1
ஓர் இருநூறு வருடகால நகர்வுக்குப்பின், இன்று மலையகம், ஒரு அரசியல் சந்தியில் நிற்கிறது. இதில் தலையான அம்சமாக, வெகுத்தூக்கலாய்த் தெரிவது, மலையக மத்தியத்தர வர்க்கத்தின் பெருவாரியான எழுச்சியாகும். இரா.சிவலிங்கம் காலப்பகுதியிலும் அல்லது அதற்கு முன்னதான திரு.வேலுப்பிள்ளையின் காலத்திலும் அல்லது அதற்கு முன்பாக திரு.ராஜலிங்கம்-சோமசுந்தரம் அல்லது கோ.நடேசய்யர் காலப்பகுதியிலும் இது நடந்திருக்கலாம். ஆனால், இன்று, சாரம்சத்தில், நடந்தேறும், மலையக மத்தியத்தர வர்க்கத்தின் தோற்றமும் எழுச்சியும் அது ஏற்படுத்தும் இன்றைய பாதிப்புகளும் சற்றே வித்தியாசம் கொண்டவை.
2
மலையக மத்தியத்தர வர்க்கமானது, இன்று, தனக்கென்ற அரசியலையும் தனக்கென்ற இலக்கியத்தையும் தன்வழியே சமைத்துக்கொள்ள விரும்புவதாய்த் தெரிகின்றது. மலையக அரசியலிலும் மலையக இலக்கியத்திலும் இது செலுத்த முற்பட்டுள்ள தாக்கம் எம் அனைவரினதும் ஆழ்ந்த கவனத்தைக் கோருவதாக உள்ளது. இது தொடர்பில் இரு உதாரணங்களைப் பார்க்கலாம் :
ஒன்று, எமது திரு.சிவலிங்கம் அவர்களால் (சாகித்திய ரத்னா) அட்டனில் ஆற்றப்பட்ட உரை. இது, இக்கருத்தை ஒரு தளத்தில் வெளிப்படுத்துவதாக இருந்தது. (வீரகேசரி : 26.05.2024) மற்றது, வேலுப்பிள்ளையின் இலக்கியம் பொறுத்து இன்று தரப்படும் புதிய வியாக்கியானங்கள். இவை, எமது மேற்படி விடயத்திற்கு உவப்பானவையே ஆகும்.
திரு.சிவலிங்கத்தின் உரை பின்வரும் விடயங்களை ஆழ விவாதித்தது :
1. சிறுதோட்ட உடமையாளராவதே எமது (மலையக) “தேசியத்தின்”; நிலைப்பாடு.
2. 47 ஆண்டுகளுக்கு முன்னதாக, 1977ல், சிவனு இலட்சுமணன், நாம் வீடுகட்டி விவசாயம் செய்து வாழவேண்டும் என்ற செய்தியைச் சொல்லிவிட்டு மாண்டுபோனான். இவை எமது ஆழ்ந்த அவதானத்தைக் கவருவதாகின்றது. இதில், சிவனு இலட்சுமணன் தொடர்பிலான விடயத்தை முதலில் வாதிப்பது பயனுடையது.
“16 ஏக்கர் நிலத்தை” சுவீகரிக்க வந்த, அரச அதிகாரிகளையும் பொலிஸாரையும் எதிர்த்து நடாத்தப்பட்ட போராட்டத்தில் சிவனு இலட்சுமணன் கொல்லப்பட்டான் என்பது பதிவு. ஆனால், அவன் “நிலத்தைக் கோரியா” அப்படி மாண்டுபோனான் என்பதே கேள்வியாகின்றது. அவன் மாண்டுபோனது, இன்று அழிந்துவரும் ஒரு ‘பெருந்தோட்ட அமைப்பு முறையைக்’ காப்பாற்றவே என்பது ஒரு விடயமாகும். இனவாத அரசியல் அடிப்படையில் நடந்தேறக்கூடிய பெருந்தோட்டக் காணி சுவீகரிப்பை எதிர்த்து அவன் மரணித்துப்போனது உண்மை என்று கூறுவதும் அவன் ‘காணி வேண்டும்’ என போராடித்தான் மரணித்தான் எனக் கூறுவதும், வேறு வேறான விடயங்களாகும்.
