுவர் பாடல்கள் (2002), ‘நல்லதொரு பயணம்’ என்ற சிறுவர் கதைகள் (2002), ‘குரங்குத் தம்பி’ என்ற சிறுவர் பாடல்கள் (20023); ஆகிய நான்கு நூல்கள் வெளிவந்துள்ளன. இவரது சிறார்களுக்கான ஐந்தாவது நூலாக சென்னை தமிழ்த் தொண்டன் பைந்தமிழ்ச் சங்கம் உலகளாவிய ரீதியில் 100 கவிஞர்களிடமிருந்து தலா 50 மழலைப் பாடலைகளைப் பெற்று ஐந்தாயிரம் மழலைப் பாடல்கள் கொண்ட தொகுப்பு நூலை 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டது. இது ஒரு இரட்டை நோபல் உலக சாதனைத் தொகுதி ஆகும். இதில் ‘செல்லக் குட்டி’ என்ற பெயரில் இக்பால் அலியினுடைய 50 பாடல்களும் இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவரது படைப்புக்கள் பற்றி இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை மாணவியர்களான எம். எப். எப். பர்ஹத் ‘இக்பால் அலியின் கவிதைகள் - ஓர் ஆய்வு’ என்ற தலைப்பிலும்இ பாத்திமா அஸ்மா ‘இக்பால் அலியின் சிறுவர் இலக்கியப் பணிகள் - ஓர் ஆய்வு’ என்ற தலைப்பிலும் ஆய்வேடுகள் சமர்ப்பித்து பட்டம் பெற்றுள்ளனர் என்பதும் மனங்கொள்ளத்தக்கதாகும்.
சிறார் இலக்கியம்
இலக்கியம் என்பது காலம் காட்டும் கண்ணாடி என்பர். அது நம் வாழ்க்கையின் நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டும் குறிக்கோளினை உடையது. ஒவ்வொரு காலத்திலும் ஏதாவது ஓர் உணர்வு மேலோங்கி நிற்கும். இதனைக் ‘கால உணர்வு’ என்பர். இத்தகைய இலக்கியத் தன்மை கொண்ட, சிறார்களுக்கு பயன்படும் வாழ்வியல் கருத்துக்களை இக்பால் அலி சித்திரித்துள்ளார். அதிலும் சிறாரின் இரசனை, ஆர்வம், நற்பண்பு மற்றும் அறிகைசார் அம்சங்களைத் தூண்டும்; கருத்துக்களைக் கொண்ட பெருமளவிலான பாடல்களேயே தனது சிறுவர் பாடல்;களில் பல்சுவையுடன் படைத்துள்ளார். அதிலும் குறிப்பாக, முன்பள்ளி சிறார்களுக்கும் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கும் மிகப் பொருத்தமான பாடல்களை படைத்துள்ளார். சிறார்களுக்கு புலக்காட்சி ஒழுங்கமைப்பு(புநவயடவ) ஏற்படுவதற்கும் மானுடவியல் மேம்பாட்டை முன்னெடுப்பதற்கும் பயன்படும் பாடல்கள் இவர் எழுதிய நூல்களில் காணப்படுகின்றன. இவர் ஆரம்ப காலத்தில் எழுதிய சிறுவர் பாடல்களில் சில இசையமைக்கப்பட்டு கல்வியற் கல்லூரிகளிலும் பொது வெளிகளிலும் பாடப்பட்டு வருகின்றன. இதனால் இக்பால் அலி சிறார் இலக்கியத்தில் மேற்கோள் ஆனார். இவரது படைப்புப் புதுமை குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தேசிய பத்திரிகைளிலும் ஆய்விதழ்களிலும் பல்கலைக்கழகங்களில் ஆய்வேடுகளாகவும் வெளிவந்து அவரை ஈழத்தின் சிறார் இலக்கியப் பரப்பில் முக்கியமான கவிஞர் என்ற அடையாளத்திற்கு உரியவராக்கியுள்ளது.
