1964 இல் எம்.டி.வாசுதேவன் நாயரால் எழுதப்பெற்ற இந்த மலையாள நாவல் அப்போது ஒரு இலட்சம் பிரதிகள் விற்பனையைக் கண்டது. தமிழில் பல மொழிபெயர்ப்புகளைக் கண்டபோதிலும், கடைசியாக 2017 இல் காலச்சுவடு பதிப்பாக ரீனா ஷாலினி அவர்களால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. ரீனா ஷாலினி மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர்.
வாசுதேவன் நாயர் எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர் எனப் பலதுறைகளில் இயங்கியவர்
‘மஞ்சு’ என்றதும் என் மனதில் முதல் பதிவாகியது ஒரு பெண்ணின் கதை என்பதுதான். ஆனால் ‘மஞ்சு’ என்பது அந்தப்பெண்ணின் பெயர் அல்ல. தமிழில் ‘மஞ்சு’ என்பதற்கு பல அர்த்தங்கள் இருந்தபோதும் இங்கே ‘மூடுபனி’ என்பதே பொருத்தமாக அமைகின்றது.
நாவலின் மையக் கதாபாத்திரம் விமலா என்கின்ற விலங்கியல் ஆசிரியர். விமலாவின் காத்திருப்பில் – சுதிர்குமார் மிஸ்ரா, ரஷ்மி, புத்து, சர்தார்ஜி ஆகியோர் வருகின்றார்கள்.
தனிமைத் துயர், நினைவு ஏக்கம் – இந்த இரண்டையும் எல்லா மனிதர்களும் தம் வாழ்நாளில் எதிர் கொண்டிருப்பார்கள். விமலாவுக்கும் அதுதான். வேண்டுமென்றால் அவளால் விடுமுறைக்கு தனது ஊரான அல்மோராவிற்குப் போய்விட்டு வர முடியும். அதற்கு மூன்று மணித்தியாலங்கள் போதுமானது. ஊரில் அப்பா அம்மா தம்பி தங்கை இருக்கின்றார்கள். ஆனால் அவளால் போக முடிவதில்லை. காரணம் அம்மா!
ஒரு காலத்தில் கம்பீரமும் கண்டிப்பும் நிறைந்த அப்பா, இன்று உடல் முடியாமல் தளர்ந்து படுக்கையில் வீழ்ந்துவிட்டார். அம்மாவிற்கு ஒரு புதிய காதலன் வந்துவிட்டான். பிறகென்ன? தம்பியும் தங்கையும் சீரழிந்து கொள்கின்றார்கள்.
அதனால் தனிமையை வலிந்து தானாக ஏற்றுக்கொண்டு காத்திருப்புடன் வாழ்கின்றாள் விமலா. கூடவே காலமும் இடங்களும் மனங்களும் காத்திருக்கின்றன. காத்திருப்பே வாழ்வாதலால் அதற்கு முடிவும் இல்லை.
கதை ஒரு கோடைகால விடுமுறையில் ஆரம்பிக்கின்றது. எல்லா மாணவிகளும் விடுதியைவிட்டு கிழம்பிப் போய்விடுகின்றார்கள். விமலா வழமைபோல தனித்துப் போகின்றாள். இதோ கடைசி மாணவி ரஷ்மி---16 வயது நிரம்பியவள்---விமலாவிடமிருந்து விடைபெற்றுக் கொள்கின்றாள். தன் அண்ணன் தன்னை அழைத்துச் செல்ல வந்திருப்பதாகப் பொய் சொல்லிவிட்டு, காதலனுடன் கிழம்பிப் போகின்றாள். விமலாவிற்கு அவள் பொய் சொல்கின்றாள் என்பது தெரியும். ரஷ்மியின் கண்களில் தெரியும் குறுகுறுப்பும் கன்னங்களில் வழியும் மினுமினுப்பும் அவளைக் காட்டிக் கொடுத்துவிடுகின்றன. கூடவே விமலாவின் சுதிர்குமார் மிஸ்ராவையும் நினைவுகளில் கிழறிவிட்டுச் செல்கின்றாள்.