சுருக்கமாகக் கூறினால், ‘பெருந்தோட்ட அமைப்பு முறையை’ நிலைநிறுத்தி, தமது பெருந்தோட்ட வாழ்வைக் கட்டிக்காக்க, நடத்தப்பட்ட போராட்டத்தின் ஓர் அம்சமாக அவனது மரணம் சரித்திரத்தில் சம்பவித்திருக்கின்றது. ஆனால், இன்று இதே நிகழ்வு தலைகீழான ஒரு பொருட்கோடலுக்கு ஆளாகி, அவன் காணி வேண்டும் என்றே மரணித்துப்போனான் எனக் கூறப்படும் கூற்றே எமது அவதானத்துக்குரியதாகின்றது. இப்படி தமது விருப்பத்திற்கேற்ப, வரலாற்றைத் திசைத்திருப்பிச் சொல்லப்படும் நடைமுறைக்குப் பல்வேறு காரணங்கள் இருந்த போதிலும் மேலே கூறியபடி தூக்கலாய்த் தெரியக்கூடியது, மலையகத்தின் புதிய மத்தியத்தர வர்க்கத்தின் எழுச்சியே ஆகும்.
இதனைப்போலவே எமது விக்னேஷ்வரன் ஐயா அவர்கள் கண்டுப்பிடித்ததற்கு இணையாக (அதாவது, முல்லோயா கோவிந்தன் இறப்பர் தோட்டங்களில் வைத்து சுடப்பட்டான் என்பதுபோல்) அதே சந்தத்தில், முல்லோயா கோவிந்தனும் காணி உரிமைக்காகத்தான் போராடி மரணித்தான் என்ற புதுக்கதை அவிழ்க்கப்படுவதும் துரதிஷ்ட வசமானதே. (திரு.கணபதிப்பிள்ளையின் Glimpses of a Tea Bud என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் : 2023). அதாவது, தொழிற்சங்க உரிமையை நிலைநாட்ட 1930களில் லங்கா சமசமாஜரினரால் நடாத்தப்பட்ட போராட்டமானது, இங்கே ஆழ புதையுறுகின்றது. வரலாறானது மாற்றி எழுதப்படுகின்றது. தொழிற்சங்க உரிமைப் போராட்டமானது, காணி கோரிக்கையாக மாற்றம் பெறுகின்றது.
இதனைப்போலவே, திரு.வேலுப்பிள்ளை அவர்கள், அன்றைய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து அகல நேர்ந்தது அல்லது அகற்றப்பட்டார் (திரு.வெள்ளையனைப் போலவே) என்பது இன்று மறைக்கப்பட்டு, அவர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலும் இருக்கவே செய்தார் என்பது “மாத்திரமே” தூக்கிப்பிடிக்கப்பட்டு வாதிக்கப்படுவதும் வரலாறாகின்றது. வேறுவார்த்தைகளில் இருவரும் வெள்ளையனைப்போல் அகல நேர்ந்தது ஏன் என்றோ (அல்லது திரு.சோமசுந்தரத்தைப்போல் நீங்கினார்) ஏன், எதற்காக என்பதற்கான தேடலோ அன்றி ஆய்வு முறைகளோ அற்று கேள்விகளற்ற ஒரு புதிய நாகரிகம் கட்டியெழுப்பப்படுகின்றது. இது போலவே, திரு.வேலுப்பிள்ளையின் எழுத்துக்களை “வஞ்சகப்புகழ்ச்சி தரும்” எழுத்துக்களாகச் சமயங்களில் பொருட்கோடல் செய்யும் துரதிஷ்ட நிலைமைக்கும் நாம் தள்ளப்படவும் நேர்கின்றது. இவ்வகை, புதிர்களை அல்லது புதினங்களை, புதிதாகப் புனைவதற்கான காரணங்களை நாம் தேடுவது பயனுடையதாகும். இங்கேயே மலையகத்தின் புதிய மத்தியத்தர வர்க்கத்தின் எழுச்சி வேர்கொள்வதை நாம் கண்டுணரலாம்.
3
இப்புதிய அரசியல் அல்லது இப்புதிய வரலாற்று கலாசாரமானது, நசிவு இலக்கியம் அல்லது நசிவு அரசியல் என்று வரையறை செய்யப்பட்டாலும், விடயத்தின் ஆழம் இதனுடன் முடிவதாக இல்லை. புதிய மத்தியத்தர வர்க்கத்தின், தோற்றத்தோடு இவ்வகை அரசியல் கலாசாரமும், இவ்வகை இலக்கியக் கலாசாரமும் மலையகத்தில் வேர்பதிக்கத் துவங்கிவிடுவது முக்கியமானது.
