1
சம்பந்தன் இறந்துவிட்டார். அவரின் மரணத்தை ரணில் மாத்திரம் அல்ல – புலம்பெயர் அரசியலும் தமக்கேற்ற வகையில் பயன்படுத்தி அரசியல் செய்ய துணிவது காணக்கிட்டுவதாய் உள்ளது. ஆனால், இதுவரை காலமும், தமிழ்த்தேசியம் பின்பற்றிய சம்பந்தரின் அரசியலும் இறந்துவிட்டதா? – அல்லது அது புதிய பாதையைத் திறந்துவிட்டுள்ளதா? என்பது தெளிவற்றே காணப்படுகிறது. இதற்கிடையில் அவரது வாரிசான சுமந்திரன், பல்வேறு ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்டு நகர்கின்றார் என்பதிலும் சந்தேகமில்லை.
இச்சூழலில், மிக அண்மையில் வெளிவந்துள்ள சுமந்திரனுக்கு எதிரான விமர்சனங்கள் காரசாரமானதாயும் வன்முறை கலாசாரத்தைத் தூண்டுவதாகவும் எதேச்சதிகார போக்கினை வெளிப்படுத்துவதாகவும் இருக்கின்றன என்பது துயர்தருவது. உதாரணத்திற்கு :
“இத்தகைய தமிழ்த்தேசிய விரோதிகளைத் துரத்தியடிக்காமல், கருவறுக்காமல் தமிழ்த் தேசியத்தை ஒருபோதும் பாதுகாக்க முடியாது....” (திபாகரன் : தமிழ்வின் : 16.06.2024).
ஆட்டங்கான துவங்கியுள்ளதாய் கூறப்படும், தமிழ்த்தேசியத்தினைப் பாதுகாக்கும் வழிமுறை இதுவெனக் கூறப்பட்டாலும், இப்பார்வைச் சற்றே நிதானிக்கக் கூடியது. இதே காலப்பகுதியில் (ஓர் பத்து நாட்கள் இடைவெளியில்) வெளிவந்துள்ள மன்சூரின் அண்மித்த கட்டுரை ஒன்றும் இது பொறுத்தே கதைப்பதாகவுள்ளது. (விடிவெள்ளி : 27.06.2024).
இவ்விரு கட்டுரைகளும் கிட்டத்தட்ட ஒரே விடயத்தையே தம் தம் வழியே, கதைத்திருந்தாலும், இவர்களின் நேர் எதிரான பார்வை நுனித்து நோக்கத்தக்கது.
திபாகரனின் கட்டுரை, ஒருபுறம், தமிழ்த் தேசியத்தைக் காப்பதெனில், “துரத்தியடித்து, கருவறுப்பதையே” தனது, ஆணிவேராகக் கொள்ளும்போது, மன்சூர் இத்தகைய பார்வைகளுக்கு எதிரான ஓர் பார்வையை முன்நிறுத்துவது கவனிக்கத்தக்கதாகின்றது.
தமிழ்ச் சமூகத்தில் அல்லது தமிழ் அரசியலில் “துரத்தியடிப்பது அல்லது கருவறுப்பது” என்பது காலம் காலமாய் இருந்து வந்துள்ள ஒன்றுதான் என்பதனைக் குறித்துக்காட்ட வேண்டிய கடப்பாட்டிலேயே இன்னமும் நாம் நிற்கின்றோம் என்பது வேதனைக்குரியது. காலம் காலமாய்க் கருவறுத்து கருவறுத்து இன்று இந்நிலைக்கு வந்துள்ளோமோ என்ற கேள்வி கசப்பானது என்றாலும், உண்மை உண்மையாகவே நிற்கப்பார்க்கின்றது.
ஜனநாயக மரபுகளை நிராகரித்து சக இயக்கத் தோழர்கள் தொட்டு, அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், அண்மை மணிசங்கர் ஐயர் குறிப்பிடும் ரஜிவின் கொலை என தொடரும் இக்கருவறுக்கும் பண்பாடு, இறுதியில் எதை எம் சமூகத்துக்குக் கொண்டுவந்து சேர்த்துள்ளது என்ற கேள்வி நிதானிக்கத்தக்கது. வேதனை - இவ்வளவும் செய்யப்பட்டது – தமிழ்த் தேசியத்தைத் தக்கவைப்பதற்காகவே என்பதே சற்றுப் பிரச்சனையாகத் தலையெடுக்கச் செய்கின்றது.
குறிப்பாகச் சொல்வதென்றால், எமது எல்லைக்கோடுகளை எங்கே இட்டுக்கொள்வது என்பது குறித்து இதுவரையில் நாம் தெளிவான பிரக்ஞையற்றவர்களாகவே இருப்பதாகப்படுகின்றது. ஏனெனில், சுமந்திரன் போன்றோரின் எண்ணக்கருக்கள் எம்மில் இருந்து வித்தியாசம் பூண்டவையாக இருப்பினும், குறைந்தபட்சம், அவை ஜனநாயக நீரோட்டத்தில் தவிர்க்க முடியாத கூறுகளாகவே இருக்கின்றன.
மறுபுறம், ரணில் விக்ரமசிங்க போன்றோர் நாளும் முன்னெடுத்துவரும் மிக நுணுக்கமான பெருந்தேசியவாதச் செயற்பாடுகளை மிக நுண்ணிப்பாக உள்வாங்கி, தனது புரிதலில் எதிர்வினை ஆற்றிவரும் ஒரு நபரை, எதிரிகள் முகாமுக்குள் முழுவதுமாய்த் தள்ளிவிட்டு, “கருவறுக்காமல்” விடுவதில்லை எனச் சபதம் செய்துக்கொள்வது ஒரு நிதானமான பார்வையைப் பிரதிபலிப்பதாக இல்லை. பொது வேட்பாளரை நிறுத்துவது தென்னிலங்கையை ஆட்டம் காணச் செய்துவிடும் அல்லது இத்தகைய சிந்தனை ஒன்றே எமது தமிழ்த் தேசியத்தைக் கட்டி நிறுத்திவிடும் என்ற எண்ணப்பாட்டுக்கு ஒரு ஜனநாயக அரசியலில் இடம் உண்டு. இதனை ஏற்பதும் விடுவதும் அவரவரின் புரிதல் அல்லது நம்பிக்கை சார்ந்த விடயமாகின்றது.
இதனைப்போலவே, இதற்கு எதிரான அரசியல் சிந்தனை கொள்பவர்களைத் தமிழ் அரசியலும் அரவணைக்கத்தான் வேண்டியுள்ளது. இதனை நிராகரிப்பது எமது அரசியலுக்கோ அன்றில் ஜனநாயக மரபுகளுக்கோ அழகாய் இருக்கப்போவதில்லை என்பது உண்மையாகின்றது.
வேறுவார்த்தையில் கூறினால், இவ்விரு பார்வைகளையும் ஒரு ஜனநாயக மரபு உள்வாங்கும் அதேவேளை, இவற்றில் உள்ள நியாயப்பாடுகளை, நாம் கடந்து வந்திருக்கும் எமது கடந்தகாலப் பின்னணியிலும், இன்று நாம் முகம்கொடுக்க நேர்ந்துள்ள ஒரு நிகழ்கால எதார்த்தத்தின் எதிரிலும் தீர்மானிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இதனை விடுத்து, லண்டனில் இருந்து கொண்டு “கருவறுக்காமல் விடுவதில்லை” என்று விடுக்கப்படும் கோட்பாடுகள் சற்றே விசனத்துக்குரியதாகவும், இன்றைய நடைமுறைகளைச் சரியாக விளங்கிக்கொள்ளாத எதிரொலிகளாகவே இருப்பதையும் இட்டு, நாம் கவலைகொள்ள வேண்டி உள்ளது. இத்தகைய அவசரப்பட்ட பின்னணிகளே, எமது சமூகத்தை, கடுமையான இக்கட்டுக்குள், இன்று சிக்க வைத்துவிட்டனவோ என்பது போன்ற சந்தேகங்கள் எழுவதாகவே - உளது.இப்பின்னணியிலேயே அண்மையில் வெளிவந்துள்ள மன்சூரின் கட்டுரையும் ஒப்பு நோக்கதக்கதாகின்றது.
