திலகரின் அரசியலை, பாரதி அறிமுகப்படுத்தும் முறைமை…
1906 இன் துவக்கத்தில், இவ் இளைஞன் பின்வருமாறு எழுதுகிறான்: “நமது தேசத்தின் ஆதார சக்திகளாகிய மாதர்களின் ஹிருதயமும், அவர்களது ஆன்மாவும் இருளடைந்துபோக விட்டுவிடுவதைக் காட்டிலும் பாதகச் செயல் வேறில்லை. ஞானக் கிரணங்கள் அவர்களது ஆன்மாவில் தாக்குமாறு செய்தாலன்றி நமக்கு வேறு விமோசனம் கிடையாது "(பக்கம் 145: சக்கரவர்த்தினி: பாரத குமாரிகள்)
எழுத்தின் நோக்கத்தை, இதைவிட நேர்த்தியாகச் சொல்வது கடினம். இவ் இளவயதில், இவ் இளைஞன் தனது எழுத்தின் நோக்கத்திற்கான மேற்படி தாரக மந்திரத்தை இப்படியாக வரையறுத்துக் கொள்வது மாத்திரம் இல்லாமல், மேற்படி எழுத்தானது மக்களை அதிலும் குறிப்பாக, மாதரைச் சென்றடைய வேண்டிய தேவைப்பாட்டினையும் இவன் நன்கு உணர்வதினை, மேற்படி வரிகள் எமக்கு எடுத்தியம்புவதாக உள்ளன.
இதற்காக, ‘சொல்’ ஒன்றைத் தேடி அலையும் இவ் இளைஞன், இப்பயணத்தின் போது, மக்கள் விரும்பக் கூடிய ‘எளிய பதங்களை’ தேடுவதும் தர்க்கப்பூர்வமாகின்றது. வேறு வார்த்தையில் கூறினால், சொல் ஒன்றைத் தேடியும் எளிய பதங்களை நாடியும் நகரக் கூடியவன், மக்களின் தேசப்பற்றை மதப்பற்றாக மாற்றும் எண்ணக்கருவிற்கு (அல்லது மதப்பற்றைத் தேசப்பற்றாக மாற்றும் ஒரு எண்ணக்கருவிற்கு,) இக்காலப்பகுதியில், அதாவது தனது 24ம் வயதில், வந்து சேர்ந்துவிட்டானா என்பதுவே கேள்வியாக உருவெடுக்கின்றது.
காரணம், அதே வருடத்தின் ஜூனில் (அதாவது, ஒரு ஆறு மாத இடைவெளிக்குள்) இவன் பின்வருமாறு எழுதியுள்ளான். ‘ஆயிரக்கணக்கான வருஷங்களாக, ஓர் ஜனக் கூட்டத்தாருக்குள்ளே, நடைபெற்று வரும் ஆசார அனுஷ்டானங்களை நாம் ஒரு சில உபந்நியாசங்களால் க்ஷண நேரத்தில் புரட்டி விடலாமென்று நினைப்பது அறிவு கொண்ட நினைப்பன்று. மெல்ல மெல்ல ஜனங்களுக்கு அவர்களது நடைகளின் தீமைகள் விளங்கும் படியான கல்விப் பயிற்சியளிக்க வேண்டும்’ (பக்கம் 226: இந்தியா 30.06.1906: திருநெல்வேலி ஆசாரத் திருத்தச் சங்கம்).
அதாவது, மக்களை நெருங்கவும், அவர்களைத் தனது ஞானக் கிரணங்களால் தாக்க முனைவதும், இதற்காகச் சொல் ஒன்றைத் தேடியலைவதும், இதேபோல் மெல்ல மெல்ல அவர்களை அணுகிக் கொள்வதும் இவனது மதமாகின்றது. ஆயிரக்கணக்கான வருஷங்களாய் பழமையில் உழலும், இச் ஜனக்கூட்டத்தைக் கரையேற்றுவது, ஒரு நொடியில், சில உபந்நியாசங்களால் மாற்றிவிட முடியாது என்பதனையும் இவன் நன்கு புரிந்துகொள்கிறான். இவ்வகையில், ‘வீரத்தைக் காட்ட இடமில்லா வீரர்கள்’ குறித்து ஏற்கனவே பலதும் கூறப்பட்டுள்ளமை மனங்கொள்ளத்தக்கதே.
