* ஓவியம் - AI -
கட்டடக்கலையின் முக்கிய அம்சமே வடிவமைப்புத்தான். கட்டடச் சூழலை வடிவமைப்பதே கட்டடக்கலை என்று சுருக்கமாகக் கூறலாம். ஒரு நகரானது கட்டடங்களால் நிறைந்துள்ளது. கட்டடங்கள் நிறைந்த அச்சூழலை உருவாக்குவதே கட்டடக்கலை. கட்டடக்கலை எவ்விதம் கட்டடங்களை உருவாக்குகின்றது? இங்குதான் வடிவமைப்பு முக்கியமாகின்றது. கட்டடக்கலையானது வெறும் கட்டடங்களைக் கட்டுவது மட்டுமல்ல. அக்கட்டடங்களைக் கட்டுவதற்கு முன், வடிவமைப்பதற்கு முன் பல விடயங்களைக் கவனத்திலெடுக்க வேண்டும்.
கட்டட வடிவமைப்பின் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளும் அவற்றின் அவசியமும்!
ஒரு கட்டடம் கட்டவேண்டுமென்று வாடிக்கையாளர் ஒருவர் விரும்பினால் கட்டடக்கலைஞர் ஒருவர் பின்வரும் விடயங்களைக் கவனத்திலெடுக்க வேண்டும். அக்கட்டடம் எதற்காகக் கட்டப்பட வேண்டும்? நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் கட்டடத்தை வடிவமைக்க முடியாது. உதாரணத்துக்கு வாடிக்கையாளர் தான் வசிப்பதற்கு ஓர் இல்லத்தை உருவாக்க வேண்டுமென்று விரும்பலாம். அல்லது ஒரு கல்விக்கூடத்தை உருவாக்க வேண்டுமென்று விரும்பலாம். அல்லது நூலகம் ஒன்றினை உருவாக்க வேண்டுமென்று விரும்பலாம். இவ்விதம் அவ்வாடிக்கையாளரின் நோக்கத்தைத் தெளிவாக அறிந்து கொள்வதே வடிவமைப்புச் செயற்பாடுகளைப் பொறுத்தவரையில் முதலாவதாக இருக்கும்.
வாடிக்கையாளரின் நோக்கத்தைப் புரிந்து கொள்வதுடன் , அவர் அத்திட்டத்துக்காகச் செலவழிக்கக்கூடிய நிதி பற்றியும் தெளிவான புரிதல் இருக்க வேண்டும். இதை வாடிக்கையாளருடன் கட்டடக்கலைஞர் நடத்தும் உரையாடல்கள் மூலம் பெற முடியும்.
வாடிக்கையாளரின் நோக்கம், அவர் அந்நோக்கத்துக்காகச் செலவழிக்கக்கூடிய நிதி பற்றிய தெளிவான புரிதல் சிறந்த வடிவமைப்பை உருவாக்குவதற்கு மிகவும் அவசியமாகும்.
கட்டடங்களும், சூழலும்
கட்டடங்களை வடிவமைக்கும்ப்போது அக்கட்டடங்கள் அமைய இருக்கும் இடத்திலுள்ள சூழலின் தாக்கம் பற்றிய புரிதல் மிகவும் அவசியமானது. அப்பகுதிக் காலநிலை, புவியியல் போன்றவை கணக்கிலெடுக்கப்பட்டு, அவற்றை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைப்பு உருவாக்கப்பட வேண்டும். உதாரணமாக யாழ் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் அதன் காலநிலையை உள்வாங்கிய நம் முன்னோர் அமைத்த வீடுகளில் நாற்சார வீடுகள் பிரசித்தமானவை. அவர்கள் நடுவில் முற்றங்களுடன் கூடிய நாற்சார வீடுகளை அமைத்ததன் மூலம் காற்றோட்டம் மிக்கதாக வீடுகளை அமைத்தார்கள். நாற்சார வீடுகள் எம் பாரம்பரியக் கட்டடக்கலையின் முக்கியமான அம்சங்களில் ஒன்று.
உறைபனி பெய்யும் இடங்களில் தட்டையான கூரைகளைச் சாதாரண வீடுகளில் அமைக்க மாட்டார்கள். மிகவும் இலகுவாக உறைபனி தேங்கி உறைந்து விடாமலிருக்கும் வகையிலான சாய்வான கூரைகளையே அமைப்பார்கள். சூழலுக்கேற்ப வீடுகள் அமைக்கப்பட வேண்டுமென்பதற்கு இவை நல்லதோர் உதாரணங்கள்.
