ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கு முட்டையிட்டாய்
கடலைக் கடைந்து
கடலோரம் முட்டையிட்டேன்.
சற்றே மாற்றி பாடினால் இவ்வாறுதான் அமையும். ஆனால் இயற்கை அடிப்படையில் மாறாது எனில், மனிதன் இயற்கையோடு தொடுக்கும் போரும் மாறாது. (சாராம்சத்தில்).
காலை ஆறுமணியளவில் பாதையின் வலப்புறமாய் கடற்கரைக்கு அடுத்ததாயிருந்த அந்த பெரிய வீதியில் நடக்க தொடங்கினேன். எனது வலதுபுறத்தில் ஒரு மைதானம் போல் கிடந்தது வயல்வெளி. உண்மையில் அதனை வயல்வெளியென்று சொல்ல முடியாது. வேண்டுமென்றால், புல்வெளியென்று சொல்லலாம். நடக்;க முடியாது - சதுப்புநிலம் என்று விடுதி உரிமையாளன் எனக்கு சொல்லியிருந்தான். எனவேதான் வீதி நெடுக நடக்க முடிவு செய்தேன். ஆனால் வயலை அடுத்ததாய் அந்த பிரம்மாண்டமான குளம் கிடந்தது. பல சிறு சிறு குடில்கள் கரையோரமாய் முளைத்திருந்தன. ஒருவேளை அவை இறால் பிடிக்க வசதி செய்வனவாக இருக்கக்கூடும். பெரிய படகுகள் சிலவேளை அங்கு வந்து இறங்கக்கூடும். தெரியவில்லை.
சிறிது தூரம் சென்றவுடன் பனைமரங்கள் வீதியோரமாய் ஆங்காங்கே, நிற்க தொடங்கி இருந்தன. அதாவது வீதி. அடுத்ததாய் பனை மரங்கள். அடுத்ததாய் வயல்வெளி. அடுத்ததாய் குளம். ஒரு பத்து பதினைந்து பனை மரங்களை கடந்தால் வயல்வெளி. பின் குளம்.
இறங்கி, அந்த பனை மரங்களை கடந்து வயலை அடைந்தேன். சில ஒற்றையடிப்பாதைகள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடின. ஒன்றின் வழியே குளத்தருகே சென்றேன். இப்போது அவை கரையோடு ஒட்டி இருந்த குடில்களாய் இல்லை. கரையில் இருந்து, ஐந்தாறடி உள்ளே குளத்து நீரில் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் ஒன்றின் ஓரமாய் படகொன்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை யாரேனும் வந்திறங்கியிருக்க வேண்டும். வந்து என்ன செய்வார்கள்? தெரியவில்லை. தூரத்தே, தீவு போலிருந்த ஒரு சிறு பிரதேசத்தில் நாணற்புற்கள் இடுப்புவரை வளர்ந்திருந்தன.
அவற்றிடையே ஒரு மிகப்பெரிய பறவை. பறவையா அது? அல்லது வேறு ஏதுமா? இப்போது அப்பறவை மெல்ல அசைந்தது. மெதுவாய் முன்னோக்கி நகர்ந்தது. கூர்ந்து பார்க்க, இப்போது தெளிவாகத் தெரிந்தது. அது பறவை அல்ல. மனிதன். நெஞ்சளவு நீரில்… அந்த குளத்து நீரின் சகதி தரையில் தனது பாதங்களை பதித்து மெதுமெதுவாக அடியெடுத்து வைத்து, அவன் முன்னேறி அசைந்து கொண்டிருந்தான். கையில், நீர்மட்டத்திற்கு மேல் ஒரு வலை. நகர்ந்தான். வலையை லாவகமாக வீசியெறிந்தான்- நெஞ்சளவு நீரில்- நீரிலிருந்தபடி. பின் வலையை ஒரு சிறு குலுக்கு குலுக்கி மெல்ல மெல்ல இழுத்தெடுத்தான். இறுதியில் வலையின் தொங்கலில் சிறு மூட்டை போன்ற பொதி. சோதனையிட்டான். இரண்டொரு மீன் குஞ்சுகளும் சேறும் நிரம்பியிருந்திருக்க வேண்டும். சேறை, நீருக்குள் கொட்டி, இரண்டொரு மீன் குஞ்சை, கழுத்தைச் சுற்றி கட்டியிருந்த சாக்குபைக்குள் திணித்து கொண்டான். பின் வலையின் முடிவில் இருந்த இரும்பு குண்டுகளை நேர்த்தியாக எடுத்து வரிசைப்படுத்தி, அடுத்த வீச்சுக்கு தயாராகி, கயிறையும் வலையையும் மடித்து கைமடிப்பில் போட்டு கொண்டான்.
