கவிஞர் கண்ணதாசனின் வரிகளில், பி.பி.ஶ்ரீனிவாஸ் & பி.சுசீலா குரலில், மெல்லிசை மன்னர்கள் இசையில் ஒலிக்கும் இந்தப்பாடல் தமிழ்த் திரையுலகின் முக்கியமான பாடல். காலத்தைக் கடந்தும் வாழும் கானம் என்பதற்கு நல்லதோர் உதாரணமாக நிற்கும் பாடல். இந்தப்பாடல் ஒலிக்கும் படத்தை இதுவரை நான் பார்க்கவில்லை. ஆனால் இந்தப்பாடலை எத்தனை தடவைகள் கேட்டு இரசித்திருப்பேன் என்பது தெரியாது. காதலின் சிறப்பை வெளிப்படுத்தும் பாடல் இளவரசி ஒருத்திக்கும் , சாதாரண போர் வீரன் ஒருவனுக்குமிடையிலான காதலை வெளிப்படுத்தும்.
இந்தப்பாடல் - 'ரோஜா மலரே ராஜகுமாரி'. நடிகர் சி.எல்.ஆனந்தனும், குமாரி சச்சுவும் நடித்திருக்கும் வீரத்திருமகன் திரைப்படத்தில் அவர்கள் பாடுவதாக அமைந்திருக்கும் பாடல். இருவருமே திரையிலகில் அவர்கள் எதிர்பார்த்தவாறு பிரகாசிக்க முடியவில்லையென்பது திரதிருஷ்ட்டமானது, ஆனால் இப்பாடல் ஒன்றின் மூலம் அவர்கள் இருவரும் தமிழ்த்திரையுலகின் வரலாற்றில் நிலைத்து நின்று விட்டார்கள்.
இப்பாடலைப்பற்றி ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் நல்லதொரு ஆங்கிலக் கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அவருக்கு மிகவும் பிடித்த பாடலென்றும் குறிப்பிட்டிருக்கின்றார். தமிழகத்தில் பாடல் அடைந்த வரவேற்பைத் திரைப்படம் பெறவில்லையென்றும் , ஆனால் படம் தோல்விப்படமல்ல என்றும் குறிப்பிடும் டி.பி.எஸ் ஜெயராஜ் இலங்கையில் இப்பாடலும், திரைப்படமும் மிகுந்த வெற்றியைச் சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் பெற்றதாக மேற்படி கட்டுரையில் நினைவு கூர்ந்திருக்கின்றார்.
பின்னர் குமாரி சச்சு தமிழ்த்திரையுலகின் முக்கிய நகைச்சுவை நடிகைகளில் ஒருவராக மிகுந்த புகழ்பெற்று விளங்கினார் என்பது வரலாறு. ஶ்ரீதரின் காதலிக்க நேரமில்லையில் அவர் நடிகர் நாகேஷின் இணையாக நடித்திருப்பார். நாயகன் சி.எல்.ஆனந்தனும் பின்னர் குணச்சித்திர, வில்லன் வேடங்களில் நடித்துக்காணாமல் போய்விட்டார்.
பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=pqgAS7mzZjA
ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜின் கட்டுரையை வாசிக்க - https://dbsjeyaraj.com/dbsj/?p=47108