- எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் பிறந்த நாள் ஜனவரி 19. அதனையொட்டி எழுதப்பட்ட கட்டுரை. அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். -
“வாய்விட்டுச்சிரித்தால் நோய்விட்டுப்போகும்.“ என்பார்கள்.
மனிதர்களுக்கு பிரச்சினைகள் அதிகாரித்துக்கொண்டிருப்பதனால் சிரிப்பதும் சிந்திப்பதும் குறைந்துகொண்டு போகிறது.
மரபார்ந்த இலக்கியம், நவீன இலக்கியம், முற்போக்கு இலக்கியம், பிரதேச மொழி வழக்கு இலக்கியம், மண்வாசனை இலக்கியம், போர்க்கால இலக்கியம், புலம்பெயர்ந்தோர் – புகலிட இலக்கியம் என்று எமது ஈழத்தவர்கள் கடந்து வந்த இலக்கியப்பாதை நெடியது. எல்லாம் கடந்து வந்து பின்னாட்களில் கொரோனோ கால இலக்கியமும் அறிமுகமாகியது.
உயிர்வாழ்வதற்காக கண்ணுக்குத் தெரியாத கிருமியுடன் போராடிக்கொண்டு, இடைவெளிபேணி உறவுகளை தக்கவைத்துக்கொள்வதற்கு இணையவழி சந்திப்புகளை நடத்தும் காலத்திற்கு வந்துள்ளோம்.
பயணிக்காமல், விசா பெற்று விமானம் ஏறிச்செல்லாமல் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே என்பதுபோல், மூடிய அறைக்குள்ளிருந்து உலகெங்கும் வாழ்பவர்களின் முகம் பார்த்து பேசிக்கொண்டிருக்கின்றோம்.
இந்த இணையவழிக்கும் (ZOOM) மெய்நிகர் என்று புதிய சொற்பதம் கண்டுபிடித்துள்ளனர். எல்லாம் கடந்துபோகும் என்பதுபோல், இந்த புதிய பதத்தையும் கடக்கின்றவேளையில் எம்மால் கொண்டாடப்படும் கனடாவில் வதியும் படைப்பாளி அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம் பற்றிய உரையாடல்கள் ஏற்கனவே பல மெய்நிகர் அரங்குகளில் இடம்பெற்றுள்ளன..
அவற்றின் தொடர்ச்சியாக எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கமும் கடந்த 19 ஆம் திகதி, முத்துலிங்கம் அவர்களின் 88 ஆவது பிறந்த தினத்தின்போது அவரது படைப்புகள் தொடர்பாக கருத்தரங்கினை மெய்நிகரில் நடத்தியது.
எமது சங்கம், தொடர்ச்சியாக இயங்கிவரும் பாதையில் நாம் பெற்ற அனுபவங்களின் நிமித்தம், எம் மத்தியில் வாழ்ந்துவரும் கலை, இலக்கிய சாதனையாளர்களையும் முடிந்தவரையில், பாராட்டி கௌரவித்து வந்துள்ளோம்.
அத்தகைய நிகழ்வுகள் அவுஸ்திரேலியா மாநில நகரங்களில் கடந்த காலங்களில் நடந்த தமிழ் எழுத்தாளர் விழாக்களில் இடம்பெற்றுள்ளன.
அவ்வாறு கௌரவம் பெற்றவர்கள் பலர்.
இந்த நிகழ்ச்சியை நடத்திய அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினருக்கு ஜனவரி 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை.
எம்மைப்பொருத்தவரையில் எங்கள் மூத்த படைப்பாளி மதிப்பிற்குரிய அ. முத்துலிங்கம் அவர்களுக்கு இன்றுதான் பிறந்த தினம்.
ஆனால், அவர் வதியும் கனடா தேசத்திற்கு 18 ஆம் திகதி சனிக்கிழமை இரவுப்பொழுது.
