- ஓவியம்: AI -
தொலைபேசி ஒலித்த விதம் மது அழைக்கிறாள் என்பதை யசோவுக்குச் சொல்லாமல் சொன்னது. வேகமாகச்சென்று அதைக் கையிலெடுத்தவள், “ஓ, ரண்டு பேருமா இருக்கிறியள், எல்லாம் ஓகேயா?” ஆங்கிலத்தில் கேட்டாள்.
“எங்களிட்டை ஒரு நல்ல செய்தி இருக்கு,” மதுவும் ஆங்கிலத்திலேயே பதிலளித்தாள்.
“கர்ப்பமாயிருக்கிறாயா?”
தலையை மேலும் கீழும் ஆட்டிய மதுவின் முகம் திரையில் பிரகாசமாக மின்னியது.
“ஓ, கொரோனாக் காலம் கவனமாயிரு, அதோடை அவசரப்பட்டு ஒருத்தருக்கும் இப்ப சொல்லாதே”
“நாங்க ஒரு இடமும் போறேல்லை அம்மா, ரிலாக்ஸ்,”.
“அன்ரி, நீங்க பாட்டியாகப் போறியள்! இனித்தான் அம்மாவுக்குச் சொல்லப்போறன், அவ மகிழ்ச்சியில மிதக்கப்போகிறா,” பீற்றரின் வாய் புன்னகையுடன் அகல விரிந்திருந்தது.
‘சீ, சந்தோஷமா நான் வாழ்த்தியிருக்கலாம். கவனமாக இருக்கவேணுமெண்டது அவைக்கும் தெரியும்தானே…” தொலைபேசியை வைத்தவளுக்கு ஆதங்கமாக இருந்தது.
“கர்ப்பமா? தாய் ஆகுறதுக்கான தகுதி உனக்கு இப்ப இருக்கெண்டு நான் நினைக்கேல்ல” என்ற குணத்தின் அன்றைய வார்த்தை அம்புகள் அவளைக் கூறுபோட்டது நினைவுக்கு வர அவளின் கண்களில் கண்ணீர் திரையிட்டது.
அவளின் அந்தச் செய்தி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குக் கடிதமாய்ப்போய் பதில் வர இரண்டு மாதங்களாகியிருந்தது. பொம்பர் பொழிந்துதள்ளும் குண்டுகள், சரமாரியான செல்லடி, ஆமி முகாம்களைத் தாண்டும்போது ஏற்படும் மன அழுத்தம் எனத் தினமும் அவர்கள் முகம்கொடுக்கவேண்டியிருந்த அவஸ்தைகள் பற்றித்தான் அம்மா அதிகமாக எழுதியிருந்தா. தங்கைச்சி விது வேலைக்குப் போய்வரும்வரை தான் தினமும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பதாகவும் அழுதிருந்தா. அதைப்போலவே தானும் கொரானா பற்றியே மதுவிடம் அலட்டிக்கொண்டதாக அவள் வருத்தப்பட்டுக் கொண்டாள்.
பீற்றரை விரும்புகிறாள் என மது சொன்னபோது, “எங்கை பாப்பம், படத்தைக் காட்டு,” என ஆரவாரப்பட்ட அவளுக்கு, அவனின் படத்தைப் பார்த்ததும், ஊதிப் பெருத்திருந்த பலூனில் போட்ட துவாரத்துக்குள்ளால் காற்று முழுவதும் வெளியேறியதுபோலச் சப்பென்றாகிவிட்டது.
“கறுப்பு ஆள், உன்னை அவர் நல்லாய்க் கவனிப்பாரெண்டு நீ நினைக்கிறியோ?” அவளின் சந்தேகமும், ஏமாற்றமும், கையலாகத்தனமும் கொட்டுப்பட்டன.
“அம்மா நிறத்தில என்ன இருக்கு, தமிழ் ஆக்கள் எல்லாரும் நல்ல ஆக்களோ?” அவளின் வாயை அடைத்தாள் மது.