எப்படி இவன் இந்த இடத்தை அடைந்திருக்கக்கூடும்…? கரையின் இந்த பகுதியில் இருந்தா…? அப்படியென்றால் இந்த நீர் அந்த தீவை அடையும் வரைக்கும் கூடினால் கழுத்தளவு ஆழம் கொண்டதாக இருக்க வேண்டும். இல்லை என்றால், இந்த குடில்கள் ஒன்றிலிருந்து புறப்பட்டிருப்பானா? சத்தம் வைத்தேன்:
“மீன் இருக்கா…?”
என் குரல் கேட்டு, திரும்பி பார்த்தான்.
“எங்கிருந்து வந்தீர்கள்? இங்கிருந்தா…? ”
பாதி சைகையாலும் பாதி சத்தம் வைத்தும் அவனுக்கு புரிய வைத்தேன்…
“இல்லை…”
அவன், அவனுக்கு பின்னால் இருந்த மறு கரையை காட்டினான். “அங்கிருந்து…”. அதிசயமாக இருந்தது. இவ்வளவு தூரம், நீரில் அடி அடியாக அலசுகிறான்… இந்த குட்டிக் குஞ்சுகளுக்கா… வாயடைத்து போனேன். ஏனெனில் மறுகரை தெளிவாக தென்படவேயில்லை. அவ்வளவு தொலைவு.
அவனிடம் கையசைத்து விடைபெற்று மீண்டும் வயல்வெளியையும், பனை மரங்களையும் தாண்டி வீதியை அடைந்து, என் நடையை தொடர தொடங்கினேன்.
ஓர் அரை கிலோமீற்றர்; தொலைவில் வளைவுடன் கூடிய அந்த பிரம்மாண்டமான பாலம் காட்சி தந்தது. அகன்ற அதன் இருமருங்கிலும், ஆட்கள் சென்று வர, ஓரடி அகலத்தில் நடை பாதை போட்டிருந்தார்கள். இடபுறம் அலை மோதிக் கொண்டிருந்த கடல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. அதை தாண்டி, மணல் விரிப்பு. அதை வந்து, வந்து இடைவிடாது, மோதும் அலைகள்… மறுபுறம் ஆறு. சத்தமே இன்றி வெகு அமைதியாக ஓடி வந்து, கடலுடன் கலந்தது. ஆறு, கடலுடன் சங்கமிக்கும் இடம் இது… முகத்துவாரம்…
பாலத்திலிருந்து கீழே பார்த்தேன். பாலத்தினடியே, ஆற்றில் மூவர் வலை வீசிக் கொண்டிருந்தார்கள். இருவர், ஆற்றின் ஓரமாயும் மற்றவர் ஆற்றின் நடுப் பகுதியில், ஆழத்தில், கிட்டதட்ட நெஞ்சளவு நீரில், வலையை வீசியப்படி, ஆற்றின் நடுபகுதியை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து, அடி அடியாய் எட்டிவைத்தவாறு இருந்தார்.