தமிழில் சிறுவர் இலக்கியம் குறித்து நோக்குமிடத்து இருபதாம் நூற்றாண்டு சிறுவர் இலக்கியத்திற்கு பொற்காலம் எனலாம். இந்நூற்றாண்டைப் பொறுத்தவரை தமிழகத்தில் சிறுவர் இலக்கிய முன்னோடி கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை ஆவார். இவர் 1901இல் சிறுவர் பாடல்களை எழுதத் தொடங்கினார். இவரின் பின் மகாகவி சுப்பிரமணி பாரதியார் 1915இல் பாப்பா பாட்டை எழுதி ‘ஞானபானு’ என்னும் இதழில் வெளியிட்டார். கவிமணியே சிறுவர் விரும்பும் பொருள்களை பாடுபொருளாக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் (த. துரைசிங்கம், ஈழத்தில் சிறுவர் இலக்கியம்இ 2012:40).
சிறுவர் இலக்கியம்; என்பது பேசத் துவங்கும் குழந்தைகள் முதல் சுமார் பதினான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கான இலக்கியம் எனலாம். ஏழு வயது வரையிலானோர்க்கான இலக்கியத்தை குழந்தை இலக்கியம் என்றும் அதற்கு அதிகமான வயதினருக்கானதை சிறுவர் இலக்கியம் என்றும் வகைப்படுத்துவர். இரண்டு வகையிலானோருக்குமான தேவை, வடிவம், களம், மொழி, ஆகியவை நுட்பமாக மாறிவிடும். ஆனாலும் இவை இரண்டும் சிறுவர் இலக்கியம் என்றே பரவலாக வழங்கப்படுகிறது (பாத்திமா அஸ்மா, இக்பால் அலியின் சிறுவர் இலக்கியப் பணிகள் ஓர் ஆய்வு, 2023:1).
2002ஆம் ஆண்டில் இக்பால் அலி இந்த இரு வகையிலான இலக்கியங்களையும் தழுவிய பாடல்களையும் அதற்குரிய சொல், வாக்கியம், பத்திகளின் அமைப்பு ஆகிய உத்திகள் கொண்டமைந்த சிறுவர் பாடல் நூல்களை வெளிக்கொணர்ந்தார். இக்பால் அலியின் சிறுவர் இலக்கிய பாடல் நூல்களின் வரவையடுத்து அறிவியல் சார்ந்த பாடல்கள் ஈழத்து இலக்கியப் பரப்பில் பெருமளவிலே முனைப்பு பெற்றன. ஈழத்து சிறுவர் இலக்கியத்தில் திருப்புமுனையாகத் திகழும் இக்பால் அலி காத்திரமானதோர் சிறுவர் இலக்கியத்தைப் படைத்த பெருமைக்குரியவராகிறார். நவீன கவிதைத் துறையில் ஈடுபாட்டைக் கொண்டிருந்த இவர் சிறார் இலக்கியத்தில் பொழுது போக்கான வேடிக்கைப் பாடல்களையும்(டுiஅநசiஉம) இயற்கையினையும் பாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில் சிறார்கள் அன்றாடம் எதிர்நோக்கும் சவால்களையும் அவலங்களையும் எடுத்துக் காட்டும் வகையில் பாடல்களை எழுதினார். 1984ஆம் ஆண்டுகளில் இலக்கிய உலகிற்குப் பிரவேசித்தாலும் 2000ஆம் ஆண்டுக்கு பிற்பாடு நவீன அறிவியல் சார்ந்த விடயங்களை பாடுபொருளாகக் கொண்டு சிறார்களுக்கு உகந்த பாடல்களை வாழ்வியல் உணர்வுகளுடன் படைத்தவர்களுள் இக்பால் அலிக்கும் தனிச்சிறப்பான இடம் உண்டு.
