எவாலின் ரீட் , Evelyn Reed (1905 - 1979)
எவாலின் ரீட் ஓர் அமெரிக்க கம்யூனிஸ்ட் மற்றும் பெண்ணியவாதி. 1940 ஜனவரி மாதத்தில் எவாலின் ரீட் நாடு கடத்தப்பட்ட ருஷ்யப்புரட்சியாளர் லியான் ட்ராட்ஸ்கி, அவருடைய மனைவி நடாலியா செடோவா இருவரையும் சந்திக்க மெக்சிக்கோவுக்குச் சென்றார். லியானின் இல்லத்தில் ரீட் அமெரிக்க ட்ராட்ஸ்கியின் தலைவரும் சோஷலிசத் தொழிலாளர் கட்சியின் தலைவருமான ஜேம்ஸ்.பி.கேனன் அவர்களைச் சந்தித்தார். அவ்வாண்டே ரீட் சோஷலிசத் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். அதன் பின் அவர் இறக்கும் வரை அக்கட்சியில் முன்னணித் தொண்டராகப் பணியாற்றினார். 1960-70 களில் பெண்விடுதலைப் போராட்ட இயக்கத்தில் ஆழ்ந்து ஈடுபட்ட ரீட் பெண் கருக்கலைப்பு இயக்கக் கூட்டணியில் உறுப்பினராக இருந்தார். இக்காலகட்டத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், ஐயர்லாந்து, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் ஆகிய இடங்களில் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தார் . சொற்பொழிவாற்றினார். ஃப்ரெட்ரிக் ஏங்கெல்ஸ், அலெக்சாண்டிரா கோலண்டை ஆகியோரின் பெண், குடும்பம் சார்ந்த ஆய்வுகளால் ஈர்க்கப்பட்டு மார்க்சியப்பெண்ணியம், பெண்ணொடுக்குமுறை, பெண் விடுதலை ஆகியவற்றை மையமாகக் கொண்டு பல புத்தகங்களை எழுதினார்.
பெண்களின் விடுதலை எதிர்கொள்ளும் சிக்கல்கள், தாய்வழிக் குலமுறையிலிருந்து தந்தை வழிக்குடும்ப முறையை நோக்கிய பெண் பரிணாமவளர்ச்சி ஆகிய நூல்களும் ஜோசஃப் ஹான்சன், மேரி –(எ) வாட்டர் ஆகியோருடன் இணைந்து எழுதிய பெண்ணின் இலக்கு பெண்ணுயிரியா ? அழகுப்பொருட்கள், நாகரிகம், பெண்ணுழைப்புச் சுரண்டல் (பெண்மீதான சுரண்டல்) என்ற நூலும் ரீடினுடைய குறிப்பிடத்தக்க நூல்களாகும். 1972 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் அதிபர் தேர்தலில் இவர் சோஷலிசத் தொழிலாளர் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இண்டியா, நியூயார்க் , விஸ்காசின் ஆகிய மாநிலங்களில் 13,878 ஓட்டுகளைப்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.