பாலத்தின் இரும்புகளில் கன்னத்தை வைத்தவாறு சற்று வேடிக்கை பார்த்தேன். பின் கரையோரமாய் மீன் பிடித்துக் கொண்டிருந்த இருவரில், ஒருவரிடம், கூக்குரலிட்டு விசாரித்தேன்…
“மீன் இருக்கின்றதா”
பையைக் காட்டினார் அவர். பெரிய மீனாக இருக்குமோ? வந்து பார்க்கிறேன் என்றேன். பாலத்திலிருந்து இறங்கிய படிக்கட்டுக்களை கையால் காட்டினார். பாலத்தின் இரு மருங்கிலும் இரண்டு குறுகிய படிகள் ஆற்றை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தன. என் பக்கமாய் இருந்த ஒன்று, கீழே, மீனவருக்கு சமீபமாக இறங்கிற்று. அச்செங்குத்தான படிகளில், மெதுவாக இறங்க தொடங்கினேன். அவரும் படகில் ஏறி நான் இறங்கும் இடத்தை நோக்கி வர தொடங்கினார். படகு கரையை அடைந்ததும் மெதுவாய் இறங்கி என்னிடம் பையைக் காட்டினார். சிறிய மீன்கள்… இரண்டொரு சிறிய இறால். துள்ளி பாய்ந்தன- வெடுக்கு வெடுக்கென.
"இந்த இறால் போதாதே" என்றேன்.
"இரவு வருவீர்களா… இரவு எட்டு மணிக்கு வந்தால் நிச்சயம் கிடைக்கும்" என்றார்.
"வருகின்றேன்" என்றேன்.
"சரி" என்றார்.
விசாரித்தேன்… வலை வீசுவதில் ஏதேனும் விஷேட திறன் உண்டா என. இல்லையென்றார் அவர். அனைவருமே ஒன்று போலதான் வலை வீசுவர்… கூறினேன்: விதை நெல்லை வீசுவதில் தேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்… “கைசுளுக்கு” உள்ளவர்களும் இருக்கிறார்கள்.
ஏற்றுக் கொண்டார்… கை சுளுக்கு… எனக்கு தெரியும் என்றார்… ஆனால் வலை வீசுவதில் அப்படியில்லை என்று மறுதலித்தார். நல்லது- இங்கே மூவர் வலை வீசுகின்றார்கள்… இவர்கள் மூவரில் திறமாக யார் வலை வீசுவது யாராக இருப்பார்கள்…
சிரித்தார்… புரிகின்றது… அதோ… அந்த ஆழத்தில் வீசுபவர் இருக்கின்றாரே… அவர்தான்… எனது தந்தையின் தம்பியின் மகன்… சிறுவயது முதலே வலை வீசி பழக்கம்… அவன் நெஞ்சாழத்திற்கே சென்று வலை வீசுவான்… மீன் அதிகமாக அகப்படும்… நாங்களெல்லாம் நெஞ்சாழத்திற்கு சென்று வலையை வீசி எறிய முடியாது… அவர் வீசுவார்… பழக்கம்… நெஞ்சாழத்திலிருந்து வலையை வீசுவது… இரவு ஏழுமணி தொடக்கம் நடு இரவு ஒரு மணிவரை அவன் வீசுவான்… அவரை பார்த்தேன். நெஞ்சாழத்தில் நீரில் அடி அடியாய் நகர்ந்து, வலையை வீசி எறிந்தார், இவ் உலகை மறந்து.
இவனுடன் ஆட்டோவில் செல்லும் போது, நீண்ட மண்வெட்டியால் வயலின் வரம்பை சீர்படுத்தி கொண்டிருந்தான் ஒருவன். இவன் கூறினான்: “இதெலாம் இவர்கள் சீக்கிரம், சீக்கிரமாய் செய்து முடிக்க வேண்டும்.” தூரத்தே ஒரு டிரக்டர் நிலத்தை கடும் வேகத்துடன் அவசர அவசரமாய் வட்ட வட்டமாய் உழுது கொண்டிருந்தது. டிரக்டரின் பின்னால், நூறு கொக்குகள், உழுதிருந்த அந்த மெண்மையான மண்ணில், கூட்டம் கூட்டமாய் மேய்ந்தன. விதையை தேடியோ என்றேன். இவன் கூறினான்: “ இல்லை. புழுக்களுக்காக.” பிறகு கூறினான்: “இவர்கள் நீரை திருப்புமுன், இவர்கள் உழுது முடித்திருக்க வேண்டும். நீர் திறந்தால், இரண்டு கிழமை அளவில் மட்டுமே இருக்கும். அதற்குள் நீங்கள் உழுது முடித்திருந்தாலும் ஒன்று. முடிக்காவிட்டாலும் ஒன்று. நீரை மூடிவிடுவார்கள். அதனால்தான், இந்த வேகத்தில் உழுகுகிறார்கள்- வேக வேகமாய். அந்த பழங்குடி மனிதன் வரம்பை சீர்படுத்தி கொண்டிருப்பதை பார்த்தவாறே இவன் கூறினான்: “குடிப்பான்… அப்படி குடி… குடித்துவிட்டு, மனுசிக்கு அடியான அடி… அவள் ஊர் முழுவதும் சுற்றிக்கொண்டு அலறுவாள்… ஆனால் இவன்தான் இந்த பிரதேசத்திலே அருமையான வீச்சாளன்.
