இவர் தம்பிராசா மகேஸ்வரி தம்பதிகளின் புதல்வி. பதுளையில் பிறந்தவர் தனது ஆரம்பக்கல்வியை பதுளை கன்னியாஸ்திரியர் பாடசாலையில் பெற்று பின் அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் கல்விகற்றவர். பின் யாழ்ப்பாணத்தில் உயர்தரக் கல்வியை மேற்கொண்டு. இலங்கைக் கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தி்ல் விவசாய பீடத்தில் கலைமானிப்பட்டம் பெற்று அங்கு விரிவுரையாளராகக் கடமையாற்றியவர். திருமணத்திற்கு பின்னர் நெதர்லாந்திற்கு புலம்பெயர்ந்து டச்சு மொழியை திறம்பட கற்றார். மேலும் உளவியல் மற்றும் சட்டத்துறையில் கல்வி கற்று பட்டம் பெற்றார். இவர் நெதர்லாந்தில் அரச நிறுவனங்களிலும் அரச சார்பற்ற நிறுவனங்களிலும் பணியாற்றியவர். பின் அகதிகளுக்கான உதவிக்காரியாலயத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளராகவும்
பணியாற்றி வருகிறார்.
தமிழில் மட்டுமன்றி டச்சு மொழியிலும் சிறப்பான திறமைகளை கொண்ட பவானி அவர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் சிறுவர்களின் தமிழ் வளர்ச்சியில் அயராது பாடுபட்டவர். தமிழ் பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி மாணவர்களின் நல்லபிப்பிராயத்தை பெற்றவர்.
தமிழ் மாணவர்களுக்கு நாடகம், நாட்டியம், இசை போன்றவற்றை பயிற்றுவித்து அவர்களை முன்னேற்றியவர். புலம்பெயர்ந்த மக்கள் தமிழையும் சமயத்தையும் இரு கண்களை போல பேணிப்பாதுகாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டவர். இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட சேரனின் கவிதைகளை மொழிபெயர்த்து கடலின்கதை எனும் நூலை தமிழ் மற்றும் நெதர்லாந்து ஆகிய இருமொழிகளில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் நெதர்லாந்தில் வெளியிட்டார். சேரனின் காதல் கவிதைகள் தொகுப்பு அன்பு திகட்டாது எனும் நூலானது நெதர்லாந்து மொழியில்.மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு 2018 நவம்பரில் நெதர்லாந்தில் வெளியிடப்பட்டது. சிலகணங்கள் எனும் இளையோர்க்கான கவிதைத் தொகுப்பு 2020 இலங்கையில் வெளியிடப்பட்டது.
மனச்சோலை என்ற 26 ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூலை வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகம் இலங்கைக் கல்வியமைச்சின் அங்கீகாரம் பெற்ற நூல். பல பாடசாலைகளும் நலம்புரி சங்கங்களும் இந்த நூலைப் பயன்படுத்தி வருவதுடன் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளிலும் இந்நூல் உபயோகிக்கப்படுவது குறிப்பிடத்தக்க விடயம். பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்க விடயம். மேலும் புதிய பல கட்டுரைகளையும் இணைத்து இந்தநூல் விரைவில் புதிய பதிப்பாக வெளிவர உள்ளது.
அண்மைக் காலங்களில் சிறுகதைகளை எழுதிவரும் இவர் பைந்தமிழ்ச்சாரல் எனும் தளத்தை அமைத்து சர்வதேச ரீதியாக நூல்களின் திறனாய்வு, பட்டிமன்றம், கவியரங்கு, தமிழ் மொழி வளர்ச்சி சம்பந்தமான நிகழ்வுகளை நடாத்துவதன்முலம் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்தும் தமிழ் கற்கும் மாணவர்கள் கற்க வேண்டிய விடயங்களைப் பைந்தமிழ்ச்சாரல்த் தளத்தில் பதிவாக்கியும் வருகிறார்.
