01
பாரதியின் எழுத்துக்களில், மூன்று முரண்களை நாம் அடையாளப்படுத்தலாம்:
ஒன்று, அவனது ஆன்மாவில் (அல்லது சிந்தையில்) தட்டுப்படக்கூடிய முரண். இரண்டாவது, அவனது அரசியலில் காணக்கிட்டும் முரண். மூன்றாவது, அவன் தன் எழுத்தை ஓர் வாகனமாக வடிவமைக்கும்போது அங்கே எழக்கூடிய முரண். இம்முரண்கள் ஒவ்வொன்றும், தனித்தனி உதாரணங்களோடு அவனது வாழ்க்கை நகர்வுகளுக்கு ஏற்ப வாதிக்கப்படுவது விரும்பத்தக்கது. இதன் காரணத்தினாலேயே, இக்கட்டுரைத் தொடரின் முடிவுகளும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட முடியாதவையாகின்றன.
இதனால், பாரதியைக் கற்கும் இத்தகையவொரு செயற்பாட்டில், அவனது வளர்ச்சிக்கேற்ப, இக்கட்டுரைத் தொடரின் இறுதி முடிவுகள், மாற்றமுறலாம் என்பதனை ஆரம்பத்திலேயே கூறிவைக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
02
பாரதி என்ற இளைஞன், தன் 24ஆம் வயதிலேயே, மனித வாழ்வு பொறுத்தும், மரணம் பொறுத்தும், சிந்தித்துத் தெளிய முற்பட்டிருப்பது குறிக்கத்தக்கதாகின்றது. இதன்போது, இவ் இளைஞன் கூறுவான்: “உலக வாழ்க்கை மிகவும் நம்பத்தகாததாக இருக்கின்றது. எந்த நிமிசத்திலே மரணம் சம்பவிக்குமோ அல்லது எந்த நிமிசத்திலே நீக்க முடியாத நோய் வந்து சேருமோ (என்பதனை) நம்மால் நிச்சயித்துக் கூற இடமில்லை… பெரும்பாலர் துன்பக்கடலில் மிதந்து கொண்டே செல்லுகிறார்கள்… எத்தனைப் புயற் காற்றுகள்! எத்தனைச் சுழிகள்! எத்தனைப் பாறைகள்! நடுவே… சில சில இன்பத் தீவுகள்… மறுபடியும் அலைகள், சுழிகள், பாறைகள், புயற் காற்றுகள்… மிக மிகச் சில ஆறுதல்கள்…” (பக்கம் -235, ஜுலை 1906 : சக்கரவர்த்தி)
தனது, 24 வயதில் வாழ்வை ஒரு சுற்று சுற்றிப் பார்க்கும் இவ் இளைஞன், வாழ்வின் சாரத்தைக் கணிக்கத் தெண்டிப்பது தெரிகின்றது. இதன்போது, ஒருபுறம் வாழ்வினையும் மறுபுறம் சமூகத்தினையும், தன்னிலிருந்து மெதுவாக விடிவித்தவாறே, இக்கேள்விகளை ஒப்பீட்டளவில் அந்நியப்படுத்தி மேற்படி அம்சங்களைத் தனித்தனியாகக் கையாளும் இவனது பக்குவத்தை, அதிலும், இவ் இளவயதில் இவன் வளர்த்துக்கொள்ள ஆரம்பிப்பது தெரிகிறது.
வாழ்வு குறித்த இவனது கூற்றான “ஆறுதல்கள்” அல்லது “சில சில இன்பத் தீவுகள்” குறித்து மேலும் கூறுகின்றான்: “அவற்றுள்ளே காதலும் ஒன்றாகும். மறுநாள் காலையிலே, தூக்குண்டு சாகப்போகிற மனிதன், இன்று மாலை சிறைக் கதவிற்கு வெளியே தனது ஆசை காதலி வந்து நிற்கக் காண்பானாயின், கம்பிகள் மூலமாக அவளுடன் முத்தமிடுமொரு கணம் மட்டும், தனது துன்ப நிலையெல்லாம் மறந்து பரவசமாகி விடுகின்றான்…” (பக்கம் 235 : ஜுலை 1906)
காதலை போற்றும் வரிகள் இவை.