‘அப்படியென்றால்”
விதையை வீசியெறிவதில் வல்லவன்… நில சொந்தக்காரர்கள் எல்லாம் இவனை தேடி திரிவர்… அதாவது விதை வீசும் போது ஒரு சீராய் பொட்டல் இல்லாமல் வீச வேண்டும்- கிராமத்து பாi~யில் சொன்னால், “கைசுளுக்கு இல்லாமல்” வீச தெரிந்திருக்க வேண்டும். உரத்துக்கும் இதேதான் கதை. இந்த வகை ஆட்கள் லேசில் அகப்படமாட்டார்கள். தேடி திரிய வேண்டும்.
இப்பொழுது புரிந்தது வான்கோவும் அனேக ஓவியர்களும் ஏன் இந்த விதை வீசும் விவசாயியை பல கோணங்களில் தீட்டினர் என்று. வான்கோ தனது ஓவிய முன்னோடிகளை மாத்திரமல்லாது, இந்த நிலத்தையும் அதில் கை நெல்லை வீசியெறியும் அந்த விவசாயிகளையும் ஆழ அறிந்திருக்க வேண்டும்.
அந்த மீனவன் சிரித்தவாரே என்னிடம் ஆமோதித்தான்: “ உண்மை. இது வீச்சாள் போன்றதுதான்”.
02
வழமைபோல் எனது ஆட்டோ நண்பன், இடையிடையே அவனது கதைகளை கூறி கூறி வந்தான். பத்து பன்னிரெண்டு வயது. அப்படியே அடிபட்டு வைத்தியசாலையில் கிடந்தேன். மூன்று நான்கு மாதம்- காலில் கட்டு போட்டு, படுக்கையில். அந்த நேரம்தான் வாசித்தேன், வாசித்தேன் அப்படியொரு வாசிப்பு. அப்போது எங்களை பார்த்துக்கொள்ள குருவி அக்கா வருவாள். அவள்தான் எங்களுக்கு நூல்களை கொண்டு வந்து தருகிறவள். யவன ராணி-அதுபோன்ற எவ்வளவோ சரித்திர கதைகள்- அதைவிட முக்கியமாக பண்ருட்டி சேதுராமனின் எண்கணித சாஸ்திரம்.
நீங்கள் வாசித்திருக்கீர்களா- எண்கணித சாஸ்திரம்- பண்ருட்டி சேதுராமனின்? இக்கேள்வியை, இவன் குறைந்தது ஓர் ஐந்தாறு தடவை கேட்டிருந்தான். என் மீது கடுமையான ஓர் விமர்சனத்தை வைத்திருந்தான் என்றால், அது நான், பண்ருட்டியின் எண்கணித சாஸ்திரத்தை, வாசிக்காததே என்பதுதான் இவனது கணிப்பு. கூறினான்: “குருவி அக்காவை மறக்கவே முடியாது. எனது மூக்கை பிடித்து திருகி, என் நெற்றியில் திருநீறு இடுவாள், ஒவ்வொரு நாளும்.”