நான் மூன்று சக்கரக்காரன்
2002ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ‘நான் மூன்று சக்கரக்காரன்’ என்ற சிறுவர் பாடல்கள் தொகுதி வெளிவந்தது. இது கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் ஏழாவது வெளியீடாகும். இந்த தொகுதியில் மரபும்இ புதுமையும் கலந்து பரந்த பரப்பினைச் சுட்டிக் காட்டக் கூடிய பதினெட்டுப் பாடல்கள் உள்ளன. சிறார்களின் வயதையும்இ மனப்போக்கையும் அனுசரித்துப் பாடல்கள் புனையப்பட்டுள்ளன. குறிப்பாக குழந்தைகளின் உளமறிந்து குழந்தைப் பருவத்தின் புலன் வளர்ச்சி. விவேக வளர்ச்சி. சமூக வளர்ச்சி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளதால் இப்பாடல்களை பள்ளி செல்லும் சிறார்கள். ஆசிரியர்கள் யாவரும் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது. மொத்தத்தில்; குழந்தைப் பருவத்தின் அறிவு. திறன். மனப்பான்மை விருத்திக்கு இந்நூல் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை கவிஞருக்கு குழந்தை உளவியலிலுள்ள ஈடுபாட்டை புலப்படுத்துகின்றது. மேலாக. யுத்த கால அனுபவங்களின் வழி குருதி கசியும் மொழிப்பாட்டாகவும். சமாதானத்திற்குரிய எதிர்வுகூறலாகவும். சமகால தொழில் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கும் ஒரு பொதுவான பாடல் தொகுதியாகவும் கொள்ளத்தக்கது. அதே சமயம் ஈழத்து இலக்கியப் பரப்பில் இப்பாடல்கள் ஒரு வித்தியாசமான முறையியலைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை இக்பால் அலியினது சிறார்கள் சார்ந்த பார்வையின் அகலத்தினை எடுத்துக் காட்டுகின்றன.
‘கவிப்பிரவாகம்’ என்ற கலை இலக்கிய சஞ்சிகையில் ‘தற்கால சிறுவர் பாடல்களில்’ என்ற தலைப்பில் முனைவர் கே. ரகுவரன் இக்பால் அலியின் ‘நான் முன்று சக்கரக்காரன்’ நூல் பற்றி குறிப்பிடும் போது 'இனங்களுக்கிடையிலான பகைமை உணர்ச்சியே இந்நாட்டின் இன்றைய சாபக்கேடு. எந்த மன உணர்வும் இளம் வயதிலேயே ஆழப் பதிந்து விடுகிறது. ‘இளமையிற் கல்வி சிலையில் எழுத்து’ என்றும் ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா’ என்றும் ‘தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்றும் வழங்கும் தொடர்கள் அனுபவபூர்வமான வார்த்தைகள்.
--------- பகைமையுணர்ச்சியிலேயே தோய்ந்து விட்ட முதியவர்கள் சமாதானம் பற்றிப் பேசுவதெல்லாம் வெறும் வாய்வார்த்தையே. அடி மனதின் பகைமையுணர்ச்சி அவர்களை ஒரு நிலைக்கப்பால் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதை தவிர்க்க முடியாததாக்கிவிட்டது. ஆக, இளஞ்சந்ததியிடம் இருந்தே உண்மையான சமாதான உணர்வு வெளிவரச் செய்வதற்கு வாய்ப்புள்ளது. அதைச் செய்வதற்கான அத்திவாரத்தை இடுவதில் இக்பால் அலி அதிக கரிசனை காட்டுபவராக விளங்குகிறார்.
இனப்பிரச்சினை எங்கள் நாட்டுக்கு அறிமுகப்படுத்தி விட்ட புதிய விடயங்கள் பல. அவற்றில் பெரியவர்கள் தாம் பாதிக்கப்படுகின்றார்கள் என்று சொல்வதற்கில்லை. சின்னஞ் சிறார்களும் பாதிக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட சிறார்களின் உள உணர்வுகளையும் இக்பால் அலி பதிவு செய்ய முனைகிறார். பிரச்சினை நிறைந்த சூழலுக்குள்ளேயே பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அகதிமுகாம், சோதனைச் சாவடி முதலானவையெல்லாம் ஒரு நாட்டின் இயல்பான அம்சங்கள் என்று கூறப்படலாம். அந்த ஆபத்திலிருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். அந்த வகையில் சோதனைச் சாவடி, அகதி முகாம் என்பவற்றுக்கும் ஒரு நல்ல சமூகத்துக்கும் உள்ள இயைபின்மையை, அவை இல்லாதொழிக்கப்பட வேண்டியன என்ற உண்மையை சின்னஞ் சிறார்களின் உளத்தில் பதிய வைக்க வேண்டும் என்பது இக்பால் அலியின் கருத்தாக இருக்கிறது என்கிறார் (கவிப்பிரவாகம், 2002:31-40).
