இன்று மனிதர்களின் மனநிலைகளும் வாழ்வுத்துயரங்களும்,, நெருக்கடிகளும், சிக்கல்களும் அவர்களின் அகவாழ்வும் அது சார்ந்தவையுங்கூட அவர்களின் வாழ்க்கைத் தொழில் முதலான வாழ்வாதாரங்களோடு கண்ணுக்குப் புலனாகாத அளவு இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் அகவயமான கவிதைகள், புறவயமான கவிதைகள் என்றெல்லாம் திட்டவட்டமான வரையறைகள் சாத்தியமா, அவை தேவையா என்ற கேள்விகள் தவிர்க்கமுடியாமல் எழுகின்றன. கவி என்பவர் எத்தனைக்கெத்தனை தனி மனிதரோ அத்தனைக்கத்தனை சமூக மனிதரும் கூட. இவ்வகையில் ஒரு கவி தன் கவிதையில் முன்வைக்கும் அகச்சூழலும் புறச்சூழலும் இரட்டிப்பு கவனம் கோருபவை.

கவிஞர் வசந்தனின் சமீபத்திய கவிதைத்தொகுப்பான காவல் சுவடுகளைப் படித்த போது மேற்காணும் எண்ணங்கள் மனதில் எழுந்தன. தான் பணியாற்றும் காவல் துறையைப் பின்புலமாகக் கொண்டு அவர் எழுதியுள்ள கவிதைகள் இடம்பெறும் தொகுப்பு இது. இத்தகைய கவிதைகள் வெறும் புலம்பலாகவும், பிரச்சார முழக்கங் களாகவும், சுய விளம்பரமாகவும் முடிந்துவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அப்படி யாகவில்லை என்பதே ஒரு கவிஞராக தோழர் வசந்தனை சமகாலத் தமிழ்க்கவிதை வெளியில் நிறுவுகிறது எனலாம்.

காவல்துறையைச் சேர்ந்தவர்களைப் பற்றிய சமூகத்தின் பொதுப்புரிதல் அவர்கள் கடுமையானவர்கள், அதிகாரத்தை மக்கள் மீது தவறாகப் பிரயோகிப்பவர்கள் – இப்படியாகத்தான் இருக்கிறது. ஆனால், காவல்துறையைச் சேர்ந்தவர்களை ஆசாபாசங்கள் மிக்க, சமூகப்பிரக்ஞையும் மனிதநேயமும் நிறைந்த மனிதர்களாகத் தனது கவிதைகளில் எளிய, அதேசமயம் கவித்துவம் குறையாத மொழிநடையில் எடுத்துக்காட்டுகிறார் கவிஞர் வசந்தன்.

‘பணிசெய்யும் காலம்’ என்ற தலைப்பிட்ட கவிதை இது.

அப்பாவிற்கு எடுத்து வைத்து இருப்போம்
சாப்பாடும் தண்ணீரும்
பெரும் பசியோடு வருபவர் உண்பதில்லை
உறங்கும் எங்கள் விழிகளில் இளைப்பாறிவிட்டு
உறங்காமலேயே சென்றுவிடுவார்
நிலவும் சூரியனும் பணி செய்யும் காலம் அது.

இந்தச் சிறு கவிதை ‘உறங்கும் எங்கள் விழிகளில் இளைப்பாறிவிட்டு’, - ‘நிலவும் சூரியனும் பணிசெய்யும் காலம் அது’ என்ற இரண்டு வரிகளின் கவித்துவத்தில் தன்னைக் கவிதையாக்கிக்கொண்டுவிடுகிறது! ’உறங்கும் எங்கள் விழிகளில் இளைப்பாறிவிட்டு’ என்ற வரி காக்கிச்சட்டைக்குள் ஒரு கடமைதவறாத, அன்புமிக்க தகப்பனைக் காணச்செய்கிறது என்றால் ’நிலவும் சூரியனும் பணிசெய்யும் காலம் அது’ என்ற இறுதி வரி காவலரை பிரபஞ்சத்தின் ஓர் அங்கமாக, இயற்கைச் சக்தி களின் தன்னலமற்ற இடையறாத பணியைப் போலவே ‘கருமமே கண்ணாக’ச் செயலாற்றுபவர்களாகளாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நிலவும் சூரியனும் பணிசெய்யும் காலம் அது என்ற இணைவின் மூலம் ஒய்வில்லாத தொடர்ச்சியான தங்கள் பணியின் தன்மையை நுட்பமாகப் புலப்படுத்திவிடுகிறார் கவிஞர்!

இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளில் ஆரவாரமில்லை; அலங்காரமில்லை. அழுத்த மும் அடர்செறிவும் இந்தக் கவிதைகளைக் கவிதையாக்குகின்றன. எடுத்துக்காட்டாக ‘பொறுப்புகள்’ என்ற தலைப்பிட்ட கவிதையைக் குறிப்பிடலாம். அதில் இடம்பெறும் _

’நிச்சயிக்கப்பட்ட நேரங்கள் மிகப் பொறுப்பாக
எவ்வளவு உயர் அதிகாரியெனினும்
கழிவறைகளில் உறங்குவதை
நீங்கள் அறியமாட்டீர்கள்’

_ என்ற வரிகள் வாசிப்பவர் மனங்களில் நிச்சயம் அதிர்வுண்டாக்கும். அதேபோல்

காதல் பாடலை, தெருச் சந்தடிகளை யூனிபார்மில் / வைத்தே தைக்கிறார்கள் டெய்லர்கள்/ என்ற வரிகள் எத்தனை அடர்செறிவானவை!

இந்தக் கவிதையின் இறுதிவரிகள் சமூக சீர்கேடுகளின் மீதான சாட்டையடிகள்!

‘பூட்ஸ் காலணிகளை கழற்றும்போது குழந்தைகள்
நாற்றம் தாங்கவில்லை என்கிறார்கள்
சமூகம் நாறுவதை விடவா தேவனே’

கடவுள் மறுப்பு, கடவுளின் இருப்பு குறித்த குழப்பம், கடவுள் வெறுப்பு, கடவுளிடம் கோபம், கடவுள் நம்பிக்கையுடையவர்களை மதிப்பழிக்க கடவுளைப் பழித்தல், குறிப்பாக ஒரு மதத்தைச் சார்ந்தவர்களின் கடவுளர்களைப் பழித்தல், மதிப்பழித்தல் என மனிதர்கள் கடவுள் என்ற கருத்தாக்கத்தோடும், நம்பிக்கையோடும் ஒட்டியும் வெட்டியும் பலவகையாகத் தொடர்புறவாடுகிறார்கள். கவிஞருடைய ஒரு கவிதை யில் கடவுளுக்குக் கைவிலங்கு பூட்டுகிறார் காவலர்! அவருடைய கோபம் ‘ தனி யொருவனுக்குணவில்லையெனில் ஜகத்தினை யழித்திடுவோம்’ என்றவிதமான கோபம்!

நகரத்தின் மைய வீதிகளில்
பகல் முழுக்க சுற்றி வருகிறாள்
சிலநேரம் வலி தாளாது
நடை பாதை ஓரம் உள்ள இருக்கையில்
அமர்கிறாள்

உக்கிரத்தில் சொட்டுகிறது
நீங்கள் நினைப்பதுபோல் வியர்வையோ
கண்ணீரோ அல்ல
அங்கே யாரோ ஒளிந்திருக்கிறார்கள்
நான் விசாரிக்கிறேன்
கடவுள் எனது பெயர் என்கிறான்
எனது கைவிலங்கை பூட்டுகிறேன்

இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளைப் படித்துமுடிக்கும்போது ‘காவல்துறையினர் மனிதாபிமானம் அற்ற அரக்ககுணம் படைத்த அதிகாரவர்க்கத்தினர் என்பதாய் காலங் காலமாக நம்மிடம் உருவேற்றப்பட்டிருக்கும் மொண்ணைத்தனமான, மொந்தைத் தனமான புரிதல் விலகிவிட்ம். காவல் துறையினரும் சகமனிதர்களே என்ற புரிதல் நமக்கு ஏற்பட்டுவிடும் என்பது உறுதி. இந்ப் புரிதலை வாசகர்களுக்கு ஏற்படுத்துவதில் எத்தனை இயல்பாக, ஆத்மார்த்தமாக இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளில் கவிமனம் இயங்குகிறது – எந்தவொரு வலிந்தேற்றலோ. வானளவாவியப் பிரகடங் களோ, பீடத்திலிருந்து தரப்படும் அறிவுரைகளோ, மக்களைப் பழித்துரைக்கும் மனப் போக்கோ, இலக்கிய பீடங்களின் தனிக் கவனத்தைக் கோரிப் பெறுவதற்கான முனைப்போ, எத்தனமோ எதுவும் இல்லாமல் ஒரு காவலராக, மனிதராக தன்னு டைய கவிதைகளில் வெகு இயல்பாக, எளிமையாக, அதே சமயம் ஆழமாக, அந்தரங்கசுத்தியோடு வெளிப்பட்டிருப்பதே ஒரு கவிஞராக தோழர் வசந்தனுக்கும் அவர் பேச எடுத்துக்கொண்டுள்ள கருப்பொருளுக்கும் வலிமை சேர்க்கிறது; நியாயம் செய்கிறது.