இவ் வேர்பதித்தலுக்கு உரமூட்டும் பல்வேறு அக-புறக் காரணிகளை நாம் கவனத்தில் கொள்ளுதல் பயனுடையதாகும் :
I. பெருந்தோட்ட அமைப்பு முறையானது, இன்று நொறுங்கி, சுக்கு நூறாக்கப்பட்டுவரும் ஒரு நடைமுறை, யதார்த்தமாகி உள்ளது.
II. வரலாற்று ரீதியாக, 1930ம் ஆண்டு முதல், இருண்ட மலையக மக்களின் வாழ்க்கையில், பல்வேறு தியாகங்களைச் செய்து புடம்போடப்பட்ட ஒரு தொழிற்சங்க இயக்கம், இன்று ஏறக்குறைய முற்றாகச் சிதைக்கப்பட்டு சின்னாப்பின்னப்படுத்தப்பட்டதாகின்றது.
III. இதற்குப் பின்னணியாய் அமைந்த அல்லது அமைந்திருக்கக்கூடிய புதிய மத்தியத்தர வர்க்கத்தின் எழுச்சியும் பங்கேற்பும், நடந்தேறுகின்றது.
IV. கூடவே உள்நின்று காட்டிக்கொடுத்தத் தொழிற்சங்கத் தலைமைகள், இச்சரிவுகளின் அத்திவாரமாகின்றனர்.
V. இந்த மாறுதலுக்கு, சாமரம் வீசக்கூடிய தீவிர புலம்பெயர் சக்திகளின் உசுப்பேத்தும் நிகழ்ச்சி நிரலும், பிரசாரங்களும், வேலைத்திட்டங்களும், துணை போவன.
இவை மலையகத்தின் அண்மித்த நிகழ்ச்சி நிரல்களுக்கு உறுதுணையான சிற்சில விடயங்களாகும். இதில் பெருந்தோட்ட அமைப்பு முறையின் தகர்ப்பு என்பது, மலையகத்தின் அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், மலையகத்தாரின் உள்நின்று இயங்கக்கூடிய அகச்சக்திகளால் தனித்து ஏற்படுத்தப்பட்ட ஒன்று என்பதை விட, இந்நாட்டின் பெரும் தேசியவாதத்தால் பெருந்தோட்ட அமைப்பு முறை, வெறிகொண்ட விதத்தில் தகர்க்கப்படுகின்றது என்பதே உண்மையாகின்றது.
- சிவனு இலட்சுமண் -
சிவனு இலட்சுமணின் இறப்புக்குக் காரணமான காணி சுவீகரிப்பு முறையானது, இந்நாட்டின் பெருந்தேசிய வாதத்தின் முன்னெடுப்புகளினாலேயே நடந்து முடிந்தது என்பதுபோக, இதனைவிட ஒப்பீட்டளவில் மிகப் பெரியளவிலான ஒரு காணி சுவீகரிப்பு “நட்சா” என்ற பெயரில் நடந்தேறி முடிந்தது. 1980களில் கிட்டத்தட்ட முப்பதிற்கும் அதிகமான, செழுமையான தோட்டங்களிலிருந்து, மலையக மக்கள், அப்புறப்படுத்தப்பட்டு, காணி பிரிப்புகளுக்கும், பெரும்பான்மையினரின் புதிய குடியேற்றங்களுக்கும், இனவாத அடிப்படையில், அமுலாக்கப்பட்ட இத்திட்டத்திற்கான அடிப்படை ஆதரவினை மலையகத்தைச் சார்ந்த, வலதுசாரி தொழிற்சங்கத் தலைமைகளே அரசுக்கு வழங்கின என்பதே துயர்தரும் உண்மையாகின்றது.
இக்கொடுந்துயரங்கள், மறைக்கப்பட்ட வரலாறாகவே மூடி மறைக்கப்பட்டன என்ற உண்மையிலும், இம்மக்களின் துயர் தங்குவதாயுள்ளது. வேறுவார்த்தைகளில் கூறிவோமானால், பெருந்தோட்ட அமைப்பு முறையை, இப்படியாகத் தகர்க்கும் செயற்பாடுகளில், இந்நாட்டின் பெருந்தேசியவாதம், எப்படி மகிழ்ச்சியுடன் பங்கேற்றதோ, அதற்கிணையாகவே, மலையகத்தின் உள்சக்திகளும் பங்கேற்றன, என்பதை அறிவதே, மலையக மக்களின், உண்மை வரலாற்றை அறிவதாகின்றது.