2
முஸ்லீம் தீவிரவாதம் குறித்து மன்சூர் அவர்கள் பின்வரும் கருத்தினைத் தமது கட்டுரையில் தெரிவித்திருந்தார் :
“இலங்கையில் வாழும்… 20 லட்சம் முஸ்லீம்களும்…” ... “உலகெங்கிலும் வாழும் 100 கோடி முஸ்லீம் உம்மாவின் உறுப்பினர்கள்…” என்ற நம்பிக்கை நிலவத்தான் செய்கின்றது. “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான கருத்தியலை உருவாக்கி, அதற்குச் செயல்வடிவம் கொடுத்த நபர்களும் அநேகமாக இத்தகைய ஒரு சிந்தனையிலேயே தூண்டப்பட்டிருந்தார்கள். இந்த கொடூரத்தை நிகழ்த்துவதற்காக அத்தகைய ஒரு தீவிரவாத மனநிலையே அவர்களைத் தூண்டியிருந்தது…”
அதாவது முஸ்லீம் மக்கள் மத்தியில் தோன்றியிருந்த தீவிரவாதம் குறித்தும், அதன் நடவடிக்கைகள் குறித்தும் மிக மிக ஆக்கபூர்வமான சிந்தனையை மேற்படி பந்தியானது முன்னெடுக்க முயல்வதாகின்றது.
இப்படியான கட்டுரையை வரைவது, நிலவும், இன்றைய இச்சூழலில், எளிதான ஒரு விடயமல்ல. தீவிரவாத அரசியலை அல்லது ஏதேகிலும் ஒரு காட்டாறு அரசியலை முன்வைத்து ஒரு கைதட்டலை பெற்றுக்கொள்ள முற்படுவது எளிது. ஆனாலும், நாளை வரவிருக்கும் அபாயங்களை உள்வாங்கி, கிரகித்து, புதிய மோஸ்தார்களின், கவர்ச்சியான நிகழ்ச்சி நிரல்களைப் புறந்தள்ளி நிதானித்து, சமூகத்துக்குத் தேவைப்படும், பாதுகாப்பான ஒரு பார்வையை அவதானத்துடன் முன்வைப்பது சற்றே சிக்கல் மிகுந்தது.
மன்சூர் தொடர்ந்து கூறுவார் : “இலங்கை தமிழ் மக்கள் முன்னெடுத்த 30 வருடகால விடுதலை போராட்டம், தமது மற்ற அடையாளங்களான இந்துமத இந்தியா மற்றும் தமிழர்கள் வாழும் தமிழ்நாடு என்பன இறுதி வரையில் தமக்கு ஒரு பெரும் பாதுகாப்பு அரணாக இருந்துவரும் என்ற நம்பிக்கையில் முன்னெடுத்த போராட்டம், முள்ளிவாய்க்காலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் மரணத்துடன் எவ்வாறு முடிவுக்கு வந்தது என்பதையும் பார்த்தோம். கரையிலிருந்து வெறுமனே 18 மைல் தூரத்தில் வாழும் ஏழு கோடி தமிழர்கள் வாழ்ந்து வந்த ஒரு பின்புலத்தில் இந்த பேரனர்த்தம் நிகழ்ந்தது என்பதுதான் பெரும் கொடுமை” இக்கூற்றானது கவனமாக ஆயத்தக்கது. அதாவது, எமது அனர்த்தங்கள், ஏனைய சமூகங்களுக்கு எப்படி ஒரு படிப்பினையாக இருந்து, அடையாளப்படுத்தப்படுகின்றது என்பதை நாம் காண நேர்கையில், எமது சமூகம், தமது கடந்தகால அனுபவங்களிலிருந்து, அசையாது, தொடர்ந்தும் கற்க மறுப்பது “எதனால்” என்பதே இப்பந்தி எழுப்பக்கூடிய மிக மிக ஆழமான வினாவாகின்றது.