கவிஞர் அன்புமணி இக்பால் அலியின் சிறுவர் பாடல்கள் பற்றி குறிப்பிடும்போது, இக்பால் அலியின் நூலில் காலத்துக்கேற்ற விடயங்கள் பாடல்களில் இடம்பெற்றிருக்கின்றன. மனித நேயம், கணனி, நாங்கள் விளையாட, தொழுதிடுவோம், நான் மூன்று சக்கரக்காரன், சித்திரக் கொப்பி, அமுதாய் ஊறும் தண்ணீர், புகை வண்டி முதலிய பதினெட்டு பாடல்கள் இந்நூலில் உள்ளன. ‘மனித நேயம்’ முதல் பாடலாக அமைவது குறிப்பிடத்தக்கது. அதில்
‘நெஞ்சிலேதும் சுமையில்லாமல்
நிம்மதியாய் வாழ்ந்திடவே
மனித நேயம் ஒன்றே வெல்லும்
ஒற்றுமையாய் வாழ்வோம் வாநீ.’
முதலிய பாடல்கள் நம் கருத்தைக் கவருகின்றன. சமகாலப் பிரச்சினைகளான சோதனைச் சாவடி, அகதி முகாம் முதலிய விடயங்களும் பாடல்களாக இடம்பெற்றுள்ளன.
‘பண்போடு பல்லினமும் சேர்ந்து
கண்ணிறைந்த இலங்கையில் வாழும்
பொன்மலரும் உள்ளங்கள் மகிழும்
புது வசந்தோம் காண்போம் வாநீ.’
‘அகதி அகதி முகாம்களைக்
காணக் காண வெட்கமே
பிறந்த தாய் நாட்டிலா
வாழ்வார் இந்த அகதிகள்.
அகதிகள் இல்லாதொழியவே
போர்கள் யாவும் போகவே
எழுந்து நின்று பாடுவோம்
ஒன்று பட்டு வாழ்ந்திடவே!’
ஆகிய பாடல்கள் சிறுவர் உளங்களில் ஆழப்பதியும் என்பதில் சந்தேகமில்லை. சொந்த நாட்டில் மக்கள் அகதிளாக வாழும் அவலம் அவர்கள் சிந்தனையைத் தூண்டச் செய்யும். இவ்வாறு ஒவ்வொரு பாடலும், சிறுவர் உலகத்துக்கு ஒவ்வொரு செய்தியைச் சொல்கின்றன. சந்திக்கும் விடயங்கள் சிந்திக்கும் விடையங்களாக இப்பாடல்களில் இடம்பெறுகின்றன (தினக்கதிர் பத்திரிகைஇ31.3.2002).
அன்பு பெருக
இக்பால் அலியின் ‘அன்பு பெருக’ என்ற சிறுவர் பாடல்கள் கொண்ட நூலில் விரவி நிற்கும் கருப்பொருட்களை (Themes) பதிப்பகத்தார் நன்கு அறிந்து சிறுவர்களிடையே இனநல்லுறவு மேம்பட வேண்டும் என்ற கருத்துருவை மையமாகக் கொண்டு நூலின் அட்டைப் படத்தில் பிரஸ்தாபித்துள்ளமைஇ இக்பால் அலியின் அதிகமான பாடல்கள் கலாசார பன்முகத்தன்மை கொண்ட சிறுவர்களிடையே இனநல்லுறவு மேம்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் அமைகிறது:
‘அன்பு பெருக வாழுவோம்
ஒன்று சேரப் பாடுவோம்
சமாதானம் என்பதை
நிலை நிறுத்தி ஆடுவோம்’(2002:8).
இக்பால் அலியின் ‘அன்பு பெருக’ என்ற சிறுவர் பாடல்கள் கொண்ட தொகுதியில் போர் அற்ற நாடுதான் எல்லோருக்கும் வாழச் சிறந்தது என்றும் போர் காலச் சூழலில்; இனவாதஇ வக்கிரக உணர்வுகள் எவ்வாறு சிறார்களிடையே விதைக்கப்பட்டு மனஅழுத்தத்தைக் கொடுக்கின்றன என்பதையும் இந்நிலையை மாற்றியமைப்பது கடினமானதாக இருந்தாலும் முதலில் சிறார்களிடையே சமாதானத்திற்கான நம்பிக்கையை அழுத்தமாகப் பதியப் போட்டால் மாத்திரம்தான் சமாதானத்திற்கு இயைவான சூழலைக் காணலாம்; என்ற நம்பிக்கை உணர்வுகள் கவிஞரின் பின்வரும் பாடல் வாரிகள் சித்திரிக்கின்றன:
‘ஒன்று பட்டு ஒழுகுவோம்
ஐயம் இன்றிப் பழகுவோம்
அமுது என்ற அன்புதான்
நாட்டில் என்றும் நிலைக்குமே’ (2002:8).