“தமிழர்கள் வாழும் தேசங்கள் எங்கும் சூரியன் அஸ்தமிப்பதில்லை “ என்று ஒரு சந்தர்ப்பத்தில் முத்துலிங்கம் அவர்களே சொல்லியிருக்கிறார்.
அவர் தனது பிறந்த தினத்தை தமது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடும்போது எமக்கு இரவாக இருக்கும்.
அவரது பிறந்த தினத்தை கொண்டாடும்போது அவரை வாழ்த்துரைகளினால், சிறப்பிக்காமல், அவரது படைப்புலகம் பற்றி உரையாடுதே மிகவும் சிறப்பு என்ற யோசனையை எமக்கு முன்மொழிந்தவர் நண்பர் – எழுத்தாளர் – விலங்கு மருத்துவர் நொயல் நடேசன்.
அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும் அவர்தான்.
முத்துலிங்கம் சிறுகதைகள் பற்றி பிரித்தானியாவில் வதியும் எழுத்தாளர் அனோஜன் பாலகிருஸ்ணனும்
முத்துலிங்கம் நாவல்கள் பற்றி பிரான்ஸில் வதியும் கேசநந்தன் அகரனும் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் இணைந்துகொண்டவர்களில் சிலரும் முத்துலிங்கம் அவர்களை வாழ்த்திப்பேசினார்கள்.
இந்நிகழ்வின் இறுதியில் எமது சங்கம் , ஈழத்து எழுத்தாளர்களுக்காக நடத்திய ( 2023 இல் வெளியான நூல்களின் தெரிவு ) போட்டியின் முடிவுகளை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி பாடும் மீன் ஶ்ரீகந்தராசா அறிவித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் , எனது ஆழ்ந்த நேசத்திற்குரிய இலக்கிய நண்பர் அ. முத்துலிங்கம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு, முன்னர் நான் படித்திருக்கும் சுயசரிதை பாணியில் அமைந்த அவரது ‘உண்மை கலந்த நாட் குறிப்புகள்’ நூல் பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை இங்கே பதிவுசெய்கின்றேன்.
சுமார் பதினொரு வருடங்களுக்கு முன்னர் (2009) மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க முத்துலிங்கம் பற்றி மல்லிகையில் எழுதியிருந்தேன். மல்லிகை ஜீவா அதற்கு ‘வெளிச்சத்தை விதைக்கின்ற சர்வதேசப்பறவை’ எனத் தலைப்பிட்டு, அவரை அட்டைப்பட அதிதியாக பாராட்டி கௌரவித்திருந்தார்.
அவுஸ்திரேலியா தேசிய வானொலியான எஸ்.பி.எஸ் தமிழ் ஒலிபரப்பை இயக்கும் நண்பர் ரேமண்ட் செல்வராஜ் (ரேய்சல்) கேட்டவாறு முத்துலிங்கத்தின் தொடர்புகளை அவருக்கு பெற்றுக்கொடுத்திருந்தேன். ரேய்சல் மிகத்தரமான இலக்கிய நேர்காணலையும் முத்துலிங்கத்தின் ஒரு கட்டுரையையும் ஒரு சிறுகதையையும் ஒலிபரப்பினார். மூன்று வாரங்கள் இந்த நேர்காணல் மூன்று அங்கமாக அவுஸ்திரேலிய வான்அலைகளில் பரவியது .
அந்த நேர்காணலும் அவரை ஒரு சர்வதேச இலக்கியப்பறவைதான் என்று நிரூபித்தது.
உண்மை கலந்த நாட் குறிப்பு நூலை தமிழகத்திலிருந்து எனக்கு கிடைக்கச்செய்தார் முத்துலிங்கம். நாவல் என்ற வடிவத்தில் 46 அத்தியாயங்களுடன் இதனை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. நாவலுக்குரிய வடிவத்துடன்தான் வெளியாகியிருக்கிறதா…? எனக்கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் 46 அத்தியாயங்களும் நுண்மையான இழையால் இணைந்திருக்கின்றன.
