சரளமான மொழிநடை என்பது ஒரு எழுத்தாளருக்கு வரமாக அமைவது. தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் ஊடகமாக எழுத்தைப் பயன்படுத்தும் வல்லமை பலரிடம் காணப்பட்டாலும், அகம் சார்ந்த உணர்வுகளை மென்மையுடனும், புறம் சார்ந்த தோற்றங்களை அழகியலுடனும், சமூகம் சார்ந்த அறங்களை ஓர்மத்துடனும் வெளிப்படுத்தும் திறன் சிலரிடம் அதீதமாகக் காணப்படும். அவர்களுள் ஒருவர் எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி.
அண்மையில் வெளிவந்த 'ஒன்றே வேறே' சிறுகதைத் தொகுப்பு இதற்கு தெளிவான உதாரணமாக அமைகிறது. சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக்கு பொருத்தமானதும், ஊகங்களுக்கு வித்திடுவதுமான வித்தியாசமான அட்டைப்படம். வாசிப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டும் கைக்கடக்கமான அழகிய வடிவமைப்புடன் கூடிய இத்தொகுப்பு மட்டக்களப்பு 'மகுடம்' பதிப்பகத்தின் வெளியீடாகும். பாராட்டுகள்.
'ஒன்றே வேறே' என்னும் தலைப்பும் பொருள் பொதிந்தது . அட்டைப்படத்தில், குறியீட்டுப் பாணியில் வடிவமைக்கப்பட்ட ஆண் பெண் இருபாலார் போல, உலகீய வாழ்வில் ஒருமித்தே வாழினும், நீட்டப்பட்ட தனிக்கரங்கள் போல தமக்கென சுயமும் தனித்தன்மையும் கொண்டவர்கள் எனப் பொருள் கொள்ளலாம். எழுத்தாளர்கள் சமூகத்தில் காணும் விடயம் ஒன்றேயாயினும், அவரவர் படைப்பு முறைமையினால் வாசகருக்கு உணர்த்தப்படும் விதம் வேறானது எனவும், பிரச்சனைகள் எல்லோருக்கும் பொதுவானவையாக இருப்பினும், அதை அவரவர் எதிர் கொள்ளும் விதத்தில் வேறானவை எனவும் பொருள் கொள்ளலாம். ஆழமான தலைப்பு. சிறப்பு.
உளவியல் சார்ந்த பல விடயங்களை தன் சிறுகதைகளின் மூலமாகக் கொண்டு, புலம் பெயர்ந்த நம்மவர்கள் எதிர்கொள்ளும் கலாசார முரண்களை கதைக்கருவாக அமைத்துள்ளார். குறிப்பாக ஆண், பெண், சிறுவர்கள், முதியவர் என சகல மட்டத்தினரதும் மன ஓட்டங்கள் ஆழமாக அலசப்பட்டு உள்ளன.எழுத்தாளர்கள் எல்லோரும் பெண்மனம் சார்ந்த உணர்வுகளைத் துல்லியமாக எழுத்தில் வடிவமைக்கும் திறன் கொண்டவர்கள் எனக் கூறிவிட முடியாது. பெண்ணியம் சார்ந்த தீர்க்கமான எண்ணங்களை வெளிப்படுத்தத் தயங்கும் எழுத்தாளர்களும் பலர் உளர். ஸ்ரீரஞ்சனியிடம் இத்தகைய தயக்கங்கள் இல்லாதிருப்பது பெண்களின் அகவுலகம் சார்ந்த ஆழமான புரிதல்களை வெளியுலகிற்கு வெளிச்சம் இட்டுக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.