கார்கியும், கிட்டத்தட்ட, தனது “ஒரே முத்தம்” என்ற சிறுகதையில் ஓர் ஆன்ம முத்தத்தின் சாரத்தை எடுத்துரைப்பார். உலக சுமையைச் சுமப்பதற்கு இரண்டு ஆத்மாக்கள் அல்லது ஜீவன்கள் ஒன்றிணைவது என்பது ஒரு புறமிருக்க, இவ் உறவானது சிறப்பான, விதிவிலக்கான ஓர் உறவு என்ற ரீதியிலும் முக்கியத்துவப்படவே செய்கின்றது.
மேற்படி பந்தியில் முக்கியப்படும் விடயங்கள் இரண்டு. ஒன்று, “வாழ்க்கையின் சாரம்” பொறுத்த இவ் இளைஞனின் பார்வை. மற்றது, “சிறை” பொறுத்த இவ் இளைஞனின் பிரஸ்தாபிப்பு. அதாவது “மரணம்” என்பதனையும் “காதல்” என்பதனையும் ஒரு கணம் நாம் மறப்போமெனில் “சிறை” என்பது குறித்த சொல்லாடல் அவனது ஆழ்மனதில் கிடக்கக்கூடும் என்றாகின்றது. அல்லது அவன் தனது முழு பிரக்ஞையுடனேயே “சிறை” என்ற வார்த்தையைத் தேர்ந்து எழுதியிருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் “காதலைப்” பற்றி கதைக்க வருமிடத்து “சிறையைப்” பற்றிய பிரஸ்தாபம் ஏன் என்பது கேள்வியாகின்றது.
காரணம், இவ்வியாசத்தினைப் பாரதி எழுதும் போது (1906 ஜுலை) சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான, அந்தமான் செலூலர் ஜெயில் கட்டி முடிக்கப்பட்டதாகின்றது (1896-1906). இக்காலப்பகுதியில், பல்வேறு இந்திய தீவிரவாத இளைஞர்கள், சுதந்திரப் போராட்டம் என்ற யாகத்தீயில் குதித்து சங்கமிக்கச் சம்மதம் கொள்கிறார்கள். வேறு வார்த்தையில் கூறினால், இந்திய சுதந்திரப் போர், தன் தீ சுவாலையை வீசி எரிய ஆரம்பித்துள்ள இவ்வேளையில், “காதலைப்” பற்றி கதைக்கவரும் இவ் இளைஞன், அத்தீயிலிருந்து அந்நியப்படாமல், அதன் முளைகளை, தன் எழுத்துக்களில் தேக்கித் தர முற்படுகின்றான் - பிரக்ஞையுடனோ பிரக்ஞையற்றோ. வேறு வார்த்தையில் கூறுவதானால் “சிறை” பொறுத்த அவனது பிம்பம், அவன் அறியாமலேயே அவனது மனக் கதவைத் தட்டுவதாகவும் இருக்கலாம்.
வாழ்வின் சுழிகளுக்கு மத்தியில் “காதல்” என்ற இந்த இன்பத்தீவின் இருப்பைக் காண்கின்ற இவ் இளைஞனின் பார்வை, இப்படியாக தன் வாழ்நாள் முழுவதும் அரசியலுடன் பின்னிப்பிணைவது, இவனது இயல்பாகின்றது.
செலூலர் ஜெயிலின் கட்டமைப்பானது, அன்றைய ஆங்கிலேயரின் ஆட்சி முறைமையை, விபரிக்கும் ஓர் உதாரணமாகின்றது.
மிக மிக நுணுக்கமாகத் திட்டமிட்ட ரீதியில் ஆங்கிலேயரினால் கட்டப்படும் இந்த ஜெயிலின் ஒவ்வொரு அம்சமும் முன்கூட்டி யோசிக்கப்பட்டதே. (பொதுவில், ஆதிக்கச் சக்திகளின் ஒவ்வொரு நகர்வுகளுமே நுண் அரசியல் திட்டங்களுடன், முன்கூட்டி ஆழ சிந்திக்கப்பட்டு அமுல்படுத்தப்படுவது என்பதனைக் கூறியே ஆகவேண்டும்.)
