கண்ணம்மா,
நீ எப்போதும் கூறுகின்றாய்
நீ இருப்பதாக.
நீ என்னிலும் வேறாக இருப்பதாக.
நான் கூறுகின்றேன் கண்ணம்மா!
நீ எனக்குள் இருப்பதாக.
எனக்கு வெளியில் நீயில்லையென்று.,
நீ மறுத்துக்கூறுகின்றாய்
கண்ணா உன் கண்களை மூடிவிட்டாயா?
அறிவுக்கண்ணைப் பாவி கண்ணா.
பாவித்தால் நான் கூறுவது
புலப்படும்
என்று நீ கூறுவதை
எப்படி என்னால் ஏற்க முடியும்.
கண்ணம்மா, இருந்தாலும் உன்
குறும்புக்கு ஓர் அளவேயில்லையடி.
இப்பொழுது நீ பதிலுக்கு எடுத்துரைக்கின்றாய்
கண்ணா, உன்னால் உன்னை மீறி எவற்றையும்
காண முடியாது. ஏனென்றால் நீயொரு
குருடன். அறிவுக் குருடன்.
கண்ணம்மா, நீ இவ்விதம்
கிண்டலடிப்பதால்,
குறும்பு செய்வதால் என்னைக்
கேலிக்குள்ளாக்குவதால் நான் ஒருபோதும்
கலங்கமாட்டேனடி.
புறத்தில்
நீ இருப்பதை
நீ நிரூபிக்கும் வரையில்
நான்
குருடன்தான்.
அகக்குருடன் தான்.
அறிவுக் குருடன்தான்.
இப்பொழுது நீ சிரிக்கின்றாய்.
எப்பொழுதுமே நீ இப்படித்தான் கண்ணம்மா.
இருந்தாலும் உன்னுடன் ஓர் ஒப்பந்தம்
செய்தாலென்று தோன்றுகின்றது.
செய்வோமா கண்ணம்மா.
கண்ணா, எதற்கெல்லாம் ஒப்பந்தம்?
ஒப்பந்தம் வேண்டாம் தர்க்கம் செய்வோம்.
சரியா கண்ணா?
சரி கண்ணம்மா , தர்க்கமே
செய்வோம்.
நீ எனக்குள் இருப்பதைப்பற்றி
நீ எனக்கு வெளியில் இருப்பதைப்பற்றி,
நீ இருக்கும் பட்சத்தில்;
நீ இருப்பதை நான் அறிவது எங்ஙனம் என்பது பற்றி,
நான் இருப்பதைப் பற்றி
நான் உனக்கு வெளியில் இருப்பது பற்றீ
நான் இவ்விதம் இருக்கும் பட்சத்தில்
நான் இருப்பதை நீ எவ்விதம் புரிவாய் என்பது பற்றி,
அவ்விதப் புரிதலில் உனக்கிருக்கும்
அவநம்பிக்கை பற்றி
தர்க்கம் செய்வோமடி கண்ணம்மா!
தர்க்கம் செய்வோமடி கண்ணம்மா.
கேள்விகள் கான்டிற்கு மட்டுமா கண்ணம்மா?
எனக்கும்தான்.
உனக்கும்தான்.