1. ஜே.வி.பி. இன்று மாறிவிட்டது... இல்லை. இன்னும் மாறவில்லை...
இப்படியான வாதங்கள், இலங்கை அரசியலில் இன்றும் தொடர்வதாய் உள்ளன. ரணில் விக்ரமசிங்க முதல் பல்வேறு தரப்பினரும், இவ்வாதங்களை மிகுந்த விருப்புடனேயே அவ்வப்போது முன்வைத்துள்ளார்கள். இதில் உண்மை இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். காணப்படும் மாற்றங்கள், வெறும் மேலோட்டமானவையே, அன்றி உள்ளடக்கத்தில் அதே அரசியல்தான் இன்னமும் ஓடுகின்றது என்ற வாதமும் இது போலவே தொடர்வதாக உள்ளது. ஆனால், மக்களின் விருப்பு என்பது எப்பொழுதும் போல ஆபத்தான ஒரு விடயமாகத்தான் இருக்கின்றது. எனவே, அதனை ஜே.வி.பி. ஏற்றாக வேண்டிய நிர்பந்தமும் அதற்கு உண்டு. இவ்விருப்பை மாற்றியமைக்க முயலும் செயற்பாடுகள் இருக்கலாம் என்றாலும், அவை யதார்த்த நிலைமைகளை மீறும்போது, பொருந்திவராமல், தமது அழிவுக்கான அஸ்திவாரங்களை இட்டுவிடுகின்றன. (இங்கே யதார்த்தம் என்பது, உள்நாட்டு-வெளிநாட்டுச் சக்திகளையும் உள்ளடக்கவே செய்யும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை).
இந்தப் பின்னணியில்தான் அநுரகுமார திசாநாயக்க அவர்கள், இன்று இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார். இவ்வாட்சி நீடிக்குமா அல்லது இழுபறிக்குள்ளாகுமா, அல்லது தோல்வியைத் தழுவுமா என்பனவெல்லாம் இனி நடக்கப்போகும் சங்கதிகளாகின்றன. இருந்தும், யதார்த்தங்களை மறக்கநினைக்கும் யாறொருவருக்கும் வரலாறு மிகக்கடுமையான தண்டனைகளையே வழங்கி வருவது சாசுவதமாகின்றது. (இதற்கான உதாரணம் எண்ணில் அடங்காதன என்பதும், அவை இலங்கை அரசியலில் இடம்பெறாமலும் இல்லை என்பதும் தெளிவு).
1970ல் ஆட்சியைக் கைப்பற்றிய ஸ்ரீமாவோ தலைமையில் இடதுசாரி கூட்டணி அமையப்பெற்றது. என்.எம்.பெரேரா-கொல்வின் ஆகியோரின் சமசமாஜ கட்சியும், பீட்டர் கெனமனின் கம்யூனிஸ கட்சியும் கூட்டணி அமைத்திருந்த காலமது. இருந்தும் இவ்வாட்சி, 1977ல் படுதோல்வியைக்கண்டு ஜே.ஆர். இன் 17வருட கேவலமான ஆட்சிக்கு வித்திட்டது (1977-1994). வித்தியாசம், இவை அனைத்தும் நடந்தபோது இருந்த இந்தியா, இன்று இருப்பதாகத் தெரியவில்லை. மாறியுள்ளது. அதாவது, விடயங்கள் மாறியுள்ளன.
சுருக்கமாகக் கூறுவோமானால், இடதுசாரி தலைமைகள், ஆட்சியைக் கைப்பற்றுவது புதினமானது அல்ல. ஆனால், இந்நகர்வுகள் எதைநோக்கி இட்டுச்செல்லக்கூடும் என்பதே கேள்வியாகின்றது. அதாவது, அநுரகுமார திசாநாயக்காவினால் ஆட்சிக் கைப்பற்றமை எதைநோக்கி இட்டுச்செல்லக்கூடும் என்பது கேள்வியாகின்றது.
2. சம்பந்தரின் மரணம் :
தமிழ் அரசியலைப் பொறுத்தமட்டில், சம்பந்தரின் காலம், தனது பாதியைவிட அதிகமாகப் புலிகளின் காலத்துள் அடங்கிப் போய்விடுகின்றது (2009 வரை). அதற்குப்பின், தேயும் ஒரு சமூகத்தை, உறுதிசெய்து நிலைநிறுத்த வேண்டிய ஒரு தேசிய சூழல் எழுகின்றது. புலிகளின் காலத்தில், சம்பந்தரிடம் சுதந்திரமான ஓர் இயங்குதிறன் இருக்கவில்லை எனக்கூறலாம். வெறுமனே, புலிகள் வகுத்தத் திட்டத்தை, நடைமுறைப்படுத்தும் ஒரு முத்திரையாகவே அவர் இருந்திருந்தார். அதுபோக, முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான நிகழ்வுகளில், தமிழ்த் தேசியத்தின் சிதைவு ஆரம்பமாகிவிட்டது. எனவே, முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்குப்பின் அவரது மறுபாதி வாழ்வு ஆரம்பித்தது. சிதைந்துகொண்டிருந்த தமிழ்த்தேசியத்தை இப்பின்னணியில் கட்டி நிமிர்த்துவதும், அதேவேளை, தீவிர புலம்பெயர் அரசியலின் இடையறா தாக்குதலுக்கு உள்ளாவதும் இவரது இந்த மறுபாதியின், விதியாகின. அதாவது, தென்னிலங்கையின் இனவாத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக, ஓர் தோல்விகண்ட சமூகத்தைகச் கட்டிக்காக்க வேண்டியப் பொறுப்பு இவரிடம் இருந்த அதேவேளை, நொடிதோறும் புலம்பெயர் அரசியலின் தீவிர இடையறாத தாக்குதலுக்கு இவர் இரையாகிப்போனதும் இவரது துரதிர்ஷ்டம் ஆகியது. சுருக்கமாகக் கூறுவோமானால், தீவிர புலம்பெயர் அரசியல் பிரதிநிதித்துவம் செய்யும் நலன்களும், உள்நாட்டு, தாயகம் வாழ், மக்களின் நலன்களும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை. முரண்படக் கூடியவை.
