- ஓவியம்: AI -
“கண்ணை மூடிக்கொண்டு, ரிகார்ட் பிளேயரில் ஒலிக்கும், மென்னிசை தாலாட்டு ஒலிக்க, படுத்துக்கிடப்பேன். ஒரு நங்கையானவள் மலை உச்சியிலிருந்து மென் ஓட்டத்தில் இறங்கி ஓடி வருவது போல் ஒரு பிம்பம் மனத்திரையில் தோன்றும்…”
இது அவனது நிசப்தம் நிறைந்த இரவு.
பகலும், மாலைகளும் வேறு விதமானது.
கோர்ட் வேலை முடிந்தவுடன், இவனும் இவனது நான்கு அல்லது ஐந்து நண்பர்களுமாய் சேர்ந்து கூடிவிடுவார்கள்.
பகல் நேரத்தில், நேரமிருந்தால், ஒரு மூத்த தொழிற்சங்கவாதியின் அலுவலகத்தில்… அவனும், ஒரு வித்தியாசமான ஆள். தோழமை மிகுந்த ஒரு அரசியல்வாதி.
மாலை நேரமென்றால் வைட் ஹவுஸ் தேனீர் சாலையில். நான்கு மணியளவில், இந்த நால்வரையும், அந்த வைட் ஹவுஸ் தேநீர் சாலையில் வழமையான மூலையில் காணலாம்.
அங்குள்ள சிப்பந்தியில் - அதிலும் சீனியர்கள் - அவர்கள் ஏதோவொரு வழியில், ஏதோவொரு தொழிற்சங்க நடவடிக்கையில் தம்மை இணைத்து, ஏதோவொரு வகையான வழக்கு வம்பென்று ஊடாடி வந்திருந்ததால், இவன், அவர்களது கதாநாயகன் ஆனான். எனவே இவர்கள் நேரம் போவது தெரியாமல் கதைப்பதை அவர்கள் பொருட்படுத்துவது இல்லை. அதனாலேயே இது வழமையாகியது. அத்தேநீர் சாலையில் இது இவனுக்குத் தரப்படும் தனி மரியாதை. பாலற்ற வெறும் தேநீரை சுவைத்து சுவைத்து இவனும் இவனது நண்பர்களும் ஆர அமற நாட்டு நிலவரங்கள், உலக நடப்புகள், பத்திரிகை செய்திகள், கட்சி விவகாரங்கள்- இத்தியாதி என்று ஒருமுறை வைத்து கதைத்து இறுதியாய் புறப்பட ஓரிரண்டு மணி நேரம் சென்று, மாலை மங்கவும் ஆரம்பித்திருக்கும்.
பின்னர், வாவி ஓரமாகப் போடப்பட்டிருக்கும் சிமென்ட் நடைபாதைக்கூடு நடந்து அவன் தன் வீட்டை அடைந்து, குளித்து வழக்கு கோப்புகளிலும், நூல்களிலும் தன்னைப் புதைத்துக் கொள்வான்- அவனது வேலையாள் அவனை உண்ண அழைக்கும் மட்டும். சில சமயங்களில் சிறிது மதுவை ஊற்றி வைத்துக் கொண்டு சில மிடறுகளை விழுங்கியபடி, கோப்புகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்வையிடுவான்.
ஒரே ஒரு முறைதான் காதல் வயபட்டதாக கூறினான் அவன். அந்நேரம் அவன் ஒரு ஆசிரியனாக இருந்தானாம். ஏதோவொரு விடயத்திற்காக- அக்காதலும் விடுபட்டு போனது… பொதுவில் குடும்பங்களின் ஏற்றத்தாழ்வு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அவள் இறுதியாய் விடைபெற்று சென்ற பின் தன் அறைக்குத் திரும்பி வந்தவன் தன் மேசையை நன்கு துடைத்து சுத்தம் செய்து, நூல்களையும் ஃபைல்களையும் ஒரு ஒழுங்கில் நேர்த்தியாக அடுக்கி வைத்ததுடன் அக்காதலை அவன் முடித்து வைத்ததாக வர்ணித்தான்.
