* ஓவியம் AI
எமக்கு பத்து வயதிருக்கும். மாலைப்பொழுதின் இதமான சுகத்தில் தேகம் திளைக்க கடைச்சுவாமி கோயில் ஒழுங்கைக்குள் நாலுபேர் கூடி ரோட்டில கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம்.அக்காலம் 69 களாக இருக்கலாம். கூடுகின்ற கூட்டத்தை பொறுத்து முதலில ரோட்டிலதான் ஆட்டம் ஆரம்பிக்கும்.அதற்கு விக்கெற் இருக்காது.மாறாக,ஒரு மட்டையை எடுத்து அதற்கு ஏதாவது பொறுப்பு வைத்து எதிராய் ஒரு கல்லை வைத்து அங்கிருந்து போலிங் போட 'பற்ஸ்மான்' போலை மிஸ் பண்ணாமல் தடுப்பதுவே ஆட்டத்தின் விதிமுறை.3 தடவை தவறவிட்டால் அவர் ஆட்டமிழப்பார். தவிர,முண்டு வைத்திருந்த மட்டையில் பந்து பட்டாலும் ஆட்டமிழப்பது உறுதி.அதேநேரம் பந்தை கூடிய தூரத்திற்கு அடிக்கவும் கூடாது. அப்படியே மெதுவாக ஆட்டம் ஆரம்பிக்க, எங்களின் குரல்களை கேட்டதும் பக்கத்து வீடுகளிலிருந்து அடுத்தவர்களும் வந்து இணைவார்கள். இணைபவர்கள் இளசுகள் மட்டுமல்ல, பெரியவர்களும்தான்.
ஆரம்பத்தில் நான்குபேராக இருந்த கூட்டம் கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு என நிரம்பும்.மாலைப் பொழுதுக்கு முதலில் இந்த மயக்கம் போதுமானதாக இருக்கும். வளவுக்குள் நின்ற பாண்டி மாங்காயின் கிளைகளும், கொப்புக்களும் ரோட்டுப்பக்கமும் வளர்ந்து காய்த்துத் தொங்கும்.பக்கத்து மதில்களில் அணில்களும் பாய்ந்து பாய்ந்து எங்களைப் பார்த்து கண்சிமிட்டுவதும் பொழுதுக்கு உகந்த அழகுதான்!
சிலர் மேயவிட்ட ஆடு,மாடுகளை அவிழ்த்துக்கொண்டு ஒழுங்கையால் வீடு திரும்புவதும் கண்களுக்கு விருந்தாகும். பின்னேரப்பால் தேத்தணிக்கு பால்காரரும் வந்திறங்கி,வீடு வீடாய் பெல் அடிப்பதும் நித்தம் நாம் காணும் காட்சிப்படிமங்களில் ஒன்று. ஒரு நாளுக்கு இந்த ஒழுங்கையால் ஒன்று அல்லது இரண்டு கார்களைத்தான் நாம் கண்டதுண்டு.அயலில் இருந்த பேரம்பலத்தாரின் கார் ஒன்று.அவர் நல்ல பணக்காரர்.மாடிவீடு.'ஒஸ்ரின் கேம்பிரிட்ச்'கார் என்று சொகுசாய் வாழ்ந்தவர். 'தானுண்டு,தன்பாடுண்டு' என வியாபாரத்திலேயே கண்ணும்,கருத்துமாக இருந்த மனிசன். ஒருவார்த்தை கூட அயலெண்டுவந்து, கதைச்சுப்பறைந்து கொண்டாட மாட்டார். கண்டால் மட்டும் ஒரு சிரிப்பு.அவ்வளவும்தான்.
