முன்னுரை
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனையும் ‘மானுடம்’ என்ற பொதுப்பண்பில் அடக்கலாம். இருப்பினும் மனிதனின் ஒவ்வொரு செயல்பாடுகளான உண்ணுதல், நடத்தல், பார்த்தல், சிரித்தல், சிந்தித்தல், கற்றல், கவனித்தல் போன்றவற்றை ஆய்ந்து கவனித்தால் ஒவ்வொருவரிடமும் பல்வேறு நடத்தை முறைகளும் இயல்புகளும் வேறுபட்டு காணப்படுகின்றன என்பதை உணர முடியும். மனிதன் ஒருவர் மற்றவரிடமும், ஒவ்வொரு சூழலிலும் நடந்து கொள்ளும் விதம் அல்லது முறை ‘நடத்தை’எனப்படும். மனிதப் பண்புகள் அம்மனிதரின் நடத்தை முறைகளை ஆராயும் துறையே உளவியலாகும். அவ்வகையில் சங்க இலக்கிய நூலான கலித்தொகையில் தானே தனது மனநிலையை வெளிப்படுத்துதல், மற்றவர்களின் மூலம் தன் மனநிலையை வெளிப்படுத்துதல் என்ற இருவகையில் தலைவியின் உளவியலை ஆராய முடியும். பிற பெண் மாந்தர்களான தோழி, செவிலி ஆகியோரின் கூற்று பாடல்கள் வழி தலைவியின் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் உளவியல் அடிப்படையில் எடுத்தியம்புவதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.
உளவியல் – விளக்கம்
உளவியல் என்பதை ஆங்கிலத்தில் ‘சைக்காலஜி’ என்பர். ‘சைக்காலஜி’ என்பதன் மூலச்சொல் ‘சைக்கிலோகஸ்’ என்பதாகும். ‘சைக்கி’ (கிரேக்கச் சொல்) என்றால் ஆன்மா என்றும்,‘லோகஸ்’என்றால் அறிவியல் என்றும் பொருள் கொண்டு, சைக்காலஜி என்பதை ‘ஆன்மாவின் அறிவியல்’ என்று கூறுவர். ஆன்மாவைப் பற்றிய அறிவியக்கமே உளவியல் என்று தொடக்கக் காலத்தில் உளவியலையும் தத்துவத்தையும் இணைத்து கூறியுள்ளனர்.
“உளவியல் என்பது மனித நடவடிக்கை பற்றிய அறிவியலாகும். மனிதன் தனித்தும் பிறருடன் சேர்ந்தும் எவ்வாறு செயல்படுகிறான் என்பதை அறிவதற்கு அது உதவுகிறது”1
பிற பெண் மாந்தர்கள்
கலித்தொகையில் தலைவி தவிர இடம்பெறும் பெண் மாந்தர்கள்,
தோழி, செவிலி, நாற்றாய், காமக்கிழத்தியர் - முதலிய பல பெண் மாந்தர்களின் கூற்று இடம்பெற்றுள்ளது.
தோழி கூற்று வழி புலப்படும் தலைவியின் மனநிலை, பிரிவுத்துயர், தலைவின் மனமகிழ்வு, புணர்ச்சி மாற்றம், பரத்தையிற் பிரிவும் தலைவியின் உறக்கமின்மையும், பிரிவுத்துயர்
பிரிவுத்துயர் மிகவும் கடினமானது. தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து, விரும்பிக் காதலர்களாக வாழ்கின்றனர். பின்னர் திருமணம் செய்து கொள்கின்றனர் ஆனால் இவ்விரு வகையான வாழ்க்கையிலும் பிரிவு என்பது இயல்பாக உள்ள ஒன்று. காதல் வாழ்க்கையில் காதலர்களின் ஒரு நாள் சந்திப்பிற்குப் பின் மறுநாள் சந்திப்பது வரையிலும் சிறு பிரிவு ஏற்படுகிறது. திருமண வாழ்க்கையில் வெளியூர் செல்லும் பொழுது நெடுநாள் பிரிவு ஏற்படுகிறது. இப்பிரிவுகளால் மிகவும் பாதிக்கப்படுபவள் தலைவியே.