புலம்பெயர்வின் முதல் தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்குமான சிந்தனா இடைவெளிகள் எண்ணற்ற கதைக்கருக்களை எழுத்தாளர்களுக்கு அள்ளி வழங்குகின்றன. ஸ்ரீரஞ்சனியின் எழுத்தின் வீச்சும் அவ்வாறான பல எல்லைகளைத் தொட்டு விரிகிறது.முன்னேற்றமடைந்த மேற்கு நாடுகளுக்கு புலம் பெயர்ந்த முதல் தலைமுறையினர் ஏற்றுக் கொள்ளத் தயங்கும் கலாசார பண்பாட்டு முறைமைகள் பலவும், அங்கு பிறந்து வளர்ந்த அடுத்த தலைமுறையினரால் சுலபமாக ஏற்றுக் கொள்ளப் படுகின்றன. பெற்றோருடனான தலைமுறை இடைவெளிகளுக்கு மேலதிகமாக, இளையோரின் மனதில் இவை புரிதலிலும் நெருக்குவாரங்களை உருவாக்குகின்றன. கணவன் மனைவிக்கு இடையில், ஆண் என்ற ஆதிக்க சிந்தனையினால் ஏற்படும் குடும்ப வன்முறைகளும், 'இது இல்லறவாழ்வில் சகஜம்தானே' என்ற சமூகக் கற்பிதங்களினால் உருவான அனுசரிப்பு மனநிலையும் அங்கு வளர்ந்த புதிய தலைமுறையினரிடம் காணப்படுவதில்லை.
ஒழுக்கமான வளர்ப்பு என தாம் நம்பும் நிலைக்காக பிள்ளைகளை மிகுந்த கட்டுப்பாட்டுடன் வளர்த்தல், அடித்தல் மனரீதியாக துன்புறுத்தல் என்பவற்றிற்கான சகிப்புத் தன்மையும் இளைய தலைமுறையினரிடம் அரிதாகவே காணப்படுகின்றது. இந்த மாற்றங்கள் சில குடும்பங்களினால் இயல்பாக ஏற்றுக் கொள்ளப்படும் அதே சமயம், அதே தலைமுறையை அல்லது குடும்பத்தைச் சேர்ந்த வேறு சிலரால் புறந்தள்ளப் படுகின்றன. இது சொந்தபந்தங்கள் இடையே வினோதமான மன இடைவெளிகளைத் தோற்றுவிக்கின்றது. இவற்றை மிகை சுதந்திரம் என்பதா முன்னேற்றமடைந்த தனிமனித சுதந்திரம் என்பதா எனும் முரண் மனநிலை, தாயகத்தில் இன்னும் வேர்களைக் கொண்டிருக்கும் முதல் தலைமுறைக்கு உண்டு. இத்தகைய குடும்பப் பிரச்சனைகள் சிலரை தற்கொலை மனநிலைக்கும் தள்ளுவதுண்டு.
ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் தான். ஆனால் மனித மனமோ பல பக்கங்களும் பல்பரிமாணங்களும் கொண்டது . இவ்வாறான முரண் நிலைகளையே எழுத்தாளர் தனது கதைகளின் மூலச்சரடாகவும் களமாகவும் கொண்டுள்ளதைக் காணலாம்.ஆழ்மன வெளிப்பாடுகளைத் தன் சிறுகதைகளில் உலாவ விடும் ஸ்ரீரஞ்சனி அவர்கள் அவற்றின் தீர்வுக்கான வழித்தடங்களையும், கதைமாந்தரினூடாக கூற வைக்கின்றார்.இத்துடன் எழுத்தின் பாதையை நிறுத்திக் கொள்ளாமல் பிரச்சனைகளின் உருவாக்கத்தை தடுப்பதற்கான வழிமுறைகளையும் மனோதத்துவ ரீதியிலான தீர்வுகளை பெற்றுக் கொள்ளும் முறைகளையும் முன்வைக்கிறார். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து 'அக்கணத்தில் வாழ்தல்' என்னும் உளவள ஆலோசனை பலருக்கும் பயனுள்ளதும் நம்பிக்கை மிகுந்த மனநிலையைத் தரக் கூடியதுமாகும்.
புலம்பெயர் தேசமொன்றில் வாழ்வோரின் மனித உளவியல் மற்றும் இல்லறம் பற்றிய சிறப்பான புரிதல்களைத் தரும் இத்தொகுப்பில், உளவியலாளருடனான உரையாடல்கள் சில ஒரே விதமான மொழிநடையில் அமைந்திருப்பது சிறுகுறையாக உறுத்தினாலும் மனதில் கொள்ளாது கடந்து செல்லலாம். அத்துடன் பல கதைகளின் கருவாக குடும்பவன்முறைகள் இருப்பதைத் தவிர்த்திருந்தால் தொகுப்பின் பல்வகைமை பேணப்பட்டிருக்கும்.
