*ஓவியம் - AI
என் நினைவின் இன்னொரு கதாபாத்திரம்தான் பீடா மாஸ்ரர். உங்களை எப்படி அவரிடம் கூட்டிச்செல்வது என்பதுதான் என் சவால்.சரி, என்னால் முடிந்தவரை இந்த இடத்திலிருந்து உங்களை அழைத்துச்செல்கின்றேன். மனோஹராத்தியேட்டர் சந்திக்கு வாருங்கள். அங்கே எல்லோரும் சந்திப்போம். அங்கிருந்து எல்லோருமாக நடப்போம்.
பாதுகாப்பாக காற்று வாங்கியபடி நடப்பதென்றால்,அது 75களில்,அதுவும் யாழ்ப்பாணத்தில் சாத்தியமாயிற்று.இக்கதை 77 களில் நிகழ்ந்தது.மனோஹரா தியேட்டர் சந்தி. முன்னால் பிள்ளையார் கோயில்.இப்பொழுது எல்லோரும் மனோஹரா தியேட்டர் அரச மரத்தடி,அதாவது தியேட்டரின்ர பெரிய கேற்றடியில நிற்கிறம். சரிதானே! இந்த சந்தி தெரிஞ்சவ நிச்சயமா சீக்கிரமா வந்திருப்பீங்க. மற்றவை கொஞ்சம் பிந்தி வந்திருப்பீங்க. சயிக்கிளில வந்தவ கொஞ்சம் முந்தி வந்து காத்துக்கொண்டு நின்றிருப்பீங்க. அப்படித்தானே? காத்தவ மன்னிக்கவேணும். ஏனென்றால்,அந்த இடத்தில வாகனங்கள் ஓட காத்தில புழுதி கிழம்பி முகத்தில அடிச்சிருக்கும். அரசமர இலைகளும் நாலா பக்கமும் பறந்து திரியும். கண்ணை மூடாட்டி பிறகு கண்ணைக்கசக்கிக்கொண்டேயிருக்கவேணும். டபிள் டெக்கர் ஓடின காலத்தில இந்த இடத்தில நின்றவை, நடந்தவைக்கு நல்ல ஞாபகம் இருக்கும். அந்த விடியத்தில எனக்கு நல்ல அனுபவம்!
வாங்கோ இனி எல்லோருமாக வண்ணார்பண்னை சிவன்கோவிலடி நோக்கி நடப்பம். இதிலே நின்று பார்க்க ஒருவளைவு தெரியுது பார்த்தீர்களா? அதில பெரிசா ஒரு கட்டிடம் வலது பக்கத்தில இருக்கு,கம்பிகளை வளைச்சு வடிவா 'சீதா சோடா கொம்பனி' என்று போட்டிருக்கு.தெரியுதா? இப்ப வடிவாத்தெரியாது, அதற்கு கிட்ட போக வடிவாத்தெரியும் வாங்கோ.பக்கத்தில 'வசந்தா சலூன்'.இடது பக்கத்தில பார்த்தீங்களெண்டால் சண்முகநாதன் பிரஸ். பக்கத்தில பழைய புத்தகக்கடை.வாசிக்க நல்ல புத்தகங்கள் இங்கேயும் கிடைக்கக்கூடியதா இருந்திச்சு. அப்படியே போக இடது பக்கத்தால ஒரு ஒழுங்கை.'கஸ்தூரியார் வீதி முதலாம் ஒழுங்கை' என்றே பழக்கத்தில் பேசப்பட்ட ஒழுங்கை. அந்த ஒழுங்கை கஸ்தூரியார் றோட்டுக்கு போய் மிதக்குது.அங்கே நாங்கள் போகத்தேவையில்லை. ஆனால், அந்த ஒழுங்கை முடக்கில பித்தளை செம்பு, சருவச்சட்டி,குடம்,குத்துவிளக்கு என்று பாத்திரங்கள் ஒட்டுறவர்களின்ர கம்மாலை.
இந்தக் கம்மாலைக்கு எதிராக ஒரு பெட்டிக்கடை.அங்கேதான் சின்னதாய் ஒரு பீடாக்கடை.இங்கேதான் என் நினைவின் இன்னொரு கதாபாத்திரத்தின்ர கதை ஆரம்பிக்குது.யார் அந்தக் கதாபாத்திரம்?