இவர் எழுதிய குழந்தைமொழி எனும் முன் பள்ளி மாணவர்களுக்கான நூல் அண்மையில் வெளிவந்தது. இளம் குழந்தைகள் பள்ளிப் பாடங்களைக் கற்பதற்கு முன், தானே பாடங்களைப் பாடல் மூலமாகவும், காட்சிகள் மூலமாகவும், கதைகள் மூலமாகவும் பார்த்தும் கேட்டும் மகிழ்ந்து, ஆர்வத்துடன் கற்கும் வகையில் குழந்தைமொழி என்ற இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், கதைகள், பாடல்கள், எண்கள், நிறங்கள், உயிரினங்கள் போன்றவை தெளிவான வண்ணப் படங்கள் மூலமாக குழந்தைகள் புத்தகத்தை விரும்பிப் படிக்கும் வகையில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
எமது சமுதாயச் சீர்குலைவுகளை ஒழித்து, சாதி ,மத, இன, அரசியல் வேறுபாடற்ற சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும் என்பதே இவர் சமூகத்திற்கு சொல்லும் வாசகமாக உள்ளது.
1.தங்கள் படைப்புகளின் ஊற்று எது?
பவானி சற்குணசெல்வம்: சமூகமாற்றம் பற்றிய கவலைதான் பெரும்பாலும் எனது படைப்புகளின் ஊற்றாக இருந்து வந்துள்ளது. படைப்பாற்றல் நம்மைச் சுற்றியுள்ள உலகின் மாற்றத்துடன் தொடர்புடையது, எனவே அதன் மாற்றம், அதன் வளர்ச்சி, அதன் பரிணாமம், மக்களிடையே அதன் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியாக எப்பொழுதும் இருந்து வந்துள்ளது.
அது எவ்வாறு காலத்துக்குக் காலம் மாறி வந்திருக்கிறது?
பவானி சற்குணசெல்வம்: ஆரம்ப காலங்களில் கல்வி மேம்பாடு, சமூகச் சீர்குலைவுகள், காதல், இயற்கை, காலநிலை வேறுபாடு என பல்வேறு தளங்களில் எழுதி வந்த நான் படிப்படியாக மனித உணர்வுகளின் பிறள்வுகள், திடீர் சமூகமாற்றங்களுக்கான காரணங்கள், அதற்கான ஆய்வுகள் என காலத்திற்குக் காலம் எனது தேடலும் சிந்தனையின் ஊற்றும் மாறி வந்துள்ளது.
2 தங்கள் படைப்புகளுக்கும் தன்னனுபவங்களுக்கும் இடையே இருக்கும் உறவு, ஊடாட்டம் என்ன?
பவானி சற்குணசெல்வம்: காலத்துக்குக்காலம் எனது அனுபவங்களுள் பிரதானமானவற்றை அல்லது மற்றவர்களும் அறிந்து கொள்வது அவசியம் என்று நான் கருதியவற்றை கவிதை, கட்டுரை, கதை போன்ற எனது படைப்புகளூடாக மக்களுடன் பகிர்ந்துள்ளேன். அப்படி எழுதப்படும் கதைகள், கவிதைகள் உயிர்ப்பாகவும் தனித்துவமாகவும் மிளிர்கின்றன. இவை புனைவுக் கவிதைகளிலிருந்தும் புனைவுக்கதைகளிலிருந்தும் வேறுபடுவதை நான் மட்டுமல்ல வாசகர்களும் அவதானிக்கிறார்கள்.
உங்கள் படைப்புகளை தன்வரலாறு சார்ந்தவை எனச் சொல்வீர்களா?
பவானி சற்குணசெல்வம்: ஆம் சில படைப்புகள் அவ்வாறு அமைந்துள்ளன. சில சிறுகதைகள், கவிதைகளின் ஊடாக எனது வரலாற்றை எழுதியுள்ளேன். எனது உணர்வுகளையும் ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் கூட எழுதியுள்ளேன். இவையெல்லாவற்றையும் எப்படி வெற்றியின் படிகளாக மாற்றலாம் என்பதனையும் சில படைப்புகளில் கூறியுள்ளேன்.
3.தங்கள் படைப்புகளில் பிறரது வாழ்வனுபவங்களின் தாக்கம் எவ்விதம் வசப்படுகிறது?