4
இப்பின்னணி உடனேயே, அண்மித்த வெளியீடான, “ஊடறுப்பின்” இருபத்து மூன்று மலையகப் பெண் எழுத்தாளர்கள் படைத்துள்ள சிறுகதை தொகுதியொன்றினை அவதானிக்க வேண்டியுள்ளது. தமிழ்த்துறை விரிவுரையாளரான, மதிப்பிற்குரிய திரு.ஜெயசீலன் அவர்களின் காத்திரமான முன்னுரையின் இடையே அவர் பின்வருமாறு கூறியுள்ளதும் அவதானிக்கத்தக்கது :
“மலையகத் தமிழரின் சமூக வரலாற்றை, இந்தியத் தமிழர் என்ற அடையாளம் வெறுத்து ஒதுக்கப்பட்ட வரலாற்றுச் சூழ்நிலையை, மலையகம் என்ற அடையாளம் தோன்றி வளர்ச்சிபெற்ற பின்னணியையும் நன்றாக அறிந்தவர்கள், சமுதாயத்தின் கூட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள், இந்திய அடையாளத்தின் அபாயத்தினை அறிவர்”.
மிக ஆழமான விஷயங்களை உள்ளடக்கும் மேல்கண்ட பகுதி பின்வருமாறு தொடர்கின்றது :
“…இலங்கை பிரஜைகளான, (இவர்கள்) தமது தனித்துவ இருப்பைப் பேணும் வகையிலான இனத்துவ அடையாளத்தை உறுதியாக நிலைநிறுத்த வேண்டும்”.
“மலையகம் - மலையகத் தமிழர்… என்ற அடையாளத்திற்கு… வலுச் சேர்ப்பது பயனுடையதாக அமையும்…”
இவ்வரிகளில் வெளிப்படும், அரசியலானது மிகுந்த அவதானத்துடன், எம்மால் அணுகப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது என்பது தெளிவு. காரணம், இவ் அரசியல் உள்ளடக்கும் பிரதான விடயங்கள் இரண்டாகும் :
I. ஒன்று, இந்தியாவின் பாத்திரம் சம்பந்தப்பட்டது.
II. மற்றது, மலையகம் என்ற தேசியம் சார்ந்த கோரிக்கையும் அதன் உள்நின்று இயங்கும் அரசியல் பண்பும் வெளிக்கொணரப்படுவதும் ஆகும்.
5
இலங்கை அரசியலில், இந்திய பாத்திரம் என்பது காலம் காலமாய் இருந்துவரும் ஒன்று எனக்கூறுவதில் மிகை அர்த்தம் ஏதுமில்லை என நம்பலாம்.
கொல்வின் ஆர்டி சில்வா முதல் ஜீவானந்தம் வரையில் தத்தம் நாடுகளின், ஆதிக்கச் சக்திகளுக்கு எதிராக போராடிய, இவர்கள், எப்படி எதிரெதிர் நாடுகளில் தஞ்சம் தேடினார்களோ அதற்குச் சற்றும் குறையாத வகையில் அண்மைக்காலத் தமிழ் ஈழ சக்திகளும், இந்தியாவில் அடைக்கலம் தேடவே முற்பட்டனர் என்பது வரலாறாகின்றது.
போகம்பரை சிறைச்சாலையை உடைத்து, இந்தியாவில் அடைக்கலம் தேடிய லங்கா சமசமாஜ தலைவர்கள் (கொல்வின் ஆர்டி சில்வா போன்றோர்) 1930களில், எப்படி இந்திய இடதுசாரிகளை (Bolshevik Leninist Party India) தொடர்பு கொண்டு இயங்கினாரோ, அதேபோன்று ஜீவானந்தம் போன்றோர் இலங்கையில் அடைக்கலம் தேடிய வேளைகளில், அவ்அடைக்கலத்தைத் தந்தவர்கள், இலங்கை இடதுசாரிகள் என்பதும், அதில் மலையக இடதுசாரிகளின் பங்கு கணிசமாயிருந்தது என்பதும் பதிவு (ரொசாரியோ பெர்னாந்து). ஆனால், வரலாற்றின், பிற்பட்ட தருணத்தில் நடந்தேறும், இவ் “இந்திய அடைக்கலங்கள்” சற்றே வித்தியாசம் பூண்டனவாகவே இருந்தன.
பூகோள அரசியலின் தேவைப்பாடுகளும், இந்திய துணைக்கண்டத்தின் பிரதேச – வல்லரசு எழுச்சியும் ஒருபுறமிருக்க, இவ்இயக்கங்கள் எவ் அடிப்படையில், யார் யாருடன் தொடர்பு கொண்டன என்பனவும் முக்கியமான கேள்வியாயின. இவ் இயக்கங்கள், தமது ஜீவிதங்களுக்கு அல்லது அடைகலங்களுக்கு, இடதுசாரி இயக்கங்களையா தொடர்பு கொண்டன அல்லது இந்திய பெரும் முதலாளியத்தின் நலன்களை வெகுவாகப் பிரதிபலித்த ஓர் அரசு இயந்திரத்தையா தொடர்பு கொண்டன என்பதெல்லாம் எமது கவனத்துக்குரியவனதாம். “இது தவிர்க்க முடியாதது” என்றவாதம் நிச்சயம் வாதிக்கப்பட வேண்டிய ஒன்றே ஆனாலும் அது வேறு விடயம் சம்பந்தமானது என்பது குறிக்கத்தக்கது.