“காரணமா- அங்கிருந்தவர்களில் ஆகச்சிறியவன் நான்தானே. அதனாலாக இருக்கும். அவள் மணந்தது மட்டக்களப்புக்கு பொறுப்பாயிருந்த போர் தளபதியை. வைத்தியசாலை படுக்கையின் பின், அதாவது, பன்னிரெண்டு வருடங்களுக்கு பின், ஒரே ஒரு முறைதான் அவளை பாரத்தேன். அதுவும் தற்செயலாக. என்னை கண்டவுடன் ஓடிவந்து கட்டிபிடித்து கொஞ்சினாள். முடியாது. இன்றைக்கு என்னால் எங்கயும் போகமுடியாது. என்னுடைய கையால் இவனுக்கு சமைத்து போட்டாக வேண்டும் என்று கூறி, செமனும் புட்டும் காய்ச்சி…”
“இம்முறை அம்பாறை பாதை வழியாக செல்வோம். அந்த பாதையில் நீங்கள் பயணித்தது இல்லை. திரும்புகையில் சாகம பாதையில் வருவோம்.”- நான் ஏற்றேன்.
“வெங்கடன் இந்த நேரத்தில் வீட்டில் இருப்பார். ஆளை பிடித்து விடலாம்”.
பாதையின் இருமருங்கேயும் அழகான வயல். ஆட்டோ குலுங்கி குலுங்கி சென்றது. ஓர் அரை அடி வளர்ந்திருந்த நாணல்கள் வேறு காற்றில் தலை அசைத்து ஆடின.
மரங்கள் அடர்ந்த ஒரு சந்தியில், ஓர் சிறிய தோப்பின் நிழலில் ஒரு மனிதன் பிச்சைக்கார தோற்றத்துடன் அநாயாசமாக உட்கார்ந்திருந்தான்.
ஆட்டோ ஓட்டி மெல்லமாக அவன் அருகில் ஆட்டோவை செலுத்தி நிறுத்தினான்.
வெங்கடன் இருப்பாரா என்று கிழவரிடம் விசாரித்தான்.
தாடையை சுரண்டியவாறே “அலி கேம்புக்கு” சென்று பாரத்தால்…
“இவரும் குறவர் குடிலை சேர்ந்தவர்தான்” ஆட்டோ நண்பர் என்;னிடம் மெதுவாய் முணுமுணுத்தான். “அப்படியா. அப்படியென்றால் கொஞ்சம் கதைத்து வருகின்றேனே” என்றேன்.
ஆட்டோ நண்பன் ஆட்டோவை ஓரங்கட்டி நிறுத்தினான்.
“இப்போதுதான் வேலை முடிந்தது. கூலி வேலை. நாளொன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய்”
“பேர்”
“தாசன்”.
பழைய கடந்த காலத்தை விசாரித்ததும் அவரது முகத்தில் ஒரு மந்தகாசமான பிரகாசம் வெளிபட்டது. வெற்றிலை, காவிபற்களை காட்டி புன்னகைத்தார். கிட்டதட்ட அறுபத்தைந்து எழுபது வயது இருக்;கலாம். மெலிந்த ஒல்லியான தோற்றம். சவரம் செய்யப்படாத முகம். ஏனோ தானோ என வளர்ந்துவிட்ட நரைத்த தாடி.
“அது அப்பரு காலம்”
“அப்ப எல்லாம் வள்ளி- முருகனை தானே கும்பிட்டது” “திருவிழா… வருசம் ஒன்னுக்கு ஒருமுறை…”
“அதுதான் காலம்- அற்புதமான காலம்” முகத்தில் மீண்டும் புன்னகை பூக்க மகிழ்ச்சி கொண்டார்.
“வேட்டைனா வேட்டை- அப்படியொரு வேட்டை.
அஞ்சாறு நாய கூட்டிகிட்டு- ஒரு அஞ்சு பேரா கிளம்பினா… நாய்க வழிகாட்டும். ஒன்னு முன்னுக்கு ஓடும்… திரும்பிவரும்… வந்து எங்கள வேற ஒரு பாதையில் கூட்டி போகும்- தெரிஞ்சிக்குவோம். யானை அங்கே நிக்குதுனு.
