1
ஆன்ம உணர்த்திறன்
மனிதனது இதய தாபங்கள் அனைதையும் சரியாக உள்வாங்கி, அவற்றை நல்ல முறையில் எதிரொலிக்கக் கூடியதாக, தன் ஆன்மாவை நுண் உணர்வுமிக்கதாய் மாற்றி அமைத்துக்கொள்ள உண்மைக் கலைஞன் வேண்டப்படுகின்றான். ஆனால், இத்தகைய ஆன்மாவை வடிவமைப்பதென்பதும், அதனைத் தக்கவைத்துக்கொள்வது என்பதும் கடின செய்கையே.
மனுக்குலத்தின் மீது அவன் கொள்ளும் பேரன்பு சமூகநீதிக் கோரி, அவனைச் சமரசம் இன்றி தேடலுக்கு உட்படுத்தி, அவனுக்கு ஆன்மப் பக்குவத்தை அளிக்கக்கூடும். இருந்தும் இந்நகர்வில், அவனுக்கு ஏற்படக்கூடிய இன்னல்கள் - அவன் தரக்கூடிய விலை, அவன் எதிர்க்கொள்ளவேண்டிய துன்பங்கள் - இவையனைத்தும் உடன் நிகழ்வதே ஆகும்.
சுருங்கச் சொன்னால், இப்பயணிப்பின் போது அவன் சுமக்க முனையும் சுமையின் எடை அசாதாரணமானது எனக் கூறலாம். இத்தகைய ஓர் சமன்பாட்டில்தான், பாரதி எனும் இவ் இருபத்து நான்கு வயது இளைஞன், ஏற்கனவே வகுத்தளிக்கப்பட்ட, கறாரான திட்டங்கள் ஏதுமின்றி இச்சுமையைத் தூக்க சம்மதிக்கின்றான்.
இக்காலப்பகுதியில், இவ்இளைஞன், தன் ஆன்மாவைக் கட்டியெழுப்பும் விதம் எமது கவனத்துக்குரியது. பல் கூறுகளாய் அமையக்கூடிய அவனது தேடல்களின், ஒரு கூறு கடவுள் சம்பந்தமானது.
ஒருசந்தர்ப்பத்தில் மகா கலைஞன், மக்சிம் கார்க்கி கூறுவான்: “உனது கடவுள் யார் என்ற கேள்விக்கு நேர்மைமிக்க எந்த மனிதனும் விடையளிப்பது சற்றுச் சிரமமானதே” (1898).
பாரதி பொருத்து, ஆழ ஆய்வு செய்யும், பேராசிரியர் கைலாசபதி கூறுவார் : “இவன் ஒரு சாக்த பக்தன்” என.
ஆக, 24 வயது பாரதியின் கடவுள் யார் என்ற கேள்வி ஒரு பரபரப்பான கேள்வியாக உருக்கொள்ளக்கூடியதுதான். தன் ஆன்மாவைக் கட்டுவிக்க அல்லது நிலை நிறுத்த அல்லது தாங்கிக்கொள்ள இவன் எதை எதைக் கருத்தில் கொள்கின்றான் - தன் கடவுளை எப்படி இவன் தேடிக்கொள்கின்றான் என்பதெல்லாம் சிந்தைக்குரிய கேள்விகளே ஆகும். (கடவுளும் மதமும் வேறு வேறு எனில்).
2
விவேகானந்தரும் மத நிமிர்வும்
விவேகானந்தரின் ஆளுமைப்பொறுத்து இவ் இருபத்து நான்கு வயது இளைஞனின் வியாசமொன்றின் ஆரம்பப் பகுதியில், பின்வருமாறு கூறப்படுகின்றது : “தன்நலம் பாராட்டல், ஆசை, அச்சம் எனும் குணங்கள் செறிந்த உலக மாயை என்ற பாறைக்குட்பட்டிருக்கும் தேரையாகிய நான்… தெரிந்தமட்டிலேயே விவேகானந்த சுடரின் பெருமையைச் சிறிது பேசத்தொடங்குகின்றேன்…” (பக்கம் 178).