இதே காலத்தில மைலுக்கு எவ்வளவு காசு என்று கேட்டு ஏறின ராக்ஸியின்ர பெயர் ஞாபகமிருக்கா ? கையால மீற்றரைத்திருப்பி விடுகின்ற 'மொரிஸ் மைனர்' ராக்ஸிதான் அது. எங்கட ஒழுங்கைக்குள்ள அதுவும் வந்து போகும்.மற்றும்படி,எல்லாத்துக்குமே சைக்கிள்கள்தான் .சைக்கிள்தான் ஒவ்வொரு குடும்பத்திற்குமான இன்னொரு உறவு. கிடுகு வண்டில், வாழைக்குட்டிகளை ஏற்றிக்கொண்டு மாட்டு வண்டில்,மண்ணெண்ணெய் வண்டில் என்று நாவலர் வீதியால் போகும்.சிவப்பு மண்ணெண்ணெய் பீப்பாவில் எஸ்ஸோ (ESSO)என்று ஒலிம்பிக் தீபம் ஏற்றினமாதிரி படமும் பதிந்திருக்கும்.மண்ணெண்ணெய் வண்டில்கார வியாபாரி குழல் மாதிரி ஒன்றை ஊதிக்கொண்டு வருவார். வண்டியின் கீழே சாக்கொன்றும் கட்டித்தொங்கவிட்டிருக்கும். அதற்குள் கலன் பாத்திரமும் இருக்கும்.கடையிற்கு முன்னால வண்டிலை நிற்பாட்டிவிட்டு,பீப்பாவைத்திறந்து கலனிற்குள் மண்ணெண்ணையை நிரப்ப,அது நிறையும்போது நுரை கிளம்பும்.நுரைக்குமிழிகள் பிரிந்து தெளிவடையும்.அதன்பின்பு மறுபடியும் மெதுவாக முழுமையாக கலனை நிரப்புவார் வியாபாரி.அதைப்பார்த்து ரசிப்பதும்கூட எனக்கு வேடிக்கை.
அதேபோல இன்னுமொரு விசித்திரம் என்னவென்றால்; இன்னுமொருவர் வாழைக்குலை,வாழைக்குட்டி வியாபாரி. வாழைக்குட்டிகளை வண்டிலில் நிரப்பி கட்டிவிட்டு, அவர் மட்டும் தனியாக நடந்து, மாட்டுடன் கதைத்துக்கொண்டு வருவார். " நீயும் எனக்காக சுமக்கிற.நீ பாவம் எண்டு நானும் நடக்கிறன்.எமக்கென்று நல்ல காலம் வரும் ராசா. நட..நட.." மாடு வண்டிலை இழுத்துக்கொண்டு வீடுபோய்ச்சேரும்.அவர் போய்ச்சேரும்வரை மாட்டுடன் கதைத்துக்கொண்டே போவதை நான் மட்டுமல்ல,பார்த்த கனபேர் சொன்னதை மறக்கேலாது.சில நாட்களில் மாட்டு வண்டிலிலேயே அவர் நித்திரையாகிவிடுவார்."நீ யோசிக்காமல் படு,நான் உன்னை வீடுவரை கொண்டு சேர்க்கின்றேன்'என்று மாடு அவரை கூட்டிக்கொண்டு கவனமாக வீடுவரை கொண்டு சேர்த்திருக்கின்றது.இப்படியும் நிகழ்ந்திருக்கின்றது.எம்மோடு ஒட்டி வாழ்ந்த உயிர்களின் பாச வெளிப்பாடுகள் கொஞ்ச நெஞ்சமல்ல!
நாமும் விளையாடிக்கொண்டிருக்க சிவந்திருந்த வர்ணத்தை மெதுவாய் வானம் கலைத்து,நீலத்தையும் தோய்த்து பரவிவிட்டது.அதைப்பார்த்த கண்கள் இன்னும் சில நிமிடங்களில் இருளப்போகின்றது என்பதை புரிந்துகொண்டன. அப்போது,நாவலர் வீதியினூடாக ஒலிபெருக்கியிலிருந்து ' பணமா பாசமா' படத்திற்கான விளம்பரம் கேட்டது.