இல்லறத்தில் கணவன் மனைவி உளப்பாங்கு, சிறுபிராயத்தவரின் பார்வையில் பெற்றோர் , முதிர் வயதுடைய விதவைப் பெண்களின் உளவியல் என பல்வேறு பருவம் சார்ந்த மெல்லுணர்வுகளை சுவை குன்றாமல் தன் படைப்புகளில் வெளிப்படுத்துகின்றார். இல்லறத்தில் ஒரு ஆண், பெண்ணை தன் இணையாகத்தான் நினைத்து கெளரவிக்க வேண்டும். சொற்களாலும் செயல்களாலும் ஒருவரை உணர்வு ரீதியாகத் தாக்குவதும் குடும்ப வன்முறை சார்ந்ததுதான். வேறிடத்தில் காட்டமுடியாத கோப உணர்வுகளை தனது மனைவியிடம் பலர் காட்டுவது 'தனக்கு உரிமைப்பட்ட பொருள்' என்ற ஆதிக்க மனப்பான்மையினால் என்ற கருத்தினை பல கதைகளின் பேசுபொருள் ஆக்கியிருக்கிறார். இதற்கு ஒருவிதத்தில் தமிழ்க் குடும்பங்களில் ஆண்குழந்தைகளின் வளர்ப்பு முறையும், கன்னிகாதானம் தாரை வார்த்தல் முதலான திருமணச் சடங்கு முறைகளும் காரணங்கள் ஆகின்றன என்பதை மறுக்க முடியாது. இருவரிடையேயான நட்போ காதலோ இல்லறமோ, கூடிவாழ்தலோ பெண்ணின் அல்லது ஆணின் மனதை சிறைப்படுத்தி அவர்களை அமைதி இழக்கச் செய்யுமாயின், அந்த உறவிலிருந்து நீங்குதலே மகிழ்வு தரும் என்ற எண்ணப்பாட்டை 'சேணமற்ற அவசரம்', 'இனி' , 'யாருளர் என்றில்லை' , 'பயம் தொலைத்த பயணம்' ஆகிய கதைகள் வெளிப்படுத்துகின்றன.
- நூலாசிரியர் ஶ்ரீரஞ்சனி -
புலம்பெயர் தேசம் சென்ற முதல் தலைமுறை பெற்றோருக்கும், அங்கு பிறந்த பின்னைய தலைமுறையினருக்குமான புரிதல் பல மனச் சிக்கல்களை உள்ளடக்கி இருக்கின்றது.பெற்றோருக்கும் பதின்ம வயது வரையிலான பிள்ளைகளுக்குமான உறவு, ஒளிவு மறைவின்றி சினேகபூர்வமாக இருந்தால் பாலியல் துஷ்பிரயோகம், கலாசார மீறல், உடல் உளநலம் ஈறாக பல பிரச்சனைகளையும் தடுத்துக் கொள்ளலாம் என்ற கருத்தினையும் கதைமாந்தரூடாக முன்வைக்கின்றார். சிறுவர், பெற்றோர் மனநிலை சம்பந்தமான கதைகளில் மனதுக்கு மிக நெருக்கமான கொஞ்சலும் கெஞ்சலும் நிறைந்த உணர்வுபூர்வமான உரையாடல் மொழியினைக் கையாள்வது சிறப்பம்சம். 'பேசப்படாத மெளனம்' , 'ஒரு நாள்', 'முகிலிருட்டில்' கதைகள் இவ்வாறானவை.