இவ்வகையில், ஒரு சிறிய உதாரணமாக, விக்னேஸ்வரன் ஐயாவின் விநோத செயற்பாடுகளைக் குறிப்பிடலாம். வடமாகாண சபையை முற்றாகச் செயற்றிறன் அற்றதாகக் காட்டி, அதனைப் பூஜ்ஜிய நிலைக்குத் தள்ளிவந்துசேர்த்த பெருமை, ஐயா அவர்களையே சாரும். சம்பந்தரால், தேடி பிடிக்கப்பட்டு, கொழும்பில் இருந்தவரை, யாழ்ப்பாண வடமாகாண சபைக்கு இழுத்து வந்து, அறிமுகப்படுத்திய பெருமை சம்பந்தரையே சாரும்.
தற்போது தான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், இளம் தலைமுறையினருக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொள்ளப் போவதாகவும் அன்னார் அவர்கள் அறிவித்துள்ளது எவ்வளவு தூரம் உண்மைமிக்கது என்பது அறியப்படாதது (29.09.2024). (போட்டியிலிருந்து தாம் விலகிக்கொண்டதாய் அவர் கூக்குரலிட்டாலும், என்னதான் இனி மிஞ்சப்போவது என்பதை அண்மையில் நடந்தேறிய தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாகவேறு இருக்கின்றன). போதாதற்கு, அவர் பாரம்பரிய சாராய பர்மிட்காரர் என்ற வதந்திகளும் இன்று இறக்கை விரித்துள்ளன (ரணிலின் காலப்பகுதியில் மாத்திரம், 200 சாராய பர்மிட்டுகள் வழங்கப்பட்டதாகத் தகவல்). போதாதற்கு மனுஷர், திடீரென, அவமதிப்பு வழக்கொன்றில் தனது வேட்டி சட்டைகளை உருவி எறிந்துவிட்டு, கோட்டுசூட்டுடன் நீதிமன்றில் சிரித்தப்படி நின்றிருந்தது வேறு சர்ச்சைக்கு உள்ளானது. மாகாண நிதிகளை, கிரமமாக மத்திக்கு அனுப்பி வைத்ததுவேறு கதைக்கப்பட்டதாயிற்று. போதாதற்கு மனோ கணேசனுடன் இணைந்து, “மரண ஊசி” தொடர்பில் விசாரனை நடத்தவெனப் புறப்பட்ட குழுவேறு மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இவை சிலதுகளே. (இறப்பர் தோட்டத்தில் முல்லேயா கோவிந்தனைச் சுட்டது போல).
இத்தகைய ஒரு பின்னணியில்தான், அநுரகுமார திசாநாயக்க ஆட்சியைக் கைப்பற்றுவதும், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்குவதும் நடந்தேறுகின்றன.
3. புலம்பெயர் அரசியலின் தாக்கம்
இலங்கையில் புலம்பெயர் அரசியலின் தாக்கத்தை, தேர்தலுக்குமுன், தேர்தலுக்குப்பின் என்று ஓர் வசதிக்கருதி இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம்.
அநுரகுமார திசாநாயக்கவின், அட்டனில் இடம்பெற்ற மலையக மாநாட்டை, கிட்டத்தட்ட பிரதான தமிழ் ஊடகங்கள் இரண்டுமே முற்றாய் இருட்டடிப்புச் செய்தன எனக்கூறுவதில், மிகைக்கூற்று ஏதும் இருக்க முடியாது. பராம்பரிய அரசியலை அல்லது இலங்கையில் பெரும் முதலாளிமாரை, (இலங்கை காங்கிரஸ் உட்பட) பிரதிநிதித்துவப்படுத்தி இவை இரண்டும், ஆதரிக்கின்றன என்றாலும் இவ் இருட்டடிப்பின் பின்னணியில் புலம்பெயர் அரசியல் என்ன விகிதாசாரத்தில் இருந்துள்ளது, என்பது தனித்து ஆயத்தக்கதே.
மலையகத்தை, ஒரு சிதைத்த மலையகமாகப் படம்பிடித்துக் காட்டுவது, தமது முக்கிய புனித கடமைகளில் ஒன்றாகிறது எனப் புலம்பெயர் அரசியல் கருமமாற்றி வருவது, ஏற்கனவே தெரிந்த ஒன்றே.
இலங்கை வடமாகாண சபையை, பூச்சிய நிலைக்குத்தள்ளி, ஒன்றுக்குமே பிரயோசனமற்று, திறனற்றதாக ஆக்குவது எவ்வளவு முக்கியமோ, அவ்வாறே மலையகத்தை முற்றாக இருண்ட ஒரு கண்டமாக வர்ணிப்பது, இவர்களின் நிகழ்ச்சி நிரல்களின் தலையாய அம்சமாகின்றது. வடமாகாண சபையின் நிதிகளைக் கிரமமாகத் திருப்பி அனுப்பிய அதே ஆர்வத்துடனேயே, இவர்கள் மலையகத்தில் இவ்வாறு செயற்பட்டவர்களாகக் காணப்பட்டனர். (இதற்கான உண்மைகளை அல்லது பதிவுகளை இக்கட்டுரைத் தொடரின் முந்தைய பகுதிகளில் காணலாம்).