மூன்று வருடங்கள் முன்னர், ஒரு நாள் சடங்குகள் எதுவும் வேண்டாம், குடும்பத்தினருடன் மட்டும் பதிவுத் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம் என்றாள் மது. அவளுக்கு உண்மையிலேயே அது பெரிய ஆசுவாசமாக இருந்தது. ஆனால், குணத்துக்கோ, “அதென்ன விசர்க்கதை?” என ஆத்திரமாக இருந்தது. “சரி, விடுங்கோ. என்னவும் செய்யட்டும், வீண் செலவில்லையெண்டு நினைச்சுக்கொள்ளுங்கோவன், கலியாணமெண்டு நாங்க ஆரவாரப்பட, ஆக்கள் வந்து அதை இதைக் கதையாமல் இப்பிடி அவை செய்யிறது நல்லதுதானே,” அவனுக்கு அவள் சமாதானம் சொன்னாள்.
“தமிழ், தமிழ் எண்டு நாங்க போராடி என்னத்தைக் கண்டது, கடைசியா எல்லாம் அழிஞ்சுபோனதுதான் மிச்சம். சொல்ற எதையாவது அவள் கேட்டால்தானே! சுதந்திரமெண்ட பெயரிலை இந்த நாட்டிலை நடக்கிற அத்துமீறல்களுக்கு ஒரு அளவில்லாமல் போச்சுது.” கனடாவில் தான் வாழ்றது ஒரு துர்ப்பாக்கியமென்று நினைக்கின்ற குணம் மீளவும் ஒரு தடவை வேதனைப்பட்டுக்கொண்டான்.
“பிள்ளையும் பீற்றரைப்போல கரிக் கறுப்பாய்தான் இருக்குமோ என்னவோ!” அவள் அலுத்துக்கொண்டாள், “அப்ப, வெள்ளைக்காரனானப் பாத்திருக்கலாமெண்டு அவளுக்குச் சொல்லன், நீயும் உன்ரை பிள்ளையும்!” கதிரையைவிட்டு வேகமாய் எழும்பினவன் கதவை அடித்துச்சாத்திக்கொண்டு வெளியில் போனான். கனடாவுக்கு வந்தபின் அவனால் கதவுகளைத்தான் அடிக்கமுடிகிறது என்பதில் அவளுக்கு ஆறுதலாகவிருந்தது.
கர்ப்பம்தரித்திருந்தபோது, கொழும்பில் அவர்கள் தனிய வாழ்ந்ததால், வயிற்றைப் பிரட்டுவதும், ஓங்காளிப்பதும் என அவள் அவலப்பட்ட காலங்களில், வாய்க்கு ருசியாக யாராவது சமைத்துத் தரமாட்டார்களா என ஏங்கிய ஏக்கத்தின் நினைவு கொடுத்த உந்துதலுடன், பனி கொட்டக்கொட்டக் குளிருக்குள், தமிழ்க் கடைக்கு முன் வரிசையில் முகமூடியுடன் காத்திருந்து, பிஸ்கற், மிக்சர், தொதல், முறுக்கு என வேறுபட்ட சுவைகளில் கொஞ்சம் நொறுக்குத் தீனியும், மாம்பழம், பலாப்பழம், கொய்யாப்பழம் எனச் சில பழங்களும் வாங்கிக்கொண்டு வந்தாள். பின் அவற்றையும், அறக்குளா மீன் குழம்பு, கீரைக் கறி, பயற்றங்காய்ப் பிரட்டல், வாழைப்பூ வறை, வல்லாரைச் சம்பல், மரவள்ளிப் பொரியல், பப்படம், இரசம் என பார்த்துப் பார்த்து விதம்விதமாய்ச் சமைத்த சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு மதுவின் வீட்டுக்குப் போனாள்.