நீர்மை பதிப்பகம் மூலம் வெளியாகியிள்ள இந்தக் கவிதைத்தொகுப்பின் நூலாக்கமும் மிக நேர்த்தியாக உள்ளது. பக்கங்களில் ஆங்காங்கே தரப்பட்டுள்ள காவர்களின் கோட்டுச்சித்திரங்களும் புகைப்படங்களும் துருத்திக்கொண்டு நிற்காமல் கவிதை களோடு பொருந்தியமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

‘பயணங்களில் ஜன்னலோர இருக்கையினைத் தவிர்த்துவிடுவேன். அங்கே நானறிந்த வலியினை ஆனந்தன் உணர்ந்தும், உணர்ந்ததைக் கேட்டுமிப்படி எழுதியிருக்கிறார்’ என்று ஒரு தேர்ந்த வாசிப்பாளராக, மனிதம் நிறை மனிதராக கவிஞரைப் பற்றி அணிந்துரை தந்திருக்கிறார் ‘சார்-ஆட்சியர் இரா.ரவிக்குமார்,

‘மக்களின் எதிரிகள் போல் சித்தரிக்கப்படும் இவர்களிடமிருந்து ஒரு கவிஞன் தன் கவிதைகளை காவல்துறையின் துன்பங்களுக்கு மத்தியில் இருந்து சிவில் சமூகத்திற்கு முன்வைக்கிறான்’ என்று இந்தக் கவிதைத்தொகுப்பின் அடிநாதத்தைத் தன் கட்டுரையில் கச்சிதமாகச் சுட்டிக்காட்டும் கவிஞர் யவனிகா ‘மொத்த காவல் துறைக்கும் நிம்மதியாக உறங்கும் ஒரு கவிஞனின் இரவுநேர வந்தனங்கள். அன்பும், நன்றியும் மக்களே!’ என்று மனதார நன்றி தெரிவித்துத் தன் கட்டுரையை நிறைவு செய்திருக்கிறார்.

இந்தப் புரிதலும், நன்றியுணர்வும், தோழமையுணர்வும் இந்தக் கவிதைத் தொகுப்பை வாச்க்கும் யாருக்கும் தவிர்க்கமுடியாமல் ஏற்படும். இதுவே இந்தக் கவிதைகளின் கவித்துவமான நோக்கமும் இலக்கும் என்பதை உணர முடிகிறது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் வேதனையை இன்னொரு பெண்ணே துல்லியமாக உணரமுடியும் என்பது மேலோட்டமான பார்வை. ஏனெனில், பாதிக்கப்பட்ட பெண்ணின் வேதனை அந்நியப் பெண்ணுக்கு பல நேரங்களில் வெறும் செய்தியே. அதுவே, அந்தப் பெண்ணின் தந்தை,சகோதரர்கள், நண்பர்களுக்கு நரக வேதனை. இதேபோல் எந்தவொரு துறை குறித்தும், நிகழ்வு குறித்து அதில் நேரடி யாக இடம்பெறுபவர்கள் அதைப் பற்றிக் கூறுவதிலும், நடந்த நிகழ்வை, அல்லது ஒரு குறிப்பிட்ட துறையை வெளியிலிருந்து பார்ப்பவர்கள் அதைப் பற்றிக் கருத்து ரைப்பதிலும் ஓர் அடிப்படை வேறுபாடு கண்டிப்பாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். ஈழம் விடுதலைப்போரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். (அந்தச் சூழலில் இருந்தவர்கள், இலங்கைச் சூழலால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் அதைப்பற்றிப் பேசுவதிலிருந்து அதை தொலைவிலிருந்து பார்த்தவர்கள், கருத்தியல்ரீதியாக அதை அணுகுபவர்கள் அதைப் பற்றிப் பேசுவது தொனியிலும், பயன்படுத்தப்படும் சொற்களி லும், நிறையவே வேறுபடுகிறது. இவ்வகையில், காவல்துறையைச் சேர்ந்தவர் அதைப் பற்றிப் பேசுகிறார் என்ற அளவிலும் இந்தக் கவிதைத்தொகுப்பு முக்கியத் துவம் வாய்ந்ததாகிறது.

