- ஆய்வாளர்:  கு.மு. ரமேஷ்பாபு, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை – 117 | நெறியாளர்: முனைவர் தே. தேன்மொழி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை - 117 --

முன்னுரை

புரட்சித் தலைவர் என்றும் மக்கள் திலகம் என்றும் மக்களால் அழைக்கப்படும் ம.கோ.இராமச்சந்திரன் அவர்கள் தமிழ்த் திரைப்பட நடிகராய் இருந்து அரசியியலில் அடியெடுத்து வைத்து பல ஆண்டு காலம் மக்கள் பணியாற்றியவர். இவர் நடிகராய் இருக்கும்பொழுதே அன்றைய தலைமுறை இளைஞர்களால் கொண்டாடப்பட்டவர். இவர் பேசும் வசனங்களுக்காகவே இவர் நடித்த திரைப்படங்கள் பல மாதங்கள் ஓடியிருக்கின்றன. திரைத்துறையில் ஆளுமைமிக்க நடிகராக இருந்தபோதும் இவர் அரசியல் மீது கொண்டிருந்த விருப்பினாலும் மக்கள் மீது கொண்டிருந்த அன்பினாலும் அரசியலில் ஈடுபட்டு மக்கள் பணிகள் செய்து வரலாற்றில் நீங்காத இடம் பிடித்துக்கொண்டார். குறிப்பாக இவரின் வள்ளல் தன்மைக்காகவே இவர் தமிழ் மக்களால் இன்றைக்கும் மறக்க முடியாத மனிதராக அவர்களின் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கின்றார் என்றால் மிகையாகாது. அந்த அளவிற்குத் தன்னலம் கருதாது மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று வாழ்ந்து மறைந்த புரட்சித்தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர். அவர்களின் வள்ளல் தன்மை பற்றி அவரை அறிந்த அறியாத மனிதர்கள் கூறும் செய்திகளைப் பதிவுசெய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

மக்கள் மனங்களை வென்றவர்

“அணை உடைத்த வெள்ளமெனப் பெருக்கெடுத்து ஆடி ஓடி வரும் காவிரியின் புதுப் புனல் போல், எம்.ஜி.ஆரின் பாச வெள்ளம் நாட்டிலே பெருகி, மக்கள் உள்ளங்களிலே அன்பெனும் வளத்தை உருவாக்கி, மாசெனும் மேட்டைச் சமன்படுத்தி, வறுமையெனும் பள்ளங்களைத் தூர்த்து, புகழெனும் அறுவடையைப் பெற்ற விவசாயி” (புலவர் என்.வி.கலைமணி, மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.11,வள்ளலார் நூலகம், சென்னை, ப.44) என்று போற்றப்படும் எம்.ஜி.ஆர், “நீரில்லா நிலம் பிளந்து வெடித்திருப்பது போல, வாழ்விலே ஈரத்தைக் காணாதவர்கள் நெஞ்சம் வெடித்திருக்கும் போது, மழையின் வருகையைக் காட்ட மின்னல் வருவதைப் போல, பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வளிக்க எம்.ஜி.ஆர். மின்னலெனத் திடீரென்று தோன்றுவார்” (புலவர் என்.வி.கலைமணி, மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.11, வள்ளலார் நூலகம், சென்னை, ப.51) என்றும் தனது வாரி வழங்கும் கொடைத்தன்மையால் போற்றப்படுகின்றார் எம்.ஜி.ஆர். அதாவது, மழையானது எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் எல்லா வகையான நிலத்திற்கும் எல்லா வகையான உயிரினங்களும் பயனடையும் வகையில் பாகுபாடின்றி பெய்வதைப் போல துன்பம் கண்டவரின் பின்புலத்தைக் காண விரும்பாமல் உடனடியாக அவரின் துயரினைத் துடைக்கும் பண்புடையவர் எம்.ஜி.ஆர். என்பதை இதனால் உணர்ந்துகொள்ளலாம்.

