- ஓவியம் AI -
1. பால்ய வடுக்களின் ஈர்ப்பு.
இந்த அகாலத்தில்
கிளர்ந்தெழும்
அன்பை
மடை மாற்ற முயலும் பொழுது
வீசிய தென்றலின்
வாசனையில்
இழுத்துச் சென்றுவிட்டது
பால்ய கால
பள்ளி நிகழ்வுகளுக்குள்
விடாமல்.
சிதிலமடைந்த
கட்டிடத்தில்
சிலேட்டுகளில்
நாங்கள் கிறுக்கி
விளையாடியபொழுது
மேசை மீதமர்ந்து
மேல வீட்டு
ஜோதியக்கா
லிங்கம் வாத்தியாரிடம்
என்ன சொன்னதென
தெரியாது.
நாற்காலியில்
இருக்கும் வாத்தியாரின்
உள்ளங்கையில்
உள்ள தோலை உரித்து
ஒவ்வொன்றாக வீசி.
செல்லும்போது
சிரித்து
கையசைத்தது
அக்கா
காட்சியாக கடக்கிறது
தாவணியில் பேரழகியாக
இப்போதும்.
பிறகானவொரு நாளில்
சேலையில்
தூக்கிட்டு செத்த அக்கா பள்ளிக்கு வந்ததை
அம்மா யாரிடமும்
சொல்ல வேண்டாமென்றார்
பெருங்கோப
முகத்துதுடன்
எச்சரித்து.
லிங்கம் வாத்தி
மேனகாவின் அம்மாவோடு பேசியதை
அம்மாவிடம்
நான்
சொல்லவே இல்லை
தோள் சுருங்கி
நேற்று
ஈருளி கட்டை வாங்கிச் சென்ற இன்றும் கூட.
2. தவித்தலையும் காதல்.
இராத் தூக்கம்
தவிர்த்த
என் தனிமையின்
இரகசிய உரையாடலில்
மேவிய பூரிப்பு
இருப்பு கொள்ளாமல்
தவிக்கவிடுகிறது
உற்சாக மேலீடாக.
எனக்குள் வியாபித்திருப்பது
நீதானென்பதை
உறுதிகள் செய்யுமாறு.
இந்நேசித்தலின் சுகம்தான்
காதல் என்றால்
இப்பொழுதே
சொல்லிவிடத் துடிக்கின்றேன்.
உன்
மகிழ்வெனும்
மாலையை வாங்கி பிரவிப்பயனெய்தும்
பேரின்பத்திற்காய்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.