படிக்கும்போது எமது முகத்தில் படியும் புன்னகையை தவிர்க்கவே முடியாது. ரயில்,பஸ், விமானப்பயணங்களில் இந்நூலை ஒருவர் படிக்க நேர்ந்தால், அருகிலிருக்கும் சக பயணி “ இவர் ஏன் சிரித்துக்கொண்டே வருகிறார்? “ என்று யோசிக்கவும்கூடும்.
சில பக்கங்களை நான் படித்தபோது அட்டகாசமாகவும் சிரித்திருக்கின்றேன். அதற்காக இதனை ஒரு நகைச்சுவை நவீனம் என்று எவரும் எண்ணிவிடவேண்டாம்.
“ அவரது ஒரு படைப்பை படித்த பின்பும் அந்தப்படைப்பு சில கணங்களுக்கு , சில நாட்களுக்கு, சில வருடங்களுக்கு எங்களுடன் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும் “ என்று அவரைப்பற்றி மல்லிகையில் எழுதும்போதும் குறிப்பிட்டுள்ளேன்.
“ தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத் தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் இந்த நாவல் அந்த வகை எழுத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்குகிறது.” - என்று உயிர்மைப்பதிப்பகம் பதிவுசெய்கிறது.
இந்த நூலுக்கான முன்னுரையை கால நதி எனத்தலைப்பிட்டு எழுதும் முத்துலிங்கம், இப்படிச்செல்கிறார்:
“ இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் சமயம் தொலைக்காட்சியில் செவ்வாய்க் கிரகத்துக்கு போய் இறங்கியிருக்கும் ஃபீனிக்ஸ் விண்கலத்தைப்பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ரயிலை வைத்து மணி சொன்ன நாளுக்கும் (முத்துலிங்கம் பிறந்த கொக்குவில் கிராமத்தில் ரயில் வரும்வேளையைப் பார்த்துத்தானாம் மணி என்ன என்று சொன்னார்களாம் ஒரு காலத்தில்) செவ்வாய்க்கு கலம் அனுப்பிய இந்நாளுக்கும் இடையில் எத்தனை பெரிய வித்தியாசம்.”
கார்ஸியா மார்க்குவெஸ் தமது சுயசரிதையை 72 வயதில்தான் எழுதியிருக்கிறார் என்ற தகவலையும் முத்துலிங்கம் சொல்கிறார். ஈழத்து இலக்கிய கர்த்தாக்கள் மல்லிகை ஜீவாவும் எஸ்.பொ.வும் தமது சுயசரிதைகளை தங்களின் 70 வயதுக்குப்பின்னர்தான் வெளியிட்டிருக்கிறார்கள்.
ஞானம் இதழில் வெளியான மலையக முன்னணி படைப்பாளியான தெளிவத்தை ஜோசப்பின் நேர்காணல் வடிவிலான அவரது சுயசரிதையும் அவரது 75 வயதுக்குப்பின்னர்தான் வந்தது.
எனவே சுயசரிதை எழுதுவதற்கும் 70 வயதாவது கடக்கவேண்டும் என்று இந்த முன்னோடிகள் முன்னுதாரணமாகிவிட்டார்கள்.
முத்துலிங்கம் தமது சுயசரிதை நாவலை ஆறு பெண்களுக்கே சமர்ப்பணம் செய்துள்ளார். அவர்கள்: அவருடைய அம்மா, அக்கா, தங்கை, மனைவி, மகள், பேத்தி.
இதிலும் ஒரு புதுமை. அவருக்கு அப்பா, அண்ணா, தம்பி, மகன் இருந்தார்கள்- இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கில்லாத முக்கியத்துவத்தை பெண்களுக்கு கொடுத்திருக்கிறார்.
ஏன்?
அவரது பதில் அந்த சமர்ப்பண பக்கத்தில் ஒரு ஆபிரிக்க முதுமொழியாக தொடக்கத்தில் இப்படி பதிவாகிறது:-
உலகத்து கவலைகளையெல்லாம் ஆண் சுமக்கிறான். ஆணை, பெண் சுமக்கிறாள்.
முத்துலிங்கம் வாசகர்களை சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்கவும் வைக்கிறார் என்பதற்கு இது ஒரு பதச்சோறு.
முதல் அத்தியாயத்தில் முதல் பந்தியில் தனது கிராமத்தை இப்படி வர்ணிக்கிறார்:
மழை இல்லையென்றால் கொடும்பாவி கட்டி இழுத்துக்கொண்டுபோய் சுடலையில் எரிக்கும் வழக்கம் கொண்ட கிராமம். நாய் கடித்தால் உச்சந்தலையில் மயிரை இழுத்து மந்திரித்தால் விஷம் இறங்கிவிடும் என்று நம்பும் கிராமம். தலையிடி என்றாலும், கால் முறிவு என்றாலும் நெருப்புக்காய்ச்சல் என்றாலும் ஒரே மருந்தை முலைப்பாலில் கரைத்து உண்ணத்தரும் பரியாரியார் உள்ள கிராமம். வாத்தியாரிடம் சண்டையென்றால் உடனே அவர் படிப்பிக்கும் பள்ளிக்கூடத்தை நெருப்பு வைத்துக் கொளுத்திவிடும் கிராமம். மானம்பூ திருவிழா நடக்கும்போது ஐயர் வாழை மரத்தை வெட்டுவார். கடையிலே ஐந்து சதத்துக்கு விற்கும் அந்த வாழைப்பூவுக்காக ஐந்துபேர் வீதியிலே உருண்டு பிரண்டு பத்து நிமிட நேரம் சண்டை போடுவார்கள்.
அவரது எழுத்துக்களில் அவர் பிறந்த யாழ்ப்பாணக் கிராமம் மட்டுமல்ல, அவர் வாழ்ந்த கொழும்பு, தொழில் நிமித்தம் புலம்பெயர்ந்து வாழ நேரிட்ட சியாரா லியோன், சூடான், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், கென்யா, சோமாலியா, மற்றும் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் கனடாவும் இடம்பெறும்.
சுயசரிதை என வரும்பொழுது ஊர், பெற்றோர், உடன்பிறப்புகள், சுற்றம், நண்பர்கள், ஆசிரியர்கள், தொழில்கள், வாழ்ந்த நகரங்கள், நாடுகள், படித்த நூல்கள், பெற்றுக்கொண்ட அனுபவங்கள், வெற்றிகள், தோல்விகள், சாதனைகள், ஏமாற்றங்கள், வேதனைகள், சோதனைகள் ….இப்படி எத்தனையோ ஞாபகசக்தியின் துணையோடு ஊற்றாக பெருக்கெடுக்கும். அப்படித்தான் முத்துலிங்கமும் தமது காலநதியை ஊற்றெடுத்து ஓடச்செய்கிறார்.
அவரது இளமைக்கால சந்திரமதி ரீச்சர் அழகி. அவரது ஸ்டைலில் அந்தப்பள்ளிக்கூடமே மதிமயங்கி நின்றிருக்கிறது. அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும் என்பார்களே. அந்த ஆபத்தும் ஒருநாள் நிகழ்ந்துதான்விட்டது. அவர் அங்கிருந்து நீக்கப்பட்டு இடம் மாற்றப்படுகிறார். அதனால், சாரி அணிவதில் ஆண்டாண்டு காலமாகப்பேணப்பட்ட பிற்கொய்யகப் பாரம்பரியம் மெல்ல மெல்ல அழிந்துபோனது என்று சுவாரஸ்யமாகச்சொல்கிறர் இந்தக் கதைசொல்லி.
அவரது அக்கா பருவமடைந்ததும் பாடசாலையால் நிறுத்தப்பட்டு சங்கீதம் பயிலவைக்கப்படுகிறர். ஆனால் பயிலும் பாடல்களில் எந்தவொரு ஆணின் பெயரும் நுழைந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையோடு கண்காணிக்கின்றார் தந்தையார். அது இறைவனது பெயராக இருந்தாலும்கூட. பாட்டு வாத்தியார் அத்தகைய பாடல்களை அக்காவுக்கு சொல்லிக்கொடுக்கக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கிறார் முத்துலிங்கத்தின் விந்தையான தந்தை.
அக்காவுக்கும் ஒரு காதல் நினைவு இருந்திருக்கும் என்று பூடகமாக சொல்கிறார். அக்காவைப்பற்றி மட்டுமல்ல தமது காதல் நினைவுகளையும் ‘துரோகியின் காதல்’ என்ற அத்தியாயத்தில் விபரிக்கின்றார்.
தமிழ் அறிஞர் சி.வை.தாமேதரம் பிள்ளை கல்வி கற்ற யாழ்ப்பாணம் அமெரிக்க மிஷன் பாடசாலை விடுதியில் தங்கியிருந்து சுமார் மூன்று வருடங்கள் படித்துள்ள முத்துலிங்கம், அந்த விடுதி வாழ்க்கையையும் அங்கு சந்திக்கநேர்ந்த ஆண் நண்பர்களையும் இந்நூலின் எட்டாவது அத்தியாயத்தில் விபரிக்கின்றார். ஒரு தமிழ் நண்பன் ஒரு சிங்கள மாணவ நண்பனால் தாக்கப்பட்டபோது அதனை சுற்றிவர நின்று கைதட்டி ஆதரிக்கின்றனர் சில தமிழ் மாணவர்கள். காலம் ஓடுகிறது. சிங்கள மாணவனிடம் அடி வாங்கிய தமிழ் மாணவன், காலப்போக்கில் சட்டம்படித்து நீதிவானாகின்றான்.
இதில் நகை முரண் என்னவென்றால், இனப்படுகொலைகள் நடந்தபோது அதுதொடர்பான வழக்குகள் சிங்களவர்களுக்கு எதிராக அவர் முன்னிலையில் வருகிறது. அந்த தமிழ் நண்பன் கடந்த காலத்தில் நடந்த சம்பவத்தை தீர்ப்புக்கூறும்போது நினைத்துப்பார்த்திருப்பானா? என்று சிந்திக்கின்றார் முத்துலிங்கம்.
காலங்களையும் கணங்களையும் ஒப்பிட்டு சித்திரிக்கும் முறைமையிலும் வாசகனின் சிந்தனையில் ஊடுறுவுகிறார்.
குருவும் சீடர்களும் என்ற அத்தியாயத்தில் கவிஞர் கண்ணதாசனின் வாழ்விலும் எழுத்தாளர் ஜெயமோகன் வாழ்விலும் நடந்த சம்பவங்களைக்கூறி, புரிந்துணர்வு இல்லாத ஆசிரியர்களால் தங்கள் படிப்பைத்துறந்து அலைந்து வாழ்க்கையைத் தொலைத்த மாணாக்கர்கள் நிறைய உண்டு. கவிஞர் கண்ணதாசன் போலவும் ஜெயமோகன் போலவும் உயர்ந்தவர்கள் அரிது. தோல்வியடைந்தவர்களின் பட்டியலை ஒருவரும் வெளியிடுவதில்லை. காரணம் அதைப்பட்டியலாக்க முடியாது. புத்தகமாகத்தான் போடலாம் என்கிறார்.
ஆபிரிக்க நாடான சியாரா லியோனில் இந்த கதைசொல்லி வாழ்ந்த காலத்தில் மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். எப்படி அந்த காய்ச்சல் வந்திருக்கும் என்பதற்கு அவர் சொல்லும் காரணம் எம்மை சிரிப்பில் ஆழ்த்துகிறது.
