இம்முறை நடந்த சென்னை புத்தகத் திருவிழாவில் இலங்கைத் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரின் நூல்கள் இடம் பெற்றிருந்ததாகத் தமிழக நண்பரும், கவிஞருமான மு.முருகேஷ் அவர்கள் அறிவித்திருந்தார்கள். அகணி பதிப்பகத்தின உரிமையாளரான அவரது பதிப்பகத்தின் நூல்களும் அங்கே தனியாக ஒரு காட்சியறையில் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. நான் இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் இந்த காட்சியறையில் எனது 7 சிறுகதைத் தொகுப்புகளும், 7 புதினங்களும் அவரால் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. இதைவிட 22 தமிழக பிரபல எழுத்தாளர்கள் எழுதிய எனது நூல்கள் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகள் அடங்கிய ‘மனதைத் தொட்ட எழுத்தின் பக்கங்கள்’ என்ற நூலையும் காட்சிப்படுத்தியிருந்தார். கல்லூரி மணவ, மாணவிகள் மற்றும் நடுத்தர வயதினர் பலர் எனது புத்தகங்களைத் தேடி வாங்கிச் சென்றதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
சென்னை புத்தகத் திருவிழா தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் 27-12-2024 தொடக்கம் 12-1-2025 ஞாயிற்றுக்கிழமை வரை நந்தனத்தில் நடைபெற்றது. சென்ற வருடம் 20 லட்சம் வாசகர்கள் வருகை தந்ததாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. வாசலில் திருவள்ளுவர், மகாத்மாகாந்தி, மற்றும் திரு.வி.கா ஆகியோரின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. சுமார் 900 அரங்குகள் வரை இங்கே இடம் பெற்றிருந்தன.
புத்தகக் காட்சி இடங்களை ஒன்பது பாதைகள் இணைத்தன. காட்சி அறைகள்; இருந்த பாதைகளுக்கு பாரதியார் பாதை, பாரதிதாசன் பாதை, கம்பர் பாதை, வள்ளுவர் பாதை, இளங்கோ பாதை, ஒளவையார் பாதை, வா.உ.சி. பாதை, கலைஞர் பாதை, வள்ளலார் பாதை என்று பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. ‘யாவரும் பப்பிளிகேஸன்ஸ்’ என்று இளையோர்களுக்கான நூல்கள் விற்பனையகமும் தனியாக இருந்தது. இதைவிட குழந்தைகள் சிறுவர்களுக்கான காட்சிச் சாலைகளும் இருந்தன. இம்முறை சில ஆங்கில நூல் பதிப்பகங்களும் தங்கள் நூல்களைக் காட்சிப் படுத்தியிருந்தனர்.
சென்ற வருடம் கனடா தமிழ் எழுத்தாளர் இணையமும் இது போன்று ‘நூல்களின் சங்கமம்’ என்ற பெயரில் ஒரு புத்தகக் கண்காட்சியைக் கனடாவில் வெற்றிகரமாக நடத்தியிருந்தனர். கனடாவில் உள்ள எழுத்தாளர்கள் தங்கள் நூல்களைக் காட்சிப் படுத்தவும், வாசகர்களைச் சந்திக்கவும் இது ஒரு பாலமாக அமைந்திருந்தது. எதிர்பார்த்ததைவிட பார்வையாளர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். குறிப்பாகப் பெற்றோர் இளைய தலைமுறையினரை கண்காட்சிக்கு அழைத்து வந்து தமிழ் நூல்களை வாங்கிச் சென்றது குறிப்பிடத் தக்கது. சிறுவர்களுக்கான எனது புத்தகங்கள் பல அப்போது விற்பனையாகியிருந்தன. இளையோரின் தமிழ் சார்ந்த பேச்சுக்கள், மற்றும் கலை நிகழ்ச்சிகளும் அப்போது நூல்களின் சங்கமத்தில் இடம் பெற்றிருந்தன.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.