பிற்பட்ட காலத்தில், “உலக மாயை” என்ற கருத்தோட்டம் குறித்து தத்துவ அடிப்படையில் தன் வீச்சை இவன் எடுத்தியம்பும் போது, மேற்பட்ட கருத்தோட்டத்தை இவன் எதிர்கொள்ளும் விதமும் அதற்கெதிராய் செயல்பட்ட பண்பும் வேறுபட்டது.
இருந்தும், விவேகானந்தரின் வாழ்வு – பார்வை பொருத்த தகவல்களை, இக்கட்டுரையில் பாரதி என்ற இவ்இளைஞன் கூறிநிற்கும் போது, இவ்இளைஞனின் வாழ்வுப்பொறுத்த எண்ணப்பாடுகளும் பார்வைகளும் கூடவே வெளிப்படுவதாய் உள்ளன - இத்தகவல்கள் போன்றே!
“18ம் வயதில் நரேந்திரர் (விவேகானந்தர்) பி.ஏ பரீட்சை தேறினார். 12 வயதான உடனே நரேந்திரர் கடவுளர் அநேகர் என்ற கொள்கையை நம்பாமல் நிறுத்திவிட்டார். பிரம்ம ஸமாஜத்தார் ஈசனைப்பற்றி கொண்டிருக்கும் கோட்பாடே தகுதியானதென்று நம்பத்தொடங்கினார்… ஆனால் சிறிதுக்காலத்திற்கு அப்பால் இவருக்கு பிரம்மஸமாஜத்திலேயே இருந்த பற்று நீங்கிவிட்டது” (பக்கம் - 181).
“ஸ்ர்வாந்தர்யாமியாகிய பிரமத்தைப் பிரத்தியக்ஷ்மாக அனுபவிக்க வேண்டும் என்ற ஆவல் நரேந்திரருக்கு ஏற்பட்டது. பிரம ஸமாஜத்தார் ஏதோ சில ஐதீகங்களை வைத்துக்கொண்டு பழைய பிரார்த்தனைகளையும் ஜெபங்களையும் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பது ஸ்வாமிக்கு இசையவில்லை”. “நேரே பிரத்தியக்ஷ்மாக அனுபவிக்கப்படாத பிரமத்தினிடத்திலே பக்தி வைப்ப தெங்ஙனம்? எனக்குத் தெரியாத ஒரு பொருளின் மீது நான் எவ்வாறு அன்பு செலுத்த வல்லேன்? இந்த சமயத்தில் “ஸ்வாமிகள் நிரீசுரவாதியாகி விட்டனர்” (அழுத்தம் எம்முடையது).
“இந்த ஜகத்திலே ‘பிரமத்தை யொழிய வேறொன்றுமில்லை’ யென்ற பெருங்கொள்கையை உலகத்தாருக்கு எடுத்துப்போதனை செய்யவந்த இம்மஹான், இந்த ஜகத்திலே ‘தெய்வமே கிடையாது’ என்ற கொள்கையைச் சிறிது காலம் வைத்திருந்தார். ஆனால், இக்கொள்கை சொற்ப காலத்திற்கப்பால் நீங்கிப்போய்விட்டது.” (பக்கம் 182).
மேற்படி கூற்றுக்களின் முதல் முக்கியத்துவம், இவ் இளைஞன் தான் கூறவரும் விடயம் சார்ந்த தகவல்களை, முழுமையாகத் திரட்டி, ஒன்று சேர்த்து, அவற்றைக் கற்று தேரும் பண்பு கொண்டவனாக இருக்கின்றான் என்பது நாம் உடனேயே அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
மற்றும், “பெரும் கொள்கை” என இவன் “பிரமத்தை” வர்ணிக்க முற்படுவது இவன் அன்று கொண்டிருந்திருக்கக்கூடிய நம்பிக்கையை எடுத்தியம்புவதாக உள்ளது. (பல கடவுளாரின் இருப்புக்களை நிராகரித்து).