இருந்தும் கூட அக்கதையை கூறிவிட்டு கூறினான்: “ இருவருமே, அதன் பிறகு சந்தோஷமாக வாழ்ந்தாகவில்லை என்று நினைக்கின்றேன்…”
இதன் பிறகு, அவன் பலருக்கும் பார்த்து கட்டி வைத்தாலும், அவனையும் அவனது அந்த நான்கு நண்பர்களையும் பொறுத்தவரை அவன் எப்பொழுதோ ஒரு முடிவு கட்டப்பட்ட கட்டப் பிரம்மச்சாரியே… முக்கியமாக அது அப்படித்தான், என்பதற்கான அடிப்படை காரணம் தனது வாழ்வு பயணத்தில், காதல் என்பது எப்போதோ நடந்து முடிந்திருந்தது.
இருந்தும் அவனது உள்ளம் சோர்வடைந்திருந்ததாக இல்லை. என்றும் போல் உற்சாகம் குன்றாமல் இருந்து, வாழ்வை அவன் ஆழ நேசிக்கவே செய்திருந்தான்.
அந்த நான்கு நண்பர்களிலும் ஓர் எளிமை இழையோடும்… இருவர் வெள்ளை நிற வேட்டி சட்டைகளிலும், மற்ற இருவர் சாதாரண நீள் சாராய் அணிந்தும் இருப்பர். ஒருவர் ஒரு ஆசிரியன். இஸ்லாம் மத பற்றுடையவன். இவன் எங்கு சென்றாலும் இவனுடன் இணைந்து வருவார் அவர்.
இவனைத் தவிர்ந்த மற்ற நால்வருமே, தத்தமது மனைவி மக்களோடு ஒரு வழமையான குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டு இருந்தவர் ஆவர்.
இந்த வேளையில்தான், அந்த மூத்த தொழிற்சங்கவாதியின் மகள்- ஓர் இளம் வயது நங்கை- அப்போதே, தனது பல்கலைக்கழகப் படிப்பை முடித்து- கொழும்பில் சில பெண்ணிய நிறுவனங்களில் பணிபுரிந்து, வந்து சேர்ந்திருந்தார்.
ஏன் என்றால், அவளுக்குக் கண்டியிலேயே ஒரு ஆசிரியைப் பதவி கிட்டியிருந்தது. பாடசாலை முடிந்தவுடன், நேராக புறப்பட்டு, தந்தையின் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்து விடுவாள்.
பின், பகலுணவு இத்தியாதி இவை முடிய அவள் அங்கே தந்தையின் அறையில் அமர்ந்து அங்கு வரும் தந்தையின் தொழிற்சங்க- அரசியல் நண்பர்களோடு ஆரோக்கியமான அரசியல் சர்ச்சைகளில் கிரமமாக ஈடுபடுவதில் ஆழ்ந்த அக்கறையை காட்டி வந்தாள்.
கொழும்பில் தான் தன் “குழுக்களிடமிருந்து” பெற்று வந்த புதிய அரசியல் தரிசனங்களோடு, இந்த மரபு ரீதியான தந்தையின் அரசியல் நண்பர்களின் நடவடிக்கைகளை விலாசி தள்ளுவதில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்தாள்.
விலங்குகளின் உரிமை முதல், ஐ.நா கூறும் மனித உரிமை ஈராக அவள் பூணக்கூடிய போர்க் கோலம் பல்வேறு விதமாய் இருந்தது.
முகம் சிவக்கச் சிவக்கக் கோபத்துடன் வாதிப்பாள் அவள். இனி இவனும் சமயங்களில் இவ்வாதங்களின் விளிம்புகளில் பங்கேற்பதுவும், சமயங்களில் புன்னகையோடு அவதானித்துக் கொண்டிருப்பதும் வழமை.