இதேவேளை, மக்களின் தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் வேறு பிரித்து இவன் அறிந்து வைத்துள்ளான் என்பது இக்காலப்பகுதியில் இவன் எழுதிய வியாசம் ஒன்றின் மூலம் தெரியச் செய்கின்றது: ‘…நானக் ஷா தெய்வ பக்தியும் தேசபக்தியும் ஒன்றாகி அவதரித்து இருந்தார் …’ (பக்கம் 64: ஒரு பஞ்சாபிமாது – சக்கரவர்த்தினி – அக்டோபர் 1905)
வேறு வார்த்தையில் கூறினால், அன்றைய இந்தியாவின், யதார்த்தத்தை இவனை விட புரிந்து வைத்தவர் யாரும் உண்டோ என்பது கேள்வியாகின்றது. இந்தியாவின் இதயம், கிராமங்களில் வசிக்கின்றது என்பது ஓர் வனப்பான வசனமாகவே காலம் காலமாய் பேசப்பட்டு வந்துள்ளது. ஆனால், இவ்விதயத்தை மாற்றுவது என்பது வேறு விடயமாகின்றது.
இதன் அடிப்படையில், ஆன்மாவைத் தீண்ட வேண்டிய ஒரு கடப்பாட்டை இவன் ஒரு புறம் அறிந்திருந்தாலும், இதற்காக ஜனங்களை அணுகும் வேலையானது அல்லது, அச்செய்கையானது ஓர் நிதான நகர்வினூடேயே நடந்தேற வேண்டிய நிர்பந்தத்தையும் இவ் இளைஞன் அறிந்தவனாகவே இருக்கின்றான், ஆனால், மொத்தத்தில், விடயங்கள் அவ்வளவு எளிதாகத் தோற்றம் கொள்வனவாக இல்லை.
எந்த ஒரு ஆதிக்கச் சக்தியினரின் கழுகுக் கண்களைப் போலவே, ஆங்கில உளவு படையினரின் கழுகுக் கண்கள் பொறுத்த நியாயமான எச்சரிக்கையும், இவனில் அடங்குகின்றது. அதே அளவில், G.சுப்பிரமணிய அய்யர் போன்றோரின் அரசியல் நேசங்களையும் இவன் கணக்கில் எடுத்தாக வேண்டியவனாகின்றான். மொத்தத்தில் :
ஜனங்கள் அன்று இன்று இருந்த யதார்த்த நிலை.
அவர்களை அணுகி, பயிற்றிப் பல கல்வித் தர வேண்டிய ஓர் நடைமுறை யதார்த்தம்.
கூடவே பிரிட்டிசாரின் கழுகுக் கண்கள்.
இதனுடன், அரவணைக்க வேண்டிய ஏனைய ஸ்நேகப்பூர்வ அரசியல் நேசங்கள்.
இவற்றின் மத்தியிலேயே திலகரின் அரசியலும், அன்றைய இந்தியாவில் அரங்கேறுகின்றது. இதன்போது, தனது நிலைப்பாட்டையும், இவ் இளைஞன் தெளிவுப்படுத்த வேண்டிய கடமைக்கு உட்படுத்தப்படுகின்றான்.
பகுதி IV
‘இந்த மஹான் நனவிலும், கனவிலும், பாரத தேசத்தின் ஷேமத்திற்கும், பெருமைக்கும், சுயாதினத்திற்கும் பிரார்த்தனை புரிந்து வருகிறார். திலகர் சாமானியமாகத் தேசாபிமானிகளென்று சொல்லித் திரியும் கூட்டத்தாரைச் சேர்ந்தவரல்லர்’ (பக்கம் 284: இந்தியா 14.07.1906: திலகர்).
திலகரின் 50 ஆவது பிறந்தநாள் விழாவின்போது பாரதி மேற்கண்டவாறு எழுதியுள்ளான்.
இந்தியக் காங்கிரஸ், ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டு, பின், இந்திய அரசியல் சூழலில், இறக்கிவிடப்பட்டு, அது போதிய வளர்ச்சி கண்டுவிட்ட ஓர் புள்ளியிலேயே திலகரின் பிரவேசமும் நடந்தேறுகின்றது.
வேல்ஸ் இளவரசரை வரவேற்கும் தீர்மானம், இந்தியக் காங்கிரஸில் அரங்கேறும் போது, திலகர் தலைமையிலான தீவிரவாதக் குழுவினர் வெளிநடப்பு செய்வது இவ்விரு குழுக்களின் முரண்களை எடுத்துரைப்பதாக உள்ளது.
மிதவாதக் குழுவினருக்கும் தீவிரவாதக் குழுவினருக்கும் இடையிலான முரணில், தீவிர வாதக் குழுவினரின் தலைவர்களில் ஒருவராக வர்ணிக்கப்படும் திலகர், அதனைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பரிணமிக்கின்றார்.
அவரது கணபதி பூஜைகளும், சிவாஜி பூஜைகளும் பிரசித்தி பெற்றவை. இப்பூஜை ஏற்பாடுகள் மக்களை ஈர்க்கும் ஒரு வழியென அவரால் அறியப்படுகிறது. இவை வெறும் உபாயங்களா அல்லது அத்தகைய அரசியல் சாணக்கியங்களைத் தாண்டி இது அவரது ஆன்ம தரிசனமாகவும் விரியக்கூடிய ஒன்றா என்பதெல்லாம் கேள்விக்கிடமானதே.
இருந்தும் இதனை, ஒரு பின்னடைந்த அரசியல் என்று வகைப்படுத்தும் போக்கும் காணக்கிட்டுகின்றது.
இப்போக்கினது – முக்கியமாக, கணபதி-சிவாஜி பூஜைகள் மூலமாக மக்களை ஈர்த்தெடுக்கும் போக்கு- கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுவது போல, மொத்தத்தில் ஓர் ஆசிய உற்பத்தி முறையின் விளைப்பொருளா அல்லது ஓர் ஆங்கிலேய தகர்ப்பு முறையின் விளைப்பொருளா அல்லது இவை இரண்டும் இணைவதால் ஏற்படும் ஓர் சமூக அரசியல் சலனத்தின் வெளிபாடா என்பவையெல்லாம் எமது கரிசனைக்குரியவையே.
இவ்வகை அரசியல் எதிர்ப்புகளை நம்பூதிரிபாத் போன்ற கேரள மார்க்கிஸ்ட்டுகள் (1950களில்,) இவர்களைக் காங்கிரசின் இடதுசாரி அணியினர் என வர்ணிக்க முற்படுகையில் லெனின் போன்றோர் இப்பிரிவினரை ஜனநாயக வாதிகள் என்றே வரையறுத்து இருப்பது மனங்கொள்ளத்தக்கதாக இருக்கிறது. ஆனால், பாரதி எனும் உணர்ச்சிப் பிழம்பானது (கைலாசப்பதியின் வார்த்தைகளில்) இத்தகைய அரசியலின், சமூக பெறுமானம் யாது என்ற கேள்வியை முன்னிறுத்துவதை விட, இந்த மஹானின் குணச்சித்திரங்கள் யாது என்ற கேள்வியையே முதன்மையானதாகத் தனது சிந்தையில் ஏந்தியிருக்க வேண்டும் என்றே படுகிறது.
ஆனால், பாரதி வெளிப்படையாகத் திலகரை ஆதரிப்பது என்பது, அக்கால நாட்டு நிலவரங்களைக் கணக்கில் எடுத்து நோக்கும்போது, யதார்த்தபூர்வமற்றதாகவே காணப்படுகிறது. குறிப்பாக, மேலே வகைப்படுத்தப்பட்ட, நான்கு வகை காரணிகளும், எழுப்பக்கூடிய ஒட்டுமொத்த அழுத்தங்களையும் கணக்கில் எடுக்கும்போது, அவன், ஓர் உபாயத்தைக் கடைபிடிக்க வேண்டிய தேவைப்பாட்டுக்கு வந்து சேர்கிறான். இவ்வடிப்படையிலேயே மேற்படி அரசியலுக்கு இவன் மத முலாம் பூசுவதும் ஓர் நடைமுறை ஆகின்றது.
இதன் போது எழுதுகின்றான் : 'தெய்வப் பூஜையைக் காட்டிலும், இப்போது நமது நாடிருக்கும் நிலைமைக்கு வீர பூஜை (Hero-worship) அத்தியாவசியமாகும். ராமன்… (போன்ற) வீரர்களும், புத்தர், சங்கரர்…(போன்ற) ஞான வீரர்களும் வாழ்ந்த ..இத்தேசம்.. இப்போது சூனியமாய் போய்விட்டது…' (பக்கம் 283: இந்தியா 14.07.1906:திலகர்)
ஆனால் ராமன் பொறுத்து இப்படி இன்று எழுத நேரும் இதே கைதான், அன்று, தனது சதி தகனக் கட்டுரையில், சில மாதங்களுக்கு முன் பின்வருமாறு எழுதுகின்றது: 'மத்தளங்களடித்தும் ராம் ராம் என்று கூக்குரலிட்டும் அவளது அழுகைக் குரல் வெளியிலே கேளாத படி தடுத்து விட்டார்கள்' (பக்கம் 191: சக்கரவர்த்தினி மார்ச் 1906: ஸதி தகனம்)
ஆகவே ராமன் அல்லது ராம் ராம் என்று கத்தி, அதற்கூடு எரிபடும் ஒரு பெண்ணின் அவலக் கூக்குரலை நிறுத்த முற்படும் ஒரு தேசத்தில் தான், இவன் தனது குரலை நிறுத்தியாக வேண்டி இருக்கின்றது.
தனது திலகர் வியாசத்தில் இவன் எழுதுகின்றான்: 'இந்த புண்ணிய தேசமானது இப்போது வீர சூனியமாய் போய் விட்டது. அந்த ஸ்திதியில், ஈச்வர கடாடீத்தினால் உதித்திருக்கின்ற சாமானிய மஹான்களைக் கூட நாம் தக்கப் படி கவுரவம் செய்யாமலிருப்போமானால், நம்மை, மிகவும் இழிந்த குருடர்களென்று உலகத்தார் நிந்தனைப் புரிவார்கள் '(பக்கம் 284: இந்தியா 14.07.1906:திலகர்).
அதாவது மத்தளங்களடித்த ஒரு தேசத்தை, இப்போது, ஓர் புண்ணிய தேசமாக வர்ணிக்கத் துவங்குவதில், காணக்கிட்டும் முரண் எமது சிரத்தைக்குரியதாகின்றது. திலகரின் 50ஆவது பிறந்த தினத்தை ஒட்டியே இக்கட்டுரையானது எழுதப்பட்டுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கதாகின்றது.
ஏனெனில், திலகரின் 50 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடுவது என்பது, இந்தியக் காங்கிரசில் முளைகட்டியுள்ள தீவிர வாதத்தைக் கொண்டாடுவது என்பதாகப் பார்க்கப்பட வேண்டியுள்ளது. திலகரின் 50 ஆவது ஜனன தினத்தை, பாரதி கேக் வெட்டியும் கொண்டாடினார் என்ற பதிவுகளும் உண்டு.
இவையனைத்தும் பாரதியின் அக்காலத்தைய அரசியல் சார்பு நிலையை எமக்கு எடுத்துச் சொல்வதாக இருக்கின்றன.
