நடு இரவில் தெரியும் சூரியன்!
ஐஸ்லாந்திற்குச் சென்ற போது நடுநிசியில் சூரியனைப் பார்த்திருக்கிறேன். அதே அனுபவம் மீண்டும் அலாஸ்காவில் கிடைத்தது. கனடாவின் வடக்குப் பக்கத்தில் அலாஸ்கா இருந்தாலும், ரஸ்யாவிடம் இருந்து அமெரிக்கா அதை விலைக்கு வாங்கியிருந்தது. தெற்கே ஹவாயும் வடக்கே அலாஸ்கா மகாணமும்தான் அமெரிக்காவுடன் நிலத்தொடர்பு இல்லாத மாகாணங்களாக இருக்கின்றன. அலாஸ்காவின் வடபகுதி பனிசூழ்ந்த பனிப்புலமாக இருந்தாலும், 776,000 மக்கள் இங்கே வசிக்கின்றார்கள். ஆதிகாலத்தில் ஆசியாவுடன் நிலத்தொடர்பு இருந்ததால், பழங்குடி மக்கள் முதன் முதலாக அலாஸ்கா வழியாகத்தான் உள்ளே வந்தார்கள். பழங்குடி மக்களின் சுமார் 22 மொழிகள் இங்கே பாவனையில் இருக்கின்றன. இங்குள்ள 86 வீதமான மக்கள் ஆங்கிