எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் 20 கவிதைகளை உள்ளடக்கிய தொகுதி 'எதிர்காலச்சித்தன் பாடல்' என்னும் தலைப்பில் அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது. அதனை வெளியிட்டிருப்பது பதிவுகள்.காம்.
அண்மையில் நிகழ்ந்த இலக்கியவெளி அமைப்பின் மெய்நிகர் நிகழ்வான '“நீலாவணன் குறித்து வந்த திறனாய்வுக் கட்டுரைகள்” நிகழ்வில் உரையாற்றிய கலாநிதி எம்.எம்.ஜெய்சீலன், திறனாய்வாளர் எஸ்.கேசவன் ஆகியோரின் உரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விடயம் என் கவனத்தை ஈர்த்தது. அதில் அவர்கள் மீண்டும் மீண்டும் இலங்கையின் நவீனத்தமிழ்க் கவிதையின் முன்னோடிகளாக மூவரை குறிப்பிட்டிருந்தார்கள். கவிஞர்களான மஹாகவி, இ.முருகையன் மற்றும் நீலாவணன் ஆகியோரே அவர்கள். ஒரு தவறான கூற்று. இதற்குக் காரணம் இவர்கள் இம்முடிவுக்கு வர இவர்கள் தம் தேடலை நம்பியிருக்காமல் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், எழுத்தாளர் அ.யேசுராசா மற்றும் கவிஞர் சண்முகம் சிவலிங்கம் ஆகியோரின் சிந்தனைகளே இம்முடிவுக்கு வரக் காரணமாகவிருந்ததுதான் எனத் தமது உரைகளில் இவர்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றார்கள்.
நுஃமான், அ.யேசுராசா மற்றும் குழந்தை சண்முகலிங்கன் நிச்சயம் இம்மூவரையும் இலங்கையின் நவீனத்தமிழ்க் கவிதையின் முன்னோடிகளாகக் குறிப்பிட்டிருக்கமாட்டார்கள் என்று நான் கருதுகின்றேன். ஆனால் நிச்சயம் முக்கியமான கவிஞர்களாக இவர்களை இனங்கண்டு திறனாய்வுக் கட்டுரைகள் பலர் எழுதியிருக்கின்றார்கள். இலங்கையின் நவீனத் தமிழ்க்கவிதையின் முன்னோடிகளில் ஒருவராக நான் நிச்சயம் கவீந்திரனைக் (அ.ந.கந்தசாமி) குறிப்பிடுவேன்.
இருவர்தம் உரைகளில் அ.ந.க பற்றி ஒரு வரி கூடக் கிடையாது. இணையத்தில் அ.ந.கந்தசாமி என்று தேடியிருந்தால் நிச்சயம் போதுமான அவரது படைப்புகள் பற்றிய விபரங்கள், படைப்புகள் கிடைத்திருக்கும், ஏன் இவர்கள் அதனைச் செய்யவில்லை? இவர்கள் நிச்சயம் அ.ந.கந்தசாமியின் கவிதைகளைத் தேடியெடுத்து வாசிக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் இவர்களால் அவரது முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள முடியும்.
அ.ந.கந்தசாமியைத் தவிர்த்துப் புரியப்படும் ஆய்வுகள் எவையும் முழுமையானவை அல்ல. தேன்மொழி இதழில் வெளியான அ.ந.க.வின் 'எதிர்காலச்சித்தன் பாடல்', சுதந்திரனில் வெளியாகிய 'துறவியும் குஷ்டரோகியும்' போன்ற கவிதைகள் முக்கியமானவை. அவரது வில்லூன்றி மயானம் கவிதை மிகவும் முக்கியமான கவிதை. அது தினகரன் பத்திரிகையில் 9.11.1944 அன்று வெளியானது.
26.9.1944 அன்று தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முருகன் வள்ளிப்பிள்ளையின் உடலை அவரது மனைவி வில்லூன்றியில் நகரசபைக்குச் சொந்தமான முடிக்குரிய காணியில் அமைந்திருந்த மயானத்துக்கு எடுத்துச் செல்கையில், சென்ற கூட்டத்தில் ஒருவரே ஆரியகுளத்து முதலி சின்னத்தம்பி. அம்மயானத்துக்கு முருகனது உடலை எடுத்துச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த சாதி வெறியர்களின் துப்பாக்கி அவருயிரை எடுக்கின்றது. இப்படுகொலையைக் கண்டித்து எழுத்தாளர்கள் எவரும் எழுதப் பயந்திருந்த காலத்தில் இதற்கெதிராகத் தன் கவிதை மூலம் குரலெழுப்பியவர் அ.ந.கந்தசாமி. அக்கவிதை 9.11.1944 தினகரன் பத்திரிகையில் வெளியானது.ல் அப்போது அவருக்கு வயது 20.