கொல்வின் - ஜீவானந்தம், இவர்கள் சம்பந்தப்பட்ட காலங்கள் மறைய, பின்னர் வந்த காலங்கள் வேறு வகைப்பட்டன. அடுத்து வந்த காலங்களில், இலங்கை இயக்கங்களின், இந்திய நிலைப்பாடு என்பது, ஒரு கட்டத்தில், இரு முகங்களைக் கொண்டதாயிருந்தது. இந்திய ஆதிக்கச் சக்திகளுக்கு எதிரான ஒரு முகமும், இந்திய உழைக்கும் சக்திகளுடன் கைக்கோர்க்கும் மறுமுகமும், என இரு முகங்களைக் கொண்டதாய் இவை நின்றன. நாவலரைத்தொட்ட கைலாசபதியே பாரதியையும் அரவணைத்தார் என்பதும் அவர் இந்திய இடதுசாரி தோழர்களிடையே தகுந்த அங்கீகரிப்பையும், ஆதரவினையும் பெறவே செய்திருந்தார் என்பதும் ஆழ அவதானிக்கத்தக்கது.
இத்தகைய ஒரு பின்னணியிலேயே திரு.ஜெயசீலன் கூறும் “இந்திய அடையாளத்தின் அபாயத்தினை நாம் அணுகிக்கொள்வது பயன்தரும் ஒன்றாய் இருத்தல் கூடும்”, என்ற கூற்றும் தனது முக்கியத்துவத்தை ஏந்துகின்றது.
6
அதாவது, மேற்கண்ட, “இந்தியத் தொடர்பாடல்” அல்லது “இந்திய உறவுமுறை” என்பது “இந்திய அடையாளம்” என்பதிலிருந்து வேறுபடுகின்றது. இவ்வேறுபாடு, தெளிவானது என்றாலும், இவை இரண்டுக்கும் இடையில் இருக்கக்கூடிய ஒட்டுறவு என்பதானது குறிப்பிடத்தக்கதாய் இருக்கின்றது. இவ் ஒட்டுறவானது, சமயங்களில் எம்மக்களுக்குச் சாதகமாகவும் சமயங்களில் பாதகமாகவும் இருந்துள்ளன.
உதாரணமாக, இந்திய மக்கள், கூலிகளாகப் பெருந்தோட்டங்களைத் திறக்க இலங்கை அழைத்து செல்லப்பட்டனர் என்பது தொட்டு இவர்களைப் பணயமாக ஆக்கி, ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தங்களை, இவர்கள் தலையில் நிறைவேற்றப்பட்டன என்பது போன்ற உண்மைகள் ஒருபுறத்தே இருந்தாலும், ரூவாண்டாவில் நடந்தேறிய “டுட்டு” இனத்தவரின் படுகொலைகள் போன்று (5-8 லட்சம் பேர் : 1994), மேலும் காஸாவில் இன்று நடந்தேறும் தினசரி படுகொலைகள் அல்லது 77-83 வன்செயல்கள் அல்லது இவை போன்ற முள்ளிவாய் படுகொலைகளாய் விஸ்திரிக்கப்படாமல், ஏதோ ஒரு விதத்தில், தடைகற்களாக இருப்பதற்கு இந்தியா என்ற எதார்த்தம் துணைநிற்கவே செய்கின்றது என்பதிலும் உண்மை இருக்கவே செய்கின்றது.
வேறுவார்த்தையில் கூறுவோமானால், இலங்கையின் பெருந்தேசிய வாதத்தின் கோர முகத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை என்பதும், இக்கோர முகத்தைக் கட்டுப்படத்தும் ஒரு காரணியாக, இந்தியா என்ற தேசத்தின் இருப்பு உண்மையா என மதிப்பிட்டுக் கொள்வதில், நாம் நிதானம் காட்ட வேண்டியே உள்ளது.
ஆனால் இலங்கையின், ஆதிக்கச் சக்திகளைக் காக்கும் கடப்பாட்டையும், இதே இந்தியாதான் கொண்டிருக்கின்றது என்பதே பிரச்சனையின் மூல வேராகின்றது.