நமது கல்விக் கொள்கையில் சிறுவர் பாடல்கள் ஒரு முக்கிய வகிபாகத்தை கொண்டுள்ளன. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நன்நெறி போன்ற பாடல்கள் பயிற்றுவிக்கப்பட்டமையும், இன்றைய கல்வி அமைப்பில் பாலர் வகுப்பில் பாடல் கற்பிப்பது ஓர் அம்சமாகக் கொள்ளப்படுவதையும் இந்தப் பின்னணியில் நோக்கலாம் ‘பாலர்களின் உடல், உள வளர்ச்சிகள் ஒருங்கே வளர்ச்சியுறுவதற்கு சிறார் பாடல்கள் சிறந்த ஊடகமாக நம்பப்படுகின்றது. சிறுவர்களுக்கு புத்தூக்கமாகவும் அறிவாராய்ச்சியியல் சார் வளர்ச்சிக்கும் ஓர் ஏணியாகவும் சிறுவர் பாடல்கள் கற்பித்தல் கொள்ளப்படுகின்றது. நீதியைப் போதிக்கும் பாடல்கள், சமய கருத்துக்களை வெளிப்படுத்தும் பாடல்கள் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் பாடல்கள், அன்பை நிலை நிறுத்தும் பாடல்கள் போன்றவைகள் சிறுவர் இலக்கியத்திலும் கல்வி புகட்டலிலும் பாரிய விளைவுகளை செய்யத்தக்கவையாகும். இவ்வாறான பங்களிப்புக்களை பிரதிபலிக்கும் வகையில் இக்பால் அலியின் ‘அன்பு பெருக’ என்ற பாடல்கள் அமைந்திருப்பது இத்துறையில் அவரது தடத்தினையும் சமகாலமும் எதிர்காலமும் உள்வாங்கிக் கொள்ளும் என்பதை எடுத்துரைப்பதாகக் கொள்ளலாம்’ என்கிறார் சிரே~;ட ஊடகவியலாளர் எம்.எம்.எம். நூறுல்ஹக் (பாத்திமா அஸ்மா, இக்பால் அலியின் சிறுவர் இலக்கிய பணிகள் ஓர் ஆய்வு, 2023:68-69).
குரங்குத் தம்பி
இக்பால் அலியின் இரு நூல்களின் வெளியிட்டு விழா இலங்கை அக்குறணையில் இடம்பெற்றது. அவருடைய ‘குரங்குத் தம்பி’ என்ற நாடகப்பாங்கிலான சிறுவர் பாடல்கள் குறித்து அந்நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கருத்துரைக்கும் போது; ‘குழந்தை இலக்கியம் படைப்பது இலகுவான விடயம் அல்ல. தாங்கள் வளர்ந்த பின்பு குழந்தைகளாக மாறி கவி படைப்பது என்பது ஒரு வித்தியாசமான கலை. ஒரு வித்துவ நிலைக்கு வந்த பிறகு திரும்பவும் குழந்தைப் பருவத்திற்குச் சென்று அந்த நடையில் எழுதத் துணிவது என்பது அசாத்தியமான விடயமாகும். மகாகவி பாரதியும் அப்படித்தான் குழந்தை இலக்கியம் படைத்தார். இன்றும் எல்லோருடைய மனதிலும் நிற்கின்ற இலகு தமிழிலே இருக்கிற பாடல்களாக நிலைத்து இருப்பதற்கான காரணம் அது. எனவேஇ எவர் குழந்தை இலக்கியம் படைக்கிறாரோ அவர் மிகத் தேர்ந்த கவிஞராக இருக்க வேண்டும். விவஸ்தை இல்லாமல் எழுதுகின்ற கவிஞர்களும் சிலர் உளனர். ஆனால் இக்பால் அலியினுடைய ‘குரங்குத் தம்பி’ புத்தகத்தில் ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல ஒரு வரியை மட்டும் வாசிக்கலாம் என நினைக்கிறேன்.