கைநிறைந்திருந்த பொருள்களை அவர்களின் வாசலில் வைத்துவிட்டு, அவர்களின் அழைப்புமணியை அவள் அழுத்தியபோது, முகமூடியுடனும், ஏப்ரனுடனும் பீற்றர் வெளியில் வந்தான். “மது றெஸ்ற் எடுக்கிறா, தாங்ஸ் அன்ரி, ஆனா, நீங்க இப்பிடிக் கஷ்டப்பட்டிருக்கத் தேவையில்லை. மதுவுக்கு விருப்பமானதெல்லாம் இங்கை இருக்கு, ஆனா அவவுக்குச் சாப்பிடுறதுக்கு மனசில்லாமலிருக்கு,” என்றபடி அவற்றைத் தூக்கிக்கொண்டு உள்ளே போனான். அவளின் கன்னங்கள் ஈரமாகின. போனவேகத்தில் வீட்டுக்குத் திரும்பி வந்தாள்.
கொரனோத் தாக்கம் கொஞ்சம் குறைவதாகவும், பின் மீளவும் அதிகரிப்பதாகவும் நிலைமை அடிக்கடி மாறிக்கொண்டிருந்தது. காலைச் சாப்பாட்டுடன், மாம்பழமும் வெட்டிக் கொண்டுவந்து படுக்கையில் வைத்துப் பீற்றர் தருவதாகவும், மருத்துவருடான சந்திப்புக்கள் அனைத்திலும் கலந்துகொள்வதற்கு அவன் விரும்புகிறான் என்றும், பிள்ளைவளர்ப்புப் பற்றிய புத்தகங்களை தாங்கள் வாசிக்கத் தொடங்கிருக்கிறார்கள் என்றும் மது சொன்னபோது மதுவின் மகிழ்ச்சியையும் பெருமையையும் அவளால் உணரமுடிந்தது.
மது அவளின் வயிற்றிலிருந்தபோது, அவளே மருத்துவரிடம் தனியப் போய்வந்தாள். ஒரு நாள் அவர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையின்போது அவளின் கன்னத்தில் ஓங்கி அவன் அறைந்த அறை அவளைத் தள்ளாடச் செய்தது. அடுத்த சில நாள்களுக்கு அவன் முகத்தை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவனின் ஆக்ரோஷத்துக்குப் பலமுறை முகம்கொடுத்திருந்தாலும், குழந்தையைக் காவிக்கொண்டிருக்கும் நேரத்தில்கூட அப்படி அவன் நடந்தது அவளுக்கு அவனில் மேலும் வெறுப்பை ஏற்றியிருந்தது.
முடிவில், வழமைபோல அவனே சமாதானக் கொடியைத் தூக்கியிருந்தான். வேலையிலிருந்து அவளை அவனின் மோட்டார்சயிக்கிளில் கூட்டிவந்தான். அவளுக்குக் குளிக்கவார்த்தான். அந்தமுறை மருத்துவரிடம் சென்றபோது தானும் வருகிறேன் எனக் கூடச்சென்றான். அவளின் உதடுகள் கண்டியிருப்பதையும், வீங்கியிருந்ததைப் பார்த்த மருத்துவர் என்ன நடந்தது என வினவ, அது அவனின் கோபத்தின் வெளிப்பாடு என அவள் உண்மையைச் சொன்னாள். மருத்துவர் அவனுக்குக் கொடுத்த ஆலோசனை அவனை பித்துப்பிடித்தவன் போலாக்கியது. அதனால் மீளவும் அவர்களிடையே மெளனமும் வன்மமும் வலுப்பெற்றிருந்தது.