மன்சூர் அவர்கள் தொடர்ந்தும் எழுதுவார் : “பூகோள அரசியல் நலன்கள் மற்றும் பிராந்திய நலன்கள் என்பவற்றிற்கு நாடுகள் உயர் முன்னுரிமை வழங்கிவரும் இன்றைய சூழலில், இலங்கையில் வாழ்ந்துவரும் சிறுபான்மை சமூகங்கள் யதார்த்தத்திற்குப் புறம்பான இவ்வாறான எதிர்ப்புக்களைக் கொண்டிருப்பது மிக மிக ஆபத்தானது என்பதில் சந்தேகமில்லை...”
இங்கு ஆழ கவனிக்கத்தக்கது, மன்சூர் அவர்களின், “சிறுபான்மை இனங்கள்” என்று பொதுமைப்படுத்தப்பட்ட சொற்பிரயோகம்தான்.
அதாவது, முஸ்லீம் சமூகம் என அவர் குறிப்பாக விளிக்காது, “சிறுபான்மை இனங்கள்” என அவர் பொதுப்பட குறிப்பிட்டுள்ளது, விடயத்தின் கருப்பொருளை அகலப்படுத்துவதாயுள்ளது. ஆனால் இது இக்கட்டுரையின் ஒரு முகமே. கட்டுரையின் மறுமுகத்தில், பூகோள அரசியல் நலன்கள் என்ற வார்த்தைப் பிரயோகமும் “யதார்த்தத்திற்குப் புறம்பான”, “சிறுபான்மையின் எதிர்பார்ப்புகள்” என்ற சொற்றொடர்களின் பாவிப்பும் எமது சிந்தையைக் கவருவதாகின்றன. இவற்றின் விளைவுகள் “மிக மிக ஆபத்தானவை” என்று முத்தாய்ப்பிடும் மன்சூரின் அறிவுறுத்தல்கள்; கனதியானது மாத்திரமன்றி, அனைத்து சிறுபான்மை சமூகங்களுக்கும் ஏற்புடையது என்பதில் தான், இம்முக்கியத்துவத்தின் ஆணிவேரே குடிக்கொண்டிருக்கின்றது, எனலாம்.
இப்பின்னணியிலேயே, “கருவறுக்கும்” அவா குறித்த சிந்தனையை, வெறுமனே ஒரு அவாவாக மாத்திரம் கொள்ளாது, அதனை இன்றைய பூகோள அரசியலுடன் இணைத்து, இச்சிந்தனைகள் எவ்வகையில் எம்மவர்க்கு ஆபத்தானவையாக முடியக்கூடும் என்ற புரிதலை நோக்கி நகர வேண்டிய அவசியத்தை மேற்படி கட்டுரை அளிப்பதாக உள்ளது. அல்லது போகும் திசையினை நிர்ணயம் செய்ய முடியாத, எதார்த்தத்தைக் காணும் திறனற்ற குருடர்களாக, நாம் திண்டாட வேண்டிய சூழலுக்குள் மீண்டும் தள்ளப்பட்டவர்களாகிவிடுவோம் என்பதைக் கோடிட்டு காட்டும் வரிகளாக மன்சூரின் வரிகள் அமைந்துப்போகின்றன.
வேறுவார்த்தையில் கூறினால், பூகோள அரசியலும் பிராந்திய நலன்களும் முக்கியப்பட்டுவரும் இன்றைய சூழலில், வேறு சக்திகளின் கரங்களில், ஆட்டுவிக்கப்படும் வெறும் குரங்கு பொம்மைகளாகி – எதார்த்தங்களை மறந்தவர்களாக மன்சூர் குறிப்பிடும் - “எமது பாரிய பாதுகாப்பு அரண் உண்டு” என்ற போலியான மமதைகளில் அல்லது பொய்மைகளில் முகம் புதைத்து, எம்மை நாமே கருவறுக்கத் துணிகின்றோமா என்பதுவே கேள்வியாகின்றது.