குறித்த செலூலர் ஜெயிலில், தூக்கு மேடைகளுக்கு எதிர்த்தாற்போல் அமைந்திருக்கக்கூடிய கைதிகளுக்கான சமையலறையானது இரு பிரிவுகளைக் கொண்டதாக விரிகின்றது. ஒன்று, இந்துக்களுக்கான உணவைத் தயாரிக்கும் சமையல் பகுதி. மற்றது, இஸ்லாமியரின் உணவினைத் தயாரிக்கும் மற்றொரு பகுதி.
இவ்விதம் இருவேறு மத குழுக்களுக்கிடையே, நிலவக்கூடிய வேறுபாடுகளை, தூபமிட்டு வளர்க்கும் இச்செய்முறையை, சிறையிலும், ஆங்கிலேயர் பின்பற்றுகின்றனர். (மலையகத்தில், பெருந்தோட்ட மக்கள் குடியேற்றப்பட்ட வேளை, அவர்களின் வாழ்விடம் (லயன்கள்) சாதி ரீதியாகவே ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டதென்ற உண்மையையும் இப்பின்னணியில் மனம் கொள்ளத்தக்கது.)
ஆக, தூக்கு மேடை, உணவு தயாரிக்குமிடம், சுதந்திரப் போர்க் கைதிகள் இவற்றுடன் செக்கு இழுப்பதை நிர்ப்பந்திக்கும் சாட்டை அடிகள் - இவற்றையும் சேர்த்துக் கொண்டால், ஆங்கிலேய அரசாட்சியின் நுணுக்க விபரங்களை அறியலாம் என்றாகின்றது. இச்சூழலிலேயே, 1905 பெப்ரவரியில், வங்கதேசம் பிரிபடுவதற்கான ஆலோசனையும் ஆங்கிலேயரால் முன்வைக்கப்படுகின்றது. இஸ்லாமிய மாகாணம், இந்து மாகாணம் என்ற மத அடிப்படையில் பிரிபடும் இவ்வங்க மாகாணம், இப்பிரிபடலூடாக இந்திய அரசியலை ஒட்டுமொத்தமாக மாற்றுவதாக இருக்குமென, ஆங்கிலேயரால் திட்டமிட்டு, மிக நுணுக்கமாக அரங்கேற்றப்படுகின்றது.
இந்நச்சுணர்வு (பிரித்தாளும் தந்திரம்) விதைக்கப்படுமாயின், முளைவிட தொடங்கியிருக்கும் தேசிய உணர்வினை இது முற்றாகச் சிதைத்து அப்புறப்படுத்தி விடக்கூடும் என்று ஆங்கிலேயரால் நம்பப்படுகின்றது. (இன்றுவரை, ஆதிக்கச் சக்திகள், இப்படியான பிரித்தாளும் தந்திரத்தைக் கைவிட்டாரில்லை என்பது வேறு விடயம்.)
ஆனால் மகா கலைஞர்கள், இவ் அபாயங்களை ஊடுருவி உள்வாங்குபவர்கள். இவற்றுக்கு எதிராக எதிர் வினையாற்றுவதும் நடந்தேறாமல் இல்லை. உதாரணமாக, கார்கியின் எழுத்துக்களில், வளர்ந்து வரும் ரஷ்ய புரட்சியைத் தடம்புரள செய்வதற்காக, யூத எதிர்ப்பு செயற்பாடுகளை நுணுக்கமாகக் கையாளும் ரஷ்ய ஜார், யூதருக்கு எதிரான இனவாதத்தை வீதிகளில் வீசி எறியும்போது, அதனைக் கார்கி போன்ற மகா கலைஞர்கள் சடுதியாக உள்வாங்கி எதிர்வினையாற்றத் தவறவில்லை என்பதைக் கூறியாக வேண்டும்.
இதனைப் போலவே பாரதி எனும் இவ் இளைஞனின் எழுத்துக்களும் இவ் அபாயங்களை முன்கூட்டியே எச்சரித்து சுட்டுவதாக உள்ளது.
ஜுலை 1906 இல், Lord Curzon இன் உரை குறித்துப் பாரதி எழுதும் வியாசமானது இவ்வகையில் ஆங்கிலேய அணுகுமுறை குறித்த எச்சரிக்கையை விடுப்பதாக உள்ளது.