“பிரிவுத்துயர் எல்லை கடக்கும் போது அது மனத்தின் சமநிலையையே பாதிக்கிறது. உடல்நலத்தை கெடுக்கிறது.”2
அவ்வகையில் தலைவன் தலைவியை பிரிந்து, செலவிடைப் பயணம் மேற்கொள்கிறான் எனத் தலைவி தோழியிடம் வருந்தி கூறுகிறாள். இதை உணர்ந்த தோழி தலைவனிடம் சென்று, நீர் ஈட்டும் பொருளைக் காட்டிலும் உன் தலைவி தான் சிறந்த பொருள் என்று உணர்வாய். நீ பிரிந்து இருந்தால் இவள் வாழ மாட்டாள். பிரிந்த அன்றே இறந்துபடுவாள் என தலைவியின் மனவுணர்வை எடுத்துக் கூறி தலைவனின் செலவைத் தவிர்த்து நிற்பதை,
“பாஅல் அம்செவிப் பணைத் தாள் மா நிரை
மாஅல் யானையொடு மறவர் மயங்கித்
தூறுஅதர் பட்ட ஆறு மயங்கு அருஞ்சுரம்
இறந்து, நீர் செய்யும் பொருளினும், யாம் நுமக்குச்
சிறந்தனம் ஆதல் அறிந்தனிர்..”3
என்ற பாடலடிகள் மூலம் அறியமுடிகிறது.
தலைவியின் மனமகிழ்வு
சமகால உளவியலில், டாக்டர் செலிக்மேன்(2011) பொறுத்தவரை,“மகிழ்ச்சியை ஒரு இனிமையான, அர்த்தமுள்ள மற்றும் அர்ப்பணிப்புள்ள வாழ்க்கையாகப் புரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், ஒரு நபர் வைத்திருக்கும் தரமான உறவுகளாலும், அவர்களின் வெற்றிகளாலும் சாதனைகளாலும் மகிழ்ச்சி நிலைத்திருக்கிறது”4 என்று கருத்து தெரிவிக்கிறார்.
காட்டின் கொடுமையையும் அங்குச் சென்றால் தலைவி வாட்டமுறுவாள் என்பதையும் தலைவனே கூறுதலின், தலைவியைப் பிரியார் என்று தோழி வற்புறுத்தினாள். மேலும் சிங்கம் முழங்கும் காடு என்றமையின் விலங்குகளால் அச்சம் ஏற்படும். தீக் காற்று வீசும் என்றமையின் தலைவியின் மென்மையான அழகு கெடும் என்ற தலைவன் தலைவியின் அழகிடத்து கொண்ட ஈடுபாடும் பொறுப்புணர்வும் வெளிப்படுவதன் வாயிலாக தலைவன் தன் மேல் அதிக அக்கறை கொண்டுள்ளான் என்று மனமகிழ்வு கொள்கிறாள் என்பதை,
“நலம்பெறு சுடர்நுதால் எம்மொடு நீவரின்,
இலங்குமாண் அவிர்தூவி அன்ன மென்சேக்கையுள்
துலங்குமான் மேல் ஊர்தித் துயில் ஏற்பாய் மற்று ஆண்டை
விலங்குமான் குரல் கேட்பின், வெருவுவை அல்லையோ?”5
என்ற பாடலடிகள் மூலம் உணரமுடிகிறது.
பரத்தையிற் பிரிவும் தலைவியின் உறக்கமின்மையும்
தூக்கமின்மை (இன்சோம்னியா) என்பது உடலுக்குத் தேவையான அளவு தூங்க முடியால் இருக்கும் ஒரு நோய் அறிகுறி. “தூங்குவதில் சங்கடங்கள் ஏற்படுதல் போன்று குறைவான தூக்கத்தினால் ஏற்படுகின்ற கோளாறுகளினால் ஏற்படும் நோய் அறிகுறியாகும்”6
தலைவன் தலைவியை விடுத்து, பரத்தைச் சேரியின் கண் சென்றிருந்ததால், தலைவி தலைவனின் பிரிவினை எண்ணி உறக்கமில்லாமல் இருந்தாள். உறங்கத் தொடங்கிய சமயத்தில் பரத்தையர் இல்லிலிருந்து வந்த, மணமுழா ஓசை, துணங்கை அரவம், நன்மான் தெண்மனி ஓசைகள் தூக்கத்தைக் கெடுத்தன.
