கவிஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றொரு கூற்றின் அடிப்படையில் ஒரு சர்ச்சை தற்போது கிளம்பியுள்ளது. இது புதிய சர்ச்சை அல்ல. மாற்றங்கள் நிகழ்கையில் இது போன்ற சர்ச்சைகள் ஏற்படுவதும் இயல்புதான். ஒரு காலத்தில் கவிதையென்றால் அது மரபுக் கவிதைதான். மரபுக்கவிதை எழுதுவதற்கு யாப்பிலக்கணம் தெரிந்திருக்க வேண்டும். அதன் காரணமாகக் கவிஞர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது.
மரபை மீறிப் புதுக்கவிதை பிறந்தபோது புற்றீசல்களாகப் புதுக்கவிஞர்கள் பிறந்தனர். இன்றுள்ள முன்னணிக் கவிஞர்கள் பலரும் அவ்விதம் படையெடுத்த கவிஞர்களிலிருந்து உருவானவர்கள்தாம். அப்பொழுதும் மரபில் கோலோச்சிக்கொண்டிருந்த மரபுக்கவிஞர்கள் புதுக்கவிஞர்களை ஏளனத்துடன் பார்த்தனர். யாப்பு தெரியாதவனெல்லாம் கவிதை எழுத வந்து விட்டார்கள் என்று எள்ளி நகையாடினார்கள். அன்றிலிருந்து இன்று வரை உலகின் எப்பாகங்களிலிருந்தும் வெளியாகும் பத்திரிகை, சஞ்சிகையின் கவிதைப் பக்கங்களைப் பாருங்கள். இலட்ச்க்கணக்கில் தமிழ்க் கவிதைகளை, கவிஞர்களைக் காணலாம். இவர்களில் பலரைத் தமிழ் இலக்கிய உலகு அறிந்திருக்காது. ஆனால் இவர்களில் பலர் முகங்களை நாம் அறிந்திருக்காதபோதும் இவர்களின் படைப்புகள் வரலாற்றில் நிலைத்து நிற்குமா என்பதைப்பற்றி நாம் எதுவும் கூற முடியாது. இன்று டிஜிட்டல் தொழில் நுட்பம் காரணமாக இவர்களது படைப்புகள் பலவும் வெளியான பத்திரிகை, சஞ்சிகைகளின் ஆவணப்படுத்தல் மூலமாக வரலாற்றில் நிலைத்து நிற்கப்போகின்றது. இன்னும் பல நூறு ஆண்டுகளின் பின்னர் இவர்களின் பலரின் கவிதைகள் ஒரு காலகட்டக் கவிதைகளாக இனங்காணப்படும் சாத்தியங்களும் உண்டு.
இணையத்தின் வருகை அதுவரை சிலரின் உரிமையாகவிருந்த ஊடகங்களை மக்கள் மயப்படுத்தியது. வலைப்பதிவுகள் மக்களை எழுத வைத்தது. எழுத்தாளர்கள் பல்கிப் பெருகினர். இன்று இணைத்தை மேய்ந்தால், தேடினால் மில்லியன் கணக்கில் வலைப்பூக்களைக் காணலாம். சுவையான பல பதிவுகளை அங்கு காணலாம். அவற்றில் எழுதும் பலரை வாசிப்பதற்கு இலட்சக்கணக்கில் வாசகர்கள் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் பெரும்பாலும் இலக்கிய உலகில் அறியப்பட்ட ஆளுமைகள் கவனிப்பதில்லை. எண்ணிக்கையில் பெருகினாலும் மக்கள் பலரை எழுத்தாளர்களாக்கி வைத்த விடயத்தை நான் ஆரோக்கியமானதாகவே பார்க்கின்றேன்.
சமூக ஊடகங்களின் வரவு எழுத்தாளர்களின் எண்ணிக்கையை பல மடங்குகள் அதிகரிக்க வைத்து விட்டது. கவிஞர்கள், நாவலாசிரியர்கள்ம், சிறுகதையாசிரியர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பல்வகை ஊடகவியலாளர்கள் என அனைத்துத்துறைகளிலுல் அதிகரிப்பென்பது பல மடங்குகளாகிவிட்டன. இது இயல்பானது. இதனை ஓர் ஆரோக்கியமான விடயமாகவே நான் பார்க்கின்றேன். இவர்களிலிருந்து பலர் மேலெழுவார்கள். தம் படைப்புகளின் மூலம் நிலைத்து நிற்பார்கள். மேலும் சமூக ஊடகங்கள் உழைப்புக்கும் வழி செய்திருப்பதால் எண்ணிக்கை மேலும் உயரும் நிலையே உண்டு.