ஏழைகளின் நண்பர்

1961ஆம் ஆண்டு ரிக்‌ஷா தொழிலாளர்களுக்கு சென்னை நகரில் மழை கோட்டு வழங்கும் விழாவில், “புயல் மழையால் – சேதம் வரும் இடங்களில் எல்லாம், எங்கள் புரட்சி நடிகர் உதவியினைக் காணலாம். தன்னைத் தேடி வருகிறவரின் கண்ணீரைத் துடைக்கிறவன் வள்ளல். தன்னைத் தேடி வருகிறவரின் துன்பத்தைப் போக்குகிறவன் வள்ளல். ஆனால், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அப்படியல்ல; சமுதாயத்தில் துன்பப்படுகிறவன் எங்கே இருக்கிறான் என்று தேடிப் போய் அவன் கண்ணீரைத் துடைத்துக் கைகொடுக்கிற எம்.ஜி.ஆர். வள்ளலுக்கெல்லாம் வள்ளல்.” (புலவர் என்.வி.கலைமணி, மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.11, வள்ளலார் நூலகம், சென்னை, ப.53) என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பட்டிருக்கின்றார் எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தனது திரைப்படங்களில் மட்டும் வள்ளலாக நடிக்காமல் நிழலுக்கும் அப்பால் நிஜத்திலும் எம்.ஜி.ஆர் வள்ளாலாக வாழ்ந்திருக்கின்றார் என்பதை இதன் மூலமாக அறிந்துகொள்ளலாம்.

பிறர் பசி போக்கும் பிதாமகன்

மீனவ நண்பன் படப்பிடிப்பு மங்களூரில் நடந்துகொண்டிருந்த சமயத்தில் எம்.ஜி.ஆருடன் நடிக்கும் நடிகர் நடிகையர்கள் ஒரு உணவுவிடுதியில் தங்கிருந்தனர். படப்பிடிப்பு முடிந்து ஓய்வு நேரத்தில் தன்னோடு நடிக்கும் நடிகர்களிடம் தங்கியிருக்கும் இடம் குறித்தும் உணவுகள் குறித்தும் வினவியிருக்கிறார் எம்.ஜி.ஆர். அப்போது எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக நடிக்கும் மரகதம் அம்மாள், நீங்கள் தங்கியிருக்கும் இடத்தில் மீனெல்லாம் சகஜமாக கிடைக்கின்றதா என்பதைக் கேட்டிருக்கின்றார். இதன் மூலம் மரகதம் அம்மாள் தன்னிடம் சொல்ல வருவதைப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர். அன்றைக்கு இரவு அங்கு இருந்த அனைவருக்கும் சுடச்சுட மீன் குழம்பும் மீன் வறுவலும் கிடைப்பதற்கு வழி செய்திருக்கின்றார். இதனை,

“எல்லாரும் எத்தனை மணிக்குச் சாப்பிடுவீர்கள்? அவர் மறுபடியும் வினவினார்.

“இரவு எட்டு மணிக்கு சாப்பிடுவோம் தம்பி” என்றார் மரகதம் அம்மாள்.

“சரி… இன்னைக்குப் பதினைஞ்சு நிமிஷம் தாமதமாக சாப்பிடுங்கள்…” என்று கூறிவிட்டு எம்.ஜி.ஆர். சென்றுவிட்டார். மரகதமம்மாவுக்கும், மற்ற நடிகர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. தான் வேடிக்கையாக ஆசையை வெளியிட்டதை, அவர் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாதே என்கிற கவலை அந்த அம்மாவுக்கு! எல்லோரும் படப்பிடிப்பு முடிந்து ஓட்டலுக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொண்டார்கள். சாப்பாட்டு நேரம் நெருங்கியது. திடீரென்று – ஒரு கார் வந்து நின்றது. அந்தக் காரில் வந்தவர்கள் ஒரு அண்டாவைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து உள்ளே வைத்தனர்.

“சின்னவர் (எம்.ஜி.ஆர்.) கொடுக்கச் சொன்னார்” என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.

அண்டாவைத் திறந்தால் மீன் குழம்பு வாசனை ஓட்டலில் உள்ளவர்கள் மூக்கை இழுத்தது; நாக்கில் எச்சில் சுரக்க வைத்தது.