பின்னர்தான் இவளிடம் ஒரு நாள் இவன் மனம் விட்டு கூறினான்: “இரண்டு மணியிலிருந்து என்னத்தைத்தான் நீ செய்கின்றாய், தினந்தோறும்? உனது இந்த வயதில் எதை எதை எல்லாமோ பயில வேண்டியவள்- எதை எதை எல்லாமோ கிரகிக்க வேண்டியவள்- இங்கு வந்து வம்பு சண்டை என்று வெறுமனே நேரத்தை வீணடிக்கிறாய்…” இவனது இந்த கூற்றை இட்டு அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை. ஆனால், அதன் பிறகு, இவ்விருவரும் தமக்குப் பொதுவான விடயங்களைக் கூடுதலாக, அவதானமாக அளவளாவ முற்பட்டிருப்பதில் தீவிரம் காட்டினர்.
அவள், அவன் வீட்டிற்குச் செல்வதும், அவனது நூலகத்திலிருந்து முக்கியமான சில நூல்களைப் பெற்றுக் கொள்வதும், பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் ஒரு முதுமாணிக்கான படிப்பில் தன்னை இணைத்துக் கொள்வதும் அதற்காய் இவனது உதவியைக் கோருவதும்- இப்படியாய் இவர்களது இந்த நட்பு வகை தெரியாது வளர தொடங்கியிருந்தது.
பின்னொரு நாள், இவள் தனது திருமணம் தொடர்பாக இவனிடம் பிரஸ்தாபித்தாள். இருவர் அவள் மீது பெருத்த ஆரம்பம் கொண்டிருப்பதாகவும், அது பொருத்து தான் எந்தவொரு முடிவினை எடுப்பது என்பது குறித்து அறியாதவளாய் இருப்பதாகவும் இவள் இவனிடம் கூறினாள். ஒருவன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளன். மற்றவன் வெளிநாடொன்றில் பணிபுரிபவன். பல்கலைக்கழகத்தில் பதவி வகிப்பவன் பொருத்து அவளது தந்தைக்குத் தெரிந்த ஒரு பேராசிரியர் ஊடாக விசாரித்த போது, அவன் பல்கலைக்கழகத்தில் இருந்தாலும் நம்பத்தகுந்தவன் அல்ல என்பதும் அவன் பெரும் ஏமாற்றுப் பேர்வழி என்ற செய்தியும் இவர்களுக்குக் கிட்டியது.
மற்றவன், இவளது வேண்டுகோளுக்கிணங்க, வெளிநாட்டிலிருந்து, புறப்பட்டு இவளைப் பார்வையிடவென்றே வரச் செய்தான்.
இவள் இவனிடம் கூறினாள்: “பாருங்கள், இவனை எப்படி எங்கள் வீட்டிற்கு அழைத்து செல்வது- அதுவும் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளான்- எங்களது மிகச்சிறிய வாடகை வீடு…”
இவன் பெருமனதோடு அவ்விடயம் பொருத்து அவளை அலட்டிக்கொள்ள வேண்டாமென்று அன்புடன் வேண்டியதோடு தனது வசதியான பெரிய வீட்டை விருப்பமான முறையில் பாவித்துக் கொள்ளுமாறு அவளுக்கு யோசனை கூறினான்.
அவனது அந்த வீடு உண்மையில் பிரிசித்தமான அந்த அழகிய வாவியின் முகப்பை பார்த்தவாறு மிக அற்புதமாக, பிரதான பாதை ஓரமாக, நிழலோடு நிழலாக நின்றது.
வெளிநாட்டு நண்பன் குறித்து இவன் கூறினான்: “உண்மையில் அவன் அற்புதமானவன். இருக்கக்கூடிய அனைத்து விடயங்களிலும் அவனுக்கு ஆழ்ந்த அக்கறை இருக்கின்றது. இளைஞன். நேர்த்தியானவன். ஓவியம், கவிதை, வரலாறு, அரசியல்- எதிலும் அவன் ஆர்வம் குன்றாமல் இருந்தான். துடிப்பாகக் கதைத்தான்.” இருந்தும் ஏதோவொரு காரணத்தினால் தனது சகோதரியைப் பார்த்தாக வேண்டும் என்று அவன் பிரஸ்தாபித்தான்.