“நலம் நீப்பத் துறந்துஎம்மை, நல்காப் தீ விடுதலின்
பலநாளும் படாத கண், பாயல் கொண்டு இயைபவால்
துணை மலர்க் கோதையார் வைகலும் பாராட்ட
மண மனைத் ததும்பும் நின்மனை முழவந்து எடுப்புமே”7
என்ற பாடலடிகள் மூலம், தன் காதல் தலைவன் தன்னை விடுத்து, பரத்தையர் சேரியில் தங்குவதை அறிந்த தலைவியின் மனவுணர்வு வெளிப்படுகிறது.
சோக மனோபாவம்
தான் விரும்பிய அல்லது நினைத்தது நடக்காவிட்டால் உள்ளமானது சோகநிலைக்குத் தள்ளப்படும்.
“தன்னை உணராத மனப்போராட்டங்களில் எதையாவது பறி கொடுத்தது போல சோகத்துடன் துன்பங்களை அடைத்திருக்கும் ஒரு சோக நிலை.”8
திருமணத்தை முன்னிட்டுப் பொருள் தேடப் பிரியக் கருதிய தலைவனைத் தோழி, தலைவியின் ஆற்றாமையை எடுத்துக் கூறிப் பொருள் தேடச்செல்லும் முயற்சியை விலக்கித் திருமணம் செய்து கொள்ள வினவுவது. தலைவியின் ஆற்றாமை உணர்வை தோழி எடுத்துரைப்பதை,
“முத்து உறழ் மணல்எக்கர் அளித்தக்கால் முன் ஆயம்
பத்து உருவம் பெற்றவன் மனம் போல நந்தியான்
அத்திறந்து தீ நீங்க அணிவாயு அவ் அபம்
வித்தத்தால் தோற்றான் போல், வெய்துயர் உழப்பவே?”9
என்ற பாடலடிகள் விளக்குகின்றன.
வீரத்தை விரும்பும் மனநிலை
வீரம் என்பது துணிவான ஒரு உணர்வு ஆகும். தான் சந்திக்கும் சவாலையும் சந்தித்து, வலி, ஆபத்து, எதிர்பாரா நிகழ்வுகள், எதிர்ப்பு என பலவற்றைக் கடந்து வெற்றி காண முயல்வதே ஆகும். தடுத்தாலும் சிரம் தாழ்த்தாது செய்து முடிப்பதே வீரம்.
“கல்வி தறுகண் புகழ்மை கொடை எனச்
சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே”10
என்று தொல்காப்பியர் தறுகண் என்ற சொல்லால் வீரத்தை சுட்டுகிறார்.
சங்கத் தமிழர்கள் காதலையும் வீரத்தையும் இருக்கண்களாக போற்றுகின்றனர். வீரம் நிறைந்த தலைவனையே தலைவியால் மணக்க முடிகிறது. ஏனெனில், சமுதாயத்தில் வீரமுள்ளவரையே மதிப்புடன் கருதினார். சமுதாயத்திற்கு ஏற்ப வீரத்தை விரும்பும் தலைவியின் மனநிலை,
“கோட்டொடு சுற்றிக் குடர் வலந்த ஏற்றின் முன்
ஆடி நின்று, அக்குடர் வாங்குவான் பீடு காண்
சேந்நூற் கழி ஒருவன் கைப்பற்ற, அந்நூலை
முந்நூலாக் கொள்வானும் போன்ம்”11
என்ற பாடலடிகள் மூலம் புலனாகிறது.
செவிலி கூற்று வழி புலப்படும் தலைவியின் மனநிலை
மனப்போராட்டம்
இரண்டு சமவலிமையுடைய ஊக்கிகள் பூர்த்தி செய்ய இயலாது. ஓன்று மற்றொன்றிற்குத் தடையாக இருப்பதின் காரணமாக ஏற்படும் உளச்சிக்கலை உள்ளப் போராட்டம் அல்லது மனப்போராட்டம் என்பர்.
“ஒரே நேரத்தில் நிறைவேற இயலாததும், ஒன்றற்கொன்று தனித்தனியானதுமான செயல் நோக்கமும் ஊக்கமும் உள்ளத்தில் இருப்பதினால் விளைவதே உள்ளப் போராட்டம் ஆகும்”12
1. ஈர்ப்பு - ஈர்ப்பு உளப்போராட்டங்கள்
2. தவிர்ப்பு – தவிர்ப்பு உளப்போராட்டங்கள்
3. ஈர்ப்பு - தவிர்ப்பு உளப்போராட்டங்கள்
4. இரட்டை ஈர்ப்பு - தவிர்ப்பு உளப்போராட்டங்கள்
இவ்வாறு உள்ளமானது தனக்கு விருப்பமான அல்லது வெறுப்பான இரண்டு சூழ்நிலைகள் அமையும் போது, எதைத் தேர்வு செய்வது என்று தெரியாமல் ஒருவிதமான மனக்குழப்பத்திற்கு ஆளாகிறது. இதுவா அதுவா என்று உள்ளத்தில் ஏற்பாடும் போராட்டமே உளப்போராட்டம்.
