நீண்ட நாளாயிற்று
கவிதை நயத்து.
என் எழுபதில்
பேரவா.
சென்றிருப்பீர் உலகெங்கும்.
கவி கொணர்ந்திங்கு தருக.
ஈழத்து எழுத்தாளர்களைப்
படிக்குந்தொறும்,
என் சீற்றம் இப்படிச் சரிகிறது.
போர் முடிந்தாயிற்று.
அது முடிஞ்சு போச்சுடா.
இறந்தகாலம்
இனி வராது தோழா.
வருங்காலம்
தெரிந்தாற் சொல்
வாழ்கிறேன் உன்னோடு.
சரிதல் இல்லையிது.
எழுவது.
எனக்கு 70.
உனக்கு
ஒரு 22 இருக்குமாக்கும்.
போராடேன்
வேண்டாமென்றா சொல்கிறேன்.
எழு.
ரத்தம் சிந்து.
உன்
பேரனை மறவாதே.
போரிலக்கியங்களில்..
ஒரு பொசிற்றிவ்
காண்கிலையே இன்னமும்.
தம் புகழ்பாடும்...
அனுதாபம் தேடும்..
இவர்களால்
எப் புரட்சி சாத்தியமாகும் சொல்.
இலக்கியங்களை
நயந்தோதல் தவிர.
அமைதியாயிருந்து
இலக்கியம் பேசலாம்.
கலையின் விழுமியங்கள் பேசலாம்.
நதி..
சிற்றலை..
தமிழ்ப் படம்...
அரிஸ்ரோற்றில்...
பிக்பொஸ்.
மழலை
கொஞ்சுந்தமிழ்.
சாரு
எஸ்ரா
ஜெய.. மோ
படித்துப் படித்துச்
சாகுமெனை
யார் படிப்பர்
அறியாவிவ்வுலகு.
சோம்பேறி.
எழுத்துச் சோம்பேறி
அறிவுச் சோம்பேறி
உணர்வுச் சோம்பேறி
எனக்குச் சோம்பேறிகளைப் பிடிக்கும்.
வாய்க்குள் பிஸ்ரலை
வைத்தான்.
சோம்பேறிகளைப் பிடிக்காது
என்றேன் நான்.
புல்லாகிப்
பூண்டாகிப் போனகதை அறியாயோ...
செல்லாக் காசாய்
சேராச் சேற்றில் வீழ்ந்தாயோ...
மெல்லக் காற்றதனை
மேன்மை கொள்
மூச்சிடை மறந்தனையோ..
எல்லாமும் அறிந்தேனென
ஈகோ தலைத்தனையோ..
பொல்லாவிவ்வுலகில்
காதல் எதுவெனச் சொல் கண்ணே...
1000 முத்தங்களுக்கு
அடிமை நான்.
கொடுமை
என்னவெனில்..
என் வீணையை
மாற்றார் தீண்டுவது.
பொசெசிவ் என்னவெனில்..
பொறாமை கொள்வது.
அதைவிடக் கொடுமை
இதெல்லாம் இலக்கியமென்பது.
கற்றுணைப் பூட்டியோர்
கடலுள் பாச்சினும்
நற்றுணைக் கவிதை கவிதையே.
சரி.
இனிக்காணும்.
கவிதைதானே..
அதுவொரு
சொல்லாடல்.
அரசியல்
தோற்றுப் போனேன்.
காதல்...?
சிரிப்புடன்
போகிறாளவள்.
கவிதை எழுதுகிறேன் நான்.
நல்லாருக்கிடி
திருவிளையாடல்.
விதி.
அர்த்தம் என்ன.
உனக்கு நானும்
எனக்கு நீயும்.
மதி கொண்டு வெல்வோம்.
வாறியா
வரேல்லையா..
காதலென்பதெலாம்
பழங்கதை.
ஒன்றைச் சொல்லப் புக
இன்னொன்று வரும்.
அதனைச் சொலுந்தோறும்
மற்றொன்று சூழ்ந்து வரும்.
ஊழிருந்து
விடுபடல்...
ஞானியர்க் குரித்து.
ஞானியே
போலியெனின்..
போலியே ஞானியென்றாகும்.
வலிமிகு வாழ்வில்
வாழ்ந்திடுவம் வா
என்கிறேன்.
கலியிது என்கிறாய்.
யுகங்கடக்க முடியாதா
காதலினால்...?
-தாடி நல்லா நீண்டு போச்சு. அதை மழித்துவிடு-
உட் சுப்ரமணியின்
அங்கலாய்ப்புத் தாங்க முடியேல்லை.
வெளிச் சுப்ரமணி
சவரக் கத்தி மறந்து போய்
நிறைய நாளாயிற்று.
பழைய ஒரு
சேவிங் மிசின்
கையிலகப் பட்டது.
