மாசாத்துவான் மா பெரும் வணிகன்
மாநாய்க்கானும் மா பெரும் வணிகன்
இரு வீட்டாரும் பெருமனங் கொண்டு
திருமண உறவில் இணைந்திட விரும்பினார்
கோவலன் என்பான் கோடியில் புரண்டான்
மாசாத்து வானின் வாரிசாய் திகழ்ந்தான்
குணமுடைக் கண்ணகி குலக் கொழுந்தாக
மாநாய்க் கானின் மகளாய் விளங்கினாள்
கோவலன் கண்ணகி திருமண நிகழ்வை
மாநிலம் வியக்க வண்ணமாய் அமைத்தனர்
ஊரெலாம் சோடனை உறவுகள் பெருந்தொகை
வீதிகள் எங்கணும் விதம்விதம் பந்தல்கள்
அழகுடைப் பெண்கள் அணி அணியாக
திருமண மண்டபம் நோக்கியே சென்றனர்
தங்கமும் வைரமும் முத்தும் அணிந்து
தங்களை மறந்து களிப்பினில் மூழ்கினார்
பொன்னும் மணியும் நிறைந்த வணிகர்கள்
மின்னும் பட்டாடை உடுத்தியே வந்தனர்
கோவலன் கண்ணகி திருமணம் கண்டிட
யாவரும் ஆவலாய் மண்டபம் நிறைந்தனர்
யாழின் இசையும் குழலின் இசையும்
நாட்டிய நங்கையர் நடன நிகழ்வும்
வந்திருந் தோரினை மயங்கவே செய்தது
திருமண மண்டபம் சொர்க்கமாய் மிளிர்ந்தது
காளையர் கன்னியர் களிப்பினில் மிதந்தனர்
கண்ணகி கோவலன் கைபற்றும் வேளையை
யாவரும் நோக்கிடக் கோவலன் வந்தனன்
கண்ணகி வரவை ஆவலாய்ப் பார்த்தனர்
அமைதி கொண்ட அழகான பெண்ணாய்
கண்ணகி திருமண மண்டபம் வந்தாள்
மன்மதன் போன்று கோவலன் வந்தான்
பார்த்தவர் வியந்தனர் பரவசம் அடைந்தனர்
திருமணச் சடங்குகள் சிறப்பாய் நடந்தன
கோவலன் கைத்தலம் பற்றினாள் கண்ணகி
மங்கல நாணைக் கோவலன் பூட்டினான்
மங்கல இசையுடன் வாழ்த்துகள் முழங்கின
ஆசிகள் வழங்கி அனைவரும் மகிழ்ந்தனர்
கோவலன் கண்ணகி குறைவிலா வாழ்ந்திட
யாவரும் வியக்கவே திருமணம் நடந்தது
நங்கையும் நம்பியும் இல்லறம் இணைந்தனர்
மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே
என்றே கோவலன் இன்மொழி பகர்ந்தான்
இல்லறம் சிறந்திட இருப்பான் என்று
நல்லதாய் நினைத்தாள் நன்மகள் கண்ணகி
விதியின் போக்கோ வேறாய் ஆகிட
கோவலன் பாதை மாறியே போனான்
விதியின் வழியாய் வந்தாள் மாதவி
விழுந்தான் கோவலன் தன்னிலை மறந்து
கண்ணகி கவலைக் கடலினுள் வீழ்ந்தாள்
காமத்தில் அமிழ்ந்து கோவலன் மகிழ்ந்தான்
மாதவி மடந்தை மனமெலாம் தூய்மை
மயக்கிடும் மனமோ அவளிடம் இல்லை
விதியால் மாதவி வலையினில் வீழ்ந்தாள்
கோவலன் ஆசை வானிலே பறந்தான்
மாதவி கண்ணகி மாண்புடைப் பெண்கள்
மயக்கிய கோவலன் மனிதத்தை இழந்தான்
கோவலன் தேனுண்னும் வண்டாய் திரிந்தான்
காவலின் தெய்வமாய் கண்ணகி திகழ்ந்தாள்
மயங்கிய கோவலன் தெளிவினைப் பெற்றான்
மனைவியின் துணையினை நாடியே வந்தான்
கண்ணகி பேசா கதவினைத் திறந்தாள்
கூசிக் குறுகி கோவலன் நுழைந்தான்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.