பெரியாரைப் பொறுத்த அளவில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவையெல்லாம் தமிழ்தான். 'திராவிட மொழிகள்' என்னும் கட்டுரையில் (பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் தொகுதி 2 , பக்கம் 768) பெரியார் கூறுவதைச் சிறிது பார்ப்போம்.
அவர் எழுதிய மொழியாராச்சி (1948) நூலில் இடம் பெற்றுள்ள பகுதி இது. அப்பொழுது தென்னாடு தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, கேரளா என்று மொழிவாரியாகப் பிரிக்கப்படாத காலகட்டம். அப்போது இவ்விதம் தென்னாடு மொழிவாரியாகப் பிரிப்பதைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார். இவ்விதம் பிரிப்பது ஆரியரின் சூழ்ச்சி என்று அவர் திடமாக நம்பினார். கருதினார். கன்னடம், தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிகள் அனைத்துமே தமிழ்தான். வெவ்வேறு இடங்களில் பேசப்படுவதால் , வடமொழியின் ஊடுருவலால் தமிழ் இவ்விதம் இடத்துக்கிடம் பேசப்படுகிறது என்று அவர் கருதினார்.
மொழிவாரியாகப் பிரிக்கப்படாமல் இருப்பதற்காக தென் மாநிலங்கள் அனைத்தையும் ஒரு குடையில் கொண்டு வர வேண்டுமெனறு அவர் கருதினார். அதற்காக திராவிட மொழியென்பது தமிழ்தான். தெலுங்கு, கன்னடம் , மலையாளம் அனைத்தும் திராவிட மொழியான தமிழ்தான். திராவிடம் என்று அழைப்பதன் மூலம் ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய் அனைத்து மாநிலங்களையும் தமிழகத்துடன் இணைக்க முடியும். இதன் மூலம் ஆரியரின் மொழிவாரி மாநிலப் பிரிவினைத் தவிர்க்க முடியும் என்று அவர் திடமாகக் கருதினார். இதை மக்கள் மத்தியில் எடுத்துரைப்பதற்காக அவர் பல கட்டுரைகள் எழுதினார். உதாரணத்துக்குத் 'திராவிட மொழிகள்' என்னும் கட்டுரை பின்வருமாறு ஆரம்பிக்கின்றது:
" தமிழன், தெலுங்கன், கன்னடியன், மலையாளி இவர்கள் பேசுவதெல்லாம் தமிழ்தான். இவர்கள் பேசுவது வெவ்வேறு மொழியென்று கூறுபவன் தமிழ் மகனல்லன். தமிழை அறியாதவன். ஆரியத்திற்குச் சோரம் போனவன். நம்மைக் காட்டிக்கொடுத்து ஆரிய ஆதிக்கத்திற்கு ஆக்கந்தேட முயற்சிப்பவன். இவை நான்கும் வேறு வேறு மொழியென்று கூறுபவர்கள் தமிழர் என்று தம்மை நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். கருதிக்கொண்டிருக்கின்றார்கள் என்று கூறலாமே தவிர - இவர்களைத் தமிழறிந்தவர்கள் என்று நாம் ஒப்புக்கொள்ள முடியாது.''
இன்னுமோரிடத்தில் பின்வருமாறு கூறுவார்:
' திராவிடத்தாய்க்குப் பிறந்தது ஒரே ஒரு மகள்தான். அதுதான் தமிழ். அந்த ஒனறைத்தான் நாம் நான்கு பெயரிட்டு அழைக்கின்றோம். நான்கு இடத்தில் பேசப்படுவதால் நான்கு பெயரில் வழங்குகிறதே ஒழிய , நான்கிடத்திலும் பேசப்படுவது தமிழ்தான். நான்கும் ஒன்றிலிருந்து உண்டானவை என்று எண்ணுவதுதான் தவறு. ஒன்றுதான் நான்காக நமது அறியாமையால் கருதப்பட்டு வருகிறது."
பெரியார் தமிழ் பற்றிய, தமிழ் மொழிச் சீர்சிருத்தம் பற்றியெல்லாம் நிறைய எழுதியிருக்கின்றார். பெரியாரைப் பற்றி முழுமையாக அறியாமல், தெரியாமல் வடுகர், தெலுங்கர் என்றெல்லாம் பேசி வருபவர்களுக்குப் பெரியார் பற்றியும் தெரியாது. தமிழ் பற்றியும் தெரியாது.
பெரியார் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தையும் திராவிட மாநிலமென்று ஓரணியில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்தவர். தமிழ்தான் கன்னடமென்றும், தெலுங்கென்றும், மலையாளமென்றும் பேசப்பட்டு வருகிறதென்றும் தர்க்கபூர்வமாக எடுத்துரைத்தவர். இவ்விதம் ஒன்றிணைவதன் மூலம் ஆரியரின் பிரித்தாளும் சூழ்ச்சியான மொழிவாரியிலான மாநிலப்பிரிவுகளைக் கடுமையாக எதிர்த்தவர்.
பெரியார் ஈரோடில் பிறந்த தமிழன். இன்று ஒரு கூட்டம், அறியாமைக்குள் சிக்கியுள்ள கூட்டம், மேலும் தமிழர்களைப் பிரிக்கும் ஆரியரின் சூழ்ச்சிக்குள் சிக்கிக் குதியாட்டம் போடுகிறது.
மொழிவாரியாகப் பிரித்து தமிழ்நாடான தென் மாநிலத்தை அன்று ஆரியர்கள் பிரித்தார்கள். இன்று அதே ஆரியர்களின் சூழ்ச்சிக்கு அடிமையான ஒரு கூட்டம் தமிழினத்தை தெலுங்கன், ,மலையாளி, கன்னடன் என்று தமிழ்நாட்டைப் பிரிக்கப்பாடுபடுகிறது.
பெரியார் தென்னாட்டை மொழிவாரியாகப் பிரிப்பதை எதிர்த்தார். ஆனால் அவர் முயற்சி தோல்வியுற்றது. அவர் திராவிடரென்று அனைவரையும் தமிழர்களாக ஒன்றிணைக்கக் கடும் முயற்சி எடுத்தார். அதில் ஆரியர் வெற்றி பெற்றனர். இன்று அதே ஆரியர்கள் தமிழர்களை மொழிரீதியாக மேலும் பிரிக்கக் கடும் முயற்சி செய்கின்றனர். அதுற்குத்துணை போகின்றது ஒரு கூட்டம். அதற்காகப் பெரியார் மீது வசை பாடுகிறது. சேற்றை அள்ளி வீசுகிற்து.
பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் தொகுப்பு 2 வாசிக்க - https://archive.org/details/evrt-vol-2-part-2/page/980/mode/1up?view=theater