“இந்த ஜகத்தில் பிரமத்தை ஒழிய வேறொன்றுமில்லை என்ற பெரும் கொள்கையை உலகத்தாருக்குப் போதனை செய்ய வந்த இம்மகான்…” என இவ்இளைஞன் கூறும் போது ஏனைய மதக்கொள்கைகளை இவ்இளவயதிலேயே கற்று தேர்ந்து, தனது ஆழ்ந்த பரிசீலனைக்கு எடுத்துள்ளான் இவன் என்பது தெளிவாகின்றது.
விவேகானந்தரின், வாழ்க்கை தரிசனம் குறித்து பின்வருமாறு கூறுகின்றான், இவ்இளைஞன்: “பிரம கள்ளுண்டு… பல இடங்களில் யாத்திரை புரிந்து… இமயமலைக்கு சென்று… வாழ்ந்து… இதற்கப்பால் லேகோபாகாரம் செய்ய வேண்டும் எனத் திருவருள் இவருக்கு உண்டாகிவிட்டது… இந்திய தேசத்தில் ஆண்களெல்லாம்… சரீர பலம், மனோ பலம், ஞான பலம் என்ற மூன்றுமல்லாது அற்ப வாழ்க்கையை வாழ்கின்றார்கள்… அதன் பேரில் இமயமலை சாரலில் இருந்து இந்த மகாரிஷி இறங்கி வந்து… பல இடங்களில் சுற்றிவிட்டு… சென்னை வந்து சேர்ந்தார்…”
அதாவது பிரம கள்ளுண்டு, இமயமலை சாரல்களில் தவம் புரிந்த இம்மகாரிஷியானவர், இப்படி இறங்கிவந்து நலிந்துப்போய்கிடக்கும் இந்திய மக்களை நிமிர்த்தும் பொருட்டு சென்னைக்கு வந்து சேர்வது இவ்இளைஞனுக்கு ஏற்புடையதாகின்றது.
இங்கே, இரு விடயங்கள் தெளிவாகின்றன :
ஒன்று, இவ்இளைஞன் பயணித்திருக்கக் கூடிய பல்வேறு மதமார்க்கங்கள் - நம்பிக்கைகள் (பிரமசமாஜம் உட்பட). பின் அந்த பழைய பிரார்த்தனைகளையும் ஜெபங்களையும் வெறுமனே மனனம் செய்து, சொல்வதென்பது உபயோகமற்றது என உணர்ந்து அவன் பிரமத்தை வந்துசேரும் முடிவு.
இது, அவன், அக்காலப்பகுதியில், தன் கடவுளை எங்கெங்கு தேடி அலைகின்றான் எனக் கூறும் அதேவேளை, அது மலையடிவாரத்தில் தனித்து தவங்களில் ஈடுபடுவதாய் இருக்கக் கூடாது – அது இறங்கிவந்து மக்களுடன் இரண்டர ஒன்று கலந்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடிப்பே இவ்இளைஞனில் முனைப்பாகத் தட்டுப்படுவதாகத் தென்படுகின்றது.
வேறுவார்த்தையில் கூறினால், இக்காலப்பகுதியில், இவ்இளைஞனின் கடவுள் யார் என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, இவனது விவேகானந்தர் குறித்த வியாசம் அமைந்து போகின்றது.
அதாவது, விவேகானந்தர்பால் தான் ஈர்க்கப்படும் காரணங்களாக இரண்டைக் கூறத்துணிகின்றான் இவ்இளைஞன். ஒன்று, பல்கடவுள்கள் இருப்பதை நிராகரித்து, “பிரமம்” என்பதில் வாசம் செய்யும் இவனது அவா. இரண்டாவது, அந்த பிரமமானது, மக்களுடன் வந்து இணைந்து சேவையாற்ற வேண்டும் என இவன் சிந்தித்து தெளியும் பண்பு.