பவானி சற்குணசெல்வம்: நிட்சயமாக என்னுடைய படைப்புகளில் பிறர் என்னுடன் பகிர்ந்துகொண்ட வாழ்பனுபவங்களின் தாக்கம் கணிசமானளவு உள்ளது. நான் மக்களின் அந்தரங்க விடயங்களைத் தெரிந்துகொள்ளக்கூடிய பணியில் பல காலம் ஈடுபட்டதால். மனிதம்,பிறள்வுகள், உளவியல்ச் சிக்கல்கள், போதைவஷ்துப் பிரச்சினைகள்,இளையோரின் பிரச்சினைகள், பெண்களின் பிரச்சினைகள், ஆண்களின் சிக்கல்கள்,கலாச்சார மாறுதல்களினால் வரக்கூடிய சிக்கல்கள் என பல்வேறு தலைப்புகளில் ஆக்கங்களும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளேன்.
மற்றவர்களுடைய அனுபவங்களை அடியொற்றியும் படைப்புத் தரக்கூடிய " படைப்பாக்க உணர்வுத் தோழமை" என்ற வகையில் எழுத முயற்சித்திருக்கிறீர்களா? எடுத்துக் காட்டாக பலஸ்தீன மக்கள், இனப்படுகொலைகள், ஆதிகுடிகள், பெண்கள் போன்றோரது அனுபவங்கள்?
பவானி சற்குணசெல்வம்: ஆம். போரினால் ஏற்படக்கூடிய மனவடு நோய், பெண்களுக்கெதிராக இளைக்கப்படும் பாலியல் வன்முறைகள், வீட்டுவன்முறை அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி நிறையவே கவிதைகளும் கதைகளும் நினைவுப் பகிர்வுகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளேன். கிரேக்க நாட்டு நாகரீக வளர்ச்சி பற்றிய கட்டுரை, பல்வேறு நாடுகளில் காணப்படும் கலாச்சார வேறுபாடுகள், சிந்தனைகள் பற்றி அவ்வப்போது எழுதியுள்ளேன்.
4 புலப்பெயர்வால் தங்களது பொருண்மையில்,மொழிநடையில், படிமங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?
பவானி சற்குணசெல்வம்: புலம்பெயர்வால் சில படிமங்கள், இயற்கையின் வர்ணனைகள் என்று பலவிதத்தில் எனது மொழிநடையில் அதாவது திணைகள் பற்றிய கருத்தில் ,பனிப்புலம் பற்றிய படிமங்களில், இங்கு வளரக்கூடிய மரங்கள் தாவரங்கள் பற்றிய விடயங்களில் கணிசமானளவு மாற்றங்கள் கற்பனைகள் உருவாக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது. கலாச்சார வேறுபாடுகள், சரித்திரம் சம்பந்தமாக பொருண்மையில் மாற்றங்கள் ஏற்பட்டுச் செல்வதைத் தவிர்க்க முடியாமலுள்ளது. உதாரணமாக பாலியல்க்கல்வியின் அவசியம் பற்றி தமிழில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். நான் எழுதி வெளியிட்ட மனச்சோலை என்ற புத்தகத்திலும் இது போன்ற கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வாழ்வியல், மறுமணம், போன்ற விடயங்கள் பற்றியும் எனது கருத்துக்களை உள்ளடக்கி ஆக்கங்களை எழுதியுள்ளேன். வேறு கலாச்சாரங்களிலுள்ள விழுமியங்களையும், நாங்கள் அவர்களிடமிருந்து கற்க வேண்டிய விடயங்கள் பற்றியும் கட்டுரை, நாடகம் போன்றவற்றில் எழுதியுள்ளேன்.
5 ஒரு படைப்பாளராய்த் தாங்கள் உணர்ந்த தருணம் எது?
பவானி சற்குணசெல்வம்: எனது படைப்பை வாசித்து மற்றவர்கள் அழுத தருணங்கள். எனது படைப்பை வாசித்து அதன் பயன் பற்றிப் பிறர் பேசிய தருணங்கள். இது எனது சொந்தக் கதை என்று நான் கூறாமலே வாசகர்கள் அதை உணர்ந்த தருணங்கள். எனது படைப்புகளை வாசித்து எனது எழுத்தாற்றலை மற்றவர்கள் பாராட்டிய தருணங்கள் கௌரவிக்கப்பட்ட தருணங்கள்.
