யுவான் வாங் (Yuwan Wang-5) சீனக்கப்பலின் இலங்கை வருகை , பிராந்திய மற்றும் பூகோள அரசியற் பின்னணி பற்றியதோர் அவதானிப்பு! (சென்ற இதழ் தொடர்ச்சி) - ஜோதிகுமார்
(சென்ற இதழ் தொடர்ச்சி)
பெலோஸ்கியின் விஜயம் நடந்துமுடிந்த, 12வது தினமே, செனடர் எட் மார்கியின்; தலைமையின்கீழ், செனட் குழு ஒன்று தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்டது (16.8.2022). இது அமெரிக்கா அணுகுமுறையின் தீர்மானகரமான நிலைமையினை புலப்படுத்தியது. மறுபுறுத்தே, ஏற்கனவே நூற்றுகணக்கான விமானங்களையும், பத்துக்கு குறையாத கப்பல்களையும் அனுப்பி, அதற்கூடு, தாய்வானுக்கென்று, உண்மையில், சொந்தமாக, வான்பரப்பு என்று ஒன்று உண்டா என்று சர்வதேச ஆய்வாளர்களை கேள்வி கேட்க வைத்த சீனத்தின் நடவடிக்கைகள் கட்டுக்கடங்காமல், இன்றும்,இன்னமும் தொடர்வதாகவே இருக்கின்றது.
இச்சுற்றி வலைப்பின் முக்கிய அம்சங்கள் இரண்டு: ஒன்று, தாய்வானைச்சுற்றி வளைத்து, தாய்வானுக்கு அதன் கையாலாகாத தனத்தை காட்டிக்கொடுப்பது. (அமெரிக்க ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்கள் நிறையவே இருந்த போதிலும்). மற்றது, அமெரிக்காவின் கடற்படைத் தளமான குஹாம் தளத்திலிருந்து அமெரிக்க போர் கப்பல்களை (அல்லது விமானங்களை) நிறுத்தி வைத்து, “கடல் வழி பாதை சுதந்திரம்” (Navigation Right) என்ற வாய்பாட்டை அர்த்தமில்லாமல் ஆக்கி, தாய்வானுடன் அதற்கு எந்தவித சம்பந்தமும் இல்லாமல் செய்துவிடுவது.
இதுவும் சரி, அல்லது ஏற்கனவே கூறினால் போல் தாய்வானின் மேலாக, தாய்வானின் வான்பரப்பை ஊடறுத்து, தான் செலுத்திய ஏவுகணையின் விளைபயன்களும் சரி- கிஸிஞ்ஞரின் பயங்களை மேலும் மேலும் அதிகரிக்க செய்வதாகவே இருந்தன.