‘காட்டுக் குரங்கு வீட்டுக்கு வந்தது
பாட்டுப் பாடி கூத்துப் போட்டது
சட்டி பானை திறந்து பார்த்தது
தாப்புக் காட்டி தூக்கிச் சென்றது.’
மற்றுமொரு வரி
‘குரங்கின் வீட்டில் மனிதன் வாழ்க்கை
மனிதன் வீட்டில் குரங்கு வாழ்க்கை
காட்டை வெட்டி மனிதன் வாழ்ந்தான்
வீட்டைப் பிடித்து குரங்கான் வாழ்ந்தான்.’
இவர் மிகப் பெரிய செய்தியைச் சொல்கிறார். இந்த விதமான ஒரு தத்துவத்தை குழந்தைகளின் பாடல் ஊடாக வெளிக் கொணர்கிற ஒரு திறமை அவருக்கு இருக்கிறது என்பதை நான் காண்கிறேன் என்கிறார்(தினகரன் பத்திரிகைஇ 2024-05-29, ப.9). இவ்வாறு இக்பால் அலியின் பாடல்கள் மானுட வாழ்வியலுக்கு மகிழ்ச்சிêட்டுவதோடு பயன்படுவதாகவும் உளது.
செல்லக் குட்டி
பொதுவாக இன்றைய நிலையில், ஒரு சாரரின் தொழில் மகிமையை யாருமே வெளியே சொல்வதில் கரிசனை காட்டுவதில்லை. அவர்கள் யார் என்பது கூட தெரியாது. அவர்கள் சமுக அடுக்கமைவில் விளிம்புநிலையில் உள்ளனர். அவர்கள்தான் நாம் நகரங்களிலும் புறநகரங்களிலும் ஆரோக்கியமான சூழலில் வாழ்வதற்கு அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகின்ற சுத்திகரிப்பாளர்கள் அவர்களின் வாழ்க்கைச் சூழல் மிகவும் பரிதாபகரமானதாகும். இத்தகைய தொழில் சார்ந்தவர்களுடைய சேவையின் மகத்துவத்தை இக்பால் அலி; ‘நகர்ச் சுத்திகரிப்பான் புகழ்’ என்ற பாடல் மூலமாக வெளிப்படுத்துவது மகிழ்ச்சி தருவதாகவுள்ளதுÉ
‘நகரின் எழிலைப் பாரம்மா!
புதுமையாக இருக்குது
சுற்றுச் சூழலைப் பாரம்மா!
நறுமணக் காற்று வீசுது.
நகர மெங்கும் இயற்கையின்
காட்சிகள் தெரியுது பாரம்மா!
நகரச் சுத்திகரிப்பாளன்
எழுதிய ஓவியம் இதுதானோ’ ( இக்பால் அலி, செல்லக் குட்டி, 2024:15 ).
மேற்தரப்பட்ட வரிகளில் நகர சுத்திகரிப்பாளர்களுடைய சேவையின் பெறுமதி அறிமுகப்படுத்தப்படுகிறது. அத்தோடு இக்பால் அலி நகர சுத்திகரிப்பாளர்கள் அன்றாடம் நகரங்களிலும் புற நகரங்களிலும் சேருகின்ற கழிவுகளை ஒன்றில் அகற்றினால் அல்லது அகற்றா விட்டால்இ எத்தகைய துர்நாற்றம் வீசும் என்பதை எடுத்துக் காட்டி அவர்களுடைய தொழிலின் மகத்துவத்தை சிறுவர் உளத்தில் பதிவு செய்ய முற்பட்டுள்ளார். மக்களின் நல்வாழ்வுக்காக பணிபுரியும் நகர சுத்திகரிப்பாளர்களின் உயரிய அந்தஸ்தை சிறுபராயத்தில் இருந்தே சிறார்கள் புரிந்து கொள்ள இப்பாடல்கள் துணைபுரியும் என திடமாக நம்பலாம்.