இந்நிகழ்வையும் கவிதையையும் நினைவு கூர்ந்து அ.ந.க 15.10.1967 வெளியான மல்லிகை சஞ்சிகையில் 'வில்லூன்றி மயானம்' என்றொரு கட்டுரையினையும் எழுதியிருக்கின்றார்.
எண்பதுகளில் யாழ் பல்கலைக்கழக மாணவியான செல்வி ஜுவானா அ.ந.கந்தசாமியின் படைப்புகள் பற்றி ஆய்வுக் கட்டுரையொன்றினை எழுதியிருக்கின்றார்.அதில் அவர் பின்வருமாறு கூறுவது முக்கியமானது. அம்மாணவியின் கூற்று வருமாறு:
"ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால்பதித்த பெருமையும் இவருக்குண்டு. 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே கவிதை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த காலப்பகுதி 1940ம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1940ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் முற்றிலும் நவீனத்துவமுடைய கவிதை மரபொன்று தோன்றி வளரத் தொடங்கியது. இக்கவிதை மரபைத் தொடங்கியவர்கள் ஈழத்தின் மணிக்கொடியெனப் பிரகாசித்த மறுமலர்ச்சிக் குழுவினர்களாவர். இந்த மறுமலர்ச்சிக் குழுவிலும் அ.ந.கந்தசாமியவர்கள் , மஹாகவியெனப் புனைபெயர் கொண்ட உருத்திரமூர்த்தி, இ.சரவணமுத்து என்பவர்களே கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர். இவர்களே ஈழத்தில் நவீனத்துவமுடைய கவிதை மரபையும் தொடக்கி வைத்தவர்கள். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நல்ல கவிதை என்பதும் பண்டித மரபு வழிபட்ட உருவ அம்சங்களையும் , நிலபிரபுத்துவ சமூகக் கருப்பொருட்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட செய்யுளிலிருந்து வேறுபட்டு நவீன வாழ்க்கைப் போக்குகளைப் பொருளடக்கமாகக் கொண்டமைவது என்ற வரைவிலக்கணம் உடையதாகவுள்ளது"
இக்கூற்றில் இவர் இலங்கையின் நவீனத்தமிழ்க் கவிதையின் முன்னோடிகளாக அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) , மஹாகவி, இ.சரவணமுத்து (சாரதா) ஆகியோரைக் குறிப்பிட்டிருப்பார்.
கலாநிதி எம்.எம்.ஜெய்சீலன், திறனாய்வாளர் எஸ்.கேசவன் ஆகியோர் அ.ந.கந்தசாமியின் கவிதைப் பங்களிப்பை அறிய நிச்சயம் வாசிக்க வேண்டிய கவிதைத்தொகுப்பு எதிர்காலச்சித்தன் பாடல். அதற்கான இணைய இணைப்பு
எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் 20 கவிதைகளை உள்ளடக்கிய இத்தொகுதி 'எதிர்காலச்சித்தன் பாடல்' என்னும் தலைப்பில் அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது. அதனை வெளியிட்டிருப்பது பதிவுகள்.காம்.
மகாகவி பாரதியாரை தவிர்த்து விட்டு நவீனத் தமிழ்க் கவிதையைப் பற்றிப் பேச முடியாது. அதுபோல் இலங்கையின் நவீனத் தமிழ்க்கவிதையைப் பற்றி அதன் முன்னோடிகளைப் பற்றிப் பேசும் எவரும் அ.ந.கந்தசாமியைத்தவிர்க்க முடியாது என்பது என் கருத்து.. தீண்டாமைக்கெதிரான அவரது வில்லூன்றி மயானம் கவிதை, இலங்கையின் முதலாவது இடதுசாரிச் சஞ்சிகையாகக் கருதப்படும் பாரதி சஞ்சிகையில் வெளியான முன்னேற்றச்சேனை, தேயிலைத்தோட்டத்திலே கவிதைகள், முதலாவது அறிவியல் கவிதையாகக் கருதப்படக்கூடிய அவரது 'தேன்மொழி' சஞ்சிகையில் வெளியான 'எதிர்காலச்சித்தன் பாடல்' இவையெல்லாம் அவர் பல்வேறு விடயங்களில் முன்னோடி என்பதை வெளிப்படுத்துவன.
நவீனத் தமிழ்க் கவிதைக்கு முக்கிய பங்களிப்புச் செய்தவர்களை , உண்மையான முன்னோடிகளைத்தவிர்த்து விட்டு முன்னோடிகள் அல்லாதவர்களை , முக்கியமானவர்களை முன்னோடிகள் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. மும்மூர்த்திகள் என்று கூறுவதில் எனக்குக் கருத்து வேறுபாடில்லை.