கூகி வா தியாங்கோ - வாழ்வும் மரணமும்! - வாசன் -
கூகி வா தியாங்கோ மறைந்து விட்டார் . கென்யா எழுத்தாளரும் கல்வியலாளருமாகிய அவரது மரணம் இன்றைய தமிழ் சமூகத்தில் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாது எமக்குள் எந்தவித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. எம்மைப் பொறுத்தவரை எமக்குள் இருக்கும் குழாயடிச் சண்டைகளைத் தீர்த்துக் கொள்ளவே எமக்குப் போதிய நேரமோ அவகாசமோ இல்லாதபோது இது போன்ற ஆளுமைகளின் இருப்பும் மறைவும் எமக்கு ஒரு பொருட்டாகவே தென்படுவதில்லை. இவரது வாழ்வு குறித்தோ அல்லது படைப்புக்கள் குறித்தோ எந்தவித நிகழ்வுகளையோ ஆய்வுகளையோ மேற்கொள்ளாமல் ஒரு சில சஞ்சிகைகளில் ஆங்காங்கே பதிவிடப்படும் வெறும் அஞ்சலிக் குறிப்பிடனேயே இவரது மரணத்தையும் கடக்க நினைக்கின்றது எமது சமூகம். இத்தனைக்கும் இதுவரை இவரது ஆறேழு நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றது. அதனையும் விட அன்றைய காலகட்டங்களில் இவர் எமது பல்வேறு சிறுபத்திரிகைகளைளின் அட்டைப்படமாக அலங்கரிக்கப் பட்டிருந்தார் என்பதும் இவரது எழுத்துக்களை எமது முன்னோடிகள் ஆய்வு ரீதியாக மதிப்பீடும் விமர்சனமும் செய்திருந்தனர் என்பதும் எமக்குள் மிகுந்த ஆச்சரியத்தினை ஏற்படுத்தி நிற்கின்றது. அன்று உலகளாவிய ரீதியில் தனது கவன வட்டத்தினை விஸ்தரித்து மிகவும் காத்திரமாக இயங்கி வந்த எமது சமூகம் ஒரு சில தசாப்த காலத்திற்குள் இப்படி தடாலடியாக கீழிறங்கிப் போயுள்ளது உண்மையிலேயே வேதனையை ஏற்படுதி நிற்கின்றது.