திலகர் பற்றிய, இதே கட்டுரையில் பின்வருமாறு எழுதியிருக்கின்றான்:
‘இந்த மஹான் நனவிலும், கனவிலும், பாரத தேசத்தின் ஷேமத்திற்கும், பெருமைக்கும், சுயாதினத்திற்கும் பிரார்த்தனை புரிந்து வருகிறார். திலகர் சாமானியமாகத் தேசாபிமானிகளென்று சொல்லித் திரியும் கூட்டத்தாரைச் சேர்ந்தவரல்லர். பயங்காளித்தனத்தைப் புத்தி சாதூரியமென்றும், ஆண்மையற்றிருக்கும் அயோக்கியத் தன்மையைத் தீர்க்கலோசனையுடைமையென்றும் திலகர் நினைப்பதில்லை' (பக்கம் 284: இந்தியா 14.07.1906: திலகர்). இதே பண்பு, பிற்காலத்தில், இவன் நடிப்பு சுதேசிகள் என்ற கவிதையை, ஒரு வருடத்தின் பின், அதாவது 1907 ஜூனில் எழுதுவதற்கும், இக்கட்டுரை ஒரு முன்னோடியாக இருக்கின்றது எனலாம்.
இப்பந்தியில் ‘சுயாதினத்திற்கு’ என்ற சொல்லும் ‘பிரார்த்தனை புரிகின்றார்’ என்ற வார்த்தைப் பிரயோகமும் தற்செயலாக வந்த சேர்ந்தவை அல்ல என்பது தெளிவு. இவை நுனித்து நோக்க வேண்டிய விடயமாகின்றது. பாரதியால் சிந்தித்து தெரிவு செய்யப்பட்ட வார்த்தைகளாகவே இவை இருக்கின்றன.
இதன் தொடர்ச்சியாகவே இக்கட்டுரையில் காணப்படும் பின்வரும் சொல்லாடல்களையும் நுனித்து நோக்க வேண்டியவர்களாகிறோம். ‘சுதேசிய தர்மத்துக்குப் பிரதம குருவாக ராம் ஸ்ரீ திலகரைக் கருதலாம்…’
“மஹா வைதீகானுஷ்டானங் கொண்டவராகிய திலக ரிஷி தற்காலத்துப் போலி வைதிகர்களைப் போல, கண்மூடித்தமான அகந்தையும், பொறாமையும், ஹிருதயக் குறுக்கமும் உடையவரில்லை”
'இவர் … எத்தனையோ வருஷ காலம் ஜீவித்து நமக்கு ஹிதம் புரியுமாறும்… ஸர்வேசுவரனது திருவடியைப் பற்றி பிரார்த்தனை புரிகிறோம்' (பக்கம் 285: இந்தியா 14.07.1906: திலகர்).
இங்கே, ‘திலக ரிஷி’ என்ற சொல்லாடலும், இவர் ‘வைதீக அனுஷ்டானங்களை கொண்டவர்’ என்பதும், இவரது பங்களிப்புகள் உறுதி பெற ‘ஸர்வேசுவரனது திருவடியைப் பற்றி பிரார்த்தனை புரிகின்றோம்’ என்பதும், இவற்றை விட மேலாக, ராமன் வாழ்ந்த புண்ணிய தேசததிலேயே இது நடந்தேறுகின்றது என்பதும் இதன் மத்தியில் ‘திலக ரிஷி’ சுயாதினத்திற்குப் பிரார்த்தனை புரிகின்றார் என்பதும், ஓர் அரசியல் சாணக்கியனின் வேலைப்பாட்டை நமக்கு எடுத்துரைப்பதாக இருக்கின்றன. மேற்படி வார்த்தைப் பிரயோகத்தால் இவன், ஓர் தீவிரவாத அரசியலுக்கு, ‘மதமுலாம் பூசுகின்றானா’ என்ற கேள்விக்கு இச் சோடிப்பு எம்மை இட்டு செல்கிறது:
வேறு வார்த்தையில் கூறினால், இவனது இப்பூச்சூடல் எவ்வகைப்பட்டிருப்பினும், இவனது உள்நோக்கம் முனைப்பாகத் தெரிவதாக உள்ளது. இவ்வகையிலேயே திலகர் தொடர்பிலான இவனது இக்கட்டுரை ஓர் முக்கிய திருப்புமுனையாக அல்லது முதல் திருப்பு முனையாகத் தென்படுகிறது.