கவிதைகளில் முக்கியமான அம்சம் படிமம். அது உவமையாகவிருக்கலாம். உருவகமாகவிருக்கலாம். படிமங்களின் முக்கிய பண்பு காட்சிகளைச் சித்திரங்களாக வாசகர்களின் மனக்கண்களில் உருவாக்குவதான். இப்பொழுது ஒரு கேள்வி எழுகின்றது. இவ்விதமான காட்சிகளைச் சித்திரங்களாக மனக்கண்களில் உருவாக்க கவிதைகளில் படிமங்கள் அவசியமா? பிரமிள் போன்றர்களின் கவிதைகள் படிமங்களால் நிறைந்திருக்கும். ஆனால் வ.ஐ.ச. ஜெயபாலன், சேரன் போன்றோரின் கவிதைகளில் படிமங்களை அதிகம் காண முடியாது. ஆனால் படிமங்கள் செய்யும் வேலையை அவர்கள் கவிதைகளில் அவர்கள் பாவிக்கும் சொற்கள் செய்கின்றன. ஆனால் பாவிக்கப்படும் சொற்களும் மிகவும் எளிமையான, சாதாரண சொற்கள்.
உதாரணத்துக்குச் சேரனின் புகழ்பெற்ற கவிதைகளில் ஒன்று 'இரு காலைகளும் ஒரு பின்னிரவும்' இக்கவிதையில் படிமங்கள் எவற்றையும் காண முடியாது. ஆனால் பாவிக்கப்படும் சொற்கள் கவிஞர் விபரிக்க விரும்பும் காட்சியினை வாசகர் உள்ளங்களில் ஏற்படுத்து விடுகின்றன. வ.ஐ.ச.ஜெயபாலனின் புகழ்பெற்ற கவிதைகளில் ஒன்று 'பாலி ஆறு நகர்கிறது'. இதிலும் படிமங்களைக் காண முடியாது. இங்கும் படிமங்கள் செய்யும் வேலையைக் கவிஞர் பாவிக்கும் சொற்கள் செய்கின்றன. இங்கும் பாவிக்கப்படும் சொற்கள் மிகவும் எளிமையான,சாதாரணச் சொற்கள்.
இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது? கவிதைகளின் சிறப்புக்குப் படிமங்கள் தேவையா? சொற்களில் அலங்காரம் தேவையா? என் விடை - இல்லை என்பதுதான். கவிதையின் முக்கிய பண்பே அது வெளிப்படுத்தும் உணர்ச்சித்தான். அவ்வுணர்ச்சியைச் சாதாரண சொற்களும் வெளிப்படுத்தலாம். படிமங்களும், அலங்காரச் சொற்களும் ஏற்படுத்தலாம்.
இரு கவிதைகளையும் கீழே தந்துள்ளேன்:
- கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் -
1. பாலி ஆறு நகர்கிறது - வ.ஐ.ச. ஜெயபாலன் -
அங்கும் இங்குமாய்
இடையிடையே வயல் வெளியில்
உழவு நடக்கிறது
இயந்திரங்கள் ஆங்காங்கு
இயங்கு கின்ற ஓசை
இருந்தாலும்
எங்கும் ஒரே அமைதி
ஏது மொரு ஆர்ப்பாட்டம்
இல்லாமல் முன் நோக்கி
பாலி ஆறு நகர்கிறது.
ஆங்காங்கே நாணல்
அடங்காமல் காற்றோடு
இரகசியம் பேசி
ஏதேதோ சலசலக்கும்.
எண்ணற்ற வகைப் பறவை
எழுப்பும் சங்கீதங்கள்.
துள்ளி விழுந்து
'துழும்' என்னும் வரால்மீன்கள்.