சார்ஜ் போட்டு
மழிக்கத் தொடங்கையில்...
அதன் சத்தம்
-வடிவாயிருக்கு-
என,
வரதலச்சுமி சொல்வது போல் கேட்டது.
உலகெலாம்
அழித்து விட்ட பின்னர்,
மானிடர் என் செய்வர்...
செவ்வந்தி
என் பேர்த்தியே..
அவர்கள்
வேறொரு அணுக்குண்டு
எப்படிச்
செய்வதெனச் சிந்திப்பார்கள்.
அப்பப்பா...
எனக்குப் பயமாயிருக்கு.
எனக்குந்தான்.
மெல்லென வருடுமது.
உள்ளொளி
பெருக்குமது.
விலா எலும்பின் கீழ்
கிச்சு கிச்சு மூட்டுமது.
உயர் பனை மீதேறி
உலகு சொல்லுமது.
மது விடென்றிச்
சொல்வோர்க்கு..
மனமிரங்கி...
இப்படித்தான் செல்கிறது
கவி வாழ்வு.
மதுவைத் துறக்கவா
கவியைத் துறக்கவா..
முன்னே 1000 புத்தகங்கள்.
வாசித்து முடித்த பின்
பேசலாம்
இன்னுமோராயிரம்.
இருந்த வீடு
இல்லாமற் போயிற்று.
கொப்பிலிருந்து
கூவிய குயிலுக்கு
என்னாயிற்று.
தப்பிதுவென
தத்துவம் சொன்ன
என் ஆசானுக்கென்னாயிற்று.
வாள் கொண்டு
வந்தவர்
வாழலயே இன்னமும்.
போரேன்
சொல்லு பராசக்தி.
பிறகு,
மழை பொழியத் தொடங்கிற்று.
பிறழ்வு
மன நிலையில்..
பார்த்துக் கொண்டிருந்தான் மழைத்துளிகளை.
சொல்லொணாத் துயரின்
கதைகளை..
முதிர்ந்த பேரனிடமிருந்து
கேட்பதற்கு...
இளநிலைப்
பேரனுமிலாப் பெருந்துயருள
மானுட வாழ்வின்
அர்த்தம் என்ன சொல்
பராசக்தி.
புயல்
என்றால்
தாழமுக்கமும் வருமமப்பா.
எனச் சொல்லிவிட்டு
மடியிற்கிடந்தவன்
போகுமழகைப்
பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒர்
70 வயசுத் தாத்தன்.
சொல்லிலாக் கவிதையொன்று
புனைவாயா..
உணர்விலாப்
புணர்வு போலானது
அதுவென்றான்
மறுபுறும் திரும்பிப் படுத்தபடி.
காமமிலாக் காதலும்
காதலிலாக் காமமும்...
போங்கடா/டி
எனக்குப் பிரபஞ்சமிருக்கு
வீழ் மழை நீர்
துளி இரசிக்க.
காதல் பலவகை.
மோதலும் பலவகை.
ஈதல் பலநூறு.
கூடலுமாய்
ஊடலுமாய்..
கூடடி என்னோடு
இலையேல்..
போடடி புள்ளடி
யார்க்குமேனும்.
திருவிழாவில்
சந்தித்திருந்தோம் மறக்காதே.
அன்றொருநாள்..
நீண்ட கனவிருந்தது.
இந்த மாங்காய்த்தீவு
அழகாக...
அற்புதமாக
ஏனிருக்கக் கூடாதென்று.
பின்பொருநாள்
பிரித்தலே உசிதமெனப் பட்டது.
இன்றென் நெஞ்சில்
கவிதையெழுதடா
ஓவியம் வரையெடா
இன்னும் சொற்பக் காலமெடா...
என
உள்ளிருக்குமோர்
மனப் பூச்சி சொல்கிறது.
போயிறங்கி..
என்னடா புடுங்கினீங்க
இற்றை வரைக்கும்
எனக் கேட்கலாம்.
கனியிடம்
பூ
கேட்டதாம்
இவ்வளவு நாளாய்
நீ
எங்கெருந்தாயென்று.
உன்னிதையத்தினுள்
என
கனி சொன்னதாம்.
(தாகூர் சொன்னார்.Stray Birds)
மனிதன் மேல்
எந்த நம்பிக்கையும்
எனக்கிலை.
கொடிய விலங்கு அது.
சுமார்
2000 அணுக்குண்டுகளை
தயார் நிலையில்
வைத்திருக்கும்
மனிதனிடம்
கவிஞனுக்கு என்ன பேச்சு?
ஊருளது
பேர் சொல.
காருளது
கம்பளி போர்க்க.
இலையுளது
துளிர்க்கவும் உதிரவும்.
நானுளேன்
மீட்டவும்
நிமிண்டவும்.
வீணையெடா
நீ
உனக்கு.