புலம்பெயர் அரசியல், மேற்கொள்ளும் இச்சமூகச்சிதைவுகள் ஒருபுறம் இருக்க, அரசியல் ரீதியாகத் தமிழர் தேசிய கூட்டமைப்பைச் சிதைத்து விடுவதும் இவர்களின் கடமைகளில் ஒன்றாகியது. இதன் தொடர்ச்சியாக ஈற்றில், தமிழரசுக் கட்சியையும் சிதைத்து, அதிலும் முக்கியமாகச் சுமந்திரனின் செல்வாக்கையும் பறித்து முடித்துவிட்டால், முற்றும் முழுதாகத் தமிழரின் தேசிய அரசியலானது, நாட்டில் நிலைநாட்டப்பட்டுவிடும் அல்லது புலம்பெயர் அரசியலின் செல்வாக்குக்கு இது ஆட்பட்டுவிடும் என்ற எதிர்பார்ப்பு, இவர்களை இன்றும் குழப்பியடிப்பதாக உள்ளது.
இப்படி தமிழர் தேசியக் கூட்டமைப்பைச் சிதைத்து, தமிழரசுக் கட்சியையும் சிதைத்து, ஈற்றில், சுமந்திரனையும் சிதைப்பதனால் தமிழ்த் தேசியம் கட்டியெழுப்பப்படுமா என்பது வேறு விடயம். ஆனால், இதற்கெல்லாம் ஓர் முடிவு கட்டுவதுப்போல, அண்மையில் நடந்து முடிந்த அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றி அமைந்து விட்டது எனக்கூறலாம்.
4. தமிழ்த் தேசியத்தின் இடையறா முயற்சி :
“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்ற பூசணம் பூத்த சுலோகத்துடன், “தமிழ்ப் பொதுவேட்பாளர்” களமிறக்கப்பட்டது, அண்மைக்கால, புலம்பெயர் அரசியலின் உலக சாதனையானது. ஆனால், விக்னேஷ்வரன் ஐயா அவர்களின் வடமாகாண சபை சாதனையின் பின், மேற்படி சாதனையின், ‘உண்மை அர்த்தத்தை’ மக்கள் உணரத் தவறவில்லை என்பதனையே அண்மைத் தேர்தல் முடிவுகள் வெளிக்கொணர்வதாயிருந்தன.
திருகோணமலையில் - யாழ்ப்பாணத்தில் - வன்னியில் - அம்பாறை திகா மடுவையில் -மட்டக்களப்பில் இப்பொதுவேட்பாளர் பெரும்பான்மையினரால் நிராகரிக்கப்பட்டார் என்பதிலும் புறக்கணிக்கப்பட்டார் எனக் கூறப்படுவதே சரியான கூற்றாக அமைகின்றது. யாழ்ப்பாணத்திலேயே அன்னார் பெற்ற வாக்குகளின் விகிதாசாரம் 31.39 வீதத்தைத் தாண்டியதாக இல்லை (116,688 வாக்குகள்). இவரை ‘மிஞ்சி’ சஜித் பெற்ற வாக்குகளின் விகிதாசாரம் 32.60 வீதத்தைக் காட்டுவதாக உள்ளது (121,177 வாக்குகள்). இதுபோக, ரணில் பெற்ற வாக்குகளின் விகிதாசாரம் 22.75 வீதத்தையும் (84,558 வாக்குகள்). அநுர பெற்றவை 7.29 வீதத்தையும் (27,086 வாக்குகள்) காட்டுகின்றன. அதாவது தென்னிலங்கை அரசியல்வாதிகளான, இச்சிங்களவர் பெற்றுள்ள வாக்குகளின் கூட்டுத்தொகையைப் பார்த்தால், தமிழ்ப் பொதுவேட்பாளரின் அரசியலுக்கு மக்களின் அங்கீகாரம் கிட்டியிருப்பதாக அல்லது இவ்வரசியல் இனியும் வளர்வதற்கான தடயங்களை, மேற்படி தரவுகள் காட்டுவதாக இல்லை. இதுபோக, ஏனைய வட-கிழக்குப் பிரதேசங்களைப் பற்றி கூறவேண்டிய அவசியமில்லை. இங்கேதான், உண்மையான படுதோல்வி குடிகொண்டிருக்கிறது. இவை அனைத்தும், இக்குறிப்பிட்ட வேலைத்திட்டத்தை, மக்கள் எந்தளவில் ஏற்றுக்கொண்டனர் என்பதைத் தெளிவுறக் காட்டுவதாக உள்ளது.
இத்தனைக்கும், புலம்பெயர் அரசியலும், அதன் முகவர்களாய்ச் செயற்படும் உள்நாட்டு அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும், ஊடகங்களும் இவ்வேலைத் திட்டத்திற்காக அயராது உழைத்தார்கள் என்ற உண்மையினையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது.
“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு”, “தமிழர்களை இனியும் ஏய்க்க முடியாது” என்றும் “பொதுவேட்பாளரின் நியமிப்பைக்கண்டு தெற்கு ஆட்டம் கண்டுவிட்டது” என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன்-சித்தார்த்தன் முதல் விக்னேஷ்வரன் ஐயா வரை இந்தப் பொதுவேட்பாளர் நிகழ்ச்சி நிரலை, முறை வைத்து, வரவேற்று வாழ்த்துபா பாடத்தவறவில்லை.
“கருவறுக்கும்” அரசியலை விருப்புடன் முன்னெடுக்கும் திபாகரன்கூட, தமிழ்வின்னில் “வாளேந்தும் எதிரியைவிட உடனிருக்கும் வேடதாரியை வீழ்த்திவிடு” (தமிழ்வின் : 11.09.2024) என்று அவ்வப்போது, புத்திமதி கூறத்தவறவில்லை.
இருந்தும், இப்படி கருவறுத்து, கருவறுத்து அல்லது பக்கத்திலிருப்போரைப் போட்டுத்தள்ளி, போட்டுத்தள்ளி இறுதியில் நாம் எதைக்கண்டுள்ளோம் என்ற கேள்வி இன்று பூதாகரமாய் எழுந்து நிற்பது தவிர்க்க முடியாததாகின்றது. ஏனெனில் அமிர்தலிங்கம் முதல், நீலன் திருச்செல்வம், சக தோழமை இயக்கத்தினர் உட்பட, அநேக எண்ணில் அடங்காதோரை, “கருவறுத்து” அல்லது “பக்கத்திலிருப்போரைப் போட்டுத்தள்ளிய” வேதனை எம்மிடை இன்றும் சுழலாமலில்லை. இதனாலோ என்னவோ, இன்று, சுமந்திரனை வீழ்த்தும் திட்டத்தை மக்கள் ஏற்பதாகவும் தெரியவில்லை. சுமந்திரன் கூறியதால் அல்லது தமிழரசுக் கட்சி கூறியதால் பொதுவேட்பாளரைவிட, சஜித், ஒப்பீட்டளவில் மிக அதிகமான வாக்குகளை வட-கிழக்கில் பெற்றுள்ளது மக்களின் மனநிலையைப் பறைசாற்றுவதாகவுள்ளது.
இதற்கான காரணம், மேலே கூறியுள்ளபடி, வடமாகாண சபையைப் பூஜ்ஜிய நிலைக்குத் தள்ளியது போக, அண்மித்த அறிவிப்பின் பிரகாரம் (26.09.2024) “யாழ் மாவட்டம் (மேலும்) ஓர் ஆசனத்தை இழந்துள்ளது” என்ற பாரிய உண்மையையும் (யதார்த்தத்தையும்) மக்கள் இன்று உணரத்தொடங்கியுள்ளனர் என்பதே வெளிப்படையாகின்றது.
இப்பின்னணியில்தான், புலம்பெயர் அரசியலின் ஒட்டுமொத்த பெறுமானம் இன்று கணிப்பிட வேண்டியதாகின்றது.
ஆனால், இப்படி கணிக்கும் வாய்ப்புகள், பொதுவில் குறைவாகவே காணக்கிட்டுகின்றன. “மீசையில் மண் ஒட்டாத” நடப்பே இங்கு ஊடகங்களில் நிதமும் ஆக்கிரமித்துக்கொள்ளும் நிகழ்ச்சி நிரலாகின்றது. கம்பவாரிதி ஜெயராஜ் கூறுவதுபோல, பொய்மைகள் ஆட்சிசெய்வது, இன்று இங்கே பொதுவில் காணக்கிட்டுவது, துரதிஷ்டவசமானது என்பதனை இங்கே சொல்லியே தீரவேண்டும்.
இது தொடர்பாக இரு உதாரணங்களை மாத்திரம் நாம் பார்க்கலாம். “பெரும் அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதிகள்” என்று தலைப்பிடப்பட்ட தமிழ்வின் கட்டுரையொன்றில், யாழ்-வன்னி-மட்டக்களப்பு-திருகோணமலை மாவட்டத்தில், இன்னார் இன்னார் பெற்ற வாக்குகளின் தொகை என்பதனைக் கதைக்க வரும்போது, சஜித்தின் பெயர் அல்லது அவருக்கு விழுந்த வாக்குகளின் எண்ணிக்கை முற்றாக இருட்டடிப்புச் செய்யப்பட்டிருந்தன (தமிழ்வின் : 25.09.2024). இது, தமிழ் மக்கள் சஜித்துக்கு வாக்களியுங்கள் என்று சுமந்திரன் வேண்டி கொண்டதாலும், ஸ்ரீதரன் இத்தீர்மானத்துக்கு, எதிராக நின்றப்படியாலும் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், கம்பவாரிதி ஜெயராஜ் கூறுவதுபோல, பொய்மை, பொய்மையாகவே காட்சி அளிப்பது மாத்திரமல்ல, அது தலையாய நகர்வாக இங்கே காணப்படுவதும், தமிழ் அரசியலின் இன்றைய கேவலத்தைச் சுட்டிக்காட்டுவதாய் உள்ளது.
இரண்டாவது உதாரணம் : தற்போது நடந்து முடிந்த தேர்தலானது, தமிழருக்கு அல்லது தமிழ்த் தேசியத்திற்குக் கிடைத்த வெற்றி என்ற மாயை கிளப்பி விடப்படுகின்றது.
அண்மித்த ‘டான்’ பேட்டியில் நிலாந்தன்-கணேஷலிங்கன், இருவருமாய், இணைந்து பின்வரும் கூற்றினை முன்வைத்தனர்: “பொதுவேட்பாளர் எனும் இவ்வேலைத்திட்டம் ஓர் புதிய முன்னெடுப்பாகும். இது ஒரு புதிய முயற்சி. இப்படியான முன்னெடுப்புகள் உலகில் வேறெங்கும் நடந்ததாய் இல்லை” (22.09.2024).
இந்நிலைப்பாட்டுக்கூடாக, எம்மை நாம் ஏமாற்றிக்கொள்கின்றோமா அல்லது பிறரை ஏமாற்றுகின்றோமா அல்லது இரண்டையும் சேர்த்தே புரிகின்றோமா என்பன கேள்விக்குரியன. முள்ளிவாய்க்கால் பின்னடைவை “இது உலகத்தில் நடவாத ஒன்று” என்று கூறிக்கொள்வதில் நாம் பெறக்கூடிய இலாபம்தான் என்ன? சுருக்கமாகக் கூறினால், இது முன்முயற்சி: - உலகிலேயே நடைபெறாதது என்று மார்தட்டிக்கொண்டே, மறுபுறத்தில், “இத்துருவப்படுத்தலுக்கூடாக” சிறுபான்மையினருக்கு எதிராக, வலிந்து ஓர் செயற்கையான, பகைமையைத் தூண்டிவிடுதலின் அர்த்தம்தான் என்ன? என்ற கேள்வி முன்னிலைக்கு வருகின்றது.
சில உதாரணங்களைப் பார்ப்போம்: கஜேந்திரகுமார் செல்வராசாவும் ஏனைய எமது அரசியல்வாதிகளும், அநுர பெற்ற வெற்றித் தொடர்பாக ஆற்றிய பின்வரும் கூற்றுக்கள் மேற்படி சித்து விளையாட்டின் தார்ப்பரியத்தை வெளிக்கொணர்வதாக இருக்கின்றன : “தமிழரை ஆட்சியில் பங்காளியாக்கும் துணிவு அநுரவுக்கு இருக்க புத்தபிரான் துணைப்புரிய வேண்டும்”– (கஜேந்திரகுமார் செல்வராசா).
“புதிய ஜனாதிபதி, ஒரு போராளி என்பதால் வட-கிழக்கு சுய நிர்ணயத்தீர்வை முன்வைக்க வேண்டும்”– கருணாகரன்.
“தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண அநுரவே தகுதி வாய்ந்தவர்” – சுரேஷ் பிரேமச்சந்திரன்.
“தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சனைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்”– சித்தார்த்தன் (தினக்குரல் : 25.09.2024). இவை, அநுரவின் வெற்றிக்கு பின் மொழியப்பட்ட வாசகங்கள்.
இத்தலைவர்கள், இதற்கு, சில தினங்களின் முன்னரேயே, தேர்தல் தொடர்பில், முக்கியமாக, தமது பொதுவேட்பாளர் தொடர்பில் எப்படி, எப்படி திருவாய் மலர்ந்திருந்தனர் என்பது இப்பொய்மைகளின் பக்கமாகின்றன. அதாவது, நடைபெற்று முடிந்தது, பொதுவேட்பாளரின் வெற்றியே என ஒருபுறம் கூறி மறுபுறத்தில், இல்லை இது அநுரவின் வெற்றிதான் - எனவே அவர்தான் தமிழ் மக்களுக்கு தீர்வுகளை வழங்க வேண்டும் என இரு நாக்குகள் கொண்டு வாதாட செய்வதும் இப்பொய்மைகளுக்கு எளிதாகின்றது. இதற்கூடாக, அநுர, தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் கையாலாகதவர் என்ற சித்திரமும் இவர்களால் தீட்டப்பெறுவது மூன்றாவது பக்கமாகிறது.
5. மலையகம்
இதுபோலவே, மலையகத்திலும் புலம்பெயர் சக்திகளின் செயற்பாடுகளுக்கு, குறைவில்லை எனலாம். மலையகத்தில் தனி ஒரு பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டது தெரிந்த ஒரு விடயமே (2000 வாக்குகள்). மறுபுறத்தில், எந்தக் கட்சியினருக்கும் வாக்குப்போட வேண்டாம் - கட்சிகள் தவிர்ந்த, தனித்த சுதந்திர நபர்களுக்கே எமது வாக்குகளை அள்ளித்தர வேண்டும் எனக் கூப்பாடு போடுவர்களும் மலையகத்தில் உண்டு. ஆனால், மறைமுகமாக, அநுரவுக்கு எதிராக இப்படி இவர்கள் செயற்பட, ஏற்கனவே கங்கணம் கொண்டுள்ளனர் என்பது வெளிப்படை. பல தளங்களில், பல வடிவங்களில் மலையகம் தோறும் இவர்கள் இப்படி செயற்பட்டு வருவதன் பின்னணி புலம்பெயர் அரசியலே – அல்லது அவர்கள் தரக்கூடிய கையூட்டே.
ஆனால், சர்வதேசத்தின் நகர்வுகள் இவற்றைவிட நுணுக்கம் நிறைந்தனவாகவே இருக்கின்றன.
6. சர்வதேச நகர்வுகள்
அண்மையில், ‘வீரகேசரி’, தனது ஆசிரியர் தலையங்கத்தில் பின்வருமாறு எழுதியிருந்தது : “சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்பு முக்கியம்”. இத்தலையங்கமானது உலக வங்கி அல்லது சர்வதேச நாணய நிறுவனங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாக இருந்தது (28.09.2024). மேற்படி பாடம்புகட்டல், வெறுமனே வேர் இல்லாது நடந்த ஒன்று என ஏற்பது கடினம் எனலாம் (சர்வதேச நிதி நிறுவனத்தினர், அநுரவுடன் பேசி மூன்றாம்கட்ட மீளாய்வு நடவடிக்கைகளுக்காக 200 பில்லியன் டாலரைத் தருவதற்குத் தயாராக உள்ளதாய் அறிவித்துள்ளனர்! : 07.10.2024).
வேறுவார்த்தையில் கூறுவதானால், தகுந்த காலம் அல்லது நொடி கனியும்வரை, காய்களை மிகமிக மெதுவாக நகர்த்தி, அதுவரையில், தமது செல்வாக்கு வட்டத்துள்ளேயே, அநுரவைச் சிறை வைத்திருப்பது முக்கியமானது எனச் சர்வதேச சக்திகள் நன்கு உணருகின்றன.
உதாரணமாக, சவுதி அரேபியாவின் 94வது தேசியதின நிகழ்வுக்கு, கோலாகலமாக கேக்வெட்ட, ஜே.வி.பி. இன் ஹேரத் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதும், ஹேரத்தும் கேக் வெட்டி மகிழ்வதாய் காட்சி தருவதும், இதே தினங்களில், இஸ்ரேல் கட்டுமானப்பணியில் இலங்கையருக்கு வாய்ப்புண்டு என்ற அறிவிப்பை இலங்கை வானொலி வெளியிடுவதும் (26.09.2024) பைடன், அநுரவுக்குத் தமது வாழ்த்து செய்தியைத் தெரிவிப்பதும் (27.09.2024) விடயங்களின் சிக்கலைப் பறைச்சாற்றுவதாய் உள்ளன. (இஸ்ரேல் குறித்த செய்தியில், அதிகாரிகளின் திருவிளையாடல்கள் ஊடுருவி இருக்கலாம். இவ் அதிகாரிகளைத்தான் சர்வதேச நிதி நிறுவனம், சில தினங்களின் முன், வாயார புகழ்ந்து தள்ளியிருந்தது).
அதாவது, அநுரவை, முற்றாக, பகை முகாமுக்குள் தள்ளிவிட்டுவிடாமல், தமக்குள்ளும் சில கொடுப்பனவுகளைச் செய்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையைத் தரும் செயலில் இவை இன்று இறங்கி உள்ளன. இதன் அடிப்படையிலேயே ஜப்பான், கொரியா போன்றவை தமது ‘உதவித்’ திட்டங்களைத் தொடர்வதாக கூறுவது, இந்தியா-சீனா போன்ற நாடுகளில் இருந்து, அநுரவைக் கழட்டும் செயற்பாடுகளே, மேற்படி “உதவித்திட்டங்களில்” உள்ளடங்கும் அரசியலாகின்றது. இதுபோலவே, புலம்பெயர் சமூகத்தின் முதலீடுகள் என்று பாடைத்தட்டிப்போன பழைய பல்லவியைக் கோபிகிருஷ்ணா போன்றவர்கள், புதிய சுரம் சேர்த்துப்பாடாமல் இருப்பதாயும் இல்லை (29.09.2024 – கொழும்பு கெசட்). ஆனால், இவற்றைக் கடந்து உள்நாட்டு நிலவரங்கள் எனப்படுபவை சில கோரிக்கைகளை அழுத்தம் திருத்தமாக அரசியல் வெளியில், முன்வைப்பதாகவே இருக்கின்றன.
7. உள்நாட்டுக் கோரிக்கைகள்
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்” தொடர்பில், உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பன மெல்கம் ஆண்டகை முதலானோரின் கோரிக்கையாகின்றன.
இக்கோரிக்கைகளானவை, மேலோட்டமாகப் பார்க்குமிடத்து, விடயத்தின் ஆழத்தை விளக்குவதாயில்லை.
254 பேரைப் பலிக்கொண்ட இத்தாக்குதலின் பின்னணியில் ஓர் சர்வதேச வலைப்பின்னல் உண்டு என்பதும், சவுதி-கட்டார் போன்ற நாடுகளின் மையத்தூண்டுதலும், பாகிஸ்தான்-ஆப்கான் போன்ற நாடுகளின் பயங்கரவாத ஏற்றுமதித் திட்டங்களும் கவனமாக இத்தாக்குதலில் உள்ளடக்கப்பட்டே இருக்கின்றன என்பது இந்திய நிபுணர்களின் கணிப்புகளாகும்.
இந்நிபுணர்களின் கூற்று மத்தியகிழக்கு நாடுகளுக்கும், மேற்கிற்கும், முக்கியமாக அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும், இடையேயான தொடர்பாடல்களை, கூறுவதாகும். மேலும், ரஷ்யா முதல் சிரியா வரையிலும் இதனையே அவ்வப்போது கூறி வந்துள்ளன, என்பதும் நினைவூட்டத்தக்கதாகும்.
தமிழ்த் தேசியத்தைப் போன்றே, இஸ்லாமியத் தேசியத்தையும் நாம் உருவாக்கித் தருவோம் என்ற உத்தரவாதங்கள், உக்கிரமுற்று வெளிக்கிளம்பிய காலத்திலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் இடம்பெற்றதாகின்றது. (தெற்காசிய பிராந்தியத்தில்).