என்றாலும் அமைதியை
ஏதோ பராமரிக்கும்
அந்த வளைவை அடுத்து
கருங்கல் மறைப்பில்
அடர்ந்துள்ள நாணல் அருகே
மணற் கரையில் ஒரு மருங்கம்
ஓங்கி முகடு கட்டி
ஒளி வடிக்கும்
மருத மர நிழலில்
எங்கள் கிராமத்து
எழில் மிகுந்த சிறு பெண்கள்
அக்குவேறு ஆணிவேறாய்
ஊரின் புதினங்கள்
ஒவ்வொன்றாய் ஆராய்ந்து
சிரித்து
கேலி செய்து
சினந்து
வாய்ச் சண்டை யிட்டு
துவைத்து
நீராடிக் களிக்கின்றார்.
ஆனாலும்
அமைதியாய்ப்
பாலி ஆறு நகர்கிறது
அந் நாளில்
பண்டார வன்னியனின்*
படை நடந்த அடிச் சுவடு
இந்நாளும் இம்மணலில்
இருக்கவே செய்யும்
அவன்
தங்கி இளைப்பாறி
தானைத் தலைவருடன்
தாக்கு தலைத் திட்டமிட்டு
புழுதி படிந்திருந்த
கால்கள் கழுவி
கைகளினால் நீரருந்தி
வெள்ளையர்கள் பின் வாங்கும்
வெற்றிகளின் நிம்மதியில்
சந்றே கண்ணயர்ந்த
தரை மீது அதே மருது
இன்றும் நிழல் பரப்பும்
அந்த வளைவுக்கு அப்பால்
அதே மறைப்பில்
இன்னும் குளிக்கின்றார்
எங்களது ஊர்ப் பெண்கள்
ஏது மொரு
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
பாலி ஆறு நகர்கிறது.
- கவிஞர் சேரன் -
2. இரு காலைகளும் ஒரு பின்னிரவும் - கவிஞர் சேரன் -
இன்றைக்கு, இப்படித்தான்
விடியல்:
இருள் முழுதும் பிரியாது,
ஒளி நிறைந்து விரியாத
ஒரு நேரம்
விழித்தெழுந்து வெளியில்வரக்
கிணற்றடியின் அரசமரக் கிளைகளிலே
குயில் கூவும்;
'ஓ' வென்று நிலத்தின் கீழ்
ஆழத்துள் விரிந்திருந்த
கிணறு,
சலனமற்று உறங்கியது
என் மனம் போல.
இன்றைக்கு இப்படித்தான்
விடியல்!
நாளைக்கும்,
இப்படித்தான் விடியும்
என்று நினையாதே.
பாதிராத்திரியும் மெதுவாகப்
போனபின்பு, 'கேற்' றடியில்
அடிக்குரலில் ஜ“ப் வண்டி உறுமும்;
சப்பாத் தொலிகள் தடதடக்கும்,
அதிர்ந்ததென
எம் வீட்டுக் கதவுகளோ
விரிந்து திறந்து கொள்ள,
அப்போதுதான்,
அடுத்தநாள் பரீட்சைக்கு
விரிவுரைக் குறிப்புக்கள்
விழுங்கிக் களைத்ததில்
விழிகள் மூடிய
அந்த இரவிலே-
'அவர்கள்' கூப்பிடுவது
கேட்கும். காதில்
ஊளையிடும் காற்று.
'எங்கே அவன்?' என்று
கேட்பார்கள். கேட்கையிலே
பிழைபட்ட தமிழ்,நெஞ்சில்
நெருட எழுந்துவரும்.
வார்த்தையற்று
அதிர்ந்து போய்,
'இல்லை' எனத் தலையாட்ட
இழுத் தெறிவார்கள் ஜ“ப்பினுள்.
நிறுத்தாத எஞ்சின்
அப்போதும் இரைந்தபடி.
பிறகு-?
பிறகென்ன, எல்லாம்
வழமைப்படி,
காலை; வெறும் சூரியன்
வெய்யில்! நிலத்தில்
எனக்குமேல்
புல்!
சிலவேளை- வீடுவந்து
கதவு திறப்பதற்காய்க்
குரல் காட்டித் திறக்கமுன்பு
இருமிச் சளி உமிழ
முகம் திருப்ப
உள் ளிருந்தும்,
அம்மா இருமும் ஒலி கேட்கும்!
கதவு திறப்பதற்காய்க்
காத்திருந்தேன்.
வெளியுலகம்
இப்போதும் முன்போல
அடங்கி இருக்கிறது.
https://vngiritharan230.blogspot.com/2025/01/blog-post_22.html#more