பின்னர் அவர்களும் இவளை வந்து பார்த்தனர். பிறகு அவன் லண்டன் புறப்பட்டு சென்றான். பின்னர் பதிலைக் காணவில்லை.
இவள் நொடித்து போய்விட்டதாக இவன் கூறினான். நீரற்ற பூஞ்செடி போல் வாடி உருகுலைய தொடங்கியிருக்கின்றாள் என்றும் கூறினான்.
தான் அவளை தேற்றி, அவளை உற்சாகப்படுத்தும் பொருட்டு, எங்கெங்கெல்லாமோ அழைத்துச் சென்று அவளது சோகம் மிக்க வட்டத்தை மாற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் புரிந்தவனாக இவன் இருந்தான்.
இந்த முயற்சிகளின் போதுதான் அவர்கள் தம்மை அறியாமல் ஒருவர் மேல் ஒருவருடன் “காதல்” வயப்பட தொடங்கி இருந்தனர் என்பதையும் அவன் தொடர்ந்து கூறி இருந்தவற்றிலிருந்து நான் அறிய நேர்ந்தது.
அடுத்து வந்த ஒரு திங்களில் அவர்கள் மணம் முடிப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்தனர்.
தம் காதல் பொருத்து முதல் முறையாக ஒரு திங்களில் அவர்கள் பிரஸ்தாபித்து, வெள்ளியன்று திருமணத்தையும் முடித்துக் கொண்டனர்- அதுவும் ஒரு மிக மிக சிறிய வட்டத்தின் மத்தியில். அதாவது ஓர் இருபது பேர் முன்னிலையில்.
இது அவனது நான்கு நண்பர்களுக்கும் ஓர் பேரதிர்ச்சியை உண்டு பண்ணுவதாய் இருந்தது. அவர்களுக்கு மாத்திரமல்ல- இன்னும் அநேகருக்கு. இவன் இந்த வயதில் திருமணம் முடித்தான் என்பதை விட- இத்தகைய ஒரு முப்பது வருட இடைவெளி கொண்ட ஒரு பெண்ணைத் தேடி ஏன் இவன் மணம் முடித்தான் எனும் கேள்வி அவர்களிடையே மூர்க்கமாக எழுந்தது.
ஆனாலும், அவர்கள் எல்லோரை போலவுமே சந்தோசமாகவே இருந்தனர்.
இருந்தும், அவனது வீடு, இவனது பழக்க வழக்கங்கள், இவனது கரிசனைகள்- இப்போது பல மாற்றங்களுக்குள், தவிர்க்க முடியாதபடி உள்ளாகிவிட்டன எனலாம். இவனது அலாதியான வீட்டின் ஓட்டத்திற்கு, நயம் சேர்க்கும் வகையில், அவளது ஐந்து நாய்களும் வரிசைக் கிரமமாகக் கூட்டி வரப்பட்டன.
சிறிதும் பெரிதுமாய் இருந்த இந்த நாய்கள், வந்ததும் வராததுமாய் இவனை ஓரங்கட்ட தொடங்கியதைக் கண்டு சற்றே இவன் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தான்.
இவனது படிப்பறையைத் தமது வசதியான கழிப்பறையாய் அவை மாற்றிக் கொள்வதில் பெருவெற்றி கண்டன. ஒருமுறை ஒரு நாய் அவனது விலை மதிப்புள்ள செல்போனைக் கடித்து வீசியெறிந்து விளையாடிக் கொண்டிருந்த போது இவன் கடும் கோபம் கொண்டு செய்வதறியாது அதைக் காலால் உதைத்ததை இவள் மிக கடுமையாகக் கண்டித்தது மாத்திரமல்ல, அவனது நண்பர்களுக்கும் இவனது செய்கையை எடுத்துக் கூறி, விலங்குகளின் உரிமைகள் பொருத்து கதைக்கவும் தொடங்கியிருந்தாள்.