மதுவும் பீற்றரும் ஒருவருடன் ஒருவர் அதிர்ந்துபேசாமல், அமைதியாகக் கதைத்துத்தான் தங்களின் பிரச்சினைகளுக்கு முடிவெடுக்கிறார்கள் என்பதை மது சொல்ல அவள் பல முறை கேட்டிருக்கிறாள். அவர்களின் ஆரம்பகால உறவின்போது, ஒரு ஞாயிற்றுக்கிழமை சைக்கிளில் உலாப் போய்விட்டு அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தபோது, ஒரு கார் மதுவை அடிப்பதுபோலப் போயிருக்கிறது. அதைப் பார்த்த பீற்றர் மிகுந்த கோபமடைந்து அந்தச் சாரதியுடன் கத்தியிருக்கிறான். வீட்டுக்குப் போனதும் அது பற்றிய பேச்சை எடுத்த மது, “அப்பா எல்லாத்துக்கும் சத்தம்போடுறது என்னைச் சரியாய்ப் பாதிச்சிருக்கு. இப்பிடி உங்களுக்கும் கோவம் வாறது எனக்குப் பிடிக்கேல்லை. ஒரு நாளைக்கு உங்களுக்குப் பிடிக்காததை நான் செய்தால் இப்பிடித்தான் என்னோடையும் கத்துவியளோ எண்டு எனக்குப் பயமாயிருக்கு” என்றிருக்கிறாள். “அவன் உன்னைக் காயப்படுத்தியிருந்தால், அல்லது அந்த நேரம் உனக்கு ஏதாவது நடந்திருந்தால் என்ன நடந்திருக்குமெண்ட பயம்தான் என்னை அப்படிக் கத்தவைச்சது” என்ற பீற்றரின் சமாதானத்தை மது ஏற்கவில்லை. முடிவில் அதை விளங்கிக்கொண்ட பீற்றர் சுயமேம்பாட்டுக்கான கவுன்சலிங்க்குச் சென்று மிகவும் அமைதியான ஆளாக மாறியிருக்கிறான் என்ற கதையை அவள் அறிந்தபோது, இளமையில் இப்படியெல்லாம் தனக்குக் கதைக்கத் தெரியவில்லையே, அப்படிக் கதைத்திருந்தாலும், அதைக் குணம் ஏற்றிருப்பானா என்றெல்லாம் சுய பச்சாதாபமாக இருந்தது.
2021, டிசம்பர் 31ம் திகதி காலையில் மதுவின் தண்ணீர்குடம் உடைந்திருக்கிறது, ஆனால், இன்னும் வலி வரல்லை எனப் பீற்றர் அவளை அழைத்துக் கூறினான். அவள் அங்கு வரதேவையில்லை என்று மது சொன்னபோதும், உடனடியாக அவள் அவர்களின் வீட்டுக்குச் சென்றாள். அவள் அங்கு சென்றபோது மதுவுக்கு வலியெடுக்க ஆரம்பித்திருந்தது. மது வலியில் துடித்த ஒவ்வொரு தடவையும் பீற்றர் அவளின் இடுப்புப் பகுதியை உருவிவிட்டபடி, “மது உன்னாலை ஏலும், கொஞ்சம் ஆழமாய் மூச்செடு, ஓ, நல்லாய்ச் செய்கிறாய், ஓம், அப்படித்தான், தொடர்ந்து செய்,” என்றெல்லாம் அவளுக்குத் தெம்பூட்டிக் கொண்டிருந்தான்.
அவளின் தண்ணிக்குடம் உடைந்தபோது, அவளைக் கொண்டுபோய் ஆஸ்பத்திரியில் விட்டுவிட்டு அவளின் பெற்றோர் வீட்டுக்குப் போய்விட்டனர். வலியில் அவள் போட்ட கூக்குரலை அவள் நினைத்துப் பார்த்தாள், கத்தும்போது தசைகள் இறுகிவிடும், அப்படியில்லாமல் ஆழமாக மூச்செடுப்பது, கருப்பைத் தசைகள் சுருங்குவதால் ஏற்படும் வலியைத் தாங்குவதற்கு உதவிசெய்யும் என்றெல்லாம் அவளுக்கு அன்று தெரிந்திருக்கவில்லை, யாரும் சொல்லிக்கொடுத்திருக்கவும் இல்லை. முடிவில் மது குறுக்கே இருந்ததால் இயற்கையான முறையில் பிரசவம் நிகழச் சாத்தியமில்லை, சிசேரியன் செய்துதான் வெளியே எடுக்கவேண்டுமென முடிவாகியிருந்தது.