’இன்று பதினைந்து நிமிடம் தாமதமாகச் சாப்பிடுங்கள்’ என்று எம்.ஜி.ஆர். சொன்னதன் பொருள் அப்பொழுதுதான் அவர்களுக்குப் புரிந்தது.” (பாரத ரத்னா எம்.ஜி.ஆர்., நாகை தருமன், ப.19) என்னும் செய்தியால் அறிந்துகொள்ளலாம். பிறரது ஆசைகளைப் புரிந்துகொண்டு அதனை உடனடியாக நிறைவேற்றும் மனிதநேய மிக்கவராக எம்.ஜி.ஆர். விளங்கியிருக்கின்றார் என்பதே மேற்கண்ட செய்தி உணர்த்துகின்றது. ஏழை எளிய மனிதர்களின் பசியறிந்த மனிதராக எம்.ஜி.ஆர். விளங்கினார் என்பதற்கு இதுவே மிகப்பெரிய சான்று எனலாம்.

எம்.ஜி.ஆருக்கு நன்கு பழக்கமான தொழிலதிபர் ஒருவர் அவரின் கொடையுள்ளம் பற்றி, “சம்பாதிப்பதில் ஒரு பகுதியைத் தர்மம் செய்வதைக் கண்டிருக்கிறேன். கடன் வாங்கி தன் வீட்டுக் கல்யாணத்தை முடித்துக் கொள்வோர் உண்டு. கடன் வாங்கி இப்படி வாரி வாரி நிதி வழங்கும் ஒருவரை நான் பார்த்ததில்லை. மற்றவர்களுக்குக் கொடுத்து உதவி செய்து, அவர்கள் மகிழ்ச்சி அடைவதைக் கண்டு ஆனந்தப்படுவதில் எம்.ஜி.ஆர். போல் ஒரு மனிதரைக் காண முடியாது.

உண்பது, உறங்குவதுபோல் அவருக்கு கொடுப்பதும் ஒரு அன்றாடச் செயல். உணவு இல்லாவிட்டாலும் அவர் இருந்துவிடுவார். தர்மம் செய்யாமல் அவரால் இருக்க முடியாது. இப்படி ஒரு அதிசயமான அற்புத மனிதர்தான் எம்.ஜி.ஆர்.” (பாரத ரத்னா எம்.ஜி.ஆர்., நாகை தருமன், ப.50) என்று குறிப்பிடுகின்றார். இதன் மூலம் பிறருக்கு தர்மம் செய்வதில் சமரசமற்ற மனிதராகவும் கடன் பெற்றாவது பிறர் துன்பத்தைப் போக்கும் நல்லுள்ளம் படைத்தவராகவும் எம்.ஜி.ஆர். தம் வாழ்நாளில் செயல்பட்டிருக்கின்றார் என்பதைப் பார்க்க முடிகின்றது.

தர்மம் செய்வதில் தர்மன்

எம்.ஜி.ஆர். அன்னதானப் பிரபுவாக இருந்தார் என்பதை, “ராமாவரம் தோட்டத்திற்கு யார் சென்றாலும் சாப்பிடாமல் திரும்பியதில்லை. அதாவது எம்.ஜி.ஆரை சந்தித்தவர்கள் சாப்பிடாமல் திரும்ப முடியாது. அந்த வகையில் ராமாவரம் தோட்ட அடுப்புகள் ‘வற்றாத சுரபி’ என்று சொல்ல வேண்டும். கணக்கு பார்க்காமல் செலவு செய்தாலும், செலவு கணக்கு பார்க்கத் தவற மாட்டார் எம்.ஜி.ஆர். வேலையெல்லாம் முடிந்து இரவு வீடு திரும்பினால் தனக்கு வந்த கடிதங்கள், அன்றைய வரவு – செலவு கணக்குகளை எம்.ஜி.ஆர். சரிபார்க்கத் தவறியதில்லை. தோட்டத்திற்கு எத்தனை பேர் வந்து சாப்பிட்டுப் போனார்கள், செலவு என்ன என்றெல்லாம் பார்ப்பார். சில சமயம் அதையெல்லாம் பார்த்து முடிக்க இரவு 12-00-க்கு மேல் கூட ஆகிவிடும்.” (எம்.ஜி.ஆர். கதை, எஸ்.விஜயன், ப.163)