இவை அனைத்தையும் அநுர அறிந்தே இருப்பார் என நாம் நம்பலாம். இலங்கையானது, மகிந்த ராஜபக்ஷ காலத்திலும் சரி அல்லது ரணில் விக்ரமசிங்க காலத்திலும் சரி இத்தகைய மரபுகளை, ஆழக்கற்று உள்வாங்கிய நிலையிலேயே தத்தம் நடவடிக்கைகளை முன்னெடுத்து சென்றதாகத் தெரிகின்றது. கூடவே, பாலஸ்தீனருக்கு நீதி வேண்டும் அல்லது அவர்களுக்குத் தனி தேசம் வேண்டும் போன்ற கோரிக்கைகளை, அவ்வப்போது துருக்கியின் எர்டோகனைப்போல, எறிந்து விளையாடுவது, ரணில்விக்ரமசிங்க போன்றோருக்குக் கைவந்த கலையானது. அதாவது “சோழியன் குடுமிகள் சும்மா ஆடுவதில்லை” என்ற பழமொழிக்கு ஏற்ப, இத்தலைவர்கள் தத்தமது திருவாய் மலர்தல்களை அவ்வப்போது செய்து முடித்தனர். உயிர்த்த ஞாயிறு திட்டங்களில், அரச புலனாய்வு துறையினருக்குப் பங்கிருந்தது என அன்றைய சட்டமா அதிபர் முதல் (லிவேரா) இன்றைய ஷானி அபேசேக்கர வரை (27.09.2024) (முன்னாள் புலனாய்வுத்துறை இயக்குனர்) தினசரி விடப்படும் அறிக்கைகள் இதனையே கூறுவதாகின்றன.
கேள்வி, இப்படியாக ஆழ வேரூன்றியிருக்கும் இம்மரபை, அநுர இனி எப்படி எதிர்கொள்ளப் போகின்றார் என்பதேயாகும். அதாவது, மெல்கம் ஆண்டகை, மற்றும் முற்போக்குத் தென்னிலங்கை போன்ற உள்நாட்டுச் சக்தியிலேயா அல்லது இந்தியா-சீனா போன்ற வெளிநாட்டுச் சக்திகளின் ஒத்துழைப்புடனா இவர் தங்கியிருக்கப் போகின்றார் என்பதே கேள்வியாகின்றது.
இருந்தும், இதற்கான முன்னெடுப்புகளை நோக்கி அவர் நகராத பட்சத்தில் அவரும் தோல்வியைத் தழுவுவது நிச்சயம் என்றாகின்றது.
வேறுவார்த்தையில் கூறினால் சர்வதேச நிதிநிறுவனங்களின் கடன்போக அல்லது வெளிநாட்டுத் தனியார் கடன்கள்போக அல்லது திறைசேரி முறி களவுகள் அல்லது ஏனைய நாடுகளின் தனி-தனி கடன்கள்போக, அல்லது பாலஸ்தீனம்-லெபனான் போன்ற விடயங்கள்போக அல்லது இவை போன்ற வேறு எண்ணற்ற விடயங்களும்போக, இவர் வெளிநாட்டின் வலைப்பின்னல்கள் குறித்து ஆழச் சிந்திக்க வேண்டியவர் ஆகின்றார்.
அதாவது, எமது புலம்பெயர் அரசியல், உள்ளூர்ப் பத்திரிகைகளின் தலையங்கள் முதல் சர்வதேசிய மரபுகளின் சாரம் வரையிலான, இச்சக்திகளின் தொழிலானது, கூடயிருந்து குழிப்பறிப்பதேயாகும். இதன் மத்தியிலேயே, அநுர, முகம் கொடுக்கக்கூடிய சவால்கள் அனந்தமாகின்றது.
மன்சூர் எழுதுவார் : “சில ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களின் உடல்மொழியிலும், சொற்களிலும் தொணித்த வன்மம் அதிர்ச்சி ஊட்டுவதாக இருந்தது” (தேர்தல் முடிவுகளின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது) (விடிவெள்ளி : 26.09.2024).
இத்தகைய ஆயிரக்கணக்கான, வன்மங்களின் மத்தியில்தான், ரணிலின் ‘வரிசைகள் யுக’ நினைவுப்படுத்தல்களை (அல்லது பயமுறுத்தல்களை) தாண்டித்தான், அநுர இன்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளார் எனலாம்.
முடிவுரை
ஈரானிய தாக்குதலானது, 41,600 பாலஸ்தீனியர்களைக் கொன்றொழித்து, 94,600 பேரைக் காயப்படுத்தியதற்காக. அல்லது தமது தலைவர்களைக் கொன்றதற்காக – அரங்கேறியது எனக் கூறப்படுகின்றது. ஆனால், இத்தாக்குதலினால், உலக சமநிலையானது இன்று குழப்பம் அடைந்துள்ளது. இக்குழப்பத்தால், இலங்கை பலமடைந்துள்ளது என்பதும் வாதிக்கப்படுகின்றது. இது, சர்வதேச நிதி நிறுவனத்துடனான இலங்கையின் பேச்சுவார்த்தைகளில் செல்வாக்கினைச் செலுத்தும் என்பது ஒரு வகை தர்க்கம். ஆனால், இதனைப் போலவே இந்தியாவும் பலமடைந்துள்ளது என்பதனையும் நாம் மறுப்பதற்கில்லை.
