1
கிட்டத்தட்ட இருபத்திரண்டு வயதே அரும்பியிருக்கக்கூடிய பாரதி என்ற இந்த இளைஞனை இனங்கண்டு, அவனை மதுரை சேதுபதி கல்லூரியிலிருந்து, சென்னை சுதேசமித்திரனிற்கு இட்டுவந்த பெருமை, திரு.ஜி.சுப்ரமணிய ஐயரையே சாரும். மதுரை சேதுபதி கல்லூரியில் தமிழாசிரியனாய் இருந்த இவ் இளைஞன், தனது தமிழாசிரியர் பதவியை விட்டுவிட்டு, விடுதலைப்போர் மோகம் சூழ்ந்த காலத்தில் ஓர் பத்திரிகை தொழிலில் - அதுவும் பதவி இன்னதெனச் சரியாக நிர்ணயிக்கப்படாத ஒரு சூழலில் சென்று சேர தீர்மானம் கொண்டது – அவனது வாழ்வில், அவன் எடுத்து வைத்த முதல் திருப்புமுனை படிகளில் ஒன்றாகின்றது (1904 – நவம்பர்). இம்முடிவு, இவ் இளைஞனை ஒரு பரந்த உலகத்தை நோக்கி உந்தித்தள்ளி இருந்திருக்க வேண்டும். குறுகிய காலத்துள், பல்வேறு திறமைகளால் தன்னை நிரூபித்துவிடும் இவ் இளைஞன், அப்பத்திரிகையின் உபபத்திராதிபராய், சில மாதங்களிலேயே நியமிக்கப்படுகின்றான். திரு.ஜி.சுப்ரமணிய ஐயரின் வியப்பையும், விநோதத்தையும், வாஞ்சையையும், சம்பாதித்துக்கொள்ளும் இப்புதிய இளைஞனை அவர் மிகுந்த பிரியத்துடன் பார்க்கின்றார் - அதிசயத்துடன்.
வேல்ஸ் இளவரசரை வரவேற்கும் கட்டுரையின் துவக்கம் :
1905 நவம்பரில் சக்கரவர்த்தினியில் வேல்ஸ் இளவரசனை வரவேற்று அவன் பின்வரும் பொருள்பட எழுதியது அவனது அன்றைய சிந்தனை ஓட்டத்தை எடுத்துரைப்பதாக இருக்கின்றது : “கோழி முட்டையை ஏழுமுறை இளவரசியின் தலையைச் சுற்றி உடைப்பதும், பின் அவளது தலையில் அரிசியைக் கொட்டுவதும் (அட்சதை), பின், அவளது கன்னத்தில் கைவைத்து அவளைத் திருஷ்டி கழிப்பதும், குங்குமத்தை அவளது நெற்றியில் தீட்ட முயற்சிப்பதும் - அது அந்த வேல்ஸ் இளவரசிக்கு பிரியமில்லையாம் - எனவே அவ் விஷேசம் நடத்தப்படவில்லையாம்…” (பக்கம் - 81).
மொத்தத்தில், ஒரு பழங்குடி “ஆப்பிரிக்க நடனத்தை” இந்துமாதர்கள் இப்படி ஆடியிருப்பதைக் கண்டு வெட்கித் தலைகுனிகின்ற இவ் இளைஞன், தர்க்கிக்கிறான்: “இதனால் இளவரசி ஒன்றும் மகிழ்வெய்த போவதில்லை. மிகக்குறைவாகவே நம்மை மட்டிடுவார். இதனை விடுத்து இளவரசி வந்ததன் அடையாளமாக “இந்து மாதர் ஐஸ்கூலை” ஸ்தாபிதம் செய்யலாம்”: என யோசனை கூறுகின்றான்”. (பக்கம் -82-84).
அதாவது, இவ் இளைஞன், தமிழர்களின் பின்னடைந்த நாகரிகங்களை வெறுப்பவனாகவும், அதன் உள்ளூர ஓடும் காலனித்துவ அடிமைத்தனத்தைக் கண்டிப்பவனாகவும், இதனையே உள்ளூர மெச்சிக்கொள்ளும் ஆங்கிலேயரின்பால் கடும் விரோதம் பூண்டவனாகவும் இருப்பது அவனின் இளைமைக்காலத்து குணாதிசயங்களில் ஒன்றாக இருக்கின்றது (23 வயது). அதாவது சிங்கத்தின் சீற்றத்தைப்போல் இக்குணாதிசயங்கள் இவ் இளைஞனின் உடன்பிறப்பாகின்றன.
இத்தகைய சிங்கத்தைத்தான் சுதேசமித்திரனின் ஆசிரியரான திரு.ஜி.சுப்ரமணிய ஐயர் தனது பத்திரிகையில், உபபத்திராதிபராக ஆக்கி, காங்கிரஸ் மாநாட்டுக்கும் அழைத்துச் செல்கின்றார் (1905 டிசம்பர்). இதனை ஒட்டிய காலங்களில் வெளிப்படுத்திய பண்புகள் எமது கரிசனைக்கு உரியது. (1905 செப்டெம்பர் - டிசம்பருக்கும் இடைப்பட்ட காலம்).
இதனை ஒட்டிய காலத்தில் வங்கமே வாழிய (செப்டம்பர் 1905 –பக்கம் 62), எங்கள் நாடு (24.10.1905), வந்தே மாதரம் (நவம்பர் 1905), பாரத குமாரிகள் (ஜனவரி 1906), வேல்ஸ் இளவரசனுக்கு பாரத கண்டதாய் நல்வரவு கூறுதல் (29.01.1906) ஆகிய படைப்புகளைத் இவன் தருகின்றான். அதாவது, தனது ‘வேல்ஸ் இளவரசன்’ கட்டுரையை எழுதச் சற்று முன்னரும், பின், அடுத்த இரு மாதங்களில் காசி காங்கிரசிற்கு அவன் சென்று வந்தது வரையிலுமான இடைக்காலத்தில், அவன் எழுதிய படைப்புக்கள் முக்கியத்துவப்படுகின்றன. இதில் வந்தே மாதரம் எனும் திவ்ய கீதத்தை மொழிப்பெயர்க்க துணிந்தது “கர்வம் கொண்ட செய்கையினால் அல்ல” என்றும் அவன் கூறுகிறான். பங்கிம் சந்திர சாட்டர்ஜீயின், “ஆனந்தமடம்” என்ற நாவலில் மேற்படிப்பாடல் அதன் பகுதியாகவே அமைக்கப்பட்டுள்ளது.
ஆனந்த மடம் :
1724ல் அநேக சந்நியாசிகள், ஒன்றுகூடி அந்நியரை விரட்ட திடசங்கற்பம் பூண்டு, மந்திர ஆலோசனை செய்கின்றார்கள். அவர்கள் ரகசியமாகச் சந்திக்கும், ஆள்நுழையமாட்டாத கருங்காட்டு மறைவிடமே இந்நாவலில், “ஆனந்தமடம்” என சித்தரிக்கப்படுகின்றது, “இவர்கள் மகமதிய படைகளை பல இடங்களில் தோல்வியுற செய்ததுமின்றி, ஓர் ஆங்கில பட்டாளத்தையும் முறியடிக்கின்றார்கள். பிரிட்டிசார் விடாமல் இவர்களைத் தாக்கியதன் விளைவாக, இந்த வீர சந்நியாசி கூட்டம் பிரிந்து போகின்றது. இவ்வீர துறவிகளில் ஒருவரான பாபாநந்தன் எனும் துறவி, வந்தேமாதரம் என்ற ஆரம்ப வரிகொண்ட அரிய கீதத்தைப் பாடியதாக, பங்கிம் புலவர், தனது நூலில் கூறியுள்ளார்…”
இவ் இளைஞனின் மொழிபெயர்க்கும் ஆற்றல் :
இவ்இளைஞனின் மேலே, கூறப்பட்ட கூற்றுக்களில், இரண்டு விடயங்கள் முக்கியத்துவப்படுகின்றன. ஒன்று, மதத்துடன் இணைந்த தேசியத்தை அவன் விதந்துரைப்பது (அல்லது மதத்தைப் புனர்நிர்மாணம் செய்துக்கொள்வது). மற்றது, இவ்இளைஞனின் மொழிப்பெயர்க்கும் லாவகமும், தனிச் சிறப்பும்.
பங்கிம் புலவரது பாடலின், ஆங்கில வரிகள் வருமாறு இருக்கின்றன :
“In Thee all knowledge, Religion thou,
Thou, the Heart, Thou, the seat of life,
The “breath of life in the flesh” (பக்கம் - 105)
இதற்கான இவ்இளைஞனின் மொழிபெயர்ப்புத் தமிழ் வரிகள் வருமாறு,
நீயே வித்தை
நீயே தர்மம்
நீயே இதயம்
நீயே மர்மம்
உடலகத் - திருக்கும்
முயிரும் நீயே
குறிப்புகளில் இவ்இளைஞன் பின்வருமாறு எழுதுகின்றான் : “ஆங்கில மொழிப்பெயர்ப்பானது சிறிது மாறுபட்ட தோற்றம் கொண்டிருப்பதால் பெங்காலி சொற்களைத் தழுவியே தமிழில் எழுதப்பட்டிருக்கின்றது” (பக்கம் 107).
ஆங்கிலத்தையும் தமிழையும் நாம் ஒப்பு நோக்கும் போது இக்கூற்றுச் சரியானதென்பது, வெளிப்படையாகின்றது. பங்கிம் புலவராலேயே, மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டிருக்கக்கூடிய, ஆங்கிலப் பாடலை, அவன் நிராகரிக்கத் துணிகின்றான் என்பதே நாம் இங்கு கவனிக்கத்தக்கது. ஆங்கிலத்திலிருந்து இவன், புறப்பட்டு, பெங்காலி மொழியை நோக்கி நகர்கின்றான். இது இவனது மொழிப்பெயர்க்கும் ஆழ் புலமையைக் காட்டி நிற்கின்றது. கூடவே, சம்பிரதாயங்களில் சிக்கிக்கொள்ளாமல், அகன்று கொள்ளும் இவனது திராணியைச் சுட்டிக்காட்டுவதாயுள்ளது. இது முதலாவது விடயம். இரண்டாவது, “ஆனந்தமட” சந்நியாசிகள் முன்னெடுத்த கலகங்களை இவன் வழிமொழிந்து, இந்து புனருத்தாரண நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்றானோ என்ற நியாயமான சந்தேகம் இங்கு ஏற்படுவதாகும்.
ஆனால், தான் கூறிய ஒவ்வொன்றையும் மறுத்துரைத்தவன் இவன் எனக் கைலாசபதி ஒருமுறை கூறியது இங்கும், காணவே செய்கின்றது எனலாம். இருந்தும் அவனது தேசியம்தான் யாது? அதன் பண்புகள் எவை? என்ற கேள்விகளுக்கு இவை, எம்மை இட்டுச் செல்கின்றன. இவ்வகையில், இக்காலகட்டத்தில், ‘அவனது’ தேசியம், அவனது பாரத குமாரிகள் என்ற கட்டுரையில் பின்வருமாறு வெளிப்படுவதாயுள்ளது : “சென்ற ஐம்பது வருடங்களாக இந்நாட்டிலேயே பல ஜனாசாரங்களையும், சமய நிலைகளையும் ராஜாங்க மாதிரிகளையும் திருத்திவிட வேண்டும் என்று பகிரத பிரயத்தனங்களையும் செய்து பார்க்கிறார்கள். இவர்களது முயற்சிகளில் பெரும்பாலும் அரைகாசுக்கு பயன்படவில்லை. இம்மாதிரி இன்னும் இவர்கள் ஐம்பது வருடம் முயன்ற போதிலும் திவலை பயன்பட போவதில்லை” (பக்கம் - 145 -23-24 வயது).
இதில் “ஜனாசாரங்களையும், சமய நிலைகளையும்” என இடம் பெற்றுள்ள வார்த்தைகள் எமது கருத்தைக் கவருவதாக உள்ளன. வேறு வார்த்தையில் கூறினால், சிலர் கருதுவதுபோல “பாரதி பக்தி எனும் காட்டாறு வெள்ளத்தில் மூழ்கி திளைத்தவன்” எனக் கூறுவதற்கில்லை. இதைப் போலவே, தனது “பாஞ்சாபி மாது” எனும் கட்டுரையிலும் இவன் பின்வருமாறு எழுதுகிறான்: “1469ம் வருடத்தில் தெய்வபக்தியும், தேசபக்தியும் ஒன்றாகி அவதரித்தது போல உதித்த நானக்ஸா என்ற…”(பக்கம் 65).
அதாவது, “தெய்வபக்தி” என்றும் “தேசபக்தி” என்றும் வேறுபடுத்தி அறிந்து வைத்துக்கொள்ளும் வகையில் இவ்இளைஞனின் அன்றைய புரிதல் காணக்கிட்டுகின்றது என்பது அவதானிக்கத்தக்கது.
கைலாசபதி, தனது நூலான இருமகாகவிகளில், பாரதி பொறுத்து கூறுகின்ற போது கூறுகின்றார் : “தேசபக்தியையே தெய்வபக்தியாக மாற்றிக்கொண்டார்” என (பக்கம் - 30).
இதில், எது தலையானது? தேசபக்தியா அல்லது தெய்வபக்தியா - என்பது தர்க்கம் சார்ந்த ஒன்றாகக் கூட இருக்கலாம். ஆனால், இச்சொற்கள் குறிக்கும் கருத்தாக்கம் பொறுத்த, எண்ணப்பாடானது, அக்காலத்திலேயே, இவ் இளவயது இளைஞனில் கிளை பிரிவதை நாம் காணக் கூடியதாக உள்ளதே குறிப்பிடத்தக்கது எனலாம். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், மேற்படி எண்ணங்களில் உள்ளடங்கும் வேறுபாடுகளை வேறுபடுத்தியும் பிரித்து அறிந்துகொள்ளும் திறனும் இவ் இளைஞனில் அன்றே அடி எடுத்து வைப்பதாக உள்ளது என்பதுவே முக்கியமாகின்றது.
2
தாதர்கள் பொறுத்த அவனது எண்ணப்பாடு :
இது போலவே “தாதர்கள்” பொறுத்தும் அவனது எண்ணப்பாடுகள் குறிப்பிடத்தக்கதாகின்றது :
“இங்கிலாந்து சென்று உயர் பரீட்சை தேறிவருவோர்களிற் பெரும்பாலர் சுதேசபிமானம் சிறுதேனும் இல்லாமல் இத்தேச சனங்கள் ஏதோ தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் போலவும், தாம் ஏதோ இங்கிலாந்து சென்று திரும்பியதும்… தெய்வப்பிறவி எடுத்துவிட்டது போலவும் பாவனை செய்துக்கொண்டு இருப்பதை நாம் கண்டிருக்கின்றோம்…” (பக்கம் - 66 : ஒரு பஞ்சாபி மாது : ஒக்டோபர் 1905).
இவ்வரிகளில் தென்படும், உக்கிரமான விமர்சனமானது காலனித்துவ அடிமைதனத்துக்கு எதிரான வன்மம் கொண்டது என்பது மாத்திரமல்லாமல், இவ்இளைஞனின் ஓர் இருபத்து மூன்று வயதில், இப்படி, ஆழமான ஆங்கிலேய எதிர்புணர்வைக் காட்டுவது அதிலும், தேடிச் சோறு தின்பர்பால் ஆத்திரம் கொள்வது, ஆச்சரியப்படவைப்பது.
இதுபோலவே, தனது வாழ்நாளில், பிற்பட்ட காலத்தில், தனது சுயசரிதையில் இவன்; பின்வருமாறு பாடியுள்ளதைக் கைலாசபதி எடுத்துக்காட்டுகின்றார் :
வாங்கி யுய்ந்த கிளைஞரும் தாதரும்
வாழ்வு தேய்ந்தபின் யாது மதிப்பரோ?
கைலாசபதியின் கூற்று :
“துரைத்தன உத்தியோகத்தர்களை, “தாதர்கள், (என்றும்) சேவகர்கள் என்று (ம்) அலட்சியமாக (பாரதி) குறிப்பிட்டார்” (ஒப்பியல் இலக்கியம் : சிந்துக்குத் தந்தை : பக்கம் 161).
(காணிநிலம் தேடி மத்திய கிழக்கை நாடிச்செல்லும் இளைஞர் கூட்டத்தையும், நாம் அறிந்தே உள்ளோம் என்பதனையும் ஒப்புவமைக்காக இவ்விடத்தில் கூறியாக வேண்டும்).
அதாவது 1910ல் (28 வயதில்) “தாதர் என விளித்த இவனது அலட்சியப்பார்வையானது” இவனது 23ஆம் வயதினிலேயே இவனில் குடிப்புகுந்திருப்பதைக் நாம் காண்கின்றோம். இவ்விடத்தில், இரு விடயங்கள் எமது கருத்தை ஈர்ப்பன : ஒன்று, மேற்கத்திய உலகு பொறுத்து அவனுக்கு இருக்கக்கூடிய காழ்ப்புணர்வு மற்றது அவனது வயது. மூன்றாவது, தனது தவத்தைத் தன் வாழ்நாளில் மாற்றாது பேணிப் பாதுகாக்கும் அவனது திராணி.
3
பெண்களின் தாழ்வு நிலை :
பெண்களின் தாழ்வு நிலைபொறுத்து, இவ்இளைஞன் அவனது இளவயதில் கொள்ளும் அவதானம் முக்கியமானது. “பாரத குமாரிகள்” என இவன் ஜனவரி 1906ல் எழுதியுள்ள கட்டுரையில், தனது எழுத்தின் நோக்கத்தையும் மறைமுகமாக எடுத்தியம்பவே செய்கின்றான். “நமது தேசத்தின் ஆதார சக்திகளாகிய மாதர்களின் ஹிருதயமும் அவர்களது ஆன்மாவும் இருளடைந்து போக விட்டுவிடுவதைக் காட்டிலும் பாதகச்செயல் வேரில்லை. ஞானகிரணங்கள் அவர்களது ஆன்மாவில் தாக்குமாறு செய்தாலன்றி நமக்கு வேறு விமோசனம் கிடையாது”.
“Can man be free if woman be a slave?” என்ற ஆங்கிலப் புலவனொருவனின் வாக்கினை மேற்கோள் காட்டி இவன் பெங்காலி தேசத்தின் “சரளதேவியின்” பாத்திரத்தினூடு தனது வாதத்தை முன்வைக்கின்றான் : “சரளதேவியின் கோரிக்கையின் படியும், நம் தேசத்து மாதர்கள் உயர்நிலை அடைந்து, தலைக்க வேண்டும் என்று மனதார விரும்புகின்றோம்” (பக்கம் 145).
சரளதேவி பொறுத்து அவனது குறிப்பு அவனது கட்டுரையிலேயே காணக்கிட்டுகின்றது : பரம்பூரில் வேட்டையாடிக்கொண்டிருந்த ஓர் ஐரோப்பியன் ஓர் இந்தியக் கூலியைச் சுட்டுக்கொன்றுவிட்டான். இதற்காக சரளதேவி ஒரு நிதி சேகரித்திருந்தாள். (அந்தக் கூலியாளின் மனைவியின் வாழ்க்கை செலவுக்காக) ஆனாலும் அந்த மனைவி… எந்த இடத்திற்கோ போய்விட்டாள்… அவளது இருப்பிடத்தை அறிய… பிறர்… செய்த முயற்சி (யாதும்) பயனளிக்கவில்லை… இப்பணத்தைக் கல்கத்தா சுதேசிய நிதிக்குக் கொடுத்துவிட சரளதேவி உபதேசம் செய்கிறார். பணம் உதவிய சனங்கள்… வேறுதக்க உபாயம் சொல்லக்கூடும் என… மே 15ம் திகதிவரை காத்திருக்கப் போகிறாள்…”
“சரளதேவி வங்காளத்து தேசபக்த அனலைத்தூண்ட மூலக்காரணமாக இருந்தவள்” என பாரத ஜனசபையின் 1920ன் குறிப்பும் கூறுகின்றது (பக்கம் 151).
இதுபோலவே, அவனது “துளசிபாயி” என்ற சிறுகதையும் நவம்பர் 1905ல் வெளியாகின்றது. அதாவது, “பஞ்சாபி மாது” என்ற கட்டுரை, வெளிவந்த ஒரு மாதத்தில் அவனது துளசிபாயி என்ற சிறுகதை வெளிவருகின்றது.
துளசிபாயின் சிறுகதை வடிவம் :
சிறுகதையில் வடிவம், செய்நேர்த்தி என்பவை ஒருபுறமிருக்க அதில் உள்ளடங்கும் விடயதானங்கள் முக்கியமானது.
மதிப்புக்குரிய சீனி விஸ்வநாதன் அவர்கள் குறிப்பது அவதானிக்கதக்கது : “இது இவன் எழுதும் முதலாவது குறுங்கதை”. முதலாவது சிறுகதையிலேயே இவ்வளவு நேர்த்தியா என்பதும் எமது கேள்வியாகின்றது. “ஷெல்லிதாசன்” என்று சிறுகதை ஆசிரியனாக, தன்னைத்தான் அழைத்திருக்க கூடிய இவ் இளைஞனின் இன–மத தேசத்திற்கான ஒற்றுமை சார்ந்த ஆழ்உணர்வும், மாதர் உடன்கட்டை ஏறுதலுக்கு எதிரான அவனது உக்கிர சத்திய தாபமும் இவனை ஆட்கொள்வதாயிருக்கின்றன.
அவளை மணமுடித்துக்கொடுக்க, அவள் கொண்டுசெல்லப்படும் விதம் குறித்து பின்வருமாறு கூறுகின்றான் பாரதி எனும் இவ்இளைஞன் :
“ஒரு மூடுபல்லக்கில்... ராஜபுத்திர கன்னிகையைச் சுமந்துக்கொண்டு… அவளை மணக்க நிச்சயித்து இருந்த ராஜபுத்திரனுடைய ஊருக்கு கொண்டு செல்கின்றார்கள்… (அங்கே) அவளை மரண பரியந்தம் வெளியேற ஒட்டாமல் ஓர் அந்தப்புரத்தில் அடைத்து விடுவார்கள்... இப்போது… கூட, அவள் பல்லக்கின்றும் வெளியே… சூழவிருக்கின்ற வனத்தின் அழகை அனுபவிக்க (முடியாமல்)… திரைக்கு வெளியேயுள்ள சுத்த ஆகாயத்தைச் சுவாசிக்கவேணும்… (விடாது)…” (பக்கம் 88).
இப்படி கூட்டிச்செல்லப்படும் அவளை ஓர் கொள்ளையர் கூட்டம் சூழ்ந்து கொள்கின்றது. பல்லக்கின் திரை கொள்ளையர்களால் கிழித்து எறியப்படுகின்றது. அவள் முரட்டுத்தனமாய் வெளியே இழுக்கப்படுகின்றாள். கொள்ளையன் ஒருவன் அவளது நகைகளையும் உரியத்தொடங்கிவிட்டான். இவ்விடத்திலேயே மகமதிய இளைஞன், (அப்பஸ்கான்) அவனது படையாட்களுடன் பிரவேசித்து தனது தாக்குதலை ஆரம்பிக்கின்றான். துளசியோ தன் பசுமை வாடி தரைமீது விழுந்துவிட்டாள். மகமதியன், கொள்ளையர்களை விரட்டியடித்தப்பின் அவளை கைப்பிடித்துப்போய் சிவிகையில் சேர்க்கின்றான். “மகமதிய குமரன் தன்னை…(காப்பாற்றினான்)… என்பதனை உணர்ந்த (அவள்) அவனைத் திரும்பி பார்த்து அன்பு மிகுதியோடு புன்னகை புரிந்தாள். அவனது வடிவும் இளமையும்… அவள் மனதே ஊன்றி வேர்கொண்டன… மகமதியனோ… அவள்மீது அடங்கா காதல் கொண்டான்…” (Who ever loved that not at first sight – Shakespeare) என்ற சேக்ஸ்பியரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டுகின்றான் பாரதி. மேலும் கூறுகின்றான்: இது “அனுபவ சித்தமென்றோ” என்பான். மேலும் கூறுவான் “அளவுகடந்த காதலுடைய ஸ்திரிபுருஷர்கள், தாம் இனிமேல், ஒருவரையொருவர் எப்போதும் பார்க்கப்போவதில்லை… என்று பிரியுங்கால்… அவர்கள் கண்ணோடு கண் பொருந்தி நோக்குவதை காட்ட வல்லநல்லேன்…”.
இப்படி பிரிந்துவிடும் அவர்கள் மீண்டும் சந்திப்பது ஒரு நதிக்கரை மயானத்தில். “ராஜபுத்திர கூட்டம்-சில பிராமணர்கள்-ஒரு பெண் கதறல்-அருகே நெருப்பு - பாடை – இது பாரதியின் வர்ணனை.” எனது காதல் ரோஜாவையா இப்பாதகர்கள் சாம்பலாக்க போகிறார்கள்… மகமதிய வாலிபன்… நெருங்கி… ஹிந்து கூட்டத்தாரிடை… நின்று கொண்டதைப்பார்த்த ராஜபுத்திரரக்ள்… பெரும் கோபம் கொள்கின்றார்கள்…“அவர்களின் வீர ரத்தம் பொங்க தொடங்கிற்று…”
இப்படியாய் விரியும் ஏளனம் தொடர்கின்றது : “பிராமணர்களோ மனதிற்குள் நடுங்கத்தொடங்கினர்” மகமதியன் கூறுவான் : “…அக்பர் சக்ரவர்த்தியின் ஆக்கினைக்கு (ஆணை). ஏதிராக (இவளை) நீங்கள் எரிக்கப்போகின்றீர்கள்… இந்த கொடூர செயலை நிறுத்திவிடுங்கள்… இல்லாவிடில் ராஜகோபத்திற்கு உள்ளாகி விடுவீர்கள்…” ராஜபுத்திர இளைஞன்: “சீச்சீ… மிலேச்ச நாயே… யாரடா ராஜா? பாரத பூமிக்கு மிலேச்சனடா அரசன்…” என்று “வாளால் ஒரு வீச்சு வீசினான் அப்பஸ்கான் குதிரையை பின்னுக்கு இழுத்தவாறே ஒதுங்கி தன் வாளை ஓங்கி ஒரு வெட்டு வெட்டினான். ராஜபுத்திரனின் தலை… துண்டாய் விழுந்துவிட்டது… பிராமணர்கள் மந்திர கோசத்தை நிறுத்திவிட்டார்கள். இப்படி தொடரும் கதை மேலும் கூறுகிறது… ராஜபுத்திர ஸ்திரியாகிய துளசிக்கு மகமதிய குலத்தார் மீதிருந்த இயற்கை விரோதமானது நீங்கிப்போய்விட்டது…” சாதி ஆச்சாரம் மத துவேசம் என்பன அழிந்துபோய்விட்டன… அங்கிருந்து அனைத்து இந்துக்களையும் துரத்தியடிக்கும் மகமதிய வீரன் “அவளை தனது அந்தபுரத்தில் சேர்ப்பிக்கின்றான்”.
பெண் விடுதலையைக் கோரி, உடன்கட்டை ஏறுதலை வெட்கமுற செய்து, இந்து – முஸ்லீம் அன்பை உயர்த்தி கதை எழுத எத்தகைய திராணியை இவ்இளைஞன் அன்று கொண்டிருக்க கூடும் என்பது கேள்வியாகின்றது. ஆனால் இதைவிட முக்கியமானது எழுத்தின் நோக்கத்தை இவன் ஆராதிக்கும் விதமேயாகும்.
இச்சிறுகதை வெளிவந்து (நவம்பர் 1905) இல். இரண்டு மாதங்கள் கழிய, அவனது “பாரத குமாரிகள்” எனும் கட்டுரையும் வெளிவருகின்றது (ஜனவரி 1906).
அதில் அவனது எழுத்தின் நோக்கம் என்ன என்பது குறித்து சற்றுத் தெளிவாகவே விளக்கப்பட்டுள்ளது. (இங்கு பேசப்படும் விடயத்தின் அழுத்தம் கருதி முன்னர் சுட்டிக்காட்டப்பட்ட பகுதி மீண்டும் எடுத்தாளப்பட்டுள்ளது.)
“ஆதார சக்திகளாகிய, மாதர்களின் ஹிருதயமும் அவர்களது ஆன்மாவும் இருளடைந்து போக விட்டு விடுவதைக் காட்டிலும் பாதக செயல்வேறில்லை. ஞானகிரணங்கள் அவர்களது ஆன்மாவில் தாக்குமாறு செய்தாலன்றி நமக்கு வேறு விமோசனம் கிடையாது” என அவன் பாரத குமாரிகள் கட்டுரையில் கூறுகின்றான். (பக்கம் 145).
சுருக்கமாகக் கூறினால், “ஞானகிரணங்கள், அவர்களது ஆன்மாவைத் தாக்குமாறு” செய்யும் வகையில் ஓர் எழுத்து உருவாக வேண்டும் என அவன் விரும்புவதாய் உள்ளது. ஆனால் இவ்விருப்பமானது, நிறைவேற்றப்பட வேண்டுமெனில், முதலில், அத்தகைய எழுத்தை உருவாக்கும் ஓர் ஆன்மா உருவாக வேண்டும் என்கின்றது.
ஆனால் தேவையுறும் ஆன்மாவானது, போதிய நுண்ணுணர்வை எய்திருந்தாலும் கூட, கார்க்கி கருதுவதுப் போல், முதலில் அவ்வான்மாவானது மக்கள் சாரியின்பால் ஈர்க்கப்பட்டதாய், நேயம் கொண்டதாய் இருக்க வேண்டும் என்பதே இத்தேவைப்பாட்டின் முதல்படிநிலை ஆகின்றது. ஆனால், இம்முதற்படிநிலையானது, “தான் - நான்” என்பதனை அகற்றிய “விட்டு விரிந்த மனநிலையை எய்த” கோருகின்றது. ஆக இவை அனைத்தும் கைக்கூடி, ஒருவனில் வாசம் செய்ய கிட்டுவது என்பது, மனுக்குல வரலாற்றில் “மா மனிதர்களிடையே”, அல்லது “மா கவிகளுக்கிடையே” சாத்தியமாகின்றது. இதன் முளைக்களையே பாரதி, என்ற இவ்இளம் வயது இளைஞனில் முளைவிட நாம் காண்கின்றோம். இம்முளைகளுக்கு நாளை யாது நடக்கக்கூடும் என்பதும், இது மனுக்குலம் தேடும் வித்துக்களில் ஒன்றாக உருவெடுக்கக் கூடுமா என்பதும் கேள்விகளில் ஒன்றாகின்றது.
இருளடைந்து கிடக்கும், ஹிருதயங்கள், ஒளிப்பாய்ச்ச தனது ஞானகிரணங்களால் தீட்ட முயற்சிப்பது அவனது தவம் என்று அன்றே அவ்இளைஞன் முடிவு செய்து கொள்கின்றான். இவ் எண்ணக்கருவுடனேயே, அவன், அன்று தேசிய காங்கிரஸின் கதவுகளையும் தட்டியிருக்கக் கூடும். ஆனால் இது அவனது முகத்தின், ஒரு பக்கம் மாத்திரமேயாகவும் இருக்கலாம்.
4
ஒரு தலைமையைத் தேடி :
நௌரோஜி குறித்த அவனது கட்டுரை செப்டம்பரிலும் (1905) கோக்லே குறித்த அவனது சித்திரம் டிசம்பரிலும் (1905) வெளிவருகின்றன.
1905ல் (டிசம்பர் 27-30) இடம்பெற்ற காசி காங்கிரஸ் மாநாட்டிற்குக் கோக்லே தலைமை வகித்தார் என்பதும் 1906 இறுதியில் (டிசம்பர் 26-29) இடம்பெற்ற கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிக்கு நௌரோஜி தலைமை வகித்தார் என்பதும் பதிவு.
இவ்விரு தலைவர்கள் பற்றிய இவனது குறிப்புகள் 1905ன் இறுதிப்பகுதியில் சக்கரவர்த்தினியில் வெளியாகின்றன :
நௌரோஜி பற்றிய அவனது குறிப்பு பின்வருமாறு கூறுகின்றது :
“இம்மஹான் இயற்றிய ‘இந்திய வறுமை’ என்ற சிறு புத்தகம்தான் தமது நெஞ்சில் தேசபிமான விதைகளை நட்டதென்று திரு.ஜி.சுப்ரமணிய ஐயர்” கூறியிருக்கின்றார்… கோக்லே, நௌரோஜியை தமது உபாசனை தெய்வமாக கொண்டிருக்கின்றார். “மகா ரிஷி, தாதாபாய்” என்று சொல்வதேயன்றி இவருடைய திருநாமத்தை திரு.ஜி.சுப்ரமணிய ஐயர் சாதாதரணமாக ஒருபோதும் உச்சரிப்பது கிடையாது. “தாதாபாய் இன்னும் பல காலமிருந்து நமக்கெல்லாம் பெரு நன்மை புரிய வேண்டும் என்றும் அவரைப்போல் இன்னும் பல வீரர்கள் இந்நாட்டில் தோன்ற வேண்டும் என்றும் நாம் முழுமனதுடன் விரும்புகின்றோம்…” (பக்கம் 55).
நௌரோஜி பொறுத்த இவனது குறிப்பைப் போலவே, ‘நம்பூத்திரிபாத்தின்’ குறிப்பும், நௌரோஜித்தே முதல்முதலாய் சுதேசித்தியத்துக்கு, அடிக்கல் நாட்டியவர் எனக் கூறுவதாய் அமைந்துள்ளது (A History Of Indian Freedom Struggle (E.M.S.N).
ஆங்கிலேயர், இந்தியாவிலிருந்து, இந்திய மூலவளங்களையும் பணத்தையும் சுரண்டி, இந்திய மக்களை எப்படி, எப்படி கொள்ளையடிக்கின்றார்கள் - இக்காரணத்தால் இந்தியா எப்படி ஏழ்மையுற்று வாடுகின்றது – என்பது போன்ற வாதங்களை இவரே முதன்முதலாய் ஓர் சீர்ப்படுத்தப்பட்ட பொருளாதார அடிப்படையில், ஆழ்ந்த தர்க்கத்துடன் எடுத்துரைத்தவர் என்றும் கூறப்படுகின்றது.
தனது “வடிந்து வற்றும் தத்துவம்” (THEORY OF DRAIN) என்ற தனது நூலுக்கூடு, இந்திய பொருளாதாரத்தின் அடிமை நிலையை, அதன் பொருளியல் வறுமையை, நவீன பொருளாதாரத்தின் அடிப்படைகளோடு தர்க்க ரீதியாக அவர் எடுத்துரைத்தவர் என்றும் நம்பப்படுகின்றது.
நம்பூத்ரிபாத்தின் பார்வையில், இந்திய தொழிலதிபர்களின் (Industrialists) நலன்களை இவர் பிரதிநிதித்துவம் செய்தவர் என்பது பதிவு.
இதேவேளை, கோக்லே பொறுத்து இவ்இளைஞன் ஆற்றிய குறிப்பும் நௌரோஜி பற்றிய இவனது குறிப்பு போன்றே, உள்ளடக்கத்தில் ஒன்றாக அமைந்துள்ளது எனலாம் : “ஸ்ரீ கோக்லே… போன்ற பெரியாரின் சரிதையை எம்தேசத்தார் அனைவரும் படித்து அனுபவிக்க வேண்டும்…” (1905 டிசம்பர் : பக்கம் 121).
சுருக்கமாகக் கூறினால் இக்கட்டுரைகளை எழுத உத்வேகம் தந்ததும் தூண்டி விட்டதும் திரு.ஜீ.சுப்ரமணிய ஐயராகவே இருக்கக்கூடும் என்றாலும் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லை என்பதாகின்றது. ஏனெனில் இவ்விரு தலைவர்களும், திரு.ஜீ.சுப்ரமணிய ஐயரின் அரசியலை முன்னெடுப்போர் என்பது வெளிப்படை.
கோக்லே பற்றிய கட்டுரையில் அவன் வருமாறு கூறுகின்றான் :
“சரீர களைப்பையேனும், மனக்களைப்பையேனும் சற்றேனும் பாராட்டாமல் இத்தேசபிமானிகளின், சிகாமணி காசி காங்கிரஸை தலைமை வகித்து நடாத்தியமை பெரும் வியத்தற்பாலது” (பக்கம் 121).