ஒக்ஸ்போர்ட்டில் கல்வி கற்றவரும், பின்நாட்களில், ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டவருமான, அரச குடும்பத்தைச் சேர்ந்த இந்தியாவின் வைஸ்ராய் Lord Curzon தனது வங்கதேச திட்டத்தை முன் வைத்ததன் பின்னர், கல்கத்தா பல்கலைகழகத்து பட்டமளிப்பு விழாவில், இந்து மதத் துவேசிப்பை விதைத்து புதிய அரசியலை, ஆழமாகக் களமிறக்குவதைக் காணலாம்.
பதிப்பாசிரியர் சீனி. விசுவநாதன் அவர்கள் பின்வருமாறு கூறுவார்: “1905 ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி லார்ட் கார்சன், கல்கத்தா சர்வ கலாசாலை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு இந்தியர்களை மிகவும் தூசணை செய்து வரையறையின்றி திட்டியும், அவமானப்படுத்தியும், பேசினார்.” (பக்கம் 259)
பாரதி எழுதுவான்: “கல்கத்தா யுனிவர்ஸிட்டியில் பட்டம் பெறும் இவர்களின் முன்பு லார்ட் கார்சன் செய்த உபந்நியாசத்தில் ஹிந்துக்களைப் பற்றியும் அவர்களது புராதன கிரந்தங்களைப் பற்றியும் கூறிய பழிச்சொல் நம்மவர்கள் மனதிலிருந்து ஒரு பொழுதும் நீங்க மாட்டாது…” (பக்கம் 249)
“பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் உத்தியோகம் பார்ப்போன்… நீசனாய் இருக்க வேன்டுமென்று (இவர்) நிச்சயித்து கொண்டிருக்கின்றார்…” (பக்கம் 250)
“(அதாவது) வெளியில் சொல்வதற்கு ஒரு அபிப்பிராயமும், மனதுக்குள்ளே மற்ற அபிப்பிராயமும் வைத்துக் கொண்டிருக்கின்றார். (லார்ட் கார்சன்)”
“இப்படி கொள்கை வைத்திருந்த இந்த மனிதன் (லார்ட் கார்சன்) இஷ்டப்படி ஆளும்படியாய், முப்பது கோடி ஜனங்கள் இவருக்கு கீழே வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதை நினைக்கும் பொழுதே மனம் பதறுகின்றது.” (பக்கம் 250)
இவ்வரிகளில் இருந்து தெரிய வருவது, 1905 இல், ஆங்கிலேய ஆட்சியாளர்கள், ஒரு திட்டமிட்ட ரீதியில், செலூலர் ஜெயிலைக் கட்டிவைப்பது மாத்திரமல்ல, வங்கதேசத்து மாகாணத்தை மத அடிப்படையில் பிரித்து வைப்பது மாத்திரமல்ல, ஆனால், வளர்ந்து வரும் ஒரு தேசிய அரசியலின் அடித்தளத்தில், இந்து மதத்தை அங்கே இரகசியமாக புதைத்து விட எத்தணிப்பதே, இவர்களின் திட்டமாகின்றதென்பதே முக்கிய விடயமாகின்றது.
இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டு வளரக்கூடிய ஒரு தேசியத்தில் இஸ்லாமியரோ அல்லது அவர்களை ஒத்த ஏனைய மதத்தினரோ அன்றி ஏனைய சிறுபான்மை இனங்களோ இணைவது சாத்தியமற்றதாகி விடுகின்றது. வேறு வார்த்தையில் கூறுவோமானால் இப்படி பண்டைய இந்திய மரபு வழியிலிருந்து கட்டுவிக்கப்படும் தேசியமானது, இறுதியில், பாகிஸ்தான் என்ற தேசம் உருவாவதற்கும் வழி வகுப்பதாய் உள்ளதென்பதும் முக்கிய விடயம் ஆகும். ஆனால், இப்படிப்பட்ட ஒரு பின்னடைந்த அரசியலைக் கட்டுவிப்பதென்பது பிரிட்டிஷாரின் வழமையான பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு பகுதியே என்பது கவனிக்கத்தக்கது.