“மாட்டுக்கார வேலன் படத்திற்காக பால், உணவு வகையறாக்கள் தேனியிலிருந்து தினமும் வரவழைக்கப்பட்டது. அதில் ஒரு நாள் தடங்கல் ஏற்பட, அவையெல்லாம் வந்தால்தான் படப்பிடிப்பு நடக்கும் என்று எம்.ஜி.ஆர். சில மணி நேரங்களுக்கு படப்பிடிப்பையே நிறுத்திவிட்டார். பசியின் கொடுமை அறிந்தவர் என்பதால் , எந்த ஒரு படப்பிடிப்பிலும் யாரையும் பசியோடு இருக்க விடமாட்டார். அப்படி உணவு வர தாமதப்பட்டால் தானும் சாப்பிட மாட்டார்.” (எம்.ஜி.ஆர். கதை, எஸ்.விஜயன், ப.162-163) என்னும் செய்தியினாலும் அறிந்துகொள்ளலாம். பிறர் வறுமையைப் போக்குவதிலும் பிறரின் பசியறிந்து உணவிடுவதிலும் எம்.ஜி.ஆர். எப்போதும் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பதை அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் மூலமாகவும் அவரைப்பற்றி எழுதியவர்கள் மூலமாகவும் அறிந்துகொள்ள முடிகின்றது. பணத்தை ஒரு பொருட்டாக மதித்து சேமித்து வைக்காமல் தேவைப்படுகின்ற மனிதர்களுக்கெல்லாம் வறுமையுற்ற மனிதர்களுக்கெல்லாம் நோயுற்றவர்களின் மருத்துவத்திற்கெல்லாம் வாரி வழங்கி வள்ளலாக வாழ்ந்திருக்கின்றார் எம்.ஜி.ஆர். ஆகையால் தான் அவர் மக்கள் திலகம் என்று அழைக்கப்படுகின்றார் என்னும் உண்மை புலப்படுகின்றது.

முடிவுரை

புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர். இவ்வுலக வாழ்வைத் துறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் அவரின் நினைவுகள் மக்கள் மனங்களில் இருந்து இன்றும் அகலவில்லை என்பது வியப்புக்குரியது. இன்றைக்கும் எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கின்றார் என்று நம்பிக்கொண்டிருக்கும் கிராமத்து மனிதர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் நெஞ்சங்களிலும் கைகளிலும் எம்.ஜி.ஆரின் உருவத்தைப் பச்சை குத்திக்கொண்டு வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் எம்.ஜி.ஆரின் கொடை உள்ளம் என்பதுதான் திண்ணம். அந்த வகையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படத்திலும் நிஜ வாழ்க்கையிலும் அரசியலிலும் ஏழை எளிய மனிதர்களின் நண்பனாகவே வாழ்ந்துவிட்டு சென்றிருக்கின்றார். ஆகையால் எம்.ஜி.ஆர். இன்னும் பல நூற்றாண்டுகள் தமிழக மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருப்பார் என்பது உண்மையிலும் உண்மை. மேலும், பணம் படைத்தவர்களும் கோடி கோடியாய் சம்பாதித்து வைப்பதற்கு இடமின்றி தவிப்பவர்களும் எம்.ஜி.ஆரின் நற்குணத்தைச் சிறிதேனும் பின்பற்றினால் இங்கு வாழும் சில ஏழைகளின் வாழ்க்கை ஒளிபெறும் என்பதை இக்கட்டுரையின் முடிவாக தெரிவித்துக்கொள்ளப்படுகின்றது.

துணைநின்ற நூல்கள்

1. பாரதரத்னா எம்.ஜி.ஆர்., நாகை தருமன், பேரறிஞர் அண்ணா பதிப்பகம், இராயபேட்டை, சென்னை – 14, 1994.

2. மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்., புலவர் என்.வி.கலைமணி, வள்ளலார் நூலகம், சென்னை.

3. எம்.ஜி.ஆர். கதை, எஸ். விஜயன், அருள்மொழி பதிப்பகம், ஆயிரம் விளக்கு, சென்னை, 1995.

4. எம்.ஜி.ஆரின் உள்ளும் புறமும், கவிஞர் கண்ணதாசன், திருமாறன் நிலையம், சென்னை

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R