1971ல் ஜே.வி.பியினரின் எழுச்சி அல்லது 1989ன் எழுச்சி, இவற்றை அடக்கி, இலங்கையின் அரசு இயந்திரத்தைக் காப்பாற்றுவதில் இந்தியாவின் பங்கு கணிசமாகயிருந்துள்ளது என்பதனையும் மறப்பதற்கில்லை. ஆனால் இவ் யதார்த்தம், பங்களாதேஷ்-முஜிபூர்ரஹ்மான் அல்லது நேபால்-நேபாலின் அரச குடும்பம் - போன்ற விடயங்களின் பின்னணியில் நோக்கத்தக்கது என்பதனையும் இங்கே கூறியாக வேண்டும்.
சுருக்கமாகக் கூறினால், இந்தியத் தொடர்பாடல் என்பது பன்நெடுங்காலமாய் இருந்து வந்துள்ளது என்ற போதிலும், யார் யாருடன் இத்தொடர்பாடல்களைப் பேணினர் - அதுவும் எத்தகைய சூழ்நிலைகளில் - எப்படி எப்படி – என்பது சற்றே நிதானிக்கத்கக்கது. (உதாரணமாகக் கள்ளக்கடத்தல் என்பது கூட அதற்கே உரித்தான வலைப்பின்னல்களைக் கொண்டிருந்தது என்பது போல உழைக்கும் மக்கள் அவர்களின் வலைப்பின்னலை உருவாக்குவது இயல்பானதே).
ஆனால், வரலாற்றின் மாறுதல்களோடு, இன்று இந்தியாவின் நெருக்கமும் அதன் வகிபாகமும் முற்றாக மாறியுள்ளது.
உழைக்கும் மக்களின் தொடர்பாடல்கள், ஒருபுறம் நடந்தேறினாலும், மறுபுறத்தில், இலங்கை பெரும் தேசியவாதத்தின் கொடூர முகம், வேறுபட்ட யதார்த்தத்தைக் கிளப்புவதாகின்றது. கூடவே, இடம்பெற்றுவரும் பூகோள நெருக்கடிகளும், இந்தியா என்ற துணைக்கண்டத்தின் பிரமாண்டமான பொருளாதார – விஞ்ஞான வளர்ச்சியும், இலங்கையில் இன்று சிறுபான்மையினர் முகங்கொடுக்கும் பாதக நிலைமைகளும், கூடவே, ஜே.வி.பியினரை இந்தியா அழைத்த விதமும் எவ்வளவு சகஜமானதோ அந்தளவு சகஜமானதாய், இன்று இலங்கை-இந்தியா தொடர்பிலான இன்றைய நகர்வுகளும் அமைந்து போகின்றன.
இச்சூழ்நிலையிலேயே, மலையக மக்களின் “இந்திய அடையாளத்தின்” முக்கியத்துவமும் சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டியதாகின்றது.
7
“இந்திய வம்சாவளித் தமிழர்” என்பது இம்மக்களை வகைப்படுத்த, புழக்கத்திலும் புத்தகங்களிலும் இருந்துவரும் ஒரு சட்டவரைமுறை ஆகும்
திரு.சாந்திகுமார் எழுதுவார் : “இவ்வகைப்படுத்தலின் அடிப்படையிலேயே “இந்தியத் தமிழர்” என்போர் வடக்கிற்கான இலங்கைத் தமிழ் மக்களிடமிருந்து வேறுபடுகின்றனர்”.
கனவுகள் எப்படி எப்படி இருந்தப்போதிலும், இவ்வேறுபாடுகள் இவ்விரு மக்கள் சமூகங்களிலே, ஜீ.ஜீ.பொன்னம்பலம் காலம் தொட்டு திரு.யோதிலிங்கம் அவர்கள் எம்மக்களைச் “சேமிப்புச் சக்திகள்” என அடையாளம் கண்டுக்கொள்ளும் வரையிலும் தொடர்ந்தே உள்ளது.
கலாநிதி கதிர்காமர் அவர்கள் ஒரு நேர்காணலில் பின்வருமாறு கூறினார் : “இன்றைக்குக் கூட, உதாரணமாக, கிளிநொச்சியில் சில கிராமங்களுக்குப் போனால் அங்கு வசிக்கும் மலையகத் தமிழ் மக்களுக்குச் சரியான உறுதிக்காணிகளில்லை, விவசாயக் காணிகளில்லை. ஏதாவது ஒருவகையில் விவசாயக் காணியொன்றைக் கைப்பற்றிக் குடியேறியிருந்தாலும் நீர்பாசன வசதியில்லை. பல கிராமங்களில் அவர்கள் குளத்துக்கு அண்மையில் வசித்து வருகின்றார்கள் ஆனால் அந்த குளத்திலிருந்து வரும் நீர் அந்த மக்களுடைய காணிகளுக்குச் சென்றடைவதில்லை. அவற்றைத் தாண்டி வேறொரு விவசாயக்காணிக்குப் போகிற ஒரு நிலைமைதான் காணப்படுகின்றது”. (மௌனிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மலையக மக்களின் வாழ்வியல் : 10.12.2024).