“மொதல இருந்தாதான் தெரியுமே…எலகொல எல்லாம் மடிஞ்சி மடிஞ்சி- மணல பார்த்தா அது நடந்த அச்சு தெரியும்- பின் அதன் கழிவுகள்- முதல தோலொன்னு ஒரு இலட்சம் போவுமே- புடிச்சிருவேன். எல்லாமே வெளிநாட்டு ஏற்றுமதிக்குதான்- அத வாங்கவே தனியா ஆளுங்க இருந்தானுக- இப்பனா எல்லாமே மாறி போய்ச்சி- ஒரு பன்டிய புடிச்சா கூட பிரச்சினதான்.”
வெங்கடனை நாங்கள் சந்தித்த போது, இதே கதையைதான் அவரும் கூறினார்: “அந்த காலம் மாதிரி, காலம் வரவே வராது.”
அவரும் கூறினார்: “அப்பரு காலம்” ஒரு தொப்பியை வெங்கடன் அணிந்திருந்தார்.
“ஒரு சொல்னா ஒரு சொல்-அப்படித்தான் அந்த காலம் இருந்தது- எல்லோரும் ஒன்றுகூடி உதவுவார்கள்- வேட்டைக்கு போனா- அப்படி வேட்டை- சிலர் வேட்டையை கொண்டு வந்து எங்களுக்கும் கொடுப்பார்கள்-வேட்டை இறைச்சி மேலதிகமாக இருக்கலாம்- ஆனாலும் விற்கமாட்டார்கள். வேட்டை இறைச்சியை நாங்கள் வாங்கமாட்டோம் வெட்கம். வெட்ககேடு.
அதிசயமாக இருந்தது எனக்கு. அவர் இப்படி கூறுவதை கேட்டு. இதில் என்ன வெட்கம் வந்து தொலைப்பது?
“நாங்க வாங்குனாலும் அப்பா வாங்கவே வாங்க மாட்டாரு. சொந்த மாமாவே கொடுத்தாலும் வாங்க மாட்டாரு. அப்படியே வற்புறுத்தி வாங்கினாலும், பிள்ளைகள சாப்பிட சொல்லுவாறே தவிர அவர் ஒருநாளும் தொட மாட்டார். தனக்கு தேவையானதை தானே தேடிகொள்வார். இப்ப காலம் மாறிடுச்சி. ஒரு பன்றியை பிடித்தா கண்மூடி கண் திறப்பதற்குள் எனக்கு உனக்கு என்று போட்டி போட்டு வித்து முடிஞ்சிடும்.”
“யானை ஒரு வித்தியாசமான மிருகம். அதுக்கு எல்லாமே தெரியும்- வயல் காவலுக்கு போவார்கள்- அதுக்கு தெரியும். இன்;னைக்கு வந்தவர்கள் எத்தனை பேர் என்று. எத்தனை மணிக்கு இவர்கள் கண்ணயர்வார்கள் என்று- என்ன ஆயுதம் கொண்டு வந்திருக்கின்றார்கள்- துப்பாக்கி கொண்டு வந்திருக்கிறார்களா- அனைத்து நடைமுறைகளும் அதுக்கு அத்துப்பிடி…”
“கண்ணை சற்று மூடினோம்மனால் அந்த சமயத்தில் வந்து, வந்த வேலையை முடித்துவிட்டு, கிளம்பி போய்விடும்- அதாவது, கண்ணை மூடும் வரை, வரவே வராது…”
“மனிதன் கெட்டுவிட்டான்- ஆனா யானை கெடவில்லை… அதனால் தான் இத்தனை சாவு- இவன் சொல்லுவான்;;;;- யானையாம் பூனையாம்- மசுரு- யானை சாப்பாட்டுக்கு வரும் நேரத்தில், இவன் புறப்பட்டு விடுவான்- மப்பில்- காவல் காக்க…”
“தும்பிக்கையால் ஒரு சுழற்று…”
அதிலும் மோட்டார் பைக் என்றால்- ஆபத்து- அதிகம். யானை எதிரில் நிற்பது தெரியவே தெரியாது- தெரிந்த போது- தூக்கி வீசப்பட்டு இருப்பான்- சைக்கிள், அபாயம் குறைவு- யானை இருப்பது நன்றாக தெரியும்…”
“அதன் அடியை பாருங்கள்… கால் இவ்வளவு- பெரிது. ஆனால் சத்தமே வராது – மனிதனது சிறிய கால்- இந்தளவு… ஆனால சலக்புலக்கென்று அலம்பி அலம்பி நடப்பான்.”