லார்ட் கார்சனின் பேச்சுக்கு, எதிர் வினையாற்றும் பாரதி இச்சூழ்ச்சிகளைத் தன் இளவயதில் கண்டுணர்கின்றானா அல்லது அதற்கு வெறுமனே பலியாகி போய்விடுகின்றானா என்பது கேள்வியாகின்றது.
இக்காரணம் தொட்டே, அவனது “துளசி பாய்” என்ற கதையூடாக (1905 நவம்பர்) அவன் இத்தகைய மத அடிப்படைகளையும், மகமதியாரை (இஸ்லாமியரை) இரண்டாம் தர பிரஜைகளாகக் கருதும் இனவாத போக்கினையும் தீவிரமாக எதிர்த்து எழுதியவனாக இருக்கின்றான்.
இது அவனது அரசியல் புரிதலா அல்லது இயல்பான அவனது இதயத்தின் வெளிப்பாடா என்பது தெரியவில்லை. (சிந்தனையா அன்றி சித்தமா).
ஆனால், இம்முளைகளுடன் பயணிக்கும் அவன், பிரிட்டிஷாரின் பிரம்மாண்டமான அரசை எதிர்கொள்ள வேண்டியவனாகின்றான். இதனை எவ்வாறு அவன் சாதிக்க முனைகின்றான் என்பது வினாவாகின்றது.
அதாவது, பிரிட்டிஷாரை எதிர்ப்பது என்பது வெறுமனே திலகர் வகைப்பட்ட ஓர் எதிர்ப்புதானா அல்லது அதனையும் தாண்டி பயணிக்கும் ஒன்றா என்பதே வினாவாகின்றது.
03
இவை ஒருபுறமிருக்க, 1906இல், இவ் இளைஞன், மறுபுறத்தே, காங்கிரசையும் எதிர்கொள்ள வேண்டியவன் ஆகின்றான். இதனது மொத்த விளைவு, அவன் கடமையாற்றக்கூடிய “சுதேச மித்திரனிலும்” எதிரொலிக்காமல் இல்லை.
காங்கிரஸ் பொறுத்து அவன் எழுதுவது: “காங்கிரஸ் மகாசபை வருஷம் தோரும் கூடி வருவதால் பயன் ஒன்றும் கிடையாதென்று நாம் சொல்ல வரவில்லை. ஆனால் அதிலிருந்து நாம் எதிர்பார்த்தபடி அத்தனை பயன் கிடைக்கவில்லை. சீர்திருத்த(ம்) சம்பந்தமாக இதுவரை காங்கிரசிடமிருந்து உயர்ந்த நன்மைகள் எதுவும் வந்துவிடவில்லை…” (பக்கம் 245)
“…ரணடே என்ற உத்தம தேசபக்தர் வருஷந்தோரும் கூடும்… காங்கிரஸை ஒரு புண்ணிய சமாஜமென்று கருதி வந்தார். காங்கிரசுக்கு போவது தீர்த்த யாத்திரைக்கு செல்வதற்கு நிகரென்று எண்ணினார்…” (பக்கம் 246)
“…இப்போது மற்றொரு சமுசயம் இருக்கிறது. அதாவது, காங்கிரஸ் விஷயத்தில் இத்தேசத்தார் செலவிடுகின்ற பணத்திற்கும், முயற்சிக்கும் அதிலிருந்து கிடைக்கும் பயன் போதுமானதா என்னும் சமுசயமேயாகும். செலவை குறைக்கும் விஷயத்திலும் காங்கிரஸ் கூட்டத்தார் தம்மால் கூடியவரை பிரயத்தனங்கள் செய்ய வேண்டுமென்றே நமக்கு தோன்றுகிறது.” (பக்கம் 246)
டம்பப் பேச்சையும், செலவையும் குறைத்து உண்மை உணர்வுள்ள கூட்டத்தினரை காங்கிரஸில் சேர்த்தாக வேண்டுமென்று வெறிகொள்ளும் பாரதி, பின்வருமாறும் கூறுகின்றான்.
