எழுத்தாளர் இரா முருகன் அமரர் எம்.எடி.வாசுதேவன் நாயர் சென்னைக்கு 2009இல் வந்திருந்த போது நேர்காணலொன்று எடுத்திருந்தார். அந்நேர்காணல் தீராநதியில் வெளியானது. அதன் குறுகிய வடிவம் அமுதசுரபி சஞ்சிகையிலும் வெளியானது. இந்நேர்காணலை அண்மையில் இரா முருகன் அவரது முகநூற் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். அதில் அவர் வாசுதேவன் நாயரிடம் நாலுகெட்டு நாயகி பற்றிப் பல கேள்விகள் கேட்டிருந்தார். அந்தப் பகுதியைக் கீழே தருகின்றேன்.
"எம்.டி எழுதிய முதல் நாவல் ‘நாலு கெட்டு’. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு முந்திய காலகட்டத்தில் கேரளத்தின் பசுமை கொழிக்கும் வள்ளுவநாட்டுப் பகுதியில் ஒரு பழைய நாலு கெட்டு மனையின் – நாலு பிரிவு கொண்ட வீடு – நிகழும் கதை அது. வயதான நம்பூத்ரிக்கு வாழ்க்கைப்பட்டு அந்த நாலுகட்டு வீட்டில் வாழப் புகுந்த யசோதராவின் கதையைச் சொல்கிற நாவலில் அப்புண்ணி ஒரு முக்கிய கதாபாத்திரம். அப்புண்ணியின் பார்வையில்தான் கதை நகர்கிறது.)
நான்: எம்.டி.சார். முதல் கேள்வியை நான் கேட்கலே. மலையாள எழுத்தாளர் வி.கே.ஸ்ரீராமன் உங்கள் நாலுகெட்டு கதாநாயகி யசோதராவை பேட்டி கண்டு ‘வேரிட்ட காழ்ச்சகள்’ புத்தகத்தில் எழுதியிருக்கிறாரே, அதில் அவர் சொல்கிறார் -– ‘எம்.டியை சந்தித்தால் நான் கேட்க விரும்பும் கேள்வி என்ன என்றால், ஏன் நாலு கெட்டு நாவலில் யசோதரா பெயரை அப்படியே பயன்படுத்திக் கொண்டு உங்கள் பெயரை மட்டும் அப்புண்ணி என்று மாற்றிவிட்டீர்கள்’?
எம்.டி: அது உண்மையில்லை. அவர் எந்த யசோதராவை சந்தித்தார் என்று தெரியவில்லை. நாலு கெட்டு ஒரு நாவல். நான் பிறந்த வள்ளுவநாட்டுப் பிரதேசத்தின், என் வீட்டுச் சூழலின், என் இளமைப் பிராயத்தின் நினைவுகளைத் தொட்டுத் தொடர்ந்து செல்லும் புதினம். அதில் எல்லா பாத்திரமாகவும் நான் என்னை உணர்கிறேன். அப்புண்ணியும் நான் தான். யசோதராவும் நான் தான். மற்றவர்கள் எல்லாரும் கூட நான் தான். அவர்கள் யாருமே நான் இல்லை என்பதும் உண்மைதான். நிறையக் கற்பனையும் ஓர் இழை நிஜமும், இழை பிரித்து அறிய முடியாதபடி பின்னிப் பிணைந்த அற்புத உலகம் இல்லையா கதையும் காவியமும்?
நான்: யசோதரா இத்தனை காலம் அந்தப் பழைய மனையில் தனியாக வசித்துவிட்டு இனியும் அதில் இருக்க முடியாத சிதிலமடைந்த நிலையில் வெளியே ஒரு சிறிய வீட்டுக்குக் குடிபெயர்ந்ததாக சில மாதங்கள் முன்னால் மாத்ருபூமி தினசரியில் செய்தி வந்திருந்ததே. படிச்சீங்களா சார்?
எம்.டி: அப்படியா? பார்த்த நினைவு இல்லையே. வந்திருந்தாலும் அது சரியான வார்த்தை இல்லை. யசோதரா என் மற்ற கதாபாத்திரங்களைப் போல் அந்தக் கதையில் மட்டும் உலவிப் போன ஒரு பெண்மணி. அவள் வயதான நம்பூதிரியை மணந்து இளம் பெண்ணாக அடி எடுத்து வைத்த வீட்டில் இத்தனை வருடம் தனியாக இருந்தாள், இடிந்து சிதிலமடைந்து இனியும் இருக்கத் தகுதியில்லை என்ற நிலை ஏற்பட்டதும் அந்தப் பழைய மனையை விட்டுக் குடி பெயர்ந்தாள் என்பதெல்லாம் எனக்கு சுவாரசியம் தரும் செய்திகள் இல்லை. நாலுகெட்டு கதாபாத்திரங்களை ஆழமாக நேசிக்கிறவர்கள் இன்னும் இருப்பதாகவே நான் இதிலிருந்து புரிந்து கொள்கிறேன்."