மேலும் கட்டடங்கள் அமையவுள்ள நில அமைப்பு, மண்ணின் தன்மை ஆகியவை பற்றிய ஆய்வுகளும் கட்டடமொன்றின் வடிவமைப்பைத் தீர்மானிக்கும் காரணிகள்.
உள்ளூர் இயற்கை வளங்கள்
உள்ளூரில் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய கட்டடப்பொருட்கள் பற்றிய அறிவும், ஆய்வும் கட்டடமொன்றின் வடிவமைப்பில் முக்கிய பங்கினை ஆற்றுகின்றன. உள்ளூரில் கிடைக்கக்கூடிய கட்டடப்பொருட்களைப் பாவிப்பதன் மூலம் கட்டடப்பொருட்களுக்கான செலவினைப் பெருமளவு குறைக்க முடியும். இதற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக எம் பாரம்பரியக் கட்டடக்கலையில் நம் முன்னோர்கள் காட்டிய திறமையினைக் கூறலாம்.
பனை மரத்தைக் கற்பகத் தரு என்பர். பனை மரங்கள் சூழலைப் பாதுகாப்பவை. கடும் வறட்சியிலும் வளரும் தன்மை மிக்கவை. அதன் பாகங்கள் ஒவ்வொன்றும் பல்வேறு வகைகளில் மக்களுக்குப் பயன்படுபவை. கட்டடப்பொருட்களாக, பல்வகை உணவுப் பொருட்களாக, விசிறி , வேலி போன்ற பல்வகைத் தேவைகளுக்குப் பயன்படுகின்றன. இவ்விதம் அவற்றின் பயன்கள் பற்பல. பல்வகை உயிர்களின் இருப்பிடங்களாகவும் உள்ள பனை மரங்களைப் பெருமளவில் வளர்ப்பது மிகவும் அவசியமாகும்.
- Wattle and Daub அமைப்புச் சுவர் -
தென்னிலங்கையிலும் வறிய மக்களால் உள்ளூரில் கிடைக்கும் மரங்களையும் ,மண்ணையும் கொண்டு அமைக்கப்படும் Wattle and Daub வகை வீடுகள் இவ்விதம் உள்ளூர் இயற்கை வளங்களைப் பாவித்து உருவாக்கப்பட்டும் வீடுகளுக்கு இன்னுமோர் உதாரணம். இவ்வகை வீடுகளில் மரச்சட்டங்கள் குறுக்கு நெடுக்காக அமைக்கப்படும் சட்டங்களின் குழைத்த மண்ணை அப்பி வீட்டுச் சுவர்களை உருவாக்குவார்கள். இவை நன்கு உறுதியானவை. நீண்ட காலம் பாவிக்கும் தன்மை மிக்கவை.
இவற்றிலிருந்து கட்டடக்கலைஞர்கள் பாடம் படிக்க வேண்டும். அதனால்தான் சிறந்த கட்டடக்கலைஞர்களுக்குப் பாரம்பரியக் கட்டடக்கலை பற்றிய தெளிவும், புரிதலும் மிகவும் அவசியம். எவ்விதம் பாரம்பரியக் கட்டடங்களை நம் முன்னோர் உருவாக்கினார்களோ அவ்விதமே கட்டடக்கலைஞர்களும் நவீனக் கட்டடடங்களை வடிவமைக்கையில் ,உள்ளூரில் கிடைக்கும் இயற்கை வளங்களைப் பாவிக்கும் சாத்தியங்கள் உள்ளனனா என்பது பற்றியும் ஆராய வேண்டும். சாத்தியங்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றைப்பற்றி வாடிக்கையாளர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். தம் கட்டட வடிவமைப்பிலும் பாவிக்க வேண்டும்.
வடிவமைப்பும், சமூக வாழ்வும்
- திண்ணை -
கட்டடங்களின் சமூக வாழ்வும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இதற்கும் நம் பாரம்பரியக் கட்டடக்கலையின் பிரதான கூறுகளான நாற்சார வீடுகளையும், திண்ணைகளையும் குறிப்பிடலாம். அக்காலகட்டத்தில் காலநிலை காரணமாக அமைக்கப்பட்ட நாற்சார வீடுகள் இன்னுமொரு விதத்திலும் முக்கியம் பெற்றிருந்தன. நாற்சார முற்றத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட திண்ணைப் பகுதி பெண்களின் முக்கிய பகுதியாகவும் அமைந்திருந்தன. அக்காலப்பெண்களின் வாழ்க்கை முறைக்கு அவை பெரிதும் ஒத்துழைத்தன. அதே சமயம் வீட்டு முன் அமைந்துள்ள திண்ணைகள் ஆண்களின் சமூக வாழ்வுக்கு உறுதுணையாக விளங்கின. சமூக வாழ்வு எவ்விதம் கட்டடமொன்றின் வடிவமைப்பில் தாக்கம் செலுத்துகின்றது என்பதற்கு இவை நல்லதோர் உதாரணங்கள்.