இக்பால் அலியின் படைப்பாக்கத் திறன் பல்கலைக்கழக மட்டத்திலும் கவனிக்கப்பெற்றுஇ இவரது சிறார்பாடல்கள், கவிதைகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பட்டம் பெற்றுள்ளனர் என்பது தனிச்சிறப்பு. இத்தகைய புலமைமிக்க இக்பால் அலியின் ‘செல்லக் குட்டி’ என்ற மழலைப் பாடல் தொகுதி கவனத்திற்குரியதுÉ
தொழில் நுட்ப வளர்ச்சியும்
புதுமை இங்கு காட்டுதே!
மனிதன் மீதான பாசத்தை
நாசம் பண்ணச் செய்யுதே!
போர் நடக்கும் நாட்டிலே
வானில் உயரப் பறக்குதே!
அப்பாவி யான மக்களை
கொன்று கொன்று குவிக்குதே! (செல்லக் குட்டி, 2024:51).
இப்பாடல் மூலம் கொடிய போரின் அவலத்தை உலகில் வாழும் சிறார்களுக்கு எடுத்துக் காட்டுவதோடு உலகம் முழுவதும் போர் வெறித்தனத்தோடு நடமாடும் நாடுகளை கேலி பண்ணி கேவலப்படுத்துக்கிறார் கவிஞர் இக்பால் அலி. போருக்கெதிரான கவிஞரின் இந்த உணர்வுக் கூறுகள் போர் வெறியர்களை அடையாளப்படுத்துவதோடு மனித இருப்பின் பெறுமதியையும் எடுத்துரைத்து, சிறார்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள துன்பச் சுமையையும் நமக்கு விளக்குகிறது. போர் எதுவுமே அறியாத பச்சிளம் பாலகர்களை, சின்னம்சிறுசுகளை கொத்துக் கொத்தாக கொன்றொழிப்பதை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தும் பாடலாசிரியர்இ இந்த கொடிய கொலை வெறியாட்டத்திற்கு நவீன தொழில் நுட்ப வளர்ச்சியே மையக்காரணம் எனவும் இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த முடியாத உலகத்தின் சமகாலத் தன்மையையும் இப்பாடலில் சித்தரிக்குகின்ற பாங்கு கண்ணீரை வரவழைக்கத்தான் செய்கிறது.
இக்பால் அலியின் மற்றுமொரு பாடல் ‘எங்கள் வீட்டு ஆயா’எனும் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படும் பெண்- தாய் ஒருவரின் பணிகள் பற்றிய பாடல் வரிகள் ஆகும்.
‘எங்கள் வீட்டு ஆயா
காலை உணவு தருவாள்
தினமும் பாட்டுப் பாடி
சுவை இன்பம் தருவாள்.
நாங்கள் ஏசிப் பேசினாலும்
சிரித்துக் கொண்டு மகிழ்வார்
அன்பு கொண்டும் பழகுவார்
கொஞ்சிப் பேசி உதவுவார்’(செல்லக் குட்டி, 2024:8 ).
இப்பாடல் மிகவும் இயல்பான சொற்களைக் கொண்டு ஆயாவின் சேவையை மட்டுமல்ல, அப் பெண் தனக்கு ஏற்படும் இடையூறுகளையும் தாங்கிக் கொண்டு, அடுத்தவர்களை மகிழ்வூட்டுவதில் அவள் அடைகின்ற ஆனந்தத்தையும் படிப்போர் உணரும் வகையில் கவிஞர் சித்திரித்துள்ளார்.
கவிஞர் இக்பால் அலி தமிழின் மீதும் சமூக நல்லிணக்கத்தின் மீதும் நீங்காத பற்றுள்ளம் கொண்டவர். அவரது படைப்புக்கள் இன நல்லிணக்கத்தை மேம்படுத்துவதாக அமைந்திருக்கிறது. மேலாக, இனவாதத்தை, அரசியல் சூழ்ச்சிகளினால் சிறார்களிடையே விதைத்தல், சக வாழ்வை ஒழித்தல் போன்ற சமூக அவலங்களை இல்லாதொழிக்க வேண்டும் எனும் பேரார்வம் கொண்டவர். சிறார்களிடையே ஐக்கியம், சகோரத்துவம், சமத்துவம் தழைத்தோங்க வேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் கொண்டவர். இவ்வாறு மானுட மேம்பாட்டை வலுப்படுத்தக் கூடிய விடயங்களை பாடுபொருளாகக் கொண்டு அதிகளவிலான பாடல்களை எழுதியுள்ளார்É
‘சக வாழ்வு மலர்ந்திட வேண்டும்
கொடிய இனவாதம் ஒழிந்திட வேண்டும்
அன்பு ஒளி பெற வேண்டும்
கொடிய பகைமை நீங்கிட வேண்டும்’ (செல்லக் குட்டி, 2024:31 ).