நானும் நாலுகெட்டு நாவல் வாசித்திருக்கின்றேன். குளச்சல் யூசுஃப் மொழிபெயர்த்தது. காலச்சுவடு வெளியீடு. நாவலில் யசோதரா என்னும் பெயர் இருப்பதாகத் தெரியவில்லையே. நான் வாசித்த 'நாலுகெட்டு' நாவல் அப்புண்ணியின் பார்வையில் நகர்கிறது. அப்புண்ணியின் தாய் பாருக்குட்டி அவளது குடும்ப அந்தஸ்துக்குக் குறைந்த சமூக நிலையிலுள்ள கோந்துண்ணி நாயரைக் காதலித்து மணம் செய்வதால் அவளது குடும்பத்தால் ஒதுக்கி வைக்கபப்டுகின்றாள். அப்புண்ணியும் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்படுகின்றான். கோந்துண்ணி நாயர் இறந்து விடுகின்றார். விசம் கொடுத்துக் கொல்லப்பட்டதாகச் சந்தேகம் நிலவுகின்றது. தனித்து விடப்பட்ட பாருக்குட்டியின் வாழ்வின் சங்கரன் நாயர் எதிர்ப்படுகின்றார். அப்புண்ணிக்கு அது பிடிக்கவில்லை. தாயை விட்டுப் பிரிந்து மீண்டும் தாயின் குடும்பத்தாரிடம் வருகின்றான்.
இவ்விதம் செய்யும் கதையின் இறுதியில் அப்புண்ணியின் தாயின் குடும்பம் பொருளாதாரரீதியில் நிலைகுலைந்து நிற்கையில் அப்புண்ணி நல்லதொரு வேலையில் சம்பாதிக்கின்றான். அவன் தன் குடும்பத்தாரின் வீட்டை வாங்குவதுடன் , அதில் தாயையும், சங்கரன் நாயரையும் குடியேற்றுகின்றான். நாவலும் அத்துடன் முடிவுக்கு வருகின்றது. நாவலில் யசோதரா என்னும் பாத்திரமே இல்லை. குளச்சல் யூசுஃப் மொழிபெயர்ப்பில் பெயரை மாற்றி விட்டாரா? நீங்களும் அந்நாவலை வாசித்திருந்தால், எனக்கு இவ்விடயத்திலுள்ள குழப்பத்தை தீர்த்து வைக்க முடியுமா?
- இரா முருகன் -
இதைக் குறிப்பிட்டு இரா முருகனின் பதிவில் எதிர்வினையாற்றியிருந்தேன்.
அதற்கு அவர் தந்த பதில் 'I stand corrected. Thank you'
எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவிருந்தது. இரா முருகன் நாவலில் இல்லாத ஒன்று பற்றி வாசுதேவன் நாயரிடம் கேள்விகளும் கேட்டிருக்கின்றார். நாவலில் இல்லாத நாயகி பற்றி ஏனையோர் கூறியதாகவும் குறிப்பிட்டு வாசுதேவன் நாயரிடம் கேள்விகள் கேட்டிருக்கின்றார். அதற்குரிய வாசுதேவன் நாயரின் பதில்களையும் நேர்காணலில் பதிவு செய்திருக்கின்றார். இரா முருகனிடம் நாலுகெட்டு நாவலில் அவர் குறி[ப்பிடும் பெயரில் நாயகி இல்லையென்றும், அவ்வகையிலான கதையமைப்பு இல்லையென்றும் குறிப்பிட்டபோது தன் தவறினை ஒப்புக்கொள்கின்றார். அத்துடன் அப்பிரச்னையை மிகவும் இலகுவான ஒன்றாகக் கருதி கடந்து செல்கின்றார்.
இது உண்மையிலேயே அதிர்ச்சி தருவது. அப்படியானால் அந்த நேர்காணல் உண்மையானது அல்ல. பொய்யானது. இட்டுக் கட்டியது. ஒரு நாவலாசிரியருக்கு நிச்சயம் தன் நாவலின் நாயகியைபற்றித் தெரிந்திருக்கும். மேற்படி நேர்காணலில் வாசுதேவன் நாயர் இரா முருகன் குறிப்பிடுவதை உண்மையென்று ஏற்றுக்கொண்டு பதிலளிப்பதாகவே தெரிகின்றது. அது உண்மையாகவிருக்க முடியாது. அது போல் மேற்படி நேர்காணலின் நாலுகெட்டு பற்றிய பகுதிகளும் உண்மையாகவிருக்க முடியாது.
எழுத்தாளர் இரா முருகனின் எதிர்வினை!