எனது ஆட்டோ நண்பனும் ஒத்தூதினான்: “அதுவொரு பழிவாங்கும் சாதி. கெட்டவார்த்தைகள் பாவித்து திட்டினால், நிச்சயம் அது பழிவாங்கும்… யானைக்கும் மனிதனுக்கும் போர் என்கிறார்கள்- கிடையவே கிடையாது.- இவன்தான் போர் புரிகின்றான்- யானை எப்பொழுதும் போல் யானைதான்- இவன் நேரகாலத்துடனே கிளம்பி இருக்கலாம்;- அங்கே, பரணில் அமர்ந்து, மப்பையும் போட்டு உணவையும் உண்ணலாம்- யானைக்கு ஒரு தொந்தரவும் இருக்காது. ஆனால் இவன் கிளம்புவதே மப்பில்தான். அதுவும் யானை சாப்பாட்டுக்கு புறப்படும் சமயமா பார்த்து. பின்… இப்போது எங்களது சம்பாசனைகள் மாறியது. வெங்கடன், எங்களிடம் மரை வேட்டையை பற்றி கூறி கொண்டிருந்தார்: “மரை- காட்டுமாடுகளோடு ஒன்று சேர்ந்து மேயும் மிருகம். அவ்;வளவு பெரிய மிருகம். ஏழெட்டு பேர் தேவை, சுமக்க. ஓட தொடங்கினால் விருட்டென்;று பாய்ந்து ஓடும். துரத்தினால், நீர்நிலைகளை நோக்கித்தான் ஓடும். எங்கள் வேட்டை நாய்கள் துரத்தும் போதும், நேரடியாக குளத்துக்கே ஓடும். ஓடி, தொடையளவு ஆழத்தில் நின்று கொள்ளும்;;;. பின், தலையை சாய்த்து காதை கடிக்க கொடுக்கும், வசதியாக. வேட்டை நாய்,காதை கவ்வ தவ்வியதும்- ஒரு எத்து- வேட்;டை நாய் குடல் தெறிக்க கரையில் வந்து விழும்”
“ஏன் நீர் நிலையா? சண்டை போடத்தான். அதுதான் அதற்கு வசதியானது- உதைக்க வேண்டுமே”
“ஆழத்திற்கு செல்லவே செல்லாது. முதலைகள்;;;;;;! கூடவே உதைப்பதற்கு வசதி- வேண்டுமல்லவா?”
“நீர்நிலைகளில் அது நிற்கும் போது, மரக் கொப்புகளை உடைத்து, முகத்தை மறைத்து செடி போன்று வே~மிட்டுத்தான் நெருங்குவோம். மனித முகம் ஒன்றை கண்டால், எங்களுக்கும் அதே உதைதான்… கொப்புக்களுடன், மறைத்து, நெருங்கி ஒரே குத்து- வயிற்றில்- விலாப்பகுதியில்- மற்றவர்களும் குத்துவார்கள்- இழுத்து கொண்டு வந்து தூக்கி,பங்கிட்டு,நெருப்பூட்டி, அதற்கு பெயர் வேட்டை…”
“அந்த காலங்கள் இனி மீள வரப்போவதில்லை- ஏக்கத்துடன் கூறினார், வெங்கடன்.
இருக்கலாம்.