இதற்குத் ‘தமிழ்க்கவியின்’ வரிகள் சுருதி சேர்ப்பதாக உள்ளதும் நோக்கத்தக்கதே. இவையும் “சேமிப்புச் சக்திகளைப்” போன்றே துயர்தருவது என்றாலும், நிலவும் யதார்த்தங்களை மேற்படி விடயங்கள் சுட்டிக்காட்டுவதோடு, கலாநிதி கதிர்காமர் போன்றோரின் பரந்த இதயங்களின் இருப்பையும் சுட்டிக்காட்டுகின்றது.
அதாவது, மேற்படி அடையாளங்கள், சமயங்களில் எமது விருப்பு வெறுப்பை கடப்பனவாக உள்ளன. என்பது யதார்த்தம். இவ்வேறுபாடுகளைக் களைந்தெறியும் முயற்சிகளும் ஆங்காங்கே நடைபெறுவதாகவே உள்ளன –ஒரு சிறியளவில் என்றாலும், அதனையும் நாம் சுட்டிக்காட்ட கடமை பூண்டுள்ளோம்.
8
இவை ஒருபுறமிருக்க, அண்மித்த காலங்களில் எம்மக்களின் இந்திய வம்சாவளி அடையாளத்தைக் கத்தரித்து விடுவானது, இந்தியத் தலையீட்டை உடனடியாக தடுத்து நிறுத்திவிடும் என்ற எண்ணப்பாட்டிற்க்கு, இலங்கையின் ஆதிக்க சக்திகளிடை, வந்து சேர்ந்து வந்துவிட்டனவோ, என்று ஐயுறவு எழும் வகையில் சிற்சில நடவடிக்கைகளும் நடந்தேறுவதாகவே உள்ளன.
உதாரணமாக, குடிசன தொகை மதிப்பீட்டுகளில் அல்லது இனவாரியான பகுப்புகளில், இந்திய வம்சாவளி தமிழரை, இலங்கைத் தமிழராகப் பதிவு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இருப்பினும் இம்முயற்சிகள், இடைநடுவே, இந்தியத் தலையீட்டினாலோ அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்தினாலோ இடைநிறுத்தப்பட்டன. ஆனாலும், மலையக அரசியல் மட்டத்திலேயே, இதற்கான தெண்டிப்பு, ஊக்குவிக்கப்படுவதாகத் தோன்றுகின்றது.
கேகாலை மாவட்டத்தில், உரையாற்றிய, மனோகணேசன் அவர்கள், “அடுத்தமுறை இங்கே தமிழ் எம்பி தெரிவாவார்” என்று சூளுரைப்பதனையும், தொடர்ந்தாற்போல் மலைநாடு என்பது புவியியல் அடையாளத்தையும், “மலையகம்” என்பது இனவியல் அடையாளத்தையும் குறிக்கும் எனப் புதிய வரைவிலக்கணத்தை வகுத்தளிப்பதையும் நாம் காண நேர்கின்றது. (தமிழ்வின் : 28.05.2024).
விக்னேஷ்வரனின் ஐயாவின் பாத்திரத்தை, மிக அருமையாக, மலையகத்தில் பல வருடங்களாய் ஆடிவரும் மனோகணேசன் அவர்களின் மேற்படி அறிவிப்பு மேலோட்டமாகப் பார்க்குமிடத்து சூதுவாது அற்றதுப்போலவும், ஆழமற்றது போலவும் தென்படலாம். ஆனால், இந்தியாவைக் கத்தரித்துவிடும், ரணில் விக்ரமசிங்கவின் அதே விருப்பு, இங்கேயும் மிக மிக ஆழமாகக் காணக்கூடியதாக உள்ளதோ என்ற ஐயுறவு எழும்பியே தீர்கின்றது.
இலங்கையின் சிறுபான்மை இனங்களில் ஒன்றாகவும், இவர்களின் நலன்களை உண்மையாக முன்நகர்த்த தேவைப்படும் சட்ட மூலங்களை, உறுதிசெய்தபின்பு வேண்டுமானால், இம்மக்களை அடையாளப்படுத்த, இப்புதிய வரைவிக்கணங்களை நோக்கி பயணிக்கலாம். ஆனால் அதுவரை, இவ் அடையாளங்களோடு விளையாட முயற்சிப்பது ஆபத்தாகவே முடியும் என்பதில் ஐயமில்லை.
