- சமூக, அரசியற் செயற்பாட்டாளரான சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) அவரது முகநூற் பக்கத்தில் அண்மைக்காலமாக எழுதி வரும் யாழ் மாவட்டத்துக்கான நீர்ப்பற்றாக்குறை பற்றிய பதிவுகள் முக்கியமானவை. இலகு நடையில் , எவரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்படும் பதிவுகள் அவை. தரை அமைப்பு, நிலக்கீழ்க்கற்கள், நீரைத் தேக்கி வைக்க உதவும் களிமண் படை, குழாய்க்கிணறுகள், தனிக்கிணறுகள், அவை சமூக வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புகள், நன்னீரைப் பெறுவதற்கான வழிகளின், கலந்துரையாடல்களின் அவசியம் எனப் பல்வேறு விடயங்களைத் தொட்டுச் செல்லும் பதிவுகள் என்பதால் முக்கியமானவை. இவ்விடயத்தில் மேலும் சிந்தனையைத் தூண்ட வைப்பவை.
இவ்விதமான இலகு நடைப் பதிவுகள் சாதாரண மனிதர்களை இவ்விடயத்தைப் புரிய வைக்கின்றன. அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. விவிப்புணர்வு அவர்களை இயற்கையாகக் கிடைக்கும் நன்னீரான மழை நீர் போன்றவற்றைத் தேக்கி வைக்கும் திட்டங்களைப் பற்றிச் சிந்திக்க வைக்கின்றன. இவ்விடயத்தில் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை அவதானிக்க, விமர்சிக்க வழி சமைக்கின்றன..அதனால் அப்பதிவுகளை இங்கு பதிவுகள் வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொள்கின்றோம். -
துஞ்சுதல் என்ற சொல்வழக்கு ஒன்று எம்மிடத்தில் புழக்கத்தில் இருக்கின்றது. இது அதிகம் உப உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் புழக்கத்தில் உண்டு. அதுவும் மழைக் காலத்தில் அதிகம் பாவிப்பர் இந்த சொல்லாடலை. கன மழை பெய்து பயிர் உள்ள தரையில்(தோட்டத்தில்) ஒரு நாளிற்கு மேலாக நீர் தேங்கினால் தரையில் உள்ள பயிரின் வேர்கள் அழுகி பயிர் செத்துவிடும். இது அதிகம் வெங்காயம் மிளகாய் இன்ன பிற உப உணவுச் செய்கையில் அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்தும். முழுப் பயிரும் நாசமாகிவிடும். ஆனால் யாழ்ப்பாணத்து மண் அதிலும் சிறப்பாகச் சிவப்பு மண் சில இடங்களில் உள்ள இருவாட்டி மண்ணில் இருக்கும் பயிர்கள் இவ்வாறு கன மழையினால் அதிகம் துஞ்சுதல் என்றதாக பயிர்கள் செத்துப் போவது இல்லை. காரணம் பயிரின் வேர் பகுதி 24 மணி நேரம் என்றாக நீரால் சூழப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் இங்கு இல்லாததே காரணம். இதனால்தான் இந்த வகை மண்ணில் விவசாயம் செய்பவர்கள் அதிகம் கன மழை போன்றவற்றினால் பயிர்கள் நாசமாகி பொருளாதார இழப்புகளை சந்திப்பதில்லை. பொருளாதார நலிவிற்குள் உள்ளாகுவதில்லை.
காரணம் எமது நில அமைப்பு அவ்வாறானது.
சல்லியும், சுண்ணாம்புக் கற்களையும் படைகளாகக் கொண்ட நிலத்தடியைக் கொண்டவையாக பெரும்பாலும் காணப்படுகின்றன. இதனால் பெய்யும் (கன)மழையை வேகமாக நிலத்திற்குள் கீழ் படையால் உள்வாங்குவதாக பயிரின் வேர் பகுதியைத் தாண்டி கீழ் இறக்கிவிடும். இந்த நீர் நிலத்தடியில் ஆழத்தில் இருக்கும் சமுத்திரத்திற்கு இணைப்பாக இருக்கும் வாய்கால்கள் ஊடாக நீர் மட்டங்களுக்கு ஏற்ப சென்று விடும் அல்லது தேங்கிவிடும். ஆனால் இந்த முறை பயிர் செய்கையிற்கு பாதுகாப்பான உகந்ததாக இருக்கும் அதேவேளை மழையால் பெறப்படும் நிலத்தடி நீர் அதிகம் தொடர்ந்தாற் போல் பல மாதங்களுக்கு அங்கேயே சேமித்து வைப்பதற்கான வாய்ப்பையும் இல்லாமல் செய்கின்றது என்ற மறுபக்க எதிர்விளைவுகளையும் கொண்டிருக்கின்றது. எமது மண் வளம் அவ்வாறானது.