கொரனாவின் தாக்கம் முழுமையாக முடிந்திராததால், ஆஸ்பத்திரியில் ஒருவர் மட்டுமே நிற்கலாம் என்றனர். நள்ளிரவை அண்மிக்கும்வரை மது பற்றி அவள் விசாரிப்பதும், மதுவின் நிலை பற்றிப் பீற்றர் இற்றைப்படுத்துவதுமாக தொலைபேசியில் குறுஞ்செய்திகள் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தன. பின்னர் பீற்றரிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. புதுவருடம் பிறக்கப்போகிறது, அவளால் ஆறுதலாக இருக்கவோ, நித்திரைகொள்ளவோ முடியவில்லை. என்ன நடக்குதோ என மனம் பதறிக்கொண்டிருந்தது. கடவுளே எல்லாம் நல்லபடியாக முடியவேண்டுமென விளக்கேற்றிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள்.
முடிவில் சிசேரியன் செய்து பிள்ளையை எடுத்துள்ளார்கள் என்ற செய்தி காலை ஒன்பது மணியளவில் வந்துசேர்ந்தது. “ஓ, அப்பாடா, இப்பத்தான் உயிர்வந்தது. ராத்திரி நித்திரை கொள்ளமுடியேல்லை, என்னவோ ஏதோவெண்டு பயமாயிருந்துது. சத்திரசிகிச்சை நடக்கக்போகுது எண்டாவது ஒரு வரி எழுதியிருக்கலாமே” எனப் பதிலாக எழுதினாள்.
“நான் மதுவுக்கு ஒத்தாசையாக நிற்கிறதா, அல்லது போனைப் பாக்கிறதா, என்ரை அம்மாக்கும் இப்பத்தான் சொன்னான்” என்றான் பீற்றர். மதுவும் பீற்றருக்காக வக்காலத்து வாங்கினாள். அவளுக்கு அழுகைதான் பொத்துக்கொண்டு வந்தது. எனினும் பிள்ளையின் படத்தைப் பார்த்ததும் மனதுக்குச் சற்று ஒத்தடம் கிடைத்தது. ‘இலக்கியா’ எனப் பெயரிட்டிருந்தனர்.
“எங்கட வீட்டில வந்து கொஞ்ச நாளைக்கு இருங்களன், பிள்ளையைப் பராமரிக்கச் சுகமாயிருக்கும். பிள்ளை அழுதால் நான் பாக்கலாம், மது நித்திரை முழிச்சுக் கஷ்டப்படத் தேவையில்லை. சாப்பாட்டுக்கும் பிரச்சினை இராது,” ஏற்கனவே பல தடவைகள் கேட்டதை மீளவும் ஒரு முறை அவள் கேட்டாள்.
“சீ, தேவையில்லை. எங்கடை வீட்டிலை இருக்கிறதுதான் வசதி. பீற்றர் ரண்டு கிழமைக்கு லீவு போட்டிருக்கிறார். பிறகும் வீட்டிலை இருந்து அவர் வேலைசெய்யலாம், ஆனபடியால் பிரச்சினையிருக்காது,” என்றாள் மது.
மது பிறந்தபோது அவள் பத்து நாள் ஆஸ்பத்திரியில் இருக்கவேண்டியிருந்தது. ஆனால் மதுவை அடுத்த நாளே வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். வீட்டுக்கு வந்துவிட்டோம் என்றவர்களிடம், “சமைத்துக் கொண்டுவரட்டா?” என அவள் தொலைபேசியில் கேட்டாள், “உங்களுக்கு விருப்பமெண்டால் கொண்டுவாங்கோ, ஆனா, என்ரை சினேகிதி ஒருத்தி இண்டைக்கு நூடில்ஸ் கொண்டுவந்து கதவடியிலை வைச்சிட்டுப் போயிருக்கிறாள், நாளைக்கு பீற்றரின்ரை நண்பர் ஒருவர் சாப்பாடு கொண்டுவந்து தருவாராம்,” என இயல்பாகச் சொன்னாள் மது.
மது பிறப்பதற்காக அவளைக் கொண்டுபோய் ஊரில் விட்டிருந்தான் குணம். மது பிறந்த ஒரு வாரத்தின்பின்தான் பிள்ளையைப் பார்க்க வந்திருந்தான். பின்னர் வேலையில் லீவு எடுக்கமுடியாதென திரும்பவும் மூன்று நாள்களில் கொழும்புக்குப் போய்விட்டான். மீளமீள மதுவின் பிரசவத்தைத் தன்னுடையதுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருக்கும் அவளின் மனதுக்கு, அந்த நாட்டுச் சட்டதிட்டமும், இந்த நாட்டுச் சட்டதிட்டமும் வேறென்பதைவிட, காலமும் மாறியிருக்கு என அவளே தேறுதல் சொல்லிக்கொண்டாள்.