ரஷ்மி புறப்படும்போது, ‘டீச்சர் எப்போது வீட்டிற்குப் போகின்றீர்கள்?’ எனக் கேட்கின்றாள். ‘நாளைக்கு.’ என்கின்றாள் விமலா. இதேபோல விடுமுறை முடித்து திரும்பி வரும்போது ‘டீச்சர் எப்போது வந்தீர்கள்?’ எனக் கேட்பார்கள். ‘நேற்று’ என்பாள் விமலா. இந்த ‘நாளைக்கும்’ ‘நேற்றுக்கும்’ இடையேதான் இந்தக்கதை நிகழ்கின்றது. ஒன்பது வருடங்கள் இப்படியாகக் கடந்து போய்விட்டன.
நாவலின் களம் உத்தரகண்ட் பிரதேசம். இது இமாச்சலப் பிரதேசத்திற்கு அருகானது. ஹல்தானி, குமாயுன் மலைச்சாரல், நயனாதார் மலை, நைனி ஏரியைச் சுற்றி அமைந்திருக்கும் நைனிடால் நகரம் என நாம் பயணிக்கின்றோம்.
கோடை குளிருக்காகவும், மலைப்பிரதேசம் சுற்றுலாப் பிரயாணிகளுக்காகவும் காத்திருக்கின்றன. விமலா ஒரு காலத்தில் சந்தித்த காதலன் சுதிர்குமாருக்கும், படகோட்டியான புத்து ஒருபோதும் சந்தித்திருக்காத தனது வெள்ளைக்காரத் தகப்பனிற்காகவும், சர்தார்ஜி மரணத்திற்காகவும் காத்திருக்கின்றார்கள். இவர்களுக்கிடையேயான ஊடாட்டம் சுவாரஸ்யமானது. சுதிர் மிஸ்ரா என்பவனைத் தேடி விமலா ஒருபோதும் போனதில்லை, அவன் மீது குற்றமும் சுமத்தவில்லை. ஆனால் காத்திருக்கின்றாள்
நாவலின் கவித்துவமான நடை.யில் ‘குமாயுன்’ மலைச்சாரலும், ‘நைனி ஆலயமும்’ எம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. நம் வாழ்வில் என்றாவதொருநாள் நாமும் இந்த இடங்களைத் தரிசித்துவிட முடியாதா என்ற ஏக்கத்தைத் தருவிப்பன. விமலா கல்லூரிக்கருகே ஒரு விடுதியில் தங்கியிருக்கின்றாள். எதிராக ‘கோல்டன் நூக்’ என்று இன்னுமொரு விடுதி. அங்கே சுற்றுலாப் பிரயாணிகள் வருவதும் போவதுமாக இருக்கின்றார்கள். இவளது விடுதியில் இருந்து பார்க்கும்போது மலைச்சிகரங்களும், பனி உருகி ஓடும் வெள்ளியோடைகளையும் தரிசிக்கலாம். பைன் மரக்காடுகளையும் ஆப்பிள் தோட்டங்களையும் இரசிக்கலாம்.
இந்த ‘நைனி தேவி’ ஆலயம் பற்றி பள்ளி நாட்களில் படித்த கதையொன்று நினைவிற்கு வருகின்றது. சிவனை அழைக்காது தட்சன் ஜாகம் செய்கின்றான். ஜாகத்திற்கு வருகை தரும் மகளான தாட்சாயணியை அவமதிக்கவே, அவள் யாக குண்டத்தில் வீழ்ந்து உயிர் துறக்கின்றாள். அவளின் உடற்பாகங்கள் சிதறி இந்தியாவின் பல இடங்களில் விழுகின்றன. அவளின் கண்கள் (நயனங்கள்) இமாச்சலப்பிரதேசத்தில் விழுந்த இடத்தில்தான் இந்தக் கோவில் அமைந்திருக்கின்றன. இந்த ‘நயனங்களின்’ பெயரால்தான் நைனிதேவி ஆலயம், நயனாதார் மலை, நைனி ஆறு, நைனிடால் என்ற கோடை வாசஸ்தலம் என்பவை வந்து சேர்ந்தன..
நாவலின் சூட்சுமம், யுகம் யுகமாக விரிந்து செல்வதால் – காலத்திற்குக் காலம் மொழிபெயர்ப்புகள் வந்து எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. ரீனா ஷாலினியின் கவித்துவமான நடை, உங்கள் மனதின் ஓரத்தில் சம்மாணமிட்டு அமரச் செய்துவிடும். இது ஒரு சிறிய புத்தகம் தான். 95 பக்கங்கள். நான் பிறந்த காலப்பகுதியில் வெளிவந்த இந்த நாவலை இத்தனை வருடங்கள் காத்திருந்து வாசித்திருக்கின்றேன் என்பதில் மகிழ்ச்சி.