இவை இரண்டும், இவ்இளைஞனின், அதாவது, இவ்இளைஞனின், இருபத்து மூன்று-இருபத்து நான்கு வயது காலப்பகுதியிலேயே நடந்தேறுவது விசேடமானது.
ஆனால், விவேகானந்தரின் மேற்படி “அறிமுகத்துக்கு” முன்னரே, இவ்இளைஞனின், மதம் சம்பந்தமான எண்ணக்கருக்கள், ஏற்கனவே முளைவிட்டிருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்திருக்கக்கூடும், என்பதை நாம் அனுமானிக்கலாம்.
தனது விவேகானந்தர் கட்டுரைக்கு முன்பாக இவ்இளைஞன் மலையாள நம்பூதிரிகளுக்கிடையிலான சீர்திருத்தம் குறித்து பின்வருமாறு எழுதுகின்றான் : “ஞானமற்ற, முரட்டுத்தனமான, மூடப்பக்தி பிடிவாதத்திற்கு நம்பூதிரி கூட்டத்தினரே முக்கிய பிரதிநிதிகளாக இருக்கின்றார்கள்” (பெப்ரவரி 1906 : பக்கம் 171).
(நம்பூதிரிகளில் ஒருவரான கேரளா மாக்சியவாதியாக அறியப்படும், நம்பூதிரிபாத்தின் பாத்திரமும், இவ்வகையில், ஒப்புநோக்கத்தக்கது என்பது வேறு விடயம்).
இங்கே, இவ் இளைஞனின் மதம் பொறுத்த தேடலுடன், சமூகத்தில், மதம் பொறுத்த தேடலுக்கான கீற்றும் தென்படுகின்றது.
பாரதி, என்ற இவ் இளைஞன், “ஞானமற்ற” “முரட்டுத்தனமான” “மூடப்பக்தி” என்று சொல்வதற்கூடு எதனை இனங்கண்டு கொள்கின்றான் என்பது கேள்வியாகின்றது.
மார்க்ஸ் குறிப்பிட்ட, அதே களிம்பு தட்டிப்போன, இந்து மதத்தின் சாரத்தையா இவன் குறிக்கத் துணிகின்றான் என்பது விடயம்.
இமயமலை சாரலில் இருந்து இறங்கிவரும் விவேகானந்தர் கூட மனிதன், ஆண்மை இழந்து, பேடிகளின் கூட்டமாக இருப்பது கண்டு நெஞ்சு வாடுகின்றார். அன்றைய இந்தியாவில், இருந்திருக்கக்கூடிய, மதம்-கலாசாரம்-பண்பாடு என்பன அனைத்துமே முற்றாய் மாற்றியமைக்கப்பட வேண்டிய தேவையை, என அவர் உணர்ந்திருக்கலாம். விவேகானந்தரின் பார்வையில் இக்கலாசாரம்-பண்பாடு-நம்பிக்கை என்பன பிரதியீடு செய்யப்பட்டாக வேண்டும் என அவாவுறுவது வேறுவிடயம். ஆனால், இதன் போது, மதங்களுக்கான புதிய பொருட்கோடல் இங்கு ஆரம்பமாகிறது, என்பதே முக்கிய கருப்பொருளாகின்றது.
இப்பின்னணியில், பாரதி முயன்றது எதனை என்பது கேள்வியாகின்றது. இருவருமே மனிதனை மாத்திரமன்றி, அதனது அடித்தளமாய் அன்று இருந்திருக்கக்கூடிய, மதத்தினையும் நிமிர்த்த முற்படுகின்றார்கள் எனக் கூறுவதே பொருத்தமானது.
