இந்த அற்புதமான நீலவண்ணக் கோள்
எந்தத்திக்கினை நோக்கினும்
மோதல்களினால் பற்றி எரிகின்றதைப் பார்க்கின்றேன்.
நீங்கள் வெளியில் ஒருவருக்கொருவர்
முட்டி மோதிக்கொண்டிருக்கின்றீர்கள்.
இரத்த ஆறு பெருக்கெடுத்தோடுகிறதைப்
பார்க்கின்றேன்.
குழந்தைகள், பெண்கள், ,முதியவர் எவருமே
உங்களுக்கு ஒரு பொருட்டல்ல
என்பதையும் உணர்ந்து கொள்ள வைக்கின்றது
வெளியில் நீங்கள் போடும் வெறியாட்டம்.
உங்களை நினைத்து நான் வெட்கப்படுகின்றேன்.
நீங்கள்தான் இப்பிரபஞ்சத்தின் தலைவர் என்பதுபோல்
உங்கள் கூத்திருக்கின்றதைப் பார்த்து நகைக்கின்றேன்.
உங்களுக்கு வெளியில் விரிந்து கிடக்கின்றது
பெரு வெளி.
விரி பெரு மெளனத்தில் புதைந்து கிடக்கும்
உங்களைப் பார்க்கையில்
உங்கள் தனிமையைக் கவனிக்கையில்
எனக்கு உங்கள் மேல் பரிதாபம்தான் வருகின்றது.
வெளியில் பேயாட்டம் ஆடும் நீங்கள்
எவ்விதம் இங்கே மெளனமாக,
எவ்வித மோதல்களுமற்று
அருகருகே அமர்ந்திருக்கின்றீர்கள்?
ஆச்சரியம்தான்.
சர்வாதிகாரிகளே! புரட்சிவாதிகளே!
வர்க்கத்தின் மேற்தட்டு மாந்தரே!
வர்ணத்தின் உயர் குடியினரே!
வீரரே! கோழைகளே!
பால் வேறுபாடற்று,
பல் ஆளுமை மிக்க மாந்தரே
நீங்கள் அனைவரும் அருகருகே
அமர்ந்திருக்கின்றீர்கள்
இங்கே.
உங்களுக்கிடையில் இருக்கும் இந்தப்புரிந்துணர்வு,
இந்த நட்பு,
இந்தப் பண்பு
இவற்றை நீங்கள் வெளியிலும் கைக்கொண்டால்
எவ்வளவு நன்றாக இருக்கும்
என்றுநான் சிந்திக்கின்றேண்.
என்று நான் கனவுகள் காண்கின்றேன்.
என் கனவு நிறைவேறினால்
எப்படியிருக்கும் இப்பூவுலகு என்ற
எண்ணத்தில் தோய்ந்துகிடக்கின்றேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.