அதாவது, தமிழ்நாடு அல்லது சர்வதேசம் அல்லது புலம்பெயர் சக்தி என்ற சொல்லாடல்களில் எம்மை முற்றாக மறந்து, மன்சூர் குறிப்பிடும் ஆபத்துக்களை நோக்கி மீண்டும் பயணிக்கப் போகின்றோமா என்பதுவே கேள்வியாகின்றது. இவற்றின் நடைமுறை உதாரணங்களை எமது கடந்தகால வரலாற்றுச் சம்பவங்கள் மிகத் துல்லியமாக நிர்ணயிக்காமலில்லை.
3
இச்சூழ்நிiயிலேயே இலங்கை சிறுபான்மையர்களுக்கிடையே, தீவிர தேசியங்களை அல்லது தீவிர அரசியலைக் கட்டுவித்து, உசுப்பேற்றும் நிகழ்ச்சி நிரல்கள் வகுத்தளிக்கப்பட்டு, இதற்கூடு துருவப்படுத்தலை நோக்கி சிறுபான்மைகளை நெட்டித்தள்ளும் செயற்பாடுகளும் முயற்சிக்கப்படுகின்றது. இதற்கு ஏற்றாற்போல் நாட்டில் பெருந்தேசியவாதத்தை முடுக்கிவிடும் சங்கதிகளும் ஆங்காங்கே நடந்தேறாமலில்லை.
மன்சூர் குறிப்பிடுவது போன்று இது பூகோள அல்லது பிராந்திய அரசியல் நலன்கள் சார்ந்ததாய் இருக்கலாம் அல்லது அப்படியில்லாமலும் இருக்கலாம். ஆனால் இதற்கான விலை என்னவோ, எமது மக்களாலேயே கொடுப்பட வேண்டியதாயுள்ளது.
இப்பின்னணியிலேயே, “மலையகத் தேசியம்” இன்று எவ்வாறு உயிர்பிக்கப்படுகின்றது என்பதையும் நாம் பார்க்க நேர்கின்றது.
4
காணி உரிமை முதல், பெருந்தோட்ட துறையில் பங்காளிகளாக மாறுதல், தொழிலாளர்களைச் சிறுதோட்ட உடைமையாளர்களாக மாற்றுவது மற்றும் மலையக கல்வி – தொழிற்பயிற்சி – சமூக சபை போன்ற பொருளியல் காரணிகளை உள்ளடக்குவது ஆகிய நிகழ்ச்சி நிரலொன்று “மலையகத் தேசியம்” அல்லது “மலையகம்” என்ற சொல்லாடலின் மூலம் அலங்காரப்படுத்தப்படுகின்றது. இச்செயற்பாட்டில் “மலைநாடு” என்பது புவியியல் அடையாளம் என்றும் “மலையகம்” என்பது இனவியல் அடையாளம் என்றும் கூறப்படுகின்றது. அண்மையில் இது குறித்த ஆவணமொன்றை அமெரிக்கத் தூதரிடம், மனோ கணேசன், தமது குழுவினருடன் கையளித்ததாகச் செய்தி வெளிவந்தது (முரசு : 28.06.2024).
இதனைப்பெற்றுக்கொண்ட அமெரிக்கத் தூதர் இது மிகவும் உண்மையானதுதான், மலையக மக்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர் எனத் திருவாய் மலர்ந்ததாகவும் செய்தி வெளிவந்துள்ளது. வேறுவார்த்தையில் கூறுவதானால் 200 வருடங்கள் முடிந்த ஆண்டில்கூட இப்படியாய் சர்வதேசம், திருவாய் மலர்வதற்கு, கங்கணம் கட்டியுள்ளது மகிழ்ச்சியளிப்பதேயாகும். (இம்மலையக மக்கள் ஆங்கிலேயரால் பிடித்து வரப்பட்டவர்கள் என்பதையும், வேல்தர்மா அவர்கள், குறித்த தூதரானவர், ஆட்சி மாற்றத்திற்காக, அந்தந்த நாடுகளில் களமிறக்கப்படுவர் எனக் கூறியுள்ளமையையும் கவனத்தில் கொண்டதாய்…) (05.07.2024).