மறுபுறத்தில் அந்த நான்கு நண்பர்களும் இப்பொழுதெல்லாம் அடிக்கடி சந்திப்பதாகவே இருக்கவில்லை. அவர்கள் திருமணத்திற்குக் கூட அழைக்கப்பட்டார்களா என்பது கூட ஒரு கேள்வியாக இருந்தது. என்றாலும், அதுவும் புரிந்து கொள்ளக்கூடியதே.
இவன் இப்போது நாய்களுக்கும் சேர்த்து உணவுப் பொட்டலங்களைக் கட்டி எடுத்து வர வேண்டி இருந்தது. மேலும் அவளை அங்குமிங்கும் வெளியில் அழைத்துச் செல்ல வேண்டியும் இருந்தது. ஆகவே தொழிற்சங்க அலுவலகச் சந்திப்பு, தேநீர் சாலை (வைட் ஹவுஸ்) சந்திப்பு இவை அனைத்துமே காணாமல் போய்விட்டன.
இந்நெருக்கடிக்குள்ளேயே இவன் தனது அரசியல், வாசிப்பு இத்தியாதி இவற்றை மீண்டும் கஷ்டப்பட்டு தொடரத் தொடங்கி இருந்தான்.
ஒருமுறை கொழும்பு சென்று நள்ளிரவில் வரும் போது இவர்களது வாகனம் பெருத்த விபத்துக்குள்ளாகி விட்டது. காரணம் இவன் களைப்பு மிகுதியால், ஓட்டியபடி தூங்கி இருந்தான். இருவரையும் காண நான் அந்த பிரத்தியேக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டியதாயிற்று.
இவள் கூறினாள்: “என்னை இவர் கொல்லப் பார்த்தார்”. இருந்தும் என்ன காரணத்தினாலோ, அவள் குழந்தைப் பெற்றுக்கொள்வதைத் தவிர்த்தே வந்தாள்.
வயது வித்தியாசம் ஒரு பொருட்டாக இருந்த போதிலும் நவீன வழிமுறைகள் உண்டு- இவன் அவற்றை வெளிநாடுகளில் செய்து கொள்ளலாம்- பாதுகாப்பானது என்று பிரஸ்தாபித்த போதிலும் இவள் விடாப்பிடியாக தன் உடம்பில் ஒரு சிறு கீறல் விழுவதைக் கூட தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்று ஒட்டுமொத்தமாக அவனது வேண்டுகோளை மறுதலித்து வருவதைத் தனது வழமையாகக் கொண்டிருந்தாள்.
காலப்போக்கில், இவனுக்கு அவளது நாய்களின் மீது தன்னை அறியாமல் ஒரு அக்கறையும் பாசமும் வரத் தொடங்கியது. அவற்றின் இடையே இருந்த நுண்ணிய வேறுபாடுகளை அவன் ஆழ அறிய தொடங்கினான். அவையும் இவனை விரும்ப தொடங்கிவிட்டன. காவல் காத்தன. சில வேளைகளில் இவனது படுக்கையில் இவனது காலருகே ஓரமாய் உறங்கின. இவன் அவற்றை மனம் விட்டு பராமரிக்கத் தொடங்கினான்.
இவள் விதவிதமான நானாவித உடைகளையும் வாங்கி குவித்தாள். தனக்கென ஒரு காரையும் வாங்கி வைத்துக் கொண்டாள். ஆனால் இவனது கடும் கோபமிக்க கண்டித்தலின் பின்னர் இரவு பத்து மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டுவதை ஒரு வகையாகத் தவிர்த்துக் கொண்டாள்.
எதற்கும் அட்டகாசமாகச் சண்டை போடுவதையும், முடிவே அற்ற வகையில் முட்டையில் மயிரெடுப்பது போல காரணங்களைத் தேடித் தேடி உற்சாகமாகச் சண்டை போடுவதிலும், அதிலும் முக்கியமாக இவனிடம் தொன தொனவென்று விடாமழையாகச் சச்சரவுகள் செய்வதிலும் அவளுக்கு அடக்க மாட்டாத மோகம் இருப்பதை நான் காணக்கூடியதாக இருந்தது.
