வழமைபோல இந்த வருடமும் பனி கொட்டத் தொடங்கிவிட்டது. தரை எல்லாம் பனி வயலாகக் காட்சி தருகின்றது. மரங்கள் எல்லாம் இலை உதிர்த்து வெண்பனியால் போர்வை போர்த்திருக்கின்றன. புலம்பெயர்ந்த பின் இப்படியான காட்சிகளை ஒவ்வொரு வருடமும் பார்த்ததால்தான், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வாழும் நிலச்சூழலையை வைத்து ‘ஆறாம் நிலத்திணை’ பனியும் பனி சூழ்ந்த பகுதியும் என்ற ஆய்வுக் கட்டுரையை நான் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டுக்காக எழுதினேன். சங்க இலக்கியத்தில் வரும் ஐந்து நிலத்திணைகளுடன் ஆறாம் நிலத்திணையாக சான்றோர் இதை ஏற்றுக் கொண்டார்கள்.
இக்காலத்தில் பொதுவான இலக்கிய, கலை நிகழ்வுகள் வெளியரங்குகளில் நடப்பதில்லை. சிறியகுன்றுகள் உள்ள இடங்களில் பனிச்சறுக்கல் விளையாட்டுகள் இடம் பெறுவதுண்டு. இதைவிட வெளியிடங்களில் ‘சினோமான்’ போன்ற பனியிலான பொம்மை உருவங்களைப் பெரிதாகச் செய்து காட்சிப் படுத்துவார்கள்.
உள்ளக அரங்குகளில் ஐஸ்கொக்கி என்ற விளையாட்டுப் போட்டிகள், நீச்சல் போட்டிகள் போன்றவை நடைபெறும். சென்ற ஞாயிற்றுக் கிழமை முன்பு சோனிசென்ரர் என்று அழைக்கப்பெற்ற ஸ்கோஸியா அரங்கத்தில் கூடைப்பந்தாட்டப் போட்டி நடைபெற்ற போது அதைப் பார்க்கப் போயிருந்தேன். ரொறன்ரோ றாப்ரேஸ் அணியினரும், அட்லான்டா ஹாக்ஸ் என்று அழைக்கபப்படுகின்ற பருந்துகள் அணியினரும் மோதிக் கொண்டார்கள். ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இந்தப் போட்டித் தொடரில், அட்லாண்டா ஹாக்ஸ் அணியினர் ரொறன்ரோ றாப்ரேஸ் அணியினரை 136-107 என்ற கணக்கில் வீழ்த்தி நான்காவது வெற்றியைப் பெற்றுக் கொண்டார்கள். அடுத்ததாக ரொறன்ரோ பொஸ்டனுடனும், அட்லாண்டா டென்வருடனும் விளையாட இருக்கிறார்கள்.
எப்படி இலங்கையில் உதைபந்தாட்டம், துடுப்பாட்டம் போன்ற விளையாட்டுகள் பிரபலமாக இருக்கின்றதோ, அதேபோல கனடாவில் போஸ்போல், பாஸ்கட்போல், புட்போல், பனிக்கொக்கி போன்ற விளையாட்டுகள் பிரபலமானவை. ஜேம்ஸ் நைஸ்மித் என்பவரால் 1891 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த கூடைப்பந்தாட்ட விளையாட்டில் தலா 5 வீரர்களைக் கொண்ட இரண்டு அணிகள் செவ்வக மைதானத்தில் விளையாடுவார்கள். விதிமுறைக்கு ஏற்ப, ஒவ்வொரு அணியினரும் எதிராளியின் பக்கமாக உயரத்தில் உள்ள கூடைவளையத்திற்குள் பந்தைக் கைகளால் போட்டு வெற்றிப் புள்ளிகளைச் சேகரிப்பர். 1949 ஆம் ஆண்டு என்.பி.ஏ (NBA) கூடைப்பந்து சங்கம் இதற்காக உருவாக்கப்பட்டது. இருபாலருக்குமான இந்த விளையாட்டில், எர்வின் ஜோன்சன், யூலியஸ் எர்விங், லாரி பேர்ட், மைக்கேல் ஜோடன் போன்றவர்கள் மற்றும் பெண்கள் அணியில் டயானா டௌராசி, லிசா லெஸ்லி, தமிகா காச், சிந்தியா கூப்பர், மாயா மூர் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.