இவன் இப்போது அரசியலில் ஈடுபடுவதில்லை என்றான். தனித்து… தானும் தன் குடும்பமுமாய் இருக்கின்றானாம், ஒதுங்கி. மே18- நினைவேந்தல் நாள்… அன்று ஒன்றுமே சாப்பிட மாட்டானாம்… இதயம் துடியாய் துடிக்குமாம்… காலையில் இருந்து ஒரு புனித உணர்வு… அந்த காட்டு வாழ்க்கை… அந்த தோழர்கள்… குறித்த நேரத்தில் அந்த பாடல்… நாங்கள் வந்திருக்கின்றோம்… நீங்கள் பார்த்தீர்களா? கண்கள் இரண்டிலும் நீர் பொல பொலவென்று கொட்டும். அப்படியே நிற்போம்.”
கூறினான்: “இல்லை அவர்களுடன் தொடர்பு ஒன்றும் இல்லை… பணம் கொடுத்தாலும் வாங்கமாட்டேன்- அது பிச்சைக் காசுதானே- வெட்கம்! அதை எதிர்பார்த்தா நான் இறங்கியது…”
ஒருமுறை வெங்கடேசனிடம் புறப்படுகையில் நான் இவனை கேட்டிருந்தேன்: எதையாவது வாங்கி செல்லுவோமா” என்று.
“ஒரு கால்போத்தலை…”
“வெங்கடனை கண்டதும் ஆட்டோவில் கைவிட்டு அதை எடுத்து “ஒரு சந்தோசத்தை கொடுப்போமே அவருக்கு என” என்னை திரும்பி பார்த்து மெல்லியதாக சிரித்துவிட்டு வெங்கடனிடம் நீட்டினான்: “ஐயா வாங்கி கொடுத்தது.”
ஆட்டோவில் வரும் போது கூறினான்: “இப்போதைக்கு எல்லாமே குறைவு- இதோ இந்த இடத்தில எவ்வளவு இறால்கள். நம்ப மாட்டீர்கள் நண்டு வாங்க பல நாளாய் தேடி திரிகிறேன். ஒரு நண்பர்… ஆசைப்பட்டு கேட்டிருந்தார்… சுகமில்லாமல் படுத்த படுக்கையாய் இருக்கிறார். சாப்பிட்டு விட்டுத்தான் மண்டையை போடட்டுமே…”
ஒருமுறை இவன் முன்பு கூறி இருந்தான். அவனுக்கு சிறு வயது. குருவி போல் - நூல்கள்:திருநீறு- எந்நேரமும் புன்னகையுடன். காயப்பட்ட நானும், என் தோழர்களும் கிடப்போம் வலியுடன், படுத்த படுக்கையாக, மருந்து வீச்சு மூச்சடைக்கும் அவ்வார்ட்டில் அவள் எப்போது வருவாள் என்று அண்ணாந்து பார்த்தபடி. இரவு பறவை என்று சொல்வார்களே அதே செவிலிய மாது. அன்று ஒத்தடம் தந்தாள். இன்று இல்லை.
உண்மைத்தான்;. போர் எதை எதைக் கொன்று விட்டது? வித்தியாசமான மனிதன் இவன். இவனது காலம் கூட வித்தியாசமானதுதான் - வெங்கடனின் அப்பரின் காலத்தை போன்று… அந்த காலம் உருவாக்கிய வெட்கங்களும் வித்தியாசமானவை.
இந்த வெட்கத்தை வெங்கடனின் தந்தையின் காலத்திலும் பிச்சைக்காசை, வாங்க மறுக்கும் இவனிலும், இப்படியாய் நான் காண முடிந்தது.
வேட்டை இறைச்சியை, வாங்கிக்கொள்ளாது, வெங்கடனின் தந்தை அடைந்த வெட்கமும், எந்தவொரு உதவியையும் பெற்றுக்கொள்ளமாட்டேன் என அடம்பிடிக்கும், இவன் அடையும் வெட்கமும், ஒரு நாகரிகத்தை எனக்கு சுட்டுவதாய் இருந்தது. ஆனாலும், இது இன்னும் தெளிவின்றியே இருந்தது. வெட்கம் - வாழ்வின் மர்மங்களில் இதுவும் ஒன்றா? ஆனாலும் மர்மங்களை உடைப்பது தானே மனிதர்களின் தர்மம், என்றாகிறது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.