காட்லீவின் மூவகையான மனப்போராட்டத்தை விளக்குகிறார்.அவை,
1. அணுகுதல் - அணுகுதல் போராட்டம்
2. அணுகுதல் - விலகுதல் போராட்டம்
3. விலகுதல் - விலகுதல் போராட்டம்
கலித்தொகை தலைவி தன் பெற்றோரை விடுத்து, தான் விரும்பிய தலைவனோடு உடன் போக்கு செல்லும் போது, மனப்போராட்டம் அடைகிறாள்.தன்னை வளர்த்த பெற்றோர்கள் ஒரு புறம், தான் விரும்பிய தலைவன் மற்றொரு புறம் என்ற விரும்பத் தகுந்த இரண்டிற்கிடையில் தலைவியின் மனம் தவிக்கிறது. இதற்கிடையில் அவள் ஒரு மனதாக தான் விரும்பிய தலைவனுடன் சென்றதால், தலைவியை வளர்த்த செவிலித்தாய் துடித்துடித்து போய் தேடி அலைகிறாள்.இதனை,
“வெவ்விடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர் இவ்விடை
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்
தம்முள்ளே புணர்ந்த தாம் அறிபுணர்ச்சியர்
அன்னார் இருவரைக் காணிரோ பெரும”13
என்ற பாடலடிகள் பதிவு செய்கின்றன.
முடிவுரை
பிற பெண் மாந்தர்களான தோழி, செவிலி ஆகியோரின் கூற்று வாயிலாக தலைவியின் பிரிவுத்துயரின் கடினம், தலைவன் தன் மீது வைத்திருக்கும் அக்கறையை எண்ணி அடையும் மனமகிழ்வு, தன் மீது அன்புள்ள தலைவன் தன்னை விடுத்து பரத்தையிடம் சென்றதால் மனமுடைந்து உறக்கமின்றியும் தவிக்கும் நிலை, திருமணத்திற்காக பொருள்வயிற்பிரியும் தலைவனை நினைத்து அடையும் சோக மனநிலை, சமுதாயத்திற்கு ஏற்ப வீரத்தை விரும்பும் மனநிலை, செவிலித்தாய் உள்ளப்போராட்டம் ஆகியவன எடுத்தியம்பப்படுகிறது.
சான்றெண் விளக்கம்
1 எஸ்.பி.ஆதிநாராயணன்,மனித உள்ளம், ப.21
2 கலைமணி.என்.வி,சிக்மண்ட் ஃபிராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள், ப.10
3 கலித்தொகை,5
4 இந்திரா செல்வநாயகம், சமகால உளவியல், ப 29
5 கலித்தொகை,13
6 கலைமணி.என்.வி,.சிக்மண்ட் ஃபிராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள், ப.33
7 கலித்தொகை,70
8 கலைமணி.என்.வி,.சிக்மண்ட் ஃபிராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள், ப.18
9 கலித்தொகை,136
10 தொல்.பொருள், 253
11 கலித்தொகை,103
12 து.சிவராஜ், சங்க இலக்கியத்தில் உளவியல் ப.17
13 கலித்தொகை,9
துணைநூற்பட்டியல்
எஸ்.பி.ஆதிநாராயணன் ,மனித உள்ளம், பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம், 25,பீட்டர்ஸ் சாலை, ராயபேட்டை,சென்னை - 600 014.
கலைமணி.என்.வி,சிக்மண்ட் ஃபிராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள், சாந்தி நிலையம், புதிய எண் 126, உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை 600 017.
இந்திரா செல்வநாயகம், சமகால உளவியல், விஜய் அச்சுப்பதிப்பகம், 172, மில் வீதி, வவுனியா, இலங்கை.
து.சிவராஜ், சங்க இலக்கியத்தில் உளவியல், சிவம் பதிப்பகம்,227, வீனஸ் ராதா காம்ப்ளக்ஸ், வேலூர்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.