இவனது இரண்டொரு நண்பர்களும் இவனது வீட்டிற்கு வருவதை இப்போது அறவே தவிர்த்து விட்டனர். தொலைபேசி அழைப்பைக் கூட அலுவலக மட்டத்தில் வைத்துக் கொள்வதில் சிரத்தைக் காட்டினார்.
சமயங்களில் கூறுவான்: “நிறையவற்றை இழந்து விட்டேன் போல” என்று. ஆனால் வருடங்கள் கடக்க இதுவும் வழமையானது. வாழ்வு இப்படித்தான் என ஏற்றுக்கொள்ள அவன் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டான்.
இந்த வேளையிலேயே அவளுக்கு ஒரு இந்திய பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க அனுமதி கிடைத்தது. அதனை ஏற்பதா, இல்லையா என்று அவள் தடுமாறி நின்றாலும் அவளுக்கு அண்மையில் கிடைத்திருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவி- மேற்படி மேற்படிப்பை அவள் ஏற்காதவிடத்து, அது காலியாகி விடக்கூடும் என்று வேறு அவளை பயமுறுத்தி நின்றது.
இனி, இவனது வற்புறுத்தல் வேறு. இது இவளது படிப்பு சார்ந்ததா அல்லது பதவி சார்ந்ததா என்பதெல்லாம் சரியாகத் தெரியாமலே இருந்தது. இருந்தும் இறுதியில் அவள் இந்தியா சென்றாள் படிக்க.
இவள் சென்ற பின், ஒருநாள் கூறினான்- சண்டை போடுவதிலும் ஓர் இன்பம் இருக்கத்தான் செய்கின்றது. அதில் வாழ்க்கை, ஈடுபாடு என்பது இருக்கவே செய்கின்றது என்றான்.
இன்னுமொரு நாள் ஒரு மரண வீட்டிற்குச் சென்றாக வேண்டுமென்று புறப்பட்டு சென்றான்.
அதுவும் உண்மையில் அவளது மிக நெருங்கிய தோழியினுடைய வீடாகும்.
ஆனாலும் இவ்விரு தோழியரும், தோழமையைப் பூண்டதும் அறிமுகமானதும் கூட, இவனுக்கு ஊடாகத்தான் என்பதனையும் சொல்லியே ஆக வேண்டும்.
அவர்களின் மணமுறிவு சூழலில், இத்தோழி “அவளின்” பக்கமாகவே நின்றிருந்தாள், எனக் குறிப்பிட்டான். இருந்தும், இவனிடம் இதற்கெதிரான வன்மத்தை ஒரு போதும் நான் கண்டேனில்லை.
இதேப்போன்று, தன்னை முன்னிறுத்தும் பண்பு கூட ஒப்பீட்டளவில் மிக அரிதாகவே இவனிடம் காணப்பட்டது. இது ஒரு தாழ்வு மனப்பான்மையிலிருந்து வேர்கொண்டதா அல்லது நிறைகுட பண்பிலிருந்து வேர்கொண்டதா என்பது நான் அறியாதது.
மரண வீட்டில் அவளது தோழியை இவன் கண்டானில்லை- அவள் தென்படவில்லை. ஆனால் அவள் பொருத்து இவன் வினவிய போது வீட்டார்கள் அவள் மேலே இருக்கின்றாள் இதோ வந்து விடுவாள் என்று கூறினார்கள்.
சற்று நேரம் இருந்த இவன், விடைபெற எழுந்தபோது அவளது நண்பி மேலிருந்து கீழே இறங்கி வந்துள்ளாள். இவன் அவளுடனுடம் அளவளாவி விட்டு புறப்பட எத்தணித்த போது அவள் மறுத்து உண்டுவிட்டே செல்ல வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளாள். உணவு உட்கொள்ளும் சூழலும் சரி ஈர்ப்பும் சரி, இவனிடம் கெஞ்சித்தும் வராததால் இவன் அவளது பிரேரிப்பை முற்றாக மறுதலித்துள்ளான். இருந்தும் அவள் விடாபிடியாக வற்புறுத்தல்மேல் வற்புறுத்தல் செய்து இவனை ஒரு வழியாக சாப்பாட்டு மேசைக்குத் தள்ளிச் சென்று விட்டாள்.