6.அறிவும் தர்க்கமும் ஆக்க இலக்கியத்துக்கு ஊறு செய்யலாம். உணர்வே இன்றியமையாதது எனும் கருத்தியலைப் பற்றிய உங்கள். எண்ணம் என்ன?
பவானி சற்குணசெல்வம்: அறிவும் ஆரோக்கியமான தர்க்கமும் இலக்கியத்திற்கு இன்றியமையாதது என்றே நான் கருதுகிறேன். தற்காலத்தில் தர்க்கங்கள் வெறும் விதண்டாவாதங்களாக மாறுவதால் இப்படி ஒரு அபிப்பிராயம் தோன்றியிருக்கலாம். உணர்வு இலக்கியத்திற்கு இன்றியமையாதது. உணர்வு இல்லாத படைப்புகளை உப்புச்சப்பில்லாத உணவுக்கு ஒப்பிடலாம். இயற்கையின் அழகை ரசிக்கும் போது வரும் உணர்வையும், குழந்தையின் மழலையையும் அதன் கனிவையும், மனதில் ஏற்படும் மென்உணர்வுகளையும், காதலையும் வார்த்தைகளில் வடிப்பதே படைப்புக்கலை.
7 தமிழின் சொற்களஞ்சியங்களுக்குள்ளும் சொற்கிடங்குகளுக்குள்ளும் உரிய சொற்களைத் தேடுவதுண்டா?
பவானி சற்குணசெல்வம்: ஆம் நிட்சயமாக
எப்படி?
பவானி சற்குணசெல்வம்: அகராதி, விக்கிப்பீடியா ,இணையத்தளம் போன்றவற்றில் தொடர்ச்சியாக சொற்களைத் தேடிக்கொண்டே இருப்பேன். தேடியெடுத்த சொல்லில் திருப்தியில்லாவிடின் வேறு நிபுணர்களிடமோ அல்லது சக எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்பாளர்களுடனோ கலந்தோலோசித்து பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுப்பேன். நான் நிறைய மொழிபெயர்ப்புக் கட்டுரைகளையும் எழுதிவருவதால், சொற்பஞ்சம் ஏற்படுவதுண்டு. சில சமயங்களில் பிறமொழிச்சொற்கள் காரணப் பெயராக இருந்தால் அந்தச் சொற்களை நேரடியாக மொழிபெயர்த்து எழுதுவேன். சரியான சொற்கள் கிடைக்கவில்லை என்றால் அந்தச் சொல்லின் விளக்கத்தை எழுதுவேன். ஆனால் கவிதை மொழிபெயர்ப்புகளில் ஒரு சொல்லுக்குப் பொருத்தமான சொல் கிடைக்காவிட்டால் மொழிபெயர்ப்பது கடினம். ஒருவர் எழுதிய கவிதையை மாற்றியமைப்பதற்கு எனக்கு உரிமை இல்லை என்பதனால் சில எனக்குப் பிடித்த கவிதைகளை மொழிமாற்றம் செய்ய முடியவில்லையே என மனம் வருந்துவேன்.
8 படைப்பாளி என்ற வகையில் உங்கள் பொறுப்புணர்வு என்ன?
பவானி சற்குணசெல்வம்: தரமான தேவையான படைப்புகளை உருவாக்குவதன் மூலம் சமூக முன்னேற்றத்திற்குப் பங்களிப்பது. மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் மூலம் கலாச்சாரப் பரவலாக்கம், அறிவுப் பரிமாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி என்பவற்றில் பங்கெடுத்தல்.
9.உங்கள் படைப்புக்களின் தலைப்புகளை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
பவானி சற்குணசெல்வம்: சிலசமயம் எதேட்சையாக , சிலசமயம் பலரின் வேண்டுகோளுக்கமைய,பல சமயங்களில் தேவைக்கேற்ப தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கிறேன்.