அவர் சொல்கிறார்:-
ஒரு பேச்சுக்கு இந்த உலகத்தில் நூறு கொசுக்கள் இருக்கின்றன என்று வைத்துக்கொண்டால், அதிலே 50 பெண் கொசுக்களும் 50 ஆண் கொசுக்களும் இருக்கும். ஆண் கொசு கடிக்காது. பெண் கொசுதான் கடிக்கும். கடிக்கும் 50 பெண் கொசுக்களில் 30 கொசுக்கள் மலேரியா கிருமியை காவும் என்றால் அதிலே ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்த கொசுக்கள் 24 ஆக இருக்கும். அந்த 24 கொசுக்களில் இரண்டு சியாரா லியோன் என்ற நாட்டைச்சேர்ந்தவை என்று வைப்போம். அந்த இரண்டில் ஒரு கொசு என்னைக் கடித்துவிட்டது.
இதற்கு முன்னர் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் பெண் தேனீக்களுக்குத்தான் கொட்டும் இயல்பு உண்டு என்று குறிப்பிட்டிருக்கும் அவர், எல்லாப்பெண் உயிரினங்களினதும் இயல்பே அப்படித்தானோ..? என்றும் அங்கதச்சுவையுடன் எழுதியிருந்தது இச்சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது.
தனது வாழ்நாளில் திருக்கல் வண்டில் தவிர வேறு எந்த வாகனத்திலும் சவாரி செய்திராத திரவியம் மாமி ஒரு தேர்தல் காலத்தில் நகைகளை திருடிக்கொண்டு கொழும்புக்கு போய்விடுகிறார்.
எப்படி..?
இரவல் நகைகளை அணிந்துவாறு A 40 காரில் சவாரி செய்து வன்னியசிங்கத்துக்கு புள்ளடி போட்டுவிட்டு, பஸ் ஏறி, ரயில் ஏறி கொழும்புக்கு கம்பி நீட்டிவிடுகிறார். பொலிஸ் அவரை கொழும்பில் ஆட்டுப்பட்டித்தெருவில் கைதுசெய்து ஜீப்பில் ஏற்றுகிறது.
எந்தக்கவலையும் இன்றி, ‘வன்னியசிங்கம் தேர்தலில் வென்றுவிட்டாரா?’- என்று கேட்கிறார் அந்த திரவியம் மாமி. இரண்டு நாட்களுக்குள் அவர் கார், பஸ், ரயில், பொலிஸ் ஜீப் என்று சவாரி செய்துவிட்ட சுவாரஸ்யத்தை படித்தபோது விழுந்துவிடாத குறையாக அட்டகாசமாக சிரித்தேன்.
மன அழுத்தம் கவலைகள் தோன்றும்போது அதிலிருந்து மீளவேண்டுமானால் முத்துலிங்கம் என்ற கதை சொல்லிதான் அதற்கு சிறந்த மருத்துவர் என்று சொல்ல விரும்புகின்றேன்.
உண்மைக்கும் புனைவுக்கும் இடையே ஒளிரும் இந்த ‘முத்து’ லிங்கம் தமது இந்த சுயசரிதைப்படைப்பைப்பற்றி சொல்லும் இரத்தினச்சுருக்க வாக்குமூலம் கூட சற்று வித்தியாசமானதுதான்.
இதோ அந்த வாக்குமூலம்:-
“இந்த நாவலில் இருப்பது அத்தனையும் என் மூளையில் உதித்த கற்பனை. அதிலே நீங்கள் உண்மையை கண்டு பிடித்தால் அது தற்செயலானது. அதற்கு நான் பொறுப்பாகமாட்டேன்.”
எம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டியவாறு, தனது எழுத்துக்களோடு நம்மையும் கைபற்றி அழைத்தும் செல்லும் அவரை வாழ்த்துகின்றோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.