'புதர் மண்டியிருந்த வீடு' , 'ஒன்றே வேறே' , 'காலநதி' ஆகிய சிறுகதைகளில் விதவைப் பெண்களின் வாழ்வு , உணர்வுகள், எதிர்கொள்ளும் சிக்கலான மனநிலைகள் பற்றி சிறப்பாகப் பேசப்படுவதுடன் அதற்கான தீர்வுகள் ஆற்றுப் படுத்தலுடனும் நம்பிக்கை தரும் சிந்தனைகளுடனும் கூறப்பட்டுள்ளன. நோயுற்றபோது மறைந்த கணவனின் அரவணைப்பை நினைத்து ஏங்கும் பெண்மனதும், இளம் விதவையாக மகனை வளர்த்தெடுத்த தாய் மனதின் தாபங்களும் மனதுக்கு நெருக்கமான மொழியில் அணுகப்பட்டுள்ளன. 'ஒன்றே வேறே' சிறுகதை மார்பகம் பற்றியதான பெண்களின் கர்வத்தினையும், தாய்மை பாலூட்டல் என்பவற்றின் மேன்மையினையும் மார்பகப் புற்றுநோய் பற்றிய அறிதல்களையும் ஒருங்கே கூறும் சிறப்பான படைப்பாக அமைந்துள்ளது.
'காலநதி' நுணுக்கமான மனநிலை ஒன்றைக் கூறுகிறது. மகிழ்ச்சியற்ற திருமணம், விதவையான பின் மகளுடன் வாழ்வு என்றியங்கும் எழுபது வயது முதியபெண், இளமையில் ஈர்ப்புக் கொண்டவனை தபுதாரனாக புலம்பெயர் தேசத்தில் காண்கிறார். அவர்களிடையே மனரீதியான அந்நியோன்யம் ஏற்படுகிறது. பழைய நினைவுகளை மீட்டுகின்றனர். இந்த நெருக்கம் மகளால் சரியான விதத்தில் புரிந்து கொள்ளப்படாமல் இருக்கும் சங்கடமான சூழ்நிலையில், தன் சுயத்துக்கு மதிப்பளித்து தனக்காக, தன் விருப்புக்காக வாழ நினைக்கும் அப்பெண் மகளைப் பிரிந்து அருகாமையில் ஓரிடத்தில் தனித்து வாழ முடிவு செய்கிறார். பெண்கள் எந்த வயதிலும் மற்றவரை சார்ந்து வாழும் வழமையான போக்கினை மறுதலிக்கும் புதிய சிந்தனை. தாயினதும் மகளினதும் உணர்வு நிலைகளும், புரிதலில் ஏற்படும் மாற்றங்களும் துல்லியமாக வெளிக்காட்டப்பட்டு உள்ளன. நிறைவேறாத முதற்காதலின் நினைவுகள் நனவிடை தோய்தல்களாக ரம்மியம் தருகின்றன.
குறிப்பிட்டுக் கூற வேண்டிய மற்றுமோர் படைப்பு 'சங்கர்'. இறுதியில் வரும் ஒற்றைச் சொல்லால் கதையின் முடிவு எதிர்பாராத தளத்துக்கு கொண்டு செல்லப்படுவது இக்கதையில் பாராட்டப்பட வேண்டிய உத்தி. இங்கு பேசப்படும் விடயங்கள் புலம்பெயர்ந்த நம்மவர்களின் சமூகமொன்று எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பல முனைகளிலும் தொட்டுச் செல்கிறது.
பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு புலம்பெயரும் ஆண்கள், தமது மனைவி பிள்ளைகளை நன்னிலையில் வாழவைக்க மேற்கொள்ளும் கடின முயற்சிகள்; நியாயமே ஆனாலும் மேற்கு நாடுகளில் பெண்களுக்கு தரப்படும் அளவுக்கதிகமான சுதந்திரம் ; இதன் காரணமாக தம்மை இம்சிக்கும் கணவரை பொலிசில் பிடித்துக் கொடுக்கும் மனைவியர் ; தமது உழைப்பு மதிக்கப்படவில்லை என மனம் புழுங்கும் கணவர்கள்;இவ்வாறான குடும்ப வன்முறையாளர்களுக்கு தரப்படும் உளவள ஆலோசனைகள் மற்றும் சட்டதிட்டங்கள்; மீண்டும் சேர்ந்து வாழ்வதாயின் அதற்கான வழிமுறைகள் என பல்வேறு தளங்களில் விரியும் கதையில் கணவன் தன் மனமாற்றத்தினைக் கூறி மனைவியுடன் இணையும் விருப்பினையும் உளவியலாளர் மூலம் எழுத்தில் வெளிப்படுத்துகின்றான். வாசகராக நாமும் மகிழ்ச்சியும் திருப்தியும் ஆறுதலும் கொள்ளும் நிலையில், 'கொடுப்புக்கால்' சிரித்தபடி அங்கிருந்து விலகும் கணவனைப் பார்த்து மனம் ஒரு கணம் அதிர்ந்து போவது நிஜம். கொடூரமான அந்த ஒரு சொல்லின் பின்னிருக்கும் ஊகிக்கக் கூடிய எதிர்கால நிகழ்வுகள் மனைவியின் கொலைவரை மிகவும் பயங்கரமானவையாகவும் இருக்கலாம் என உள்ளுணர்வு எச்சரிக்கின்றது.