ஆனால், இக்கூற்றின் பிரகாரம், பாரதி இக்கட்டுரையைக் காசி காங்கிரஸின் பின்னாலேயே எழுதியிருக்க வேண்டும் என்றாகின்றது. ஏனெனில் கட்டுரையானது டிசம்பர் 1905ல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், காசி காங்கிரஸ் நடந்ததோ டிசம்பர் 27-30 எனப் பதிவுகள் கூறுகின்றன. அப்படியென்றால் ஒன்று, இக்கட்டுரையானது, அக்காங்கிரஸ் மாநாட்டுக்கு முன்னராகவே எழுதப்பட்டிருக்க வேண்டும் (எதிர்பார்ப்புகளோடு அல்லது வசதிக்கேற்ப திகதியானது இடப்பட்டிருக்க வேண்டும் என்றாகிறது).
5
காங்கிரஸின் ஆரம்பம் :
இவ்விடத்தில் ஒன்றைக் கூறியாக வேண்டும் : இந்திய காங்கிரஸ் என்ற அமைப்பானது ஆங்கிலேயராலேயே தோற்றுவிக்கப்படுவதாய்க் காணக்கிட்டுகின்றது. (அதாவது இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியானது ஆங்கிலேயரால் திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்டது போன்று) ஏனெனில் முதலாவது இந்திய காங்கிரஸிற்கு Hume என்ற ஆங்கிலேயரே செயலாளர் ஆனார் என்பது பதிவு. இது ஒருபுறம் இருக்க நௌரோஜி மக்கள் ஆர்ப்பாட்டங்களையும், எதிர்ப்புகளையும் ஆட்சேபித்தார் என்பதும் இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி நீடித்தாக வேண்டும் - சிற்சில திருத்தங்களோடு – என அபிப்பராயப்பட்டதும் அவரே என்றும் கூறப்படுவதுண்டு. போதாதற்கு, சுதேசமித்திரனின் ஆசிரியர், திரு.ஜி.சுப்ரமணிய ஐயர் அவர்கள் காசி காங்கிரஸிற்கு (1905) வேல்ஸ் இளவரசரும் பார்வையாளர்களாக பங்கேற்க வேண்டும் எனவும் தனது பத்திரிகையில் பரிந்துரை செய்துள்ளார். மற்றும், வேல்ஸ் இளவரசர் காசி மகாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது அதனை ஆதரித்த பெருமையும் திரு.ஜீ.சுப்ரமணிய ஐயருக்கு உண்டு. இவை அனைத்துமே பாரதி என்ற காட்டாற்றை எத்தகைய இக்கட்டில் தள்ளியிருக்கும் என நிதானிப்பது ஏற்புடையதே.
இவ்விடத்திலேயே காங்கிரஸ் மாநாட்டில், ‘திலக்-சந்திரப்பால்-ராய்’ ஆகிய மூன்று தலைவர்களுக்கூடு மாநாட்டில் ஒரு தீவிர போக்கும் தலையெடுத்து நகர்வதாயிருந்தது. மதுரை சேதுபதியில் இருந்து கொண்டுவரப்பட்ட இவ்இளைஞனின் கதையோ இருதலை கொள்ளி எறும்பாகியது காரணம், திலகரின் அரசியலால் இவன் ஆகர்ஷ்சிக்கப்படுவது தர்க்க பூர்வமாகின்றது.
அதாவது, நௌரோஜின் அரசியல், பாரதி என்ற இவ்இளைஞனுக்கு ஏற்புடையதாய் இருக்க முடியாது என்பது தெளிவு. இவனது அரசியல் ஒரு தீப்பற்றி எரியும் அரசியல். சாதியம் பொறுத்த அவனது எண்ணபாடும், மாதர்கள் பொறுத்த அவனது சிந்தனையும், தாதர்களை அவன் நோக்கிய விதமும், சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் அவன் காட்டிவரும் அக்கறையும் அவனுள் குமுறும் அரசியலை வெளிக்கொணர்வதாக உள்ளன. ஜனவரி 1906ல் அவனது கூற்றுப் பின்வருமாறு அமையக் கிடக்கின்றது : “வடதிசை அரக்கி” (யான) ரஷ்யா… “அவளது வயிற்றிலே கூட சில நல்ல குமாரர்கள் இப்போது தோன்றியதாக சொல்லி கொள்கிறார்களே?” என கூறுகின்றான். இதில், “நல்ல குமாரர்கள்” என இவன் குறிப்பது யாரை நோக்கி, எதனை நோக்கி என்ற கேள்வி எழுகின்றது. இது, இவன் எதிர்காலத்தே, எத்திசை நோக்கி, இனி, வாழ்த்துபா பாடக்கூடும் எனக் கட்டியம் கூறுவதாக அமைகின்றது எனலாம் (பக்கம் 144).
வேறுவார்த்தையில் கூறுவதானால் கோக்லே, நௌரோஜித் ஆகியோர் தலைமைத்தரும் அரசியலுக்கு இனியும் இவன் ஆளாக முடியாது என்பது தெளிவாகின்றது.
மறுபுறம், இதே கால கட்டத்தில், நாட்டில் இடம்பெறும் வங்காளத்தின் பிரிப்பு, அது தொடர்பான எழுச்சி, கடற்கரை கூட்டங்கள், அதில் பங்கேற்கும் இவ்இளைஞன் போன்றவையும் அவனைப் பின்வருமாறு கூற வைத்துவிடுகின்றன : “விவேகானந்தர், கேசவ சந்திரன், தயாநந்த சரஸ்வதி போய்விட்டார்கள். இவர்களுந்தானென்ன? முன்னைய மக்களிலே முக்கோடியிலொரு பங்கு பெறமாட்டார்கள். இப்போதைக்கு, ஏதோ கடுகத்தனை, நௌரோஜி ஒருவனிருக்கின்றான்”. (பாரத குமாரிகள் : ஜனவரி 1906 : பக்கம் 144).
அதாவது காசி காங்கிரஸின் பின்னால், இவனது பார்வை இப்படியாகத் திசை மாறி இருக்கின்றது. அதாவது, “மகாரிஷி” என அழைக்கப்பட்ட தலைவர், இப்போது “ஏதோ கடுகத்தனை” என்றளவில் இவனது பார்வையில் சுருங்கிப்போனார்.