“ஒரு நாளும் காங்கிரஸின் கெஞ்சுதல்களுக்கு செவி கொடுக்க போகாதவர்களாகிய கவர்மண்டாரை மீட்டும் மீட்டும் கெஞ்சுவதே தொழிலாக வைத்துக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு ஜனங்களின் அறிவு விருத்தி, பயிற்சி என்பவற்றையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்…”(இந்தியா: 07.07.1906: பக்கம் 245)
காங்கிரஸுக்கு எதிராக முன்வைக்கப்படும், பாரதியின் இக்கடுமையான விமர்சனம், எந்தளவில் காங்கிரஸைப் பாதிக்கும் என்பதனை விட “சுதேச மித்திரனில்” அது எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதே கேள்வியாகின்றது. ஏனெனில், “சுதேச மித்திரனின்” ஆசிரியரான ஜீ. சுப்பிரமணிய அய்யரின் அரசியல் நிலைப்பாடு யாதென்றால் அவர் காங்கிரஸின் மிதவாத அரசியலைச் சார்ந்தவர் என்பதேயாகும்.
ஆனால் பாரதி என்ற இவ் இளைஞனோ திலகர் அரசியலின் தீவிர தன்மைகளை ஆராதிப்பவன் ஆகின்றான். ஜீ.சுப்பிரமணிய அய்யர் அவர்கள் தனது “சுதேச மித்திரனின்” இவ் வாதத்திற்கு எதிரான வாதத்தை அரங்கேற்றியிருக்க தவறினார் இல்லை. இதன் காரணத்தினாலேயோ என்னவோ பாரதி, காங்கிரஸ் தொடர்பிலான இவ் விமர்சன கட்டுரையை “இந்தியாவிலேயே” எழுதுகின்றான். “இந்தியா” பத்திரிக்கையில் அவன் எழுதக்கூடிய முதல் இரு கட்டுரைகளில் இதுவும் ஒன்றாகின்றதென்பது குறிப்பிடத்தக்கது.
சுருக்கமாகக் கூறுவோமானால், ஒன்று காங்கிரஸின் தீவிர அரசியல் பிரிவை இவன் சார்ந்து நிற்பதை இக்கட்டுரை காட்டும் அதேவேளை “சுதேச மித்திரனை” விட்டு நீங்கி இந்தியாவில் இவன் இணைவதற்கான அடிப்படைகள் உருவாகுவதையும் மேற்படி கட்டுரை எதிரொலிப்பதாகவே இருக்கின்றது.
04
இதேவேளை “டெலிகிராப்” எனும் பத்திரிக்கையானது, காங்கிரஸ் பெருந்தொகை பணத்தைச் செலவிடுவதை நிறுத்திவிட்டு, பஞ்ச நிவர்த்தி பொருட்டு, செலவு செய்தல் நன்று என உபதேசம் செய்கின்றது. (பக்கம் 245)
இது குறித்து பாரதி கூறுகின்றான்: “டெலிகிராப்” பத்திரிக்கையானது காங்கிரஸில் நம்பிக்கை இல்லாததைப் போல நடித்துக் கொண்ட போதிலும் உண்மையில் அதன் அபிப்பிராயம் அவ்வாறு இருக்க மாட்டாதென்றே நம்புகின்றோம்…
ஊடகங்கள் தொடர்பாக பாரதி கொள்ளும் இச்சந்தேகக்கண், குறிப்பிடத்தக்கதாகின்றது. ஈரான், ஷாவினது அன்றைய கூற்று: “அமெரிக்க மேலாதிக்கமானது பல்வேறு விடயங்களைக் கட்டுப்படுத்துகின்றது. ஊடகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள்- இப்படி இவை பல்தரப்பட்டவையாகின்றன. ஊடகங்கள், அவர்களின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கேற்ப அச்சொட்டாக நடந்து கொள்வதில் அக்கறை செலுத்துகின்றன. நியூயோர்க் டைம்ஸ்: இது, இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதாய் இருக்கின்றது. இஸ்ரேலியருக்கும் அரபு தேசங்களுக்குமிடையிலான உறவை கட்டுவிப்பதும் அவற்றைச் சீர் செய்து தருவதும் இப்பத்திரிக்கைகளே. வொஷிங்டன் பத்திரிக்கையின் கதையும் இதுவேதான்”
பல வருடங்களின் முன் ஆற்றியிருக்கக்கூடிய “ஷாவின்” இந்தக் கூற்று, பாரதியின் நாட்களில் இருந்தும் தொடர்வதாய் தெரிகின்றது. ஆதிக்கச் சக்திகளின் அடிப்படை நலன்களை எடுத்தேந்தும் இவ் ஊடகங்கள், அவ்வவ் காலத்திற்குரிய, தகுந்த சூழ்நிலைகளை தோற்றுவிக்கின்றன அல்லது திரிக்கின்றன அல்லது மயக்கங்களை உண்டு பண்ணுகின்றன. இவ்வூடாட்டமானது ஆழ வேரோடுவது.