இதனால்தான் யாழ்ப்பாணத்து பெரும்பாலான கிணறுகள் மழைகாலத்தில் கையில் எட்டும் அளவழற்கு நிரம்பி இருந்தாலும் மழை நின்று சில நாட்களில் நீர் மட்டம் வேகமாக குறைவதற்கும் காரணமாகி விடுகின்றது. நிலத்திற்கு கீழாக உள்ள சமுத்தரம், தரை இடையேனான நீரோட்டப் பாய்ச்சலுக்கான ஓட்டம் தரைப்பகுத்தியில் நீரின் அளவு குறையும் போது சமுத்திரத்தில் இருந்து தரையை நோக்கியதாக நடைபெறும். இது அதிகம் அளவிற்கு கட்டுப்பாடற்ற குழாய்க் கிணற்று நீர் இறைப்பு போன்ற பாவனைக்கு உள்ளாகும் போது நடைபெறும். இந்த சமுத்திர நீர் தரையை நோக்கி இதே..? பாதையால் தரைக்கு அடியில் வந்து நிலத்தடி நீர் உவராக இருக்கும் செயற்பாட்டை செய்கின்றது. இதனால்தான் யாழ்ப்பாணத்து நீர் சதாரண பாவனைக்கு பயிற் செய்கையிற்கு ஏற்தாக இல்லாது உவராக மாறி வருவதற்காக மாற்றம் அடைந்து வருகின்றது அண்மைக் காலங்களாக.
ஒரு வளத்திற்கு நன்மையாகவும் மறு வளத்திற்கு தீமையாகவும் அமையும் இயற்கை நில மண் அமைப்பை நாம் புரிந்து கொண்டால்தான் யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் நிலத்தடி நீரை ஆதாரமாக கொண்ட வாழ்வியலை நாம் தொடர்ந்தும் சிறப்பாக பேண முடியும். முன்னால் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சிவகுமாரின் நீர் மேலாண்மை சம்மந்தமான பதிவுகள் நேர்காணகளை உள்வாங்கி நாம் செயற்படுதல் என்பது நீடித்த நிலைத்த நன்னீரைத் தொடர்ந்தும் பேணுவதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்தலாம். இதன் இன்னொரு அங்கமாக அமையும் கட்டுப்பாடற்ற மண் அகழ்வு, சுண்ணாம்புக் கற்கள் எடுத்தல் என்பவையும் அமைகின்றன.
யாழ்குடாநாட்டின் நிலத்தடிக் கற்கள்
புதிய நவீன இரக இயந்திரங்களின் பாவனைகள் அதிகம் கிடைக்காத காலத்தில்......யாழ்ப்பாணத்தில் இருந்த பல கல்லுக் கலட்டிகளைத் திருத்தி தோட்டம் ஆக்குவதற்கு மனித வளங்களையும் எளிமையான பிக்கான், மடத்தல், அலவாங்கு, போன்றவை அதிகம் பாவிக்கப்பட்டன. இதனுடன் எப்போதும் பயணமாகும் கத்தி மண்வெட்டி என்பனவற்றுடன் மனித வளம் அதிகம் இணைந்து கொண்டது. மிக அபூர்வமாக அனுமதி பெறப்பட்ட வெடி மருந்துகள் பாவிக்கப்பட்டன…. ஒரு காலத்தில். அதிகம் மூன்று அடிக்கு மேலாகப் போகாத ஆழத்திற்கு மட்டும் கல்லுகள் பிரட்டப்பட்டு பின்பு இதற்குள் நல்ல வகை மண் வேறு இடயங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு குழிகள் நிரப்பப்பட்டு தரையாக்கப்பட்டதே எமது தோட்டங்கள்.
இந்தக் கற்கள் அந்தக் காலங்களில் அதிகம் வீடுகள் கட்டுவதற்கும் மிகுதியாக இருந்தவை கற்கட்டுகளாக எல்லைகளை பிரிப்பதற்கும் பாவிக்கப்பட்டன.