10 மற்றைய படைப்பாளிகளின் ஆக்கங்களை வாசித்து விட்டு, அட , இதனை நான் எழுதியிருக்கலாமெ என ஆதங்கப் பட்டிருக்கிறீர்களா?
பவானி சற்குணசெல்வம்: இல்லை ஒருபோதும் இல்லை. நானாகவே நினைத்து எழுதும் எனது ஆழ்மனதிலிருந்து வரும் படைப்புகளையே நான் நேசிக்கிறேன் போற்றுகிறேன். அவை தரமானவையா இல்லையா என்பதைக்கூட நான் பொருட்படுத்துவதில்லை. எனது படைப்புகள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையாக இருக்கிறேன். மக்கள் மனதில் எனது எழுத்துகள் நல்ல சிந்தனை மாற்றங்களை உருவாக்கினால் அது எனக்குக் கிடைக்கும் வெற்றியாகக் கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு எழுத்தாளியும் தனித்துவமான மனிதன். அவன் எழுதுகோலை ஏந்திய நோக்கமும் அவனது பாணியும் வேறுபாடாகத்தான் இருக்கும். அப்படி இருப்பதுதான் சிறப்பு.
11. தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பெண் எழுத்துக்களுக்கான சூழல், இடம் என்ன?
பவானி சற்குணசெல்வம்: தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் பல பெண் படைப்பாளர்களுக்கு சூழலும் சந்தர்ப்பங்களும் அமைவதில்லை என்பது மனவருத்தம் தருகிறது. பெண்கள் பல விடயங்கள் பற்றி வெளிப்படையாக எழுதத் தயங்குகிறார்கள். சமூகக்கட்டுப்பாடுகளைத் தாண்டி பெண்கள் ஆரோக்கியமான கருத்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்து எழுத்துத் துறையில் முக்கிய பங்காற்ற வேண்டுமென்பது எனது அவா.
12. தங்களது படைப்பு முயற்சிக்கு எழுந்த தடை, அதைத் தகர்த்துக் கடந்த வந்த அணுகுமுறை குறித்துச் சொல்லுங்கள்.
பவானி சற்குணசெல்வம்: திருமணமாகிப் புலம்பெயர்ந்து வந்ததால் இங்கு வந்து மொழிக்கல்வியோடு தொழில்சார் கல்வியிலும் ஈடுபடவேண்டி இருந்தது. அதைவிட குழந்தைகள் சிறுவர்களாக இருக்கும் போதும் எழுதுவதற்கு நேரம் கிடைக்கவில்லை. அதைவிட எனக்குத் தடைகள் எதுவும் வந்ததாக ஞாபகம் இல்லை. என்னைப் பொறுத்தவரை ஒரு எழுத்தாளன் எழுத நினைத்தால் எழுதலாம், தனக்குரிய நேரத்தை உருவாக்கலாம். எழுத்து என்பது கரைபுரண்டோடும் வெள்ளம் போன்றது அதற்கு தடைபோட முடியாது. நான் நேரடியாகவும் வெளிப்படையாகவும் சில வேளைகளில் எவராலும் பேசப்படாத விடயங்களையும் எழுதி வருகிறேன். மக்கள் அவற்றை வாசிக்கிறார்கள், விமர்சிக்கிறார்கள், அறிவுறுத்தப்படுகிறார்கள், பாராட்டுகிறார்கள். அது எனக்கு ஆத்ம திருப்தியைத் தருகிறது.
13.தமிழ்மொழியிலிருந்து டச்சு மொழிக்குக் கவிஞர் சேரன் கவிதைகளை மொழிபெயர்த்துள்ளீர்கள். அந்த மொழிபெயர்ப்பு அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்.
பவானி சற்குணசெல்வம்: நான் பலகாலமாக மொழிபெயர்ப்புகளைச் செய்து வருகிறேன். கவிதைமொழிபெயர்ப்பு என்பது ஏனைய மொழிபெயர்ப்புகளிலிருந்து சற்று வித்தியாசமானது. கொஞ்சம் சவாலாகத்தான் இருந்தது. சரியான சொற்களை,சில சிலேடைகளைத் தேர்ந்தெடுப்தும் கலாச்சார வேறுபாட்டிற்கூடாகக் கவிதையைக் கொண்டு போவதும் ஒரு கலைதான். கவிஞர். சேரனின் பல கவிதைகளை மொழிபெயர்த்தேன். அவற்றுள் முப்பத்துநான்கு கவிதைகளை தேர்ந்தெடுத்து கடலின் கதை என்ற ஒரு புத்தகத்தை இருமொழி வெளியீடாகவும் அவரின் காதல்க் கவிதைகளதை் தொகுத்து அன்பு திகட்டாது என்ற பெயரிலும் வெளியிட்டேன்.
14.நீண்ட காலமாகப் புலம்பெயர்ந்து வாழ்கிறீர்கள். ஊரோடு முன்பு உங்களுக்கு இருந்த உறவு, இப்போதும் இருக்கிறதா? அல்லது உறவில், உணர்வில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா?
பவானி சற்குணசெல்வம்: இது மிகவும் சங்கடமான கேள்வி. ஊரில் மிகக் குறைவானவர்களே எஞ்சியிருக்கிறார்கள். நாற்பது வருடப் போர் அவர்களை ஊரிலிருந்து அடித்து விரட்டிவிட்டது என்றுதான் கூறவேண்டும். எனது ஊர் அளவெட்டி. ஒரு அழகிய கலை பண்பாட்டு விழுமியங்கள் நிறைந்த ஊர். பல ஆண்டுகளுக்குப் பின் இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு எனது புத்தகவெளியீட்டை நான் பயின்ற கல்லூரியில் நடாத்தியிருந்தேன். ஊரின் ஒருபகுதி ஓய்ந்துபோயிருந்தது. மனதில் பழைய ஞாபங்கள் வந்து வந்து அலைமோதிச் சென்றன. கலைஞர்கள் கவிஞர்கள் எல்லோரும் புறப்பட்டு விட்டார்கள் அல்லது இறந்து போயினர் என்ற ஜதார்த்தம் மனதை வாட்டியது. புலம்பெயர்ந்து வாழும் உரவர்களுடனும் உறவினர்களுடனும் இலங்கையில் பரந்து வாழும் ஊரவர்கள், உறவினர்களுடனும் நிறையத் தொடர்புகள் உண்டு.
உணர்வு ரீதியான வேறுபாடுகளை விட கலாச்சார ரீதியான வேறுபாடுகளே அதிகம். பலருடன் சேர்ந்து கலைப்பணிகள் செய்து வருகிறேன். பைந்தமிழ்ச் சாரல் எனும் எனது இலக்கியத் தளத்தில் எனது ஊரவர்களும் கலந்துகொள்வதுண்டு. சிலர் பாடியிருக்கிறார்கள். சிலர் நயவுரை நடாத்தியிருக்கிறார்கள். மஹாகவி, கவிஞர் சேரன் போன்றோரின் படைப்புகளும் திறனாய்வு செய்யப்பட்டன. கவிஞர். சேரனை இங்கு வரவழைத்து "கடலின் கதை" எனும் நூல் வெளியீட்டு விழாவை நடத்தினோம். அண்மையில் ஊரவர் பலர் சேர்ந்து "ஊருணி நிலமெங்கும் கலையூறும் அளவெட்டி* என்ற நூலை எழுதியிருந்தோம். அந்தப் புத்தகம் அந்த ஊர்வாசியொருவரின் நினைவுமலராக வெளிவந்தது. அது எமது ஊரின் ஒரு ஆவணப்பதிவாகவும் அமைந்தது மகிழ்ச்சி. இப்படியான கலைப்பணிகளில் ஊரவரோரு பயணிப்பதிலும் இடை இடை அந்த பழைய நினைவுகளை மீட்டிப் பார்ப்பதிலும் ஒரு தனிச் சுகம் உண்டு.
நன்றி
பேட்டி எடுத்தவர்:முனைவர். பொ. திராவிடமணி
பதிவுகளுக்கு அனுப்பியவர் -]இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.