தன் துறையிலுள்ள குறைகளை, கறுப்பு ஆடுகளைக் கவிஞர் சுட்டிக்காட்டவில் லையே, கட்டங்கட்டிக் காட்டவில்லையே என்று சிலர் குறை சொல்லலாம். ஆனால், ஒரு கவிஞரின் வேலை ஒரு துறை சார்ந்தவர்களும் மனிதர்களே என்று மற்றவர் களுக்கு எடுத்துக்காட்டுவதன் மூலம் அந்தத் துறையில் உள்ளவர்களுக்கும் அதை உட்குறிப்பாகச் சுட்டிக்காட்டி சக மனிதர்களிடையே – தன் துறை சார்ந்தவர்களும் சரி, வாழ்வின் மற்ற துறைகளில், மற்ற நிலைகளில் இருப்பவர்களும் சரி – எல்லாத் தரப்பினரிடமும் மனிதத்தை, சமூகப்பிரக்ஞையை, தனிமனித மேன்மையைக் கொண்டுவருதல்தானே எந்தவொரு உண்மையான இலக்கியப் படைப்பின் நோக்கமும் இலக்கும்! அப்படித்தான் இந்தத் தொகுப்பை நான் பார்க்கிறேன்.

உலக இலக்கியங்களில் கைதிகள் எழுதியுள்ளவை இடம்பெற்றிருக்கின்றன. கைதிக ளைப் பற்றி எழுதப்பட்டவை இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, அரசியல் கைதிகள். ஆனால், காவல்துறையைச் சேர்ந்தவர்களின் எழுத்துகள், அதாவது காத்திரமான, இலக்கியத்தரமான படைப்புகள் எழுதப்பட்டிருக்கின்றனவா, இடம்பெற்றிருக்கின்ற னவா, தெரியவில்லை. எனக்குத் தெரிந்தவரையில் இல்லை. அவ்வகையில் தோழர் வசந்தனின் இந்தக் கவிதைத் தொகுப்பு உலக அளவிலான முன்னோடிக் கவிதைத் தொகுப்பாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. அதற்குரிய கவனத்தை இந்தத் தொகுப்பு பெறவேண்டும் என்று விரும்புகிறேன்; பெறும் என்று நம்புகிறேன்.

Published by NEERMAI PATHIPPAGAM
Vilaripalayam (Po)
Vazhapadi (Tk)
Salem (Dt)-636 115

Rs. 100 /-
+91 6369 122 133
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


                       -  கவிஞர் மா.ஆனந்தன் (வசந்தன்) -

 மா.ஆனந்தன் (வசந்தன்) சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள விலாரிபாளையம் கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு காவல்துறையில் 2008ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் தற்சமயம் சேலம் மாநகரத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிகிறார். சிறுவயதில் இருந்தே எழுதிவரும் இவர்,நடுநிசியில் எரியும் மழை, தச்சன் வீட்டு யானைபொம்மை, வான்காவின் தகன மஞ்சள், கைவிடப்பட்டவனின் இரவுகள், ஆகிய கவிதை தொகுப்புகளை வசந்தன் என்ற புனைப்பெயரில் வெளியிட்டிருக் கிறார்.

கவிஞர் வசந்தனை நேரில் பார்த்ததில்லை. அவரிடம் மின்னஞ்சல் மூலமாக 10 கேள்விகளை அனுப்பி ஒரு சிறு நேர்காணல் நடத்தினேன். நான் கேட்ட கேள்விகளும் அவற்றிற்கான அவருடைய பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன -

கேள்வி 1: இலக்கிய ஆர்வம் எவ்வாறு, எப்போதிலிருந்து ஏற்பட்டது?
கவிஞர் வசந்தன்: புத்தகங்களை கைகளில் எடுத்து எழுத்துக்கூட்டி வாசிக்க தொடங்கிய மூன்றாம் வகுப்பிலிருந்து

கேள்வி 2: இலக்கிய வகைமைகளில் எது அதிகம் பிடிக்கும்? கதை, கட்டுரை, கவிதை?
கவிஞர் வசந்தன்: கவிதை