3
மாதர் கோரிக்கைகள்
இதனைப் போலவே, மாதர் தொடர்பிலான பாரதியின் சிந்தனையிலும், உக்கிரம் தாண்டவம் ஆடுவதை, இக்காலப்பகுதியில், நாம் காணக்கூடியதாக உள்ளது.
பஞ்சாபியிலுள்ள மாரிப்பூர் என்ற ஊரில், 1905களில் நடந்தேறிய, சதி தகனம் பற்றிய வழக்கு தொடர்பிலான விசாரனைக்குறிப்பை, அவன் மார்ச் 1906ல், சக்கரவர்த்தினியில் எழுதும்போது பின்வருமாறு எழுதுகின்றான் :
“…அவள் முகத்திலே துணி ஒன்றைக் கொண்டு மூடினதின் பேரில் அவளது கழுத்துவரை வரட்டிகளை அடுக்கி, நெருப்பைக் கொளுத்திவிட்டு, அந்நெருப்பிலே மூடபக்தி கொண்ட மகாபாதக மிருக ஜனங்கள், எண்ணெய், நெய் முதலியவற்றைக் கொண்டு சொரிந்தார்கள்… மத்தளங்கள் அடித்தும், ராம் ராம் என்று கூக்குரலிட்டும் அவளது அழுகை குரல் வெளியே கேளாதப்படித் தடுத்துவிட… (அவள்)… சிறிது நேரத்துக்கெல்லாம் சாம்பராகிவிட்டாள்…” (பக்கம் :192).
இவ்வரிகளில், காணக்கிட்டும் “மூடபக்தி கொண்ட மகாபாதக மிருக ஜனங்களும், ராம் ராம்” என அவர்கள் கூக்குரலிடுவதும், அவனது சிந்தனையின் உக்கிரத்தை மாத்திரமல்ல – ஆனால் ராம், ராம் என்ற வார்த்தைப் பிரயோகத்தின் உண்மை வேர்களையும், அவனுக்குக் காட்டுவதாயுள்ளது. வழக்கை மேன் முறையீடு செய்துள்ள பாதகர்கள் குறித்து குமுறுவான் :
“அந்த ஸ்தலத்திற்கு வருமளவும் ஸதி தகனம் நடக்கும் என்பது, தமக்குத் தெரியாதென அப்பிலிலே சொல்கின்றார்கள்…”
“பந்து மிருகங்கள் என்ன பொய் கொண்டு வந்திருக்கின்றனவோ அறியோம்…”
“20 வயது கன்னிகையை ஆவலுடன் கொளுத்தி பாத்துவிட்டு, தமது நீச உயிர்களுக்கு, கஷ்டம் வரும்போது பொய் ஓலமிடுகின்ற இந்த ஈனர்களை கோட்டார் இலேசாக விடமாட்டார்களென்று நம்புகின்றோம்…” (பக்கம்:192).
மாதரின் இந்நிலைக்குறித்து, அக்கினி குழம்பாய், குமுறும் பாரதியை, இவ்இளைஞனில் காண்கின்றோம். ஆனால் அவனது கோபக்குரல் மாத்திரமே இங்கே முக்கியத்துவப்படுவதாயில்லை. அன்றைய இந்தியாவின், இறுகிப்போய்கிடந்த மத நிலைமையினையும், இவ்வரிகள் வெளிக்கொணர்வதாகவே அமைகின்றது. (இதனையே அன்றைய ஆங்கில அமைப்பு, எப்படி தகர்க்கப்போகின்றது என்பது இணைந்த, வேறு விடயம்.)