''அன்பான ரசிகப்பெருமக்களுக்கு வணக்கம். யாழ் ராணி திரையரங்கில் 100 நாட்களையும் தாண்டி வெற்றிநடை போடுகின்றது பணமா பாசமா. ஜெமினிகணேசன், சரோஜாதேவி, நாகேஷ்,சிவகுமார், சாரங்கபாணி, வி.எஸ்.ராகவன் ஆகியோரின் அற்புதமான நடிப்பில், கே.வி.மகாதேவனின் இசையில் பணமா பாசமா! இன்னும் பார்க்கத்தவறியவர்கள்காணத் தவறாதீர்கள். மிகுதி வெண்திரையில்'
என்று நல்ல குரலில் அந்தப் படத்தின் விளம்பரம் வரவர கிட்ட நெருங்க லவுஸ் ஸ்பீக்கரின்ர சத்தம் காதைக்கிழிக்குது. முக்கோணமாக தட்டி கட்டி, அதில போஸ்டரும் ஒட்டி,தட்டியுடன் சேர்த்து போஸ்ரரும் நிமிர்ந்து நிற்குது. காற்றடித்து கிழியாமல் இருக்க,இடையிடையே ஓட்டையும் போட்டு ஸ்பீக்களும் பூட்டிக்கொண்டு Austin 10 என்ற Model கார் ஒழுங்கைக்குள்ள இறங்கி இப்ப எங்களுக்கு கிட்ட நெருங்கி வருகுது. காரும் பக்கத்தில வர, நாங்களும் காருடன் சேர்ந்து ஓடினோம். காருக்குள் இருந்து ஒன்று இரண்டு நோட்டீஸ் கசங்கி உருட்டிய நிலையில் எறியப்பட்டன. அந்த நோட்டீஸை கையில் எடுத்து விரித்துப்பார்த்தால் 50 ரூபா தாள் காசுபோல அதில் பணமா பாசமா படம் போட்டு அச்சிடப்பட்டிருந்தது.
அந்த வயதில், அந்த நோட்டீஸ் கைக்கு வந்தது இனியில்லையென்ற புளுகம். இடையிடையே லவுஸ்ஸ்பீக்கரில நல்ல பாட்டும் கேட்குது. காத்தில பறந்திடும் என்று கனமாயிருக்க நோட்டீஸை கசக்கி எறிவது வழக்கம். அதைவிட வேடிக்கை என்னவென்றால், நல்ல வடிவான பெண்பிள்ளைகளின் வீட்டுக்குள்ளேதான் கூடுதலான நோட்டீஸ்களும் வந்து விழும். அது அந்தக்காலத்து குரல்வளம் மிக்க ஒலிபரப்பு விண்ணர்களின் சாகசம். காரைத் துரத்திக்கொண்டு போனாலும் சின்னப்பெடியன்களாகிய எங்களுக்கு ஒரு நோட்டீஸ் கிடைப்பதே அரிது. அவர்களை திட்டித்தீர்ப்பதே அக்கணத்திற்கான இளசுகளின் சந்தோசம்.
'பொழுது படப்போகுது.இனி எல்லாரும் மெல்ல மெல்ல வீட்டுக்குள்ள போங்கோ பிள்ளைகள்' என்றா அம்மா. காகம் கரைவதும்,அணில் பாய்வதும், குயில் கூவுவதும், ஏன் மரங்கொத்தி பறவையின் 'டொக்கு டொக்கு' என்ற சத்தமும்கூட இப்போ நின்றுவிட்டுது.
எங்கள் கூட்டமும் மெல்லக்கலைந்து அவரவர் வீடுகளுக்குள் போய்விட்டார்கள். இருள் மூடி ஊரும் உறங்கிவிட்டுது. வானத்தில் நட்சத்திரங்கள் மின்னிட வானொலியில் இரவின் மடியில் கேட்டு ரசித்தபடியே நாமும் உறங்கிய எமக்கான பொற்காலமது.
போன வருசம் ஊருக்குப்போனதும், கடையிற்சுவாமி கோயில் ஒழுங்கைக்குள் இறங்கி நடந்தோம்.இப்போது ஒரு குருவியும் அங்கில்லை. கூட்டமும் இல்லை. பாடிந்திருந்த பறவைகளே நீங்கள் எங்கே போனீர்கள்? எட்டிப்பார்த்து ஒருத்தரிடமும் பேசமுடியாமல் சுவர்கள் மட்டும் தென்னைமர உச்சிக்கு உயர்ந்து நிற்கின்றன. தெருவோரம் மிஞ்சி நிற்பது மயான அமைதி ஒன்றுதான்!