6
புதிய ஈர்ப்பு :
சுருக்கமாகக் கூறுவோமானால் 1905ன் இறுதியில், காசி காங்கிரஸிற்குச் செல்லும் பாரதி, அங்கே திலகரின் அரசியல்களால் ஈரக்கப்படுகின்றான். கிட்டத்தட்ட நெருப்பையும் பஞ்சையும் அருகருகே வைத்த அதே கதைதான் இதுவும். இவ்இளைஞனின் அரசியல் இதயம் தீ பற்றியெரிகின்றது. ஆனால், மறுபுறம், ஜி.சுப்ரமணிய ஐயரின் வாஞ்சையானது அவனைத் திக்குமுக்காட செய்துவிட்டிருக்கும் என்று நம்புவதும் இயல்பானதே. இது சதிதிட்டம் சம்பந்தமானது அல்ல. தர்க்கரீதியானது. பாரதி என்ற இவ்இளைஞனின் இதயத்தில் பொங்கும் அனலால் விளையும் ஒன்று. இருதலை கொல்லி எறும்பு இவன்.
இந்நிலைமையே வேல்ஸ் இளவரசன் பொறுத்த அவனது கட்டுரையிலும் (பக்கம் 80 சக்கரவர்தினி : நவம்பர் 1905), வேல்ஸ் இளவரசன் பொறுத்த அவனது கவிதையிலும் (பக்கம் 154 : சுதேசமித்திரன் : 29.01.1906) வெளிப்படுவதாய் உள்ளது.
நௌரோஜி பற்றி எழுதிய அதே கை (செப்டம்பர் 1905) இப்போது, அதே கருத்தோட்டத்தில் வேல்ஸ் இளவரசரையும், இளவரசியையும் வரவேற்று கட்டுரையை வரைகின்றது. (நவம்பர் 1905 : பக்கம் 80).
ஆனால், அதில் கூட, திருஷ்டி கழித்தலை, “இந்திய மாதர் சுருக்கி கொண்டு”, “மாதர் ஐ ஸ்கூல்” ஒன்றை நிர்மாணிப்பதற்கான வேலைப்பாடுகளின் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும் என்று கூறுவதும், பின் இதில் இருந்து வித்தியாசப்பட்டு, வேல்ஸ் இளவரசரை வரவேற்கும் கவிதையை இவன் எழுதுவதும், ஆனால், கவிதையின் முகப்பில், “பாரதமாது தானே பணித்தன்று” என்று அவன் கூறிய கூற்றும் வெளிப்படுகிறது. இது தொடர்பில் பல்வேறு வாத - பிரதிவாதங்கள் உண்டு. (இதற்கு முன்னரோ பின்னரோ, இப்படி “பாரதமாது தானே பணித்தன்று” என்று போன்ற முகப்புக் கூற்றை அவன் எழுதியதாக இல்லை).
இது பொறுத்து எமது ஆழ்ந்த மரியாதைக்குரிய ஆய்வாளர் சீனி விஸ்வநாதன் அவர்கள் இதனைப் பாரதி ஆர்வப்பட்டே தீட்டினான் என்றும், திரு.ரகுநாதன் அவர்களோ, வங்காள பிரிவினைக்கு அடுத்ததாய் வந்திருக்கும், இக்கவிதையானது, திலக்கின் அரசியலால் உந்தப்பட்டு அல்லது நிவேதிதாதேவியின் அருளால் ஊக்குவிக்கப்பட்டதாலேயே, இப்படி உள்ளது, பாரதியே இதனை எழுத நேர்ந்தது எனவும் குறிப்பிட்டுள்ளதும் குறிக்கத்தக்கது.
‘ஈஎன இரத்தல் இழிந்தன்று : அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கோள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று”
என்ற புறநானுற்றுப் பாடலைக் கொண்டு “பணித்தன்று” என்ற சொல்லிற்கான பொருளை நாம் அறிய முற்பட வேண்டும். ஆக, வேல்ஸ் இளவரசருக்கான நல்வரவுப்பாடலைப் பாரதி மனப்பூர்வமான திருப்த்தியுடன் தான் எழுதினார் என்றே கொள்ள வேண்டும் என திரு.சீனி விஸ்வநாதன் அவர்கள் வாதிடுவார். (பாரதி ஆய்வுகள்! சிக்கல்களும் தீர்வுகளும்). (பக்கம் 197).
7
இந்தியாவின் இணைவு :
எது எப்படி இருப்பினும், ஜனவரி இறுதிப் பகுதியில் (21.01.1906) எழுதப்பட்ட இக்கவிதை, அவன் சுதேசமித்திரனை விட்டகன்று “இந்தியாவில்” இணைந்து கொள்வதற்கான கட்டியமாக அமைந்து விடுகின்றது, என நாம் அபிப்பிராயம் கொள்ளலாம்.
திலகர் வைத்த தீயானது, இவ்வகையாலேயே இவ்இளைஞனில் இப்படியான ஒரு தாக்கத்தை உண்டுபண்ணி விட்டது.
மொத்தத்தில், வாழ்வில், இவன் எடுத்துவைக்கும் மூன்றாவது பெரிய அடியாகின்றது.
அவனது வார்த்தைகளிலேயே கூறுவோமானால், “ஆத்ம இலாபத்தை சிறிதேனும் கருதாமல்” உலகிற்கு உழைப்பது என்ற அடிப்படையில் எப்படி, எட்டையப்புரத்திலிருந்து, மதுரை சேதுபதிக்கு, தமிழ் ஆசிரியராய் தனது முதலடியை எடுத்துவைத்தானோ, பின்னர் அங்கிருந்து சுதேசமித்திரனுக்கு நகர்ந்து, தனது இரண்டாவது அடியையும் எடுத்துவைத்தானோ, அதே போன்று, இக்கவிதையில் “பாரதமாதா தானே பணித்தன்று” என்ற பிரகடனத்தைக் கவிதையின் தலைப்பில் இட்டு, அதன் மூலம், தனது மூன்றாவது அடியையும் எடுத்துவைப்பது அவனது தர்மமாகின்றது.
உசாத்துணை : காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - தொகுப்பு 1 : சீனி விஸ்வநாதன் - பக்கங்கள் : 154 வரை)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.