மேலாக, இக்பால் அலி குறித்து பேராசிரியர் சபா. ஜெயராசா தமது ‘சிறுவர் இலக்கிய வளர்ச்சி’ என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்;;: “நவீன அறிவியலின் பரிமாணங்களை சிறுவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் சிறுவர் இலக்கியம் படைக்கின்ற முக்கியமான படைப்பாளிகளுள் ஒருவராக இக்பால் அலியினையும் அறிமுகம் செய்துள்ளார்.அறிவியற் செய்திகளை கூறவரும் போது அழகியற் பண்புகளை சுருக்கி விட முடியாது அவ்வாறான ஆக்கங்களை அதிக கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சியை மேற்கொண்டவர்களுள் அய்யாசாமி, இக்பால் அலி, வாகரைவாணன், மு. பொன்னம்பலம், கண்டி மு. இராமச்சந்திரன், இ. சிவானந்தன், செ. யோகநாதன், கோகிலா மகேந்திரன், க. குணராசா ஆகியோர் தனித்துவம் பெறுகின்றனர்”(அஸ்மா, இக்பால் அலியின் சிறுவர் இலக்கிய பணிகள் ஓர் ஆய்வு, தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 2023: 65-69).
முடிவுரை
ஈழத்து சிறார் இலக்கியத்தின் வழி மனிதகுல மேம்பாட்டிற்கான பங்களிப்பு செய்துவரும் கவிஞர் இக்பால் அலியினுடைய சிறுவர் பாடல்களின் பாடு பொருள்; சிறார்களிடம் அன்பு, அறம், அறிவு, நற்பண்பு மற்றும் மனித நேயத்தை வளர்தெடுக்கும் சிந்தனைகள் செறிந்தவையாக காணப்படுகின்றன. இவர் குழந்தைகளை பெரிதும் கவரக்கூடிவகையில் ஒலி நயமும் ஓசை அழகுமிக்க நடையில் மிக அருமையான பாடல்களைத் தந்துள்ள முதிர்ச்சி முன்நிற்கின்றது. இவர் அறிவியல் சார்ந்த விடயங்களை சித்திரித்து எடுக்கும் முறை தனித்தன்மையுடன் விளங்குகின்றன. அத்துடன் பாடல்களில் வாழ்வியலுக்கு சம்மந்தமில்லாத உணர்வுகளைத் தூண்டும் வரிகளைத் தவித்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. ஆக, இவை சிறார்களின் வளர்ச்சிக்கான நுண்ணறிவை மேலோங்கச் செய்யக்கூடியவை எனலாம்.
உசாத்துணைகள்:
இக்பால் அலி (2002), நான் மூன்று சக்கரக்காரன், மக்கள் கலை இலக்கிய ஒன்றியம், கண்டி.
இக்பால் அலி (2002), அன்பு பெருக, மக்கள் கலை இலக்கிய ஒன்றியம், கண்டி.
இக்பால் அலி (2002), நல்லதொரு பயணம், மக்கள் கலை இலக்கிய ஒன்றியம், கண்டி.
இக்பால் அலி (2023), குரங்குத் தம்பிஇ சிறுவர் பாடல்கள்இ அம்னா பதிப்பகம்இ சாய்ந்தமருது.
இக்பால் அலி (2024), செல்லக் குட்டி, ராயல் பதிப்பகம்இ சென்னை.
சபா ஜெயராசா (2012), சிறுவர் இலக்கிய வளர்ச்சி, குமரன் புத்தக இல்லம் கொழும்பு.
துரைசிங்கம் த. (2012), ஈழத்தில் சிறுவர் இலக்கியம்இ உமா பதிப்பகம்இ கொழும்பு
பாத்திமா அஸ்மா (2023), இக்பால் அலியின் சிறுவர் இலக்கிய பணிகள்: ஓர் ஆய்வு, மொழித்துறை, தென்கிழக்குப் பல்கலைக்கழகம.;
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.