அவர்தான் பீடா மாஸ்ரர்.அந்தப்பெட்டிக்கடைக்குள்ள அவரைத்தவிர ஒருவருமே கால் வைக்கேலாது. இடமிருந்தால்தானே அது சாத்தியம்? அவரின்ர
பாதி உடம்பு மட்டும் தெரியும்.வெறும் மேலோட இருந்துகொண்டு அவர் செய்கின்ற பீடாக் கலையிருக்கே ;'ப்பா' ஒருவருமே அவருக்கு கிட்ட நெருங்கேலாது. ம்கூம் நினைச்சே பார்க்கேலாது. ஒரு சின்ன மேசை.மேசையைப்பரப்பி ஒரு மூலையில சின்னக்கூடைக்குள்ள வெற்றிலை.அதை வட்டமா அடிக்கிவைத்த அழகு.அதற்குமேலே ஈரத்துணி.அடுத்ததா டப்பாக்களுக்குள் விதம்விதமா சீவல் பாக்குக்களும்,குறுணி குறுணிகளா பீடா கலவைகளும்.அடுத்து
அடுக்கு அடுக்கா குப்பி குப்பியா வாசனைத்திரவியங்கள் நிரப்பியிருக்கும்.
"இது என்னத்திற்குஐயா,என்ன பெயர் ஐயா?" என்று கேட்டால்,மெல்லிய சிரிப்புத்தான் அவரது பதில்!
இன்னும் அன்பா "சொல்லுங்கய்யா" என்றால், 'தொழில் ரகசியம்' என்று அடுத்த பதிலடி!
இது தேவையா ?என்று என்ர மனசை நான் கட்டுப்படுத்திக்கொண்டு அவரிடம் வாங்கி ஒரு பீடாவை அப்படியே வாய்க்குள்ள போட்டால்; என்னவென்று சொல்ல? அம்மான் கதைக்கவே மாட்டார்.ஆனால் ,சீமானின்ர பீடா கதைக்கும். இனிக்கும். என்னவென்று சொல்றது அதை! அன்று பீடா என்றாலே தித்திப்புத்தானே! இப்போதுதான் ஸ்வீட் பீடாவென்று புதிதாய் பெயர் வேற !
'மன்னர் காலத்தில மாஸ்ரர் பிறந்து, அவர் அந்த சபையில இருந்து பீடா போட்டு மயக்கும் மாலைப்பொழுதில மன்னனுக்குக் கொடுத்திருந்தால், இவருக்கென்று ஒரு ஊரையே எழுதிக்கொடுத்திருப்பான் மன்னன். அதுமட்டுமா, எத்தனை இளவரசிகளை இந்த பீடா வசியம் பண்ணியிருக்கும் என்றுகூட நாம் நினைத்ததுண்டு. அத்தனை தித்திப்பு இவரது பீடாவில்! ம்...ம் .. அம்மானுக்கு அந்தக் கொடுப்பனவு இல்லை' என்று நாங்கள் சொல்லிச் சிரிப்பதுமுண்டு.அடுத்தகணம் இந்த ஏழையின் வாழ்வையெண்ணி மனம் கனத்ததுமுண்டு.
இவரது பீடாவை அறிமுகம் செய்து வைத்ததே எனது நண்பன் குட்டிதான்! அவனுக்கு எப்படி இவரைத்தெரியும் ? "சித்தப்பா ராஜு. கனடாவிலிருந்து ஊருக்கு வந்தால்,ஒரு ரின் நிறைய அம்மானிடம் பீடா ஓடர்செய்து எடுத்துக்கொண்டு போவாரடா, அப்படியென்றால் இதில ஏதோ விசயம் இருக்கடா.வா நாங்களும் வாங்கிப்போட்டுப்பார்ப்பம்"என்று எனக்கு அறிமுகம் செய்தவன் குட்டி.