இதுபோலவே, சீனமும்! (இதனாலேயே தாய்வானும், கச்சத்தீவும் விடயங்களின் மையத்தை நோக்கியும் நகர்வதாய் உள்ளன). சீனத்தின் அண்மைக்கால, நடவடிக்கைகள் தாய்வானை மையப்படுத்துவதாக உள்ளன. உதாரணம் : சீனாவின் 75வது குடியரசு தின கூற்றுக்கள்.. ஆனால், இஸ்ரேல் எத்தகைய பதிலடியைக் கொடுக்கப் போகின்றது என்பதனைப் பொறுத்து, உலகின் முகம் மேலும் மாறுபடக் காத்திருக்கின்றது.
இலங்கையைப் பொறுத்தமட்டில், இதுவரையில், மகிந்த-ரணில் தலைமையின்கீழ் அமெரிக்கா-இந்தியா-சீனா முரண்கள் திட்டமிட்டு இழுத்து, அரங்கேற்றப்பட்டு, அதற்கூடு குளிர்காய முனையும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டுள்ளன. விகிதாசாரத்தில் வேண்டுமானால் இது, ஆளுக்கு ஆள், வித்தியாசம் இருக்கலாம் (இம்முரண்களைக் கையாள்வதில்). உதாரணமாக, சீனச் செல்வாக்கு கூடிய விதத்தில் மகிந்தவும், அமெரிக்கச் செல்வாக்கு கூடிய விதத்தில் ரணிலும் இம்முரண்களை பாவிக்கத் தெண்டித்திருக்கலாம். ஆனால், உலகளாவியரீதியில், ஓர் போர்ப் பதற்றம் உருவாகுமானால், அதனை இந்தியாவும்-சீனாவும் தமக்குச் சாதகமானதாகப் பாவித்துக்கொள்ளவே செய்யும். இச்சூழ்நிலையிலேயே, தாய்வான் போன்றே இலங்கையின் நிலவரமும் நிதானமாக நோக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டதாயிருக்கும்.
ஆகவே, இப்பதற்றச் சூழ்நிலைகள், இலங்கையின் கேந்திர ஸ்தான முக்கியத்துவத்தை அதிகரிக்குமா அல்லது பலவீனப்படுத்துமா – என்பனவெல்லாம் அநுர எதிர்நோக்கும் புதிய சவாலாகின்றன. இப்பின்னணியிலேயே, எமது, தமிழரின் கேள்வியும் எழுவதாய் உள்ளது.
கட்டுரையாளர்கள், மன்சூர், கலாநிதி அமீர்அலி (விடிவெள்ளி) போன்றோர்கள் கருதுவது போலவே, கலாநிதி கதிர்காமரும் கருதுகின்றார்: “தமிழ் அரசியல் புதிய பரிமாணத்தை அடைய வேண்டியுள்ளது” (03.10.2024 : வீரகேசரி).
வேறு விதத்தில் கூறுவோமானால், “துருவமயப்படுத்தும் அரசியலை” இன்று, நாம் மீள ஒருமுறை விசாரிக்க வேண்டியுள்ளது. அதாவது, இத்துருவமயமாக்கல் அரசியலானது, யாருக்கு வாய்ப்பாய் அமைவது என்பதே பிரதான கேள்வியாகின்றது. அல்லது இது யதார்த்தத்துடன் கொள்ளும் சம்பந்தம்தான் என்ன அல்லது இது தமிழ் மக்களை பொறுத்தமட்டில் வெறும் உசுப்பேத்தலை மாத்திரம் நல்கும் ஒன்றா என்பது வினாவாகின்றது. (பூகோள அரசியலுக்கு வாய்ப்பளிப்பதைத் தவிர).
இப்பின்னணியிலேயே, அநுரவின் அடுத்த அடி நிதானத்துடன் நோக்கப்பட வேண்டியதாகின்றது.
சரத்வீரசேகர முதல் எமது லங்காசிரி வரை, “பழைய கோப்புகளுக்கு” என்ன நடந்தது, என்று உக்கிரமாய்க் கேட்டு மனிதரை உசுப்பேத்துவதின் பின்னால் உள்ள அரசியலை நாம் ஊகிக்கலாம். உண்மையில், வசந்த சமரசிங்கவின் கேள்வி இது தொடர்பானதுதான்! “திருடர்களை இன்னமும் கைது செய்யவில்லையா? – திருடர்களே எம்மிடம் கேட்கின்றனர்”, என்பது அவரது கூற்று!
அதாவது, பாராளுமன்றத் தேர்தல் முடியும்வரை, அநுர அகலக்கால் வைக்கப் போவதில்லை, என்பதை மேற்படி கூற்று கூறவதாக அமைகின்றது. ஆனால், அதன் பின்னரும்கூட, அநுராவின் அடிகள் - நிதானமாக – மிக மிக நிதானமாக – எடுத்து வைக்கப்பட வேண்டியவையாகின்றன.
ஒருவேளை, நேபாளம் இவருக்கு இதற்கான சில உதாரணங்களைக் காட்டலாம். காட்டாமலும் விடலாம். ஆனால், இவை அனைத்தும், எமது தமிழ் அரசியல், உடனடியாக உள்வாங்க வேண்டிய இன்றைய தேவைகளாகின்றன, என்பதில் ஐயமில்லை. அல்லது, கலாநிதி கதிர்காமர் போன்றவர்கள் குறிப்பிடும், ‘புதிய பரிமாணம்’ என்பது வெறும் ஆர்வமாகவே, அல்ல வெறும் ஆசையாகவே நீடிக்கும் என்பதில் சந்தேகம் கொள்ளல் ஆகாது - அது நிராசையாக முடியாமல் இருக்க வேண்டும் என்றால்...!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.