இலங்கையில் தங்கி இருந்த போது 'சங்கர்' கதையை வாசித்த பேராசிரியரும் புகழ்பெற்ற எழுத்தாளருமான ஆசி கந்தராஜா அவர்கள், 'நல்லகதை' எனக்கூறி கதையின் கடைசி வசனத்தை மிகவும் சிலாகித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
இதே தளத்திலமைந்த வேறொரு கதை 'பனையோலை இடுக்கில்' . புலம்பெயர்ந்து சிரமப்பட்டு முன்னேறிய ஆண் ஒருவர், தன் இயலாமையின் போது மனைவியின் பாராமுகத்தினால் விரக்தி கொண்டு அடிக்கடி தற்கொலைக்கு முயலும் மனநிலையைக் கூறினாலும், 'அக்கணத்தில் வாழ்தல்' என்னும் உளவள ஆலோசனைகளின் பலனாக அவர் அடையும் சிறப்பான மனமாற்றத்தை முன்னிலைப் படுத்துகிறது. தற்கொலை எண்ணங்களை சுரங்கம் போன்ற ஒருவழிப் பாதையாக உருவகித்திருக்கும் இக்கதையில் வாழ்வதற்கான நம்பிக்கையை 'பனையோலை இடுக்கின் ஊடாகத் தோன்றும் ஒளிக்கீற்றுகளாக' உவமித்து இருக்கும் கதாசிரியை அழகியல் ரசனை மிகுந்தவர்.
குடும்ப வன்முறை அல்லது மனைவி மீதான உடல் உள மேலாதிக்கம் என்பது, கணவர் மனைவி பிள்ளைகள் என்னும் குடும்ப அங்கத்தவர் ஒவ்வொருவரின் பார்வைக் கோணத்திலும் அவரவர்க்குரிய நியாயங்களுடன் நோக்கப்படும் மாறுபட்ட படைப்பாக 'மனிதமென்பது' சிறுகதை அமைகிறது. 'இவளும் அவளும்' இரு கண்டங்களில் வாழும் சகோதரிகளிடையேயான கலாசார பண்பாட்டு முரண்பாடுகளை சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் கூறுகின்றது.
பெண்கள் உடலும் உளமும் சார்ந்த வன்முறைகளை ஏனையோரிடமிருந்து பெறுவதை விட தமது இல்லறத்துணையிடமிருந்தே அதிகம் பெறும் மனநிலை புலம் பெயர்ந்தாலும் தொடர்ந்து கொண்டிருப்பது சாபம். இல்லறத்தில் இணைந்து இருக்கும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இத்தொகுப்பை வாசிக்க வேண்டும். எங்கு பிழை விடுகிறோம் என்பதை அடுத்தவர்கள் பக்கமிருந்து சிந்தித்து உணர வேண்டும். இல்லற வன்முறைகளால் பிள்ளைகளுக்கு ஏற்படும் மனப் பாதிப்பு பற்றியும் மனங்கொள்ள வேண்டும்.
தீர்க்கமான வெளிப்படையான சிந்தனைத்திறனால் மானுட வாழ்வுக்கான சில திறவுகோல்களை இத்தொகுப்பின் மூலம் ஸ்ரீரஞ்சனி உவந்தளித்து இருக்கின்றார் என உறுதியாகக் கூறலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.