வேண்டா வெறுப்பாய் இவன் ஒரு உணவுத்தட்டின் மீது உட்கார்ந்த போது அவள் மாடியிலிருந்து இறங்கி வந்திருக்கின்றாள். “நம்ப முடியவில்லை. இந்த மரணத்துக்காக இவ்வளவு தூரம்- அதுவும் படிப்பை இடை நிறுத்திவிட்டு எனக்கும் சொல்லாமல்…” இக்கூற்றில் தனது தோழிக்காக, அவள் ஆற்றும் இக்கடன் பொருத்து இவன் கொண்டிருந்த மதிப்பு, இவ் ஆச்சரியத்திலும் மெல்ல இழையோடி கொண்டிருந்ததை நான் அவதானிக்கத் தவறினேனில்லை.
எனது புரிதலில் மரணம் அவளுக்கு ஒரு சாக்கு. அடக்கம் முடிந்த மறுகணமே அவள் தனது சமண குருவின் அரவணைப்பில் இருக்கக்கூடும் என்றே நான் கருதினேன்.
“சாடையாக எனக்கொரு சந்தேகம்- அன்று” என்றான். “எப்படியென்றால், அவர்கள் என்னிடம் இருக்கும் நாயை ஒரு நாளைக்கு மாத்திரம் கொண்டு சென்று, பின் கொண்டு வந்து விட்டுவிடுவதாய்க் கூறியிருந்தார்கள்- நான் ஏற்றுக் கொண்டிருந்தேன்- அப்போதே எனக்கொரு சந்தேகம் தட்டுப்படவே செய்திருந்தது” என்றான்.
அவர்களது மணமுறிவு கூட சாதாரண சுருக்கத்துடன் நடந்தேறிய ஒன்று.
அவள் விமான நிலையத்திலிருந்து, இவனைத் தொலைபேசியில் அழைத்தாள்: “நாம் முறித்துக் கொள்ளலாம்.”
ஆரம்பத்தில் இவனுக்கு இது புரிந்ததாய் இல்லை என்றான். கேட்டிருக்கின்றான்: “நன்கு உணர்ந்துதான் பேசுகின்றாயா” என. “ஆம்” என அவள் பதிலளித்திருக்கின்றாள்.
இவன் இதன் பின் அது இது என்று கூறிவிட்டு பின் தொலைபேசியை வைத்துவிட்டு, சிந்தனையில் ஆழ்ந்திருக்கின்றான்.
“எனக்கு தெரியும் அந்தச் சமணகுரு வரும்போதே. அவன் ஏதேதோ கூறினான். நிறைய ஆவிகளின் நடமாட்டம், இவ்வீட்டில் உண்டு என்றான். அப்போதே நினைத்தேன். இவளும் அடிக்கடி அந்த குருவின் கோயிலுக்குக் கிளம்ப தொடங்கியிருந்தாள்.”
இரண்டொரு மாதங்கள் கழித்து கூறினான்: “யாரோ எனது வீட்டில் இருந்த நாய்களை ஒரு ஆட்டோவில் வந்து கடத்தி சென்று விட்டார்கள்.”
ஆனால் இதன் பின்னர், வருடங்கள் கழிந்தோடிய நிலையிலும் தனது காரை, இவள் கேட்டனுப்பிய போதெல்லாம், மறுப்பு சொல்லாமல் கொடுத்தனுப்பி வைத்தான். இவளது தந்தை இறந்தபோது பண உதவியையும் செய்தான். பிறகு, என்றாவது நாயை கண்டானா, என்று கேட்டதற்கு, இல்லை என்றான்- ஒரு பெருமூச்சும் விடாமல்.
அந்த வாவி, என்றும் போல் இன்றும் அமைதியாகவே இருந்தது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.