ஜனங்களை மெல்ல மெல்ல திருப்பும் தனது வேலை திட்டத்தில் திலகரின் அரசியலுக்கு, மேற்குறிப்பிட்ட, நான்கு வகைப்படுத்தப்பட்ட அரசியல் அவதானங்களை, கணக்கில் எடுப்பதன் காரணமாக மத முலாம் பூசத் துணியும் இவ் இளைஞனின் செய்கை புரிந்துகொள்ளக் கூடியதே.
திலகர் பொறுத்த இவனது கட்டுரையை எழுதிய இதே தினத்தில் தியாக ராஜ சாஸ்த்திரிகள் தொடர்பிலான கட்டுரையையும் இவன் பின்வருமாறு எழுதுகின்றான்: “இங்குள்ள அதிகாரிகள் கல்வி கற்ற வாலிபர்களை எத்தனை தூரம் அமுக்க முடியுமோ அவ்வளவு அமுக்கிவிடப் பார்க்கிறார்கள்… அனேக நூற்றாண்டுகளாக நித்திரை போய் கொண்டிருந்த ஒரு பெருந்தேசமானது, இப்போது கண்விழித்து ஏற முயற்சி பண்ணும் சமயத்தில் அமுக்கி விடுவது இலேசான காரியமாகுமா? ” (பக்கம் 280: இந்தியா 14.07.1906: தியாகராஜ சாஸ்திரி)
இக்கட்டுரையானது, இந்தியாவின் அன்றைய யதார்த்த நிலைமையை, அதாவது, கல்வி கற்ற பெரும் தேசமானது அன்று விழித்தெழும் யதார்த்த நிலையில் இருந்தது என இவன் அன்று கணக்கிட்டுக் கொள்வதை எமக்குக் காட்டுவதாய் உள்ளது.
இப்படி விழித்தெழும் ஒரு தேசத்திற்கு, தனது அரசியலைப் புகட்ட வரும் அதேவேளை, தன்னையும், திலகரையும் காப்பாற்ற வேண்டிய கடப்பாடும் இவனுக்கு உள்ளது. இதற்காக மேற்படி நான்கு வகைப்படுத்தப்பட்ட வரையறைகளை இவன் மனங்கொள்வதும் இதன் காரணமாய் முலாம் பூசுவதும் நடந்தேறுகின்றது. ஆனால் இம்மாபெரும் தேசத்தில் 1000 வருஷங்களாய் நித்திரை கொண்ட ஒரு தேசம் இத்தகைய விழிப்பினை அடைவதை, மார்க்ஸ் குறிப்பிடும் அதே ஆசிய உற்பத்தி முறைக்கான விதிகளை நோக்கி எம்மை இட்டுச் செல்லாமலும் இல்லை.
இப்புள்ளியிலேயே பாரதி என்கின்ற மஹா கவிஞனின் பிறப்பும் தோற்றம் கொள்கின்றது. இப்பின்னணியில், இது வெறும் முலாம் பூசும் ஒரு செய்கை மாத்திரம் தானா அல்லது தனது ஆன்மத் தேடலுக்கான ஆணிவேரையும் தனது ஆன்ம வாழ்வை தாங்கிப் பிடிக்கும் விழுதாகவும் இதனை அவன் கண்டு கொள்கின்றானா என்பதெல்லாம் வேறு வகைப்பட்ட கேள்விகளாகும்.
(வணக்கத்துடன் : கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - தொகுப்பு 1: சீனி.விசுவநாதன் - பக்கம் : 286 வரை)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.