- நாற்சார வீட்டு முற்றம் -
இயற்கை அழிவுகளும், கட்டட வடிவமைப்பும்
வெள்ள அபாயம், நில நடுக்க அபாயம், சூறாவளி போன்ற இயற்கைப்பேரழிவுகள் அடிக்கடி ஏற்படும் இடங்களில் கட்டடங்கள் அமைக்கும்போது அவற்றை உள்வாங்கி, எதிர்த்து, உறுதியாக நிற்கும் வகையில் கட்டடங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். இவ்விதமான கட்டடங்களை வடிவமைக்கையில் கட்டடக்கலைஞர்கள் கட்டடப்பொறியியலாளர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும். எவ்விதமாக, உறுதியான கட்டடங்களை வாடிக்கையாளரின் நிதி நிலைக்கேற்ப வடிவமைக்கலாம் என்பதற்கு இது அவசியம்.
கலாச்சார, வரலாற்றுப் பின்னணியும் , வடிவமைப்பும்
கட்டட வடிவமைப்பில் கலாச்சார், வரலாற்றுக் கூறுகளும் மிகுந்த செல்வாக்கினைச் செலுத்துகின்றன,. இந்துக்களின் வீடுகளில் வாஸ்துதேவ சாஸ்த்திர விதி முறைகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இது போல் இஸ்லாமியரின் கட்டடங்களிலும் அவர்களது கலாச்சார வரலாற்று அம்சங்கள் முக்கிய பங்கினை ஆற்றுகின்றன. இவற்றையெல்லாம் கட்டடக்கலைஞர் உள்வாங்கிதம் வாடிக்கையாளர்களுக்கான கட்டடங்களை வடிவமைப்பது அவசியம்.
இவற்றுடன் புதிய கட்டடங்களை, நகர அபிவிருத்தியை கண்காணிக்கும் அரசத் திணைங்களங்களின் கட்டட விதிகள், அமையவிருக்கும் கட்டடத்துக்குத் தேவையான மின்சாரம், தண்ணீர், வடிகால் வசதிகள் போன்றவை எவ்விதம் அப்பகுதியிலுள்ளன என்பது பற்றிய பூரண ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அழகியலும் (Aesthetics), வடிவமைப்பும்
எந்த ஒரு கலையும் மக்களுக்குப் பயன்படும் அதே சமயம் இன்பமளிப்பதாகவுமிருக்க வேண்டும், இன்பத்தை அளிப்பதற்குக் அக்கலைப்படைப்பானது அழகியல் அம்சங்களை உள்வாங்கி உருவாக்கப்படுதல் அவசியம். இதற்குக் கட்டடக்கலையும் விதிவிலக்கல்ல. இன்றும் மக்கள் இலட்சக்கணக்கில் தாஜ்மஹால் கட்டடத்தை ஏன் சென்று பார்க்கின்றார்கள்? நதியோரம் அமைந்துள்ள அதன் அழகுக்காகவும், அதனைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அதன் கட்டட அமைப்பினால்தானே. அதன் அழகியலே மக்களை அங்கு அதிகளவில் செல்ல வைக்கின்றது. மனநிறைவைத்தருகின்றது. இன்பமடைய வைக்கின்றது. அதனை அதிக அளவில் பாவிக்க வைக்கின்றது.
அழகியலைத் திறமையாக வடிவமைப்பில் பாவிப்பதற்குக் கட்டடக்கலைஞர் ஒருவருக்குக் கட்டடக்கலை , அதன் வரலாறு, உள்ளூர், உலகக் கட்டடக்கலை போன்ற விடயங்களில், கட்டடக்கலைக் கோட்பாடுகள் பற்றிய அறிவு போன்றவற்றுடன் கற்பனையாற்றலும் இருக்க வேண்டும். படைப்பாற்றல் இருக்க வேண்டும். இவ்விதம் அழகாக அமைக்கப்படும் கட்டடங்களை பாவனையாளர்கள் மகிழ்ச்சியுடன் அதிக அளவில் பயன்படுத்துவார்கள்.
இவ்விதம் கட்டடமானது சூழல், காலநிலை, கட்டட விதிகள், கலாச்சார வரலாற்றுக் கூறுகள், சமூக வாழ்வு, இயற்கை வளங்கள் இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்து, இயற்கை அழிவுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். இவ்விதம் வடிவமைக்கப்படுகையில் வாடிக்கையாளரின் நிதி நிலைக்கேற்ப, அவரது விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.