ஆனால், இதைவிட முக்கியமானது இக்குழுவில், சிவில் சமூகத்தினரும் உள்ளடங்கி உள்ளதாகக் கூறப்படுவதேயாகும். இது போன்ற நகர்வுகள் அண்மைக் காலமாக, நாட்டில், தோற்றம் கண்டு, ஒரு முக்கிய விடயமாக இனங்காட்ட துவங்கியுள்ளது. அதாவது அரசியல் கட்சிகளும், சிவில் சமூகத்தினரும் இணைந்தாற்போல் தோற்றம் கொள்வது மலையகத்திற்கு மாத்திரமே உரித்தானது இல்லை என்ற வகையில், வடக்கே வவுனியாவிலும் கூட, புதிய பொது அமைப்பு துவங்கப்பட்டு, (தமிழர் பொதுசபை) பொது தமிழ்வேட்பாளரை நிறுத்தவும், அதற்கான ஓர் ஆளைத் தேடவும் உள்ளதாகக் கூறப்படுகின்றது.
ஆக, மலையகத்திலாகட்டும் அல்லது வட-கிழக்கிலாகட்டும், பேசிவைத்தாற்போல், சிவில்-சமூக-அரசியல் கட்சிகள் ஒன்று சேர்க்கப்பட்டு, புதிய பொது அமைப்புகள் உருவாக்கப்படுவதும், இவை அவ்வவ் தேசியங்களை உயிர்பிப்பதாகக் கூறப்படுவதும், புதிய நடைமுறைகளைக் காட்டி நிற்பதாக உள்ளது. ஆனால் இவை எவ்வகையில், நடைமுறை எதார்த்தங்களைக் கணக்கில் எடுத்துள்ளன என்பதே கேள்வியாகின்றது.
வடக்கின் பொது வேட்பாளர் கோஷத்தைக் கேள்விப்பட்டு, தென்னிலங்கையானது நடுநடுங்கிப் போய்விட்டது என்று கூறமுற்படும் போக்கு, உற்சாகபடுத்துவதாகவும் ஊடகங்களின் வாயிலாக வளமூட்டப்படுவதாகவும் இருக்கின்றது.
ஆனால், இவ்ஊடகங்கள் எந்தெந்தச் சக்திகளால் கையூட்டல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன என்பது வேறுவகையிலான கேள்வியாகின்றது. இருந்தும், தென்னிலங்கையை நடுநடுங்கச் செய்வது எத்தனை யதார்த்த பூர்வமானது என்பது ஒரு புறம் இருக்க, இங்கே துருவமயமாக்கலினால் ஆற்றப்பட போகும் பாதிப்புகள் என்ன - இந்நடைமுறையால் விளையும், மொத்த இலாபத்தையும் சுருட்ட போகிறவர் யார் - எவர் என்பதெல்லாம் இணைந்த கேள்வியாகின்றன.
மலையகத்தை அல்லது வட-கிழக்கை போன்றே, நாட்டில் முஸ்லீம் தீவிரவாதமும் இன்று பிரஞ்ஞையுடன் தீண்போட்டு வளர்க்கப்படுகின்றதா என்பது கூட இணைந்த கேள்விகளாகின்றன. (உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் முஸ்லீம் தீவிரவாதம் அரசால் வளர்தெடுக்கப்பட்டதுப்போல). இவை, மன்சூரின் கட்டுரை மறைமுகமாக எழுப்பும் கேள்விகளாகின்றன.
நாளும், வளர்ந்துவரும் பெருந்தேசியவாதம், நாட்டின் சிறுபான்மையினருக்கு ஒரு பிரச்சனைதான் என்றாலும் இதற்கு முறைதவறிய வழியில் சிறுபான்மைகள், எதிர்வினை ஆற்றுவது, சிறுபான்மையினருக்கே கேடாக முடியும் என்பதே மன்சூரின் கட்டுரை வாதிக்கும் விடயங்களில் ஒன்று.
இப்பின்னணியிலேயே அண்மைக்கால சுமந்திரனின் பேட்டியையும் நாம் காண நேர்கின்றது.