இதனையே பாரதி, தன் இளமைக்காலத்தில் கண்டுகொள்கின்றான். பின் அதனை, எதிர்க்கத் துணிவதனையும் மேற்படி வரிகள் காட்டுவதாய் அமைகின்றன. “டெலிகிராப்” குறித்த “இன்றைய” ஒரு பதிவானது, எவ்வாறு இப்பத்திரிக்கை, இந்திய விடுதலை போருக்கு எதிராக அன்று செயற்பட்டிருந்தது என்பதனைப் பதிவிடுவதாக உள்ளது.
சுருக்கமாகக் கூறினால், இவ் இளைஞன், சமரசமற்ற ஒரு முறையில் அந்நிய ஊடகங்களுக்கு எதிராகச் செயற்படுபவனாகின்றான்… சமரசமற்ற இவனது இப்பண்பு, அதிக விலையினைக் கோர கூடியது என்பது தெளிவு. பத்திரிகைகளின் மகுடித்தனம் பொறுத்து இவன் கூறுவது: ஜனங்களுக்குள்ளே மனோவிரோதத்தை ஏற்படுத்துதல்… நமக்கு வெறுப்புத்தருகின்றது. (இந்தியா: 07.07.1906: பக்கம் 256.)
Punch போன்ற அங்கத சஞ்சிதைகள் முதல் உலகம் ஈராக தோன்றக்கூடிய முக்கிய பத்திரிகைகள் அனைத்தையும் அலசி ஆராயும் இவ் இளைஞன், ஊடகங்கள் பொறுத்து தனது சமரசமற்ற தன்மையை வியக்கும் அளவில் வளர்த்துக் கொள்கின்றான்.
இதே ஊடகங்களின் வாயிலாக (ராய்ட்டர்) ஜூலை 1906 இல் அவன் எழுதுகின்றான்: …''ருஷ்யாவில் இராஜாங்க புரட்சிக்குரிய சின்னங்கள் ஏற்பட்டு வருகின்றன… சில இடங்களிலே நிலச்சேனையுடன், சேனை வேலைக்காரர்களும் (விவசாயிகள்) இராணுவமும் கலகம் தொடங்கி தொழிலாளிகளின் கூட்டமும் சேர்ந்து விடுகின்றன…” (பாரதி தரிசனம்: இந்தியா: 30.07.1906: தொகுப்பு: இளசை மணியன்: பக்கம் 300)
ஆக, அன்றைய ரஷ்யாவில் விவசாயிகள், இராணுவம், தொழிலாளர்கள் ஆகிய மூன்று சக்திகளும் ஒன்றிணைந்து ரஷ்ய புரட்சியை அரங்கேற்றுவதை இப்படியாக இவன் இந்திய மக்களுக்கு அறிமுகம் வைக்கின்றான்.
மொத்தத்தில் காதல், சிறை, இந்து மத தூஸிப்பு, காங்கிரஸிற்கு எதிரான விமர்சனங்கள், அதனை மக்கள் சார்பினதாய் மாற்றும் இவனது ஆவல், பின் “சுதேச மித்திரனை” விட்டு நீங்குதலுக்கான அடியெடுப்பு, ஊடகங்களின் பொய்மை - இவற்றுடன் ரஷ்ய புரட்சிக்கான அடித்தளம் எனப் பரிணமிக்கும் இவனது விசாலப் பார்வை, இவனது 24ஆம் வயதில் நடந்தேறுகின்றது என்பதே, குறிப்பிடத்தக்கதாகின்றது.
(வணக்கத்துடன் : கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்- தொகுப்பு 1 : சீனி. விசுவநாதன்- பக்கம்: 278 வரை)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பாரதியார் ஓவியம்: நன்றி இந்து தமிழ்