முகநூற் குறிப்புகள்: யாழ்ப்பாணத்திற்கான நீர் பற்றிய சிந்தனைகள் - சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) -
- சமூக, அரசியற் செயற்பாட்டாளரான சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) அவரது முகநூற் பக்கத்தில் அண்மைக்காலமாக எழுதி வரும் யாழ் மாவட்டத்துக்கான நீர்ப்பற்றாக்குறை பற்றிய பதிவுகள் முக்கியமானவை. இலகு நடையில் , எவரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்படும் பதிவுகள் அவை. தரை அமைப்பு, நிலக்கீழ்க்கற்கள், நீரைத் தேக்கி வைக்க உதவும் களிமண் படை, குழாய்க்கிணறுகள், தனிக்கிணறுகள், அவை சமூக வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புகள், நன்னீரைப் பெறுவதற்கான வழிகளின், கலந்துரையாடல்களின் அவசியம் எனப் பல்வேறு விடயங்களைத் தொட்டுச் செல்லும் பதிவுகள் என்பதால் முக்கியமானவை. இவ்விடயத்தில் மேலும் சிந்தனையைத் தூண்ட வைப்பவை.
இவ்விதமான இலகு நடைப் பதிவுகள் சாதாரண மனிதர்களை இவ்விடயத்தைப் புரிய வைக்கின்றன. அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. விவிப்புணர்வு அவர்களை இயற்கையாகக் கிடைக்கும் நன்னீரான மழை நீர் போன்றவற்றைத் தேக்கி வைக்கும் திட்டங்களைப் பற்றிச் சிந்திக்க வைக்கின்றன. இவ்விடயத்தில் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை அவதானிக்க, விமர்சிக்க வழி சமைக்கின்றன..அதனால் அப்பதிவுகளை இங்கு பதிவுகள் வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொள்கின்றோம். -
துஞ்சுதல் என்ற சொல்வழக்கு ஒன்று எம்மிடத்தில் புழக்கத்தில் இருக்கின்றது. இது அதிகம் உப உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் புழக்கத்தில் உண்டு. அதுவும் மழைக் காலத்தில் அதிகம் பாவிப்பர் இந்த சொல்லாடலை. கன மழை பெய்து பயிர் உள்ள தரையில்(தோட்டத்தில்) ஒரு நாளிற்கு மேலாக நீர் தேங்கினால் தரையில் உள்ள பயிரின் வேர்கள் அழுகி பயிர் செத்துவிடும். இது அதிகம் வெங்காயம் மிளகாய் இன்ன பிற உப உணவுச் செய்கையில் அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்தும். முழுப் பயிரும் நாசமாகிவிடும். ஆனால் யாழ்ப்பாணத்து மண் அதிலும் சிறப்பாகச் சிவப்பு மண் சில இடங்களில் உள்ள இருவாட்டி மண்ணில் இருக்கும் பயிர்கள் இவ்வாறு கன மழையினால் அதிகம் துஞ்சுதல் என்றதாக பயிர்கள் செத்துப் போவது இல்லை. காரணம் பயிரின் வேர் பகுதி 24 மணி நேரம் என்றாக நீரால் சூழப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் இங்கு இல்லாததே காரணம். இதனால்தான் இந்த வகை மண்ணில் விவசாயம் செய்பவர்கள் அதிகம் கன மழை போன்றவற்றினால் பயிர்கள் நாசமாகி பொருளாதார இழப்புகளை சந்திப்பதில்லை. பொருளாதார நலிவிற்குள் உள்ளாகுவதில்லை.
காரணம் எமது நில அமைப்பு அவ்வாறானது.
சல்லியும், சுண்ணாம்புக் கற்களையும் படைகளாகக் கொண்ட நிலத்தடியைக் கொண்டவையாக பெரும்பாலும் காணப்படுகின்றன. இதனால் பெய்யும் (கன)மழையை வேகமாக நிலத்திற்குள் கீழ் படையால் உள்வாங்குவதாக பயிரின் வேர் பகுதியைத் தாண்டி கீழ் இறக்கிவிடும். இந்த நீர் நிலத்தடியில் ஆழத்தில் இருக்கும் சமுத்திரத்திற்கு இணைப்பாக இருக்கும் வாய்கால்கள் ஊடாக நீர் மட்டங்களுக்கு ஏற்ப சென்று விடும் அல்லது தேங்கிவிடும். ஆனால் இந்த முறை பயிர் செய்கையிற்கு பாதுகாப்பான உகந்ததாக இருக்கும் அதேவேளை மழையால் பெறப்படும் நிலத்தடி நீர் அதிகம் தொடர்ந்தாற் போல் பல மாதங்களுக்கு அங்கேயே சேமித்து வைப்பதற்கான வாய்ப்பையும் இல்லாமல் செய்கின்றது என்ற மறுபக்க எதிர்விளைவுகளையும் கொண்டிருக்கின்றது. எமது மண் வளம் அவ்வாறானது.