5
சுமந்திரன் இறுதியாக அளித்திருந்த பேட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் போது சுமந்திரன் இரு விடயங்களைj் தொட்டிருந்தார். ஒன்று, எதிர்வரும் காலங்களில் ரணில்-சஜித் கூட்டு சேர்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தது. மற்றது, இலங்கை அரசியலில் சர்வதேசத்தின் ஊடுறுவல்கள் நடந்தேறுவது சம்பந்தமானது. (சமூகம் பேட்டி : 24.06.2024).
இவற்றில் ரணில்-சஜித் கூட்டு சேர்வதற்கான வாய்ப்புகள், பாகிஸ்தானின் சூழலைப் பிரதிபலிப்பதாய் உள்ளது. அங்கே அரசவை தேர்தலின் போது, இறுதிக்கட்டத்தில், சர்வதேசத்திற்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த இம்ரான்கான், தோற்கடிக்கப்பட வேண்டி, எதிர் எதிர் போட்டிக் கட்சிகளாக இருந்த பூட்டோ கட்சியினரும், சரீஃப்பின் கட்சியினரும் எப்படி இறுதி நேரத்தில், ஒன்று சேர்க்கப்பட்டனரோ, அதேபோன்று சர்வதேசத்திற்கு எதிராய் இங்கே செயற்படக்கூடிய, அனுரகுமார திஸாநாயக்காவை (ஜே.வி.பியை) தோற்கடிப்பதற்காக, இங்கும் ரணில்-சஜித் கூட்டு, இறுதிக்காலங்களில் ஏற்படுத்தப்படலாம், என்பதுவும் சுமந்திரன் குறிப்பிட்ட விடயங்களில் ஒன்றாகியது.
இதன்போது இலங்கை அரசியலில், சர்வதேச சக்திகளின் ஊடுறுவல்கள் ஏற்படுத்தப்படுவது சகஜமானது, என்பதுவும் அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது குறித்து, ஏதோ ஒரு வகையில், மன்சூரின் கட்டுரையும் சுட்டிக்காட்டவே செய்திருந்தது. சுமந்திரன் அவர்கள், பேட்டியின் போது ரணில்-சஜித் இணையும் பட்சத்தில், தமிழ் அரசியல் மாத்திரமன்றி, ஜே.வி.பியும் ஓரங்கட்டப்பட்டு ஒரு திரிசங்கு நிலையை நோக்கித் தள்ளப்படக் கூடும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அண்மை நினைவேந்தல்களின் போது, கஞ்சி வழங்கியதாய்க் கூறப்பட்ட, நான்கு பெண்கள் கதறக் கதற நடு இரவில் பொலிஸாரினால் இழுத்துச் செல்லப்பட்டனர் என்ற செய்தியும் வெளிவந்திருந்தது. இது போக விகாரைகளின் புதிய கட்டுமானம் அல்லது மேய்ச்சல் தரைகளின் ஆக்கிரமிப்பு, இன்னும் பலவாறான இவ்வகை நிகழ்ச்சி நிரல்களின் பின்னணியில், தமிழ்-ஜே.வி.பி கட்சிகள் ஓரங்கட்டப்படுமானால், இனிவரும் காலம் தமிழ்ச் சிறுபான்மையினருக்கு, எப்படி இருக்கப்போகின்றது என்பதுமே மேற்படி சூழலில் எழக்கூடிய கேள்வியாகின்றது.
ஆனால், இவற்றை ஆழ விவாதிப்பதை விடுத்து, “கருவறுப்பதையே” தொழிலாகக்கொண்ட ஓர் அரசியலை நாம் மீள மீள அறிமுகப்படுத்திக்கொண்டு நிற்பது எவ்வகை நன்மையை எமக்கு இனியும் அளிக்கப்போகின்றது என்பதுவே கேள்வியாகின்றது. மொத்தத்தில், மன்சூரின் கட்டுரை எடுத்தியம்பும் கேள்வியும் இதுவாகத்தான் இருக்கின்றது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.