இந்த கற்கட்டிற்குள் அதிகம் குடியிருக்கும் கீரீப் பிள்ளைகள்தான் பாம்புகளின் நடமாட்டத்தை… பெருக்கத்தை மட்டுப்படுத்தி வந்தன என்பது கூடுதல் செய்தி.
இவ்வாறு அமைக்கப்பட்ட தோட்டங்களில் பயிரை நட்டு பயிர்களுக்கு கிணறுகள் மூலம் நீர்பாய்ச்சும் போது அவை மண்ணிற்கு கீழ் உள்ள சுண்ணாம்பு பாறையைத் தாண்டி அதிழகம் வேகமாக கீழ் இறங்கும் தன்மையைக் கொணடிருக்கவில்லை. இதனால் கிழமைக்கு ஒரு வாட்டி தண்ணீர் பாய்ச்சுவது என்றாக இறைப்புகள் நடைபெற்று பயிர்களுக்கு தேவையான நீர் வழங்கப்பட்டன. இது சொட்டு நீர் பயிர் செய்கையுடன் ஒப்பிடும் போது அளவிற்கு அதிகமான நீரை வீணாக்கியதாக இருந்ததும் உண்மை.
ஒரு கிணற்றடியைச் சுற்றி பத்தாயிரம் கண்டுகள் வரையிலான தோட்டங்களும் இதில் முறை வைத்து தண்ணீர் பாய்ச்சுவதுமான நீர்ப்பாசன முறை வழக்கத்தில் இருந்தும் வந்தன. குழாய்க் கிணறுகள் என்ற சிந்தனை அப்போது மக்களிடம் அதிகம் ஏற்படவில்லை. அந்த தொழில் நுட்பமும் இலங்கையிற்கு அதிகம் அறிமுகமாகவில்லை அன்று. இதில் உள்ள ஒரு முக்கிய விடயம் ஒரு கிணற்றில் பலரும் என்றாக ஒற்றுமையாக, சமூகமாக கூட்டாகக் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த வாழ்க்கை முறையை இந்த ஒரு கிணறும் அதனைச் சுற்றிய பலரின் தோட்டங்கள் செய்து வந்தன. தனிக் கிணறு என்பது மிகவும் அரிதாக இருந்தது.
ஒரு கிராமத்தில் இவ்வாறான பொதுக் கிணறுகள் பலதும் தோட்டங்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் இருந்தன.
இவற்றால் மக்கள் தனித் தனியாக தனி உலகில் வாழாமல் சமூகமாகக் கூட்டாக ஒற்றுமையாக பகிர்ந்து தண்ணீரைப் பகிர்ந்து சிக்கனமாக பாவித்த ஒரு பொறிமுறை அந்த இயல்பான வாழ்விற்குள் பயணப்பட்டுக் கொண்டிருந்தது. இன்னமும் இவ்வாறான கிணறுகளை கிராமங்களில் இன்றும் காண முடியும்.
எப்போது தனிக் கிணறு தனிவளவு என்றாக சுவர் என்றாக மதில்கள் வந்தனவோ அப்போதே இந்த கூட்டுறவு வாழ்வு எம்மை விட்டு அகலத் தொடங்கியது.
வேணும் போதெல்லாம் அளவுக்கு அதிகமாக நீர் பாவனையும் அதனை நிலத்தடி நீராக எடுத்தலும் என்பது வாழும் பரப்பில் உள்ள நிலத்தடி நீரின் அளவைக் குறைக்கவும் செய்தது.
இது கடலுக்கும் தரைக்கும் இடையேயான தரைக் கீழ் நீரோட்ட வாய்க்கால் வழியே சமுத்திரத்தின் நீர் தரையிற்குள் கீழ் வருவதற்கும் தூண்டுதலையும் ஏற்படுத்திவிட்டது. இதன் உச்சம் தொட்ட செயற்பாடாக முறைப்படுத்தாத குழாக் கிணறுகள் அமைந்தும் விட்டன. அது சமூக பொதுக் கிணற்றில் சந்தித்து அளவளாவும் ஒற்றுமையாக ஐக்கியமாக பயணப்படும் உரையாடல்களையும் குறைத்து தனி உடமைகளையும் உருவாக்கி விட்டது. உரையாடல் குறைவதும் சந்திப்புகள் குறைவதும் இந்த இணைந்த பிணைந்த பயணத்தை குறைவடையவே செய்யும் சமூகக் காரணிகளில் ஒன்றாகவும் இருப்பது இங்கு கவனத்தில் எடுத்தாக வேண்டும்.