4
நிவேதிதாவின் சந்திப்பு
1905இன் இறுதியில், நடந்தேறியதாய் கூறப்படும் நிவேதித்தாவின் சந்திப்பு, இவ்இளைஞனின் எழுத்துக்களில் தீவிரம் காட்ட செய்திருக்கக் கூடும் எனவும் நம்பப்படுகின்றது. ஆனால் இத்தகைய ஒரு சந்திப்பு நிகழாதிருப்பினும் கூட, மாதர் பொறுத்து, இவன் இவற்றை எழுதக்கூடியவன்தான் என்பது, இச்சந்திப்புக்கு முன் எழுதப்பட்ட “துளசிபாய்” என்ற கதையின் மூலம் தெளிவுறுத்தப்படுகின்றது. (நவம்பர் 1905). துளசிபாயி கதையும் ‘ஸதி தகனம்’ எனும் விடயத்தை, தொடுவதாயுள்ளது. அங்கே, பெண்ணை - இளம் நங்கையை – ரோஹினி நதிகரையில், மயானத்தில் எரிக்கப்போகின்றார்கள். இதை தடுக்கும் பொருட்டு, இதற்காகக் குழுமியிருக்கும் ஒரு ராஜபுத்திர கூட்டத்தை நெருங்குகிறான், ஒரு, மகமதிய போர் வீரன்.
பாரதி, இம்மகமதிய வீரனுக்கூடு கூறுகிறான் :
“பிராமணர்களை பற்றிய பயம் கிடையாது… கண்டவுடன் ஓடி விடுவார்கள்…”
மேலும், ராஜபுத்திர வீரம் குறித்து, ஏளனத்துடன் கூறுகின்றான் :
“ராஜபுத்திரர்களின்… வீர ரத்தம் பொங்குகிறது… விழிகள் சிவந்தன… மதக் கிரியைகள் நடக்கும் இடத்தில்… ஏனையா… நிற்கின்றீர்..”
“இதற்கு, அக்பரின் ஆட்சி முறைமையில், இத்தகைய ஸதி தகனங்கள் நடைபெறக் கூடாது, தடுக்கப்பட்டு விட்டனவே”
என்ற மகமதிய வீரனின் கூற்றுக்கு, குழுமியிருக்கும் ராஜபுத்திரர்கள் பதிலாகக் கூறுவது :
“நீ யாரடா மகமதியன்.. பாரத பூமிக்கு மிலேச்சனடா அரசன்…”
புரோகித பிராமணர்கள் ஓடிவிடுகின்றார்கள். பெரும் வாள்வெட்டு இடம் பெறுகின்றது. துளசிபாய் காப்பாற்றப்படுகிறாள் - இது துளசிபாய் கதையில் இடம்பெறும் சம்பவங்கள்.
அன்றைய இந்தியாவில் காணப்பட்ட, இவ்வகையான கொடூர ஜனங்களும், அவர்களுக்கு அடித்தளமாய் அமையும், அற்ப சமூக அமைப்பும் இங்கே விவரிக்கப்படுகின்றது என்பதும், இது, ஆங்கிலேய செயற்பாடுகளால் எப்படி தகர்க்கப்படக் கூடியதாக உள்ளது என்பதுமே கேள்வியாகின்றது, இப்புள்ளியிலேயே ஒரு “புதிய வித்து” முகிழ்க்கவும்கூடும் என்றும் கார்ல்மார்க்ஸ் கருதிய கூற்றின் முக்கியத்துவம் வந்து சேர்கின்றது. மதம் பொறுத்தும், மக்கள் பொறுத்தும், விவேகானந்தர் பொறுத்தும், ஸதி தகனம் பொறுத்தும், தன் எழுத்துக்களையும், தன்னையும் அர்பணிக்கத் துணியும், இவ், 24 வயதும் அரும்பாத இளைஞன், யார்? மார்க்ஸ் குறிப்பிட்ட அப்புதிய வித்தின் ஒரு கீற்றா என்பதே இங்கே எழக்கூடிய கேள்வியாகின்றது.
(வணக்கத்துடன் : காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - தொகுப்பு 1 : சீனி. விசுவநாதன் - பக்கங்கள் : 200 வரைக்கும்)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பாரதியார் ஓவியம்: நன்றி இந்து தமிழ்