கொழும்பில் குழந்தையுடனான புது வாழ்க்கை அவளுக்கு மிகவும் சவாலானதாக இருந்தது. சிலவேளைகளில் வேலைமுடிந்து கடையில் அவன் ஏதாவது சாப்பாடு வாங்கிக் கொண்டுவரும்வரை பசியுடன் காத்திருக்க வேண்டியிருந்தது. இரவில் குழந்தை அழுதால், “நான் என்ணெண்டு நித்திரை கொள்ளுறது. வேலைக்குப் போகவேண்டாமோ, வெளியிலை கொண்டு போ,!” என அவன் எரிந்துவிழுந்தான். அதனால் மது நித்திரையாகும்வரை ஹோலில் அவள் காத்திருக்க வேண்டியிருந்தது. பின்னர் நித்திரையாகி விட்டாள் எனக் கட்டிலில் கொண்டுபோய் மெதுவாய்க் கிடத்தினாலும்கூட, சிலவேளைகளில் மதுவின் நித்திரை கலைந்துவிடும், அப்படி நடக்கும் நேரங்களில் அவன் கத்தப்போகிறான் என்ற பயத்தில் மீளவும் வெளியில் ஓட வேண்டியிருக்கும். இதனால் ஒரு மாதத்துக்கும் மேலாக அவளால் ஒழுங்காக நித்திரை கொள்ளக்கூட முடியவில்லை. பிள்ளைப்பேற்றின் பின் சில பெண்களுக்கு வரும் மனச்சோர்வு எப்படித் தனக்கு வராமல் விட்டதென்பது அவளுக்கு இன்னும் அதிசயம்தான்.
கொரனோவின் கோரத் தாண்டவம் முடிந்து, பீற்றரும் மதுவும் முதன்முதலாக பிள்ளையை அவர்களின் வீட்டுக்குக் கூட்டிவந்திருந்தனர். காலையில் இலக்கியா நேரத்துடன் எழும்பிவிட்டால், பீற்றரே அவளைக் கவனித்துக்கொள்வான் என மது சொன்னபோது உண்மையிலே மதுவில் அவளுக்குப் பொறாமையாக இருந்தது.
மதுவின் வீட்டுக்குப் போகும் நேரங்களிலெல்லாம் மதுவின் வேலை பிள்ளைக்குப் பால்கொடுப்பது மட்டும்தான் என்பதையும், வேலைக்குப் போய்வந்து சமைப்பதையும் வீட்டுக்கு வருபவர்களை உபசரிப்பதையும் தன் வேலையாகப் பீற்றர் சந்தோஷத்துடன் செய்வதையும் அவள் பார்த்துமிருந்தாள்.
சொந்த மொழி பேசுபவராகவோ, கைநிறையச் சம்பாதிப்பவராகவோ அல்லது பார்வைக்கு அழகானவராகவோ இருப்பது துணைவருக்கு முக்கியமானதல்ல என்ற விளக்கம் புரிந்தபோது, தன் முன் அனுமானங்களுக்காக மதுவிடம் அவள் மன்னிப்புக் கோரினாள். வாழ்க்கை எத்தனை விடயங்களைக் கற்றுத்தருகிறது என்பதில் அவளுக்கு அதிசயமாக இருந்தது.
உறவு ஒன்றுதான், ஆனால் அது எத்தனை விதமான வேறுபாடுகளைக் கொண்ட ஏகாநேகமாக இருக்கிறது, தனக்குக் கிடைக்காத ஒரு நல்ல வாழ்க்கைத் துணை, தன் பிள்ளைக்காவது கிடைத்திருக்கிறது என்பதில் அவளுக்கு மிகுந்த திருப்தியாக இருந்தது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.