ஆரம்பத்தில் இந்த தனிக் கிணறும் தனிக் குழாய் கிணறும் எமக்கான தனி சௌகரியங்களை ஏற்படுத்தியதாக தோற்றத்தை தந்தாலும் இதற்கு தரையின் கீழ் நடைபெறும் இந்த உப்பு நீர் பரிமாற்றம் எம் மக்களின் அன்றாட தண்ணீர் தேவைகளை உவர் நீராகத்தான் கிணற்றில் இருந்தும், குழாய் கிணற்றில் இருந்து பெறவேண்டிய நிலைக்கும் மெது மெதுவாகத் தள்ளி வருகின்றது.
கூடவே பெரிய வளவில் ஒரு மூலையில் கிணறும் மறு மூலையில் மலசல கூடம் என்றாக, போதிய அளவு இடைவெளியில் அமைந்த நிலையில் இருந்த வளவுகள் பிரிக்கப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட கிணறுகள் மலசல கூடங்கள் என்றான போது இவை இரண்டிற்கும் இடையிலான தூரங்கள் குறைவதினால் மலசல கூடத்தின் கழிவு கிணற்று நீருடன் கலக்கும் ஆபத்தால் மக்களின் குடி நீர் ஏனைய சாதாரண பாவனைக்கானதும் அசுத்தம் ஆகிவிட்ட நிலமை ஏற்பட்டும் வருகின்றது.
'புரிதல் அற்ற' அதிக இரசாயன உரப் பாவனையும், கிருமி நாசினிகளும் நிலத்தடி நீர் மாசுபடுவதை அதிகமாக்கியுள்ளது. இரசாயன உரம் பயிர்களுக்கு உணவாகி பின்பு காய் கறிகள் மனிதர்களுக்கு உணவாகும் சுழற்சியைத் தாண்டி நேரடியாக நிலத்தடி நீரில் கலப்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். இயற்கைப் பசளையில் இவ்வாறான தொல்லைகள் மிகவும் குறைவு.
இந்த இரு தாக்கங்களின் உச்சம் பொலநறுவ, அனுராதபுரம் போன்ற மாவட்ட மக்களை அதிகம் சிறுநீர வருத்தங்களுக்குள்ளாக்கி இருக்கும் செய்தியை நாம் மிகத் தீவிரமாக உள்வாங்கியாக வேண்டும். நிலத்தடி சுத்தமான நீர் சுண்ணாம்புக் கல்லில் ஏற்படுத்தும் இரசாயனத் தாக்கம் ஒரு வகையில் பயிர்களுக்கு தேவையான பசளையாக மாற்றம் இயற்கை சிறப்புச் சலுகை யாழ்ப்பாண சுண்ணாம்புக் கல் படுக்கைகளின் சிறப்பு அம்சம் என்பது எமக்கான வரபிரசாதம் தான்
யுத்தம் யாழ்ப்பாணக் குடா நாட்டின் சனத் தொகையை குறைத்த நிலையில் இதற்கு மாறான குடிசனப் பெருக்கத்திற்கான செயற்பாடாக வளவுகள் சிறுத்தல் என்பது சொத்துகள் தனியாக என்றான முரணான நெருக்கமாக வந்திருப்பதை நாம் முழுமையான ஆய்விற்குள் உள்ளாக்க வேண்டும்.
கடந்த காலங்களில் காங்கேசன்துறை சீமெந்து நிலயத்திற்கு தேவையான (சுண்ணாம்பு)கற்களை ஓரிடத்தில் அதிகம் அகழ்ந்து எடுத்து பாவித்ததான நிகழ்வுகள் மாவிட்டபுரம், காங்கேசன் துறை இதனைச் சுற்றி இடங்களில் அதிகம் நடைபெற்றன . அவற்றின் குழிகள் இன்று வரை மிகப் பெரிதாக பல இடங்களில் காணக் கூடியதாகவும் இருக்கின்றது.
