சென்ற யூலை மாதம் 13 ஆம் திகதி பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்களின் ஆய்வு நூல்கள் மூன்று ரொறன்ரோவில் வெளியிட்டு வைக்கப்பெற்றன. சுவாமி விபுலாந்தர் தமிழ் ஆய்வு மையத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வுக்குக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் அகணி சுரேஸ் அவர்கள் தலைமை தாங்கியிருந்தார். இந்த நிகழ்வில் சங்க இலக்கியம் ஒரு புதிய கண்ணோட்டம், தமிழர் நாட்டுப்புறவியல் களஞ்சியம், திருக்குறள் ஓர் உலகப் பொது நூல், ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பெற்றன. தாய்மொழி மீது கொண்ட ஈடுபாடு காரணமாக புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ் மொழி சார்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு அதிக நூல்களை வெளியிட்ட பெருமை பேராசிரியருக்கு உண்டு.
ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து செல்வி சத்திய சங்கவி முகுந்தனால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பெற்றது. கனடா தேசியப் பண்ணைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது.
வரவேற்புரையை எழுத்தாளர் சிவநயனி முகுந்தன் நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து தலைவர் உரை இடம் பெற்றது. வாழ்த்துரை அறிஞர் சாமி அப்பாத்துரை மற்றும் அருட்தந்தை ஜோசப் சந்திரகாந்தன் ஆகியோரால் வழங்கப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் முன்னாள் தலைவரான பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் கனடா தமிழ் எழுத்தாளர் இணைய அங்கத்தவர்களால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
‘சங்க இலக்கியம் ஒரு புதிய கண்ணோட்டம்’ என்ற நூலை கனடா அண்ணாமலை பல்கலைக்கழக விரிவுரையாளர் முனைவர் வாசுகி நகுலராஜா அவர்களும், ‘தமிழர் நாட்டுப்புறவியல் களஞ்சியம்’ என்ற நூலை கனடா அண்ணாமலை பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு குமரகுரு கணபதிப்பிள்ளை அவர்களும், ‘திருக்குறள் ஓர் உலகப் பொது நூல்’ என்ற நூலை கனடா அண்ணாமலை பல்கலைக்கழக விரிவுரையாளர் கவியாசான் திரு. சண்முகராசா சின்னத்தம்பி அவர்களும் அறிமுகம் செய்து வைத்தனர். இவர்கள் மூவரும் பேராசிரியரின் மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து நூல் ஆசிரியர் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களின் ஏற்புரை இடம் பெற்றது. ஏற்புரையில் அவர் ‘இது போன்ற ஆய்வு நூல்களின் அவசியம் பற்றியும், எமது மொழி இனம், நிலம், பாரம்பரியம் போன்றவற்றை ஆதாரத்துடன் தக்க வைக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். ஆதிகாலத்தில் தமிழர்கள் வாழ்ந்த லெமூரியாக் கண்டம் பற்றியும், அதைப்பற்றி மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்றும் விபரமாக எடுத்துக் கூறினார்.
அவரது ஏற்புரையைத் தொடர்ந்து சுவாமி விபுலானந்தர் தமிழ் ஆய்வு மையத்தின் செயற்குழு உறுப்பினர் திருமதி விமலா பாலசுந்தரம் அவர்கள் நன்றியுரை வழங்கினார். அதைத் தொடர்ந்து நூல் பிரதிகள் ஆர்வலர்களுக்கு வழங்கப்பட்டு, நிகழ்வு இனிதே முடிவுற்றது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.