காலவெளி பற்றிக் கதைப்பதென்றால்,
உன்னுடன் கதைப்பதென்றால்
களி மிகும் கண்ணம்மா.
கூர்ந்த கவனிப்பும், தெளிந்த கருத்துகளும்,
தேர்ந்த சொற்களும்
உன்னுடனான என்உரையாடல்களை
உவப்புக்குரியவை ஆக்குவன.
உன் இருப்பு இருப்பு பற்றிய
தேடல்களின் முக்கிய படிகள்,
இருப்பு என்பது இருப்பவையா?
உளவியற் பிம்பங்களா?
அன்றொரு தருணத்தில் கேட்டதை,
என்றொரு தடவை நீ கேட்டதை
இன்று நினைத்துப் பார்க்கின்றேன்.
அதை உன் இருப்புடன்
பொருத்திப் பார்க்கின்றேன்.
மென்முறுவல் ஓடி மறைவதையும்
பார்க்கின்றேன்.
ஆனால் தடுக்க முடியவில்லை.
உன்னுடனான உரையாடல்கள்
உன் இருப்பு பற்றிய வினாக்களுக்கு
உரிய விடைகளாக இருக்கக் கூடுமோ
என்று எண்ணியும் பார்க்கின்றேன்.
இருப்பு என்பது இருப்பதைப் பற்றியது
மட்டுமல்ல
இல்லாதவைப் பற்றியதும்தான்
என்பதைப்
புரிந்துகொள்ள வைத்தவை
உன் வினாக்கள், அவற்றுக்கான
விடைகள்.
இப்பொழுது நான் பதிலுக்கு
உன்னிடம் கேட்கின்றேன்.
நீ இருக்கிறாயா? அல்லது இல்லையா?
இருக்கும் உன்னிடம் உரையாடுகின்றேனா?
அல்லது
இல்லாத உன்னிடம் உரையாடுகின்றேனா?
இதற்கு நீ பதிலளிக்கின்றாய்
இதழ்க்கோடியில் நகையொன்றை நழுவவிட்டபடி
'நான் இருப்பதும் உண்மையென்றால்
நான் இல்லாததும் உண்மைதான்.
இருக்கும் என் உரையாடல்கள் என்
இருப்பை உணர்த்தினால்.
இல்லாத என்னுடனான
உன் உரையாடல்களும்
என்
இருப்பின் விளைவுகள்தாம்.
கருத்தின் விளைவு என் இருப்பென்றால்
அதுவும் உன் அகத்தின் சித்திரமென்றும்
ஒரு பதிலுண்டல்லவா?
பொருளின் வடிவம் நானென்றால்
புறத்தின் உண்மை நானல்லவா?
கண்ணம்மா! நீ என்ன கூற வருகின்றாய்
என்று கேட்கின்றாயா கண்ணா?
இதனால்தான் கூறினேன்
கண்ணம்மாவுடனான என்
உரையாடல்கள் உவகையூட்டுவன.
ஏனென்றால்
அவை
இருப்பு இருப்பவை பற்றி மட்டுமல்ல
இல்லாதவை பற்றியும்தாம்.