கேள்வி 3: கவிதை எழுதுவதிலும், வாசிப்பதிலும் நீங்கள் எதை நாடுகிறீர்கள்? - வாசிப்பனுபவம்? வாழ்வு குறித்த புதிய கோணம் - இப்படி?  இந்த வாசிப்பனுபவமும், எழுதும் அனுபவமும் உங்களுக்கு என்ன தருகிறது?
கவிஞர் வசந்தன்: ஒரு துயரத்தை காணும்போது உணர்ச்சிகளை கட்டுபடுத்த முடியாத கோபமோ அழுகையோ வரும்போது எழுத்துக்கள் என் கண்ணீராலே எழுதப்பட்டு விடுகின்றன

கேள்வி 4: சமகாலக் கவிதைப்போக்குகளில் என்னவிதமான கவிதைகள் வாசிப்பதும், எழுதுவதும் நிறைவாக இருக்கிறது?
கவிஞர் வசந்தன்: இறுக்கமான மொழியை வாசகர்களுக்கு புரியும்படி எழுதுவது மனநிறைவை தருகிறது. அது போன்ற கவிதைகள் மற்றும்தமிழில் மொழிபெயர்க்கப் பட்ட பிறமொழிக்கவிதைகள்.

கேள்வி 5: உங்களுக்குப் பிடித்த சமகாலத் தமிழ்க்கவிஞர்களில் சிலர்? ஏன் அவர்களைப் பிடிக்கும்?
கவிஞர் வசந்தன்: யவனிகா,ரமேஷ்பிரேதன்,கண்மணி குணசேகரன், ஆசு,ஸ்டாலின் சரவணன், இளம்பரிதி, வெய்யில், பூவிதழ் உமேஷ்,ஆண்டன்பெனி,இளம் படைப்பாளி களை ஊக்குவிப்பதிலும் வழிகாட்டுவதிலும் சிறப்பாக செயல்படுகின்றனர்

கேள்வி 6: கவிதை மனநிலை உங்களுக்கு எப்படி, எப்போது வாய்க்கிறது?  எப்போது கவிதை எழுதுவீர்கள்? பணியிலிருக்கும்போது கவிதைப்பொறி மனதில் தோன்றினால் அதை எப்படிக் கையாள்வீர்கள்?
கவிஞர் வசந்தன்: ஒரு நிலையற்ற மனநிலையில் எளிதில் கவிதை என்னிடமிருந்து கவிதை தன்னை எழுதிக்கொள்கிறது. பெரும்பாலும் அமைதி கவ்வும் இரவு நேரங்களில் மட்டுமே எழுதுவேன் பணியின்போது கவிதைக்கான மனநிலை ஏற்ப்பட்டால் அது மனதிற்குள்ளே உழன்று எனது ஓய்வில் நல்ல வடிவமாக அமையும்

கேள்வி 7: இலக்கியத்தின் வேறு வகைமைகளை எழுதிப்பார்க்கும் ஆர்வமுள்ளதா?
கவிஞர் வசந்தன்: உரைநடைக்கவிதை, கட்டுரைகள்,சிறுகதைகள்,எதிர்வினைகள்,

கேள்வி 8: கவிஞர்களுக்கு எந்தவிதமான அடையாளமும் அங்கீகாரமும் இந்தச் சூழலில் சாத்தியமாகிறது?
கவிஞர் வசந்தன்: எல்லோரும் அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் விரும்புகிறார் கள். சிலருக்கு தானாக அமைகிறது. சிலர் தேடிப்போய் அமைத்து கொள்கிறார்கள்

கேள்வி 9: உள்வயமான கவிதைகள் அல்லது புறவயமான கவிதைகள் - இவற்றில் எதை அதிகம் விரும்புகிறீர்கள் - ஒரு வாசகராகவும், கவிஞராகவும்?
கவிஞர் வசந்தன்: உள்வயமான கவிதைகள் இறுக்கமான மொழியை வாசகர்களுக்கு புரியும்படி எழுதுவது மனநிறைவை தருகிறது

கேள்வி 10: கவிதை எழுதுதல், கவிதை வாசித்தல் - சமூகம் இவற்றிற்கி டையேயான உறவு எப்படியிருக்கிறது? எப்படியிருக்கவேண்டும்?
கவிஞர் வசந்தன்: மூன்றும் தனித்தனி கோடுகளாக உள்ளன ஒன்றிணைந்தால் அழகான ஒரு முக்கோணமாகும்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com