ஆரம்பத்தில மாஸ்ரரிட்ட போனா,ஒரு பீடா போடவே அவருக்கு 5 நிமிடம் எடுக்கும்.அவ்வளவு பொறுமையா,ஆறுதலா அவரின்ர முதுமைக்கேற்றமாதிரி பக்குவமா மடித்து, கராம்பும் குத்தி கையில தரும்போது அதில இருந்து ஒரு வாசம் வரும்.அது நல்ல தூக்கலா இருக்கும்.கடும்பச்சையில்லாத குருத்து வெத்திலையா எடுத்து அதை நீட்டுப்பாட்டா மடிச்சு கத்தரிக்கோலால ஒரு வெட்டு.விரிச்சா சரிசமமா இருக்கும்.அதில இரண்டு மூன்று குப்பிகளுக்குள்ள இருந்து மூடியைக் கழற்றி மூடியிலயிருந்து ஒவ்வொரு துளியா வெத்திலையில பூசி,அடுத்து குங்குமச்சிவப்பில சேர்வையும் பூசி,பீடாப்பாக்கும் கலந்து,கற்கண்டு கலந்த செந்நிற தேங்காய்ப்பூவும் சிறிது காட்டி ,மடித்து கராம்பும் குத்தி அவர் கையிலிருந்து அரங்கேறும் அழகை பொறுமையாகப் பார்த்திருந்து காத்திருக்கவேண்டும். தொழில் ரகசியம் என்று சிலதுகளை அவரது லாச்சிக்குள்ள இருந்துதான் எடுப்பார். எடுப்பதும் தெரியாது. என்ன வைக்கிறார் என்றும் தெரியாது. அந்தக்கையிலிருந்து
அடுத்த கைக்கு மாறும்போது அத்தனை வாசனைத்திரவியங்களும் பீடாவிலிருந்து காத்தில எழுந்து இளசுகளின் மனசுகளையும் காதல் வசப்படுத்தி ஆட்டிப்படைச்சுது. வாய்க்குள்ள பீடாவின்ர தித்திப்பு.
அதோட இளையராஜாவின்ர "மச்சானைப்பார்த்தீங்களா" பாட்டும், அதில' ஊர்கோல மேகங்களே நீங்க ஒருநாழி நில்லுங்களேன்' என்ற நெஞ்சை வருடிற அந்தக்குயிலின்ற குரலும்,உயிரை உசுப்பிற அந்த இசையின் ஒலியும் ரேடியோவில முழங்க கனவில நாங்கள் பறந்தம்.
நித்தம் மாலை வெயில் தாழ மாஸ்ரர் முன்பக்க தாழ்வாரத்திற்கு இரண்டு மரக்கட்டைகளைப்போட்டு பொறுப்புவைத்து சின்னத்தாழ்வாரத்தை உயர்த்தி விட்டாரென்றால் சனம் அந்த இடத்தையே சுற்றி மொய்த்துவிடும். அது தினமும் எப்போது நடக்கும் என்று எவருக்குமே தெரியாது. அத்தனை மவுசு இந்த
மாஸ்ரரின்ர பீடாவுக்கு.எத்தனை பேருக்கு இவரது பீடாவின் ருசி தெரியும்? எத்தனை காதலர்க்கு? எத்தனை புதுமணத்தம்பதியர்க்கு? எத்தனை இளஞ்சிட்டுகள் அதிர்ஷ்டசாலிகளாய் இதை அனுபவித்தவர்களோ? மாஸ்ரரின் ஸ்பெஷல் பீடா கனடாவரை சென்றிருக்கின்றது அன்று .இன்று அந்த உயிரைப்பற்றிப் பேச எவருமேயில்லை.ரின் நிறைய கனடா வரை சுமந்து சென்ற குட்டியின் ராஜு சித்தப்பாவும் இல்லை தெருக்கள் இருக்கின்றன. தெருக்களின் பெயர்கள் மாறவில்லை.மாறாக, எம் மண்ணுக்குள்ளேயே எத்தனை மாற்றங்கள் ?
நானும் உங்களைக்கூட்டிக்கொண்டு அந்தத்தூரம் வரை நடக்காமல் இருந்திருந்தால்,அல்லது என் நினைவின் மெய்யான கதாபாத்திரத்தின் கதையை
இப்போதாவது சொல்லாமல் விட்டிருந்தால்..? நெஞ்சென்ற இந்த ஈரக்காட்டுக்குள்ள இன்னும் எத்தனை உயிர்களின்ர ஈர நினைவுகளைப் பொத்தி வைச்சிருக்கிறன் நான்..!
[தொடர்ந்தும் நனவிடை தோய்வோம்]