திரு.சாந்திகுமார் ஒரு கட்டத்தில் கூறினார் : “சட்ட மற்றும் ஆவண ரீதியிலான தேசிய இனவாரியான அடையாள பகுப்புகளிடையே, தமது உறுதியான இருப்பும் அடையாளமும், என்பது குறித்த “தெளிவு” மலையக மக்களிடையே இருப்பது இன்று அவசியமாகின்றது”.
அவர் குறிப்பிடும் “தெளிவு”, “அவசியமாகிறது” என்ற வார்த்தைகள் தமது முக்கியத்துவத்தை, இன்று, பெருமளவு ஏந்துவதாக உள்ளன.
இவ்விடத்திலேயே மலையக மக்களை “உசுப்பேத்தும்” எமது புலம்பெயர் அரசியலின் நிகழ்ச்சி நிரலும் இடம்பெற செய்கின்றது. இருண்ட அல்லது சிதைவுற்ற மலையகம் என்று பாடல் பாடும் இவர்களின் பாடல், ஒரு நிரந்தர இருட்டை நோக்கி கொண்டு சென்று விடுமோ எனும் கேள்வி எழுவதற்கான தர்க்கங்களும் ஆதாரங்களும் உண்டென கூறலாம்.
இதனாலேயே, வடகிழக்கின் தேசியத்தை முள்ளிவாய்க்கால் வரை அழைத்து சென்றவர்கள், மலையகத் தேசியத்தை எதுவரை கொண்டு செல்வர் என்ற கேள்வியை மையப்படுத்தி நாம் நிதானிக்க வேண்டியுள்ளது. காரணம் இக்கேள்வியானது எமது விருப்பு வெறுப்புக்களை கடந்தது.
இந்தியாவுக்கு எதிரான இவர்களின் மிக ஆழமான வெறுப்புகள் புரிந்துக்கொள்ள கூடியனவே. ஆனாலும், இப்போக்குகள், மேலே விவாதிக்கப்பட்ட விடயங்களை, தத்தமது ஆழமான பரிசீலனைக்கு எடுத்துள்ளனவா என்பதுவே கேள்வியாகின்றது.
மலையகத்திலும் ஒரு தேசிய பூகம்பம் வெடிக்கட்டும் என இப்போக்குகள் கருதுவது, உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புக்குச் சமமானது எனக் கூறுவதில் மிகை அர்த்தம் ஏதுமில்லை. ஓரடி முன்னகர்வதும், பின் ஈரடி சரிவதும் இங்கே நடைமுறையாகியுள்ளது.
இதனை, ஒரு நாற்பது வருட, கடந்த கால உதாரணங்களைக் கொண்டு மதிப்பிட்டு பார்த்தால் -(திரு.விக்னேஷ்வரன் ஐயாவின் வடமாகாண சபை துவக்கம், மனோகணேசனின் புதிய வரைவிலக்கணங்கள் வரையிலும்,) இவை வேதனை தருவதாகவே, இருக்கின்றன.
இன்று, அதாவது, ஓர், 200ம் ஆண்டின் முடிவில், மலையகம் முன்வைக்க கூடிய கேள்விகள் இன்று பற்பலவாக இருக்கக்கூடும். ஆனால் இதற்கான பதில் ஒரு பெருந்தேசிய வாதத்திற்குத் துணைபோவதாகவோ அல்லது ஏனைய சில உசுப்பேத்தல்களுக்குப் பலிகடாக்கள் ஆகுவதோ, என்பதெல்லாம் துயர்தருவதே ஆகும். இப்பின்னணியிலேயே, இந்தியத் தொடர்பாடல் எனும் கேள்வி நிதானத்துடன் அணுகப்பட வேண்டிய ஒரு நடைமுறையை வலியுறுத்துவதாயுள்ளது. இதனை விடுத்து ‘ஜெய்சங்கருக்கு வகுப்பெடுத்த தமிழ்த் தலைமைகள்’ என்று மகிழ்ச்சியுடன் தலைப்பு செய்தி எழுதுவது எளிது (தமிழன் : 23.06.2024). ஆனால் யாரின் துண்டுதலால், இவ்வாறு எழுதப்படுகின்றது - இதன் மொத்த விலைகளைச் செலுத்தப்போவது யார், என்பது வேறு வகையிலான கேள்விகள் என்பது தெளிவு.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.