1. இனியது கேட்கின்.
மன பாரம் நீங்க
மழை நாளில்
வெகுதூரம் வந்திருக்க கூடாதுதான்
ஒதுங்கி நிற்கும்பொழுதில்
தெரிந்தவர்கள்
பரிவு கொண்டு
வீட்டிற்கு வரச்சொல்லிய
அசௌகரியம் வராமல் இருப்பதற்கு.
அழைத்தவரின்
அப்பாவினுடைய
நோய்த் துயரை
கவலையோடு
காட்சிகளாக்கினார்.
காண சகிக்கவில்லை
நல்லவருக்கு ஏனிந்த
நலவுகெடலென மாய்ந்து.
நடப்பவைகள்
யாவையும்
நாமறியாதபொழுது
நலவுகளை
நாடியலைய வேண்டாம்.
வாய்ப்பாக நினைத்து
வருந்தாமல்
பணிவிடைகளைச் செய்யுங்கள்
மகனாக பிறந்ததற்கு
என்றேன்.
மின்னஞ்சலொன்று
மீட்ட
மாலை நேர
மன பாரத்தைப்போல
அவரும்
மாறி இருந்தார்
முகத்தெளிவைக் காணும்பொழுது.
நின்றிடாத மழையில்
பயணத்தை தொடர்ந்த
எனக்கு
மழை ஆடையைக் கடந்தும்
நனைந்தது
அசலாடைகள்
சிலிர்ப்பாக்கியவாறு
சிந்தனைகளைத் தெளிவாக்கி.
2. அசைந்தாடும் ஆசைகள்.
ஆசைக்கும்
விருப்பத்திற்கான மோதலில்
நீ வென்று விட்டதாகவே உணர்கிறேன்.
விரும்பியது
விடியலைத் தரும் என்பதால்
என் திசைகள்
யாவும்
நீயாகிவிடு.
தோற்ற ஆசை
விருப்பம் கொள்கிறது.
தொட்டுவிட நேரம் பார்த்து.
விரும்பிய ஆசையை
விட்டொழிக்கின்றேன்.
விரைந்தோடிவா பூச்சூடி.
கானகம்
காத்திருக்கிறது
வெகுநாளாய்
புத்தனாகும்
ஆசையோடு
அழைத்து.
இம்முறை
உன்னோடு செல்வதாகத்தான்
உத்தேசம்
பிக்குகள் நோய்
பிடித்தாட்டாமல் இருக்க.
3. மெய்ச் சாயமேற்றி.
தடுத்திடத்தான்
நினைக்கின்றேன்
தத்தித் தாவும்
மனதினை
ஒவ்வொரு முறையும்.
நம்பிக்கை மோசடி
நயவஞ்சகர்களென
தொட்டுணர்ந்து
துயருறும்பொழுது
மட்டும்.
4. இருவருக்குமான இன்பம்.
தேவதையாக தெரிகிறார்கள்
திரும்பிய பக்கமெல்லாம்
பெண்கள்.
வீட்டிலிருக்கும்
மனைவியை மட்டும்
மனம்
வெறுக்குமாறு.
பிடிபடவே இல்லை
கடைசிவரை
பேரழகியாக
மனைவி அமைந்தாலும்
பிணக்கற்று
வாழ்வதற்கு.
ஒட்டித்தான்
ஓட்டவேண்டிதாகிறது.
விரிசல்
விழுந்த வாழ்க்கையின்
வெறுப்பை மறைத்து.
குழந்தைகள் வந்து
குதூகலமாக்கியதால்.
பெரு மூச்சு
நின்றபாடில்லை.
பிள்ளையின்
பிள்ளைக்கு
பிள்ளை பிறந்து
பெருவயது கொண்டாலும்
மண்ணோக்கும்போதும்
கணவனுக்கும்
மனைவிக்கும்
காத்திரமான அன்பொன்று
வாய்க்காத துயரமாக.
வேதனைகள்
சூழ்கிறது.
விரும்பி
காதலித்து கைபிடித்தபோதும்
வெறுத்து வாழ்வைவிட்டு
ஓடுமாறு
புரிதலொன்று நிகழாதால்.
துயரம் மேவும்
துன்பமாக
எப்பொழுதும்
தோழமைத்
துளிர்
இருவருக்குள்ளும்
துளிர்த்து
தழைக்காதபோது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.