யுத்தம் முடிவுற்ற பின்னராக வீடுகளைப் புதிப்பித்தல் என்பதாக மணலைக் கட்டுபாடற்ற முறையில் அகழுதல் என்றான கடல் நீரை தரையிற்குள் புகும் செயற்பாடுகளும் தொடருகின்றன. இதுபற்றிய ஆய்வுகளும் மந்துவில் பகுதியில் அண்மையில் நடைபெற்றன. மணல் பயன்பாட்டில் நிலவி வந்த மாபியா செயற்பாடுகள் இங்கு கவனத்தையும் பெறுகின்றன. வீடுகளைத் தேவையான போது உருவாக்குவதற்குரிய மணலைப் பெறுதல் என்பது வரையறுக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டதாக அதிகம் நடைபெறவில்லை. இதன் ஒரு வெளிப்பாடாக சில வருடங்களுக்கு முன்பு பூநகரி விளைச்சல் நிலத்திற்குள் கடல் நீர் வந்திறங்கிய நிகழ்வுகள் எமக்கு பல எச்சரிக்கைச் செய்திகளையும் விட்டுச் சென்றுள்ளன. எனது நண்பன் சக வகுப்பு மாணவன் கு. சிவா போன்ற பொறியிலாளர்களின் கருத்துகள் நெறிப்படுத்துவதில்கள் இலங்கையில் நீர் மேலாண்மையிற்கு வலுச் சேர்க்கின்றதை நாம் உள்வாங்கியாக வேண்டும்.
யாழ் குடாநாட்டின் நிலத்தடி நீர்
வீட்டில் கிணறு இருந்தும் கோவிலில் கேணிகள் கட்டியும், கிராமங்களில் குளங்கள் வெட்டியிருந்தும், ஊர் எல்லையில் (கடல்)நீரேரிகள் அமைந்தும், காசு கொடுத்து குடி நீர் வாங்கிக் குடிக்க வேண்டும் என்ற வாழ்கையை நோக்கி எம்மை நகர்த்திவிட்டது இந்த நிலத்தடி நீர் மாசுபடுதல். ஓரளவிற்கு நீரைக் காய்ச்சிக் குடிப்பதன் மூலம் இதனை சுத்தமாக குடிக்கலாம் என்பதை மறுத்துரைக்கும் காப்ரேற் கம்பனிகளின் தண்ணி வியாபாரம். இயற்கையை விலைகொடுத்து வாங்கும் நிலை தற்போது…
இந்தப் போக்கு காற்றையும் விலை கொடுத்துத்தான் சுவாசிக்க வேண்டும் என்ற சுற்றுச் சூழல் மாசுபடுத்தல்கள். இது வாழ்க்கைச் செலவை இன்னொரு வகையில் அதிகரிக்கும் கூறுகளாகவும் மாற்றியும் விட்டது.
ஊருக்கு ஊர் எமது நிலத்தடி நீரைச் ‘சுத்திகரித்து’ நெகிழி (பிளாஸ்ரிக்) பாத்திரத்தில் அடைத்து விற்கும் வாழ்க்கை இயல்பாகிப் போய்விட்டது. புலம் பெயர் தேசத்து டாலர்கள் வெள்ளை - சிவப்பாக வண்ணம் பூசுவதற்கும், சுவாமி காவுவதற்கு ஆட்கள் இல்லாத அளவிற்கும், மண்டபத்தை மக்கள் கூட்டம் நிரப்ப முடியாத பாரியவையாக மண்டபங்களையும், பூசை செய்ய பூசகர் இல்லாத கோவில் எண்ணிக்கைகளையும் ஏற்படுத்தி விட்டன.
மத நம்பிக்கை,மறுப்பு என்பனவற்றிற்கு அப்பால் எம் மக்களின் பண்பாட்டுக் கூறுகளாக, மரியாதையாக சந்திக்கும், அளவளாவும் இடங்களாகவும், திருவிழா, தெருவிழா என்றான கொண்டாட்டங்களுக்கான இடங்களுமாக இருந்து இந்தக் கோவில் தர்பார் தேவாலயங்களில் மக்களின் உணர்வுப் பிணைப்பைப் புரிந்து கொண்டாலும்…? பின் தங்கிய பிரதேசங்களில் சிறப்பாக கணித, விஞ்ஞான ஆசிரியர்களின் பற்றாக் குறையும் இந்துக் கோவில்களுக்கு அருகாக இயல்பாக தீர்த்தம் ஆடுதல் என்றான நம்பிக்கையுடன் அமைந்த குளங்களும் இந்த மண்டபம் தேர் சப்பறம் என்பனவற்றை விட அதிகமாக முதன்மைக் கவனத்தை எடுத்து புனரமைக்கப்பட்டிருக்கின்றவா…? செழுமைப்படுத்தப்பட்டிருக்கின்றனவா…? என்றால் பொதுவில் அதிகம் இல்லை எனலாம்.
யாழ் குடாநாடு போன்ற நிலப்பரப்பை உடைய இடங்களில் உள்ள குளங்களில் நீண்ட காலத்திற்கு மழைத் தண்ணீர் தேங்கி நிற்கின்றனவா என்றால் ஆம்.... இல்லை... என்றான இரு கலவவையான பதிலைத்தான் கூற முடியும். உண்மையில் குளத்தின் அடிவாரம் சல்லியை உடையதாக இருக்குமானால் அல்லது சுண்ணாம்புக் கல்லுப் பாறையுடன் நேரடியாக தொடர்புபட்டிருந்தால் மழை நீர் அதிக காலம் தேங்கி நின்று நிலத்தடி நீர் சேமிப்பை செய்யாது. அதனால் இக்குளங்களால் அருகாக உள்ள பிரதேசத்தின் நிலத்தடி நீரை அதிகம் தக்க வைக்க இந்தக் குளங்கள் உதவாது. ஆனால் இயற்கை எமக்கு ஏற்படுத்திய கொடையாக ஆண்டாண்டு காலமாக ஊர் மனையிற்குள்ளாக ஓடும் நீர் இந்த குளம் குட்டையை அடைவதினால் குளத்தின் அடியில் சேறு என்பதாக ஒருவகை படையை ஏற்படுத்திருக்கின்றது.
அது சல்லி, சுண்ணாம்புக்கற்கள் செய்யும் நீரை மேலும் கீழே இறங்க வைக்கும் தன்மையை குறைக்கின்றது. ஏன் பெரும்பாலும் முழுமையாக நிறுத்துகின்றது.
இதனால்தான் ஊர்களில் உள்ள பல குளங்கள் சிறப்பாக பல வருடங்களாக இருக்கும் குளங்களில் தண்ணீர் கோடையிலும் வற்றாமல் இருக்கின்றது.
இவற்றில் சில இடங்களை சலவைத் தொழிலாளிகள் தமது வேலைகளுக்காக (இது சுகாதாரத்திற்கு உகந்ததா என்ற விவாதத்தை வேறு ஒரு தளத்தில் பேசுவோம்) பாவிப்பதினால் அவர்களின் தொழிற் பெயரை முன்வைத்து இந்த பொதுக் குளங்களையும் அழைப்பது வழக்கம். இது சாதி அடிப்படையிலான ஆதிக்க சிந்தனையின் வெளிப்பாட்டாக பெயராக இருப்பது ஏற்புடையது அல்ல. ஆனாலும் வழமையை இங்கு குறிப்பிடுகின்றேன். இந்தக் குளங்கள் தற்போது பெரும்பாலும் ஆக்கிரமிப்பாளர்களால் மூடப்பட்டு… திருடப்பட்டு கட்டடக் காடுகளாக மாற்றப்பட்டும் விட்டன.
இவை முடிந்தளவிற்கு எந்த விட்டுக் கொடுப்புகளும் இல்லாமல் மீட்டெடுக்க வேண்டும்.அது மழை நீரைச் சேகரித்து நிலத்தடி நீரை பெருக்குவதற்காக மட்டும் அல்ல கன மழையத் தாங்கி வெள்ள அனர்த்தங்களை குறைப்பதற்காகவும். கோவிற் குளங்களை ஆழப்படுத்தும் புனருத்தாரணம் என்றானது வெள்ளை சிவப்பு பூச்சு, கோபுரக் கட்டுதல், மண்டபம் கட்டுதல் என்பனவற்றை பின் தள்ளி செயற்பாட்டில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது….. முதலில் குளத்தின் அடியில் இருக்கும் அந்த சீமெந்து தன்மையுள்ள சேறு வெளியே எடுக்கப்பட்டு பின்பு நிபுணர்களின் ஆலோசனை, அளவுப்படி குளம் ஆழமாக்கப்பட்டு பின்பு இதே களி மண்ணை அதன் அடியில் இட்டு நீரிறங்கும் தன்மையை குறைக்கும், தடைசெய்யும் ஒரு படை உருவாக்கப்பட வேண்டும்.
இது கோவில் அருகில் உள்ள சிறு குளங்களில் சிரமதானமாக, கூடித்தேர் இழுக்கும் செயற்பாடுகளாக செயற்படுத்த வேண்டும். தேவை ஏற்படும் இடத்து இலகு இயந்திரங்களைப் பாவிக்கலாம்...? இதனை அரசு உள்ளுர் ஆட்சி சபை சமூகத் தொண்டு நிறுவனங்கள் என்றாக செயற்படுத்தலாம்.
மீண்டும் சொல்லுகின்றோம்... கேணிகளை ஆழப்படுத்தல் என்பது எற்கனவே நீர் இறங்குவதை தடை செய்து கொண்டிருக்கும் களிமண் படையை உடைத்து அகற்றி இது வரையும் தங்கிய நீரை இனி மேல் தங்காது இருப்பதற்கான வேலைகளை செய்வதாக அமைந்துவிடக் கூடாது. இதில் நிலம், சுற்றாடல், நீர் மேலாண்மை போன்றவற்றில் நிபுணத்துவம் உள்ளவர்கள், பட்டறிவால் பலதையும் அறிந்த மூத்தோர் என்றான இணைந்த செயற்பாடுகள் அவசியமாகின்றன.
யாழ் குடாநாட்டில் இருக்கும் நீரேரிகள் சமுத்திரத்தை விட அதிகமான சவர் தன்மையை உடையன என்பதை நிபுணர்களின் தகவல்கள், மறவன்புலத்து உப்பளங்கள் எமக்கு இயல்பாக எடுத்துக் காட்டி நிற்கும் சாட்சியங்கள் ஆகும். அதனால் அவற்றை நன்னீர் நீரெரிகளாக மாற்றுததல் என்பது மிகவும் இலகுவானது அல்ல. ஆனால் இந்த சவர் நீர் விளைச்சல் வாழ் நிலத்திற்கு புகாத வண்ணம் மழை நீரை வாழ்விடங்களில் இருந்து உள் வாங்கும் (நீர்) வங்கிகளாக பாவித்தல் என்பதே சரியாக அமையும்.
இதில்தான் நாம் ஆறுமுகம் திட்டத்தை மீள் ஆய்வு செய்தாக வேண்டியும் என்றதான கருத்துகள் மேலோங்கவும் காரணமாயிற்று. ஆனால் இது பற்றிய இறுதி முடிவை நிபுணர் குழுக்களின் ஆய்வுகளின் அடிப்படையிலான முடிவுகள்தான் செயற்பாட்டிற்குரிய ஆதாரமாக நாம் எடுத்துக் கொள்ள முடியும்.
கடல் நீரை நன்நீராகச் சுத்திகரித்து பாவித்தல் என்பதான தாளையடிச் செயற்பாடுகளும் இங்கு கவனத்தைப் பெறுகின்றன. ஆனால் இது மிகவும் செலவைக் கொடுக்கக் கூடியது.
தரையில் விழும் மழை நீரை, நன் நீரை சமுத்திரத்திற்கு அனுப்பி சவராக்கி பின்பு அதனை எடுத்து அதிக செலவு செய்து நன் நீராக்குவதா என்பதில்..
பெய்யும் மழையை வெள்ளப் பெருக்கின்றி சேகரித்தல் என்பதற்கான பொறி முறைகள் சிறப்பாக இல்லாத இடத்து மழை நீர் கடலுக்குள் கலப்பதை நாம் தடுத்தாள முடியாதுதானே.
குடா நாட்டிற்குள் இருக்கு நீர் வளங்களைச் சிறப்பாக மேலாண்மை செய்த பின்புதான் அதற்கு அப்பால் இருந்து நீரைப் பெறுதல் என்பதாக நாம் அதிகம் சிந்தித்தாக வேண்டும். அதன் முடிவுகளாத்தான் இரணைமடுக் குளம், பாலி ஆறு/பறங்கி ஆறு என்றாக ஆனையிறவின் கிழக்கு, மேற்காக யாழ் குடாநாட்டிற்கான நீரைக் கொண்டு வருதல் என்றான விவாதங்களை நாம் எழுப்பி நிற்கின்றோம்.