யாழ்ப்பாண வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்ட சாண் சுந்தரம் (செல்வேந்திரா, Shan Sundaram) அவர்கள் சிறந்த ஓவியர். பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரி. யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவர். நீண்ட காலமாக அமெரிக்காவில் வாழ்ந்து வருமிவர் சிறந்த மரதன் ஓட்டக்காரரும் கூட. பயணிப்பதில் ஆர்வம் மிக்கவர். அவ்விதம் பயணிக்கையில் தான் காணும் நகரங்களின் முக்கிய நில அடையாளங்களையெல்லாம் ஓவியமாக்கி முகநூலில் பகிர்பவர்.
தற்போது இலங்கையில் பயணித்துக்கொண்டிருக்கும் இவர் யாழ் கோட்டை, நல்லூர் ஆலயம் மற்றும் யாழ் மாநகரசபைக் கட்டடம் ஆகியவற்றை ஓவியமாக்கித் தன் முகநூற் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார்.
திரு சாண் சுந்தரம் அவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். உங்கள் பயணங்களில் வரையும் நகரக் காட்சிகளைத் தொகுத்து, சிறு அறிமுகக் குறிப்புகளுடன் ஒரு நூலாக வெளியிடுங்கள். உங்களைப் படைப்புகளை வெளியிடுவதாக அமையும் அதே சமயம் , வருங்காலத் தலைமுறைகளுக்கு ஒரு காலகட்டதைப் பிரதிபலிக்கும் காட்சிகளை உள்ளடக்கிய ஆவணமாகவும் அந்நூல் நிச்சயம் அமையும்.
சாண் சுந்தரம் (செல்வேந்திரா) அவர்கள் திண்ணையுடன் கூடிய தனது யாழ் வீட்டுப் புகைப்படத்தையும் என்னுடன் பகிர்ந்துகொண்டிருந்தார். அதனை இங்கு காண்கின்றீர்கள். திண்ணையுடன் கூடிய நாற்சார வீடுகள் யாழ்ப்பாண மக்களின் பாரம்பரியக் கட்டடக்கலைக்கு நல்லதோர் எடுத்துக்காட்டுகள். சமூக வாழ்வையும் , காலநிலையையும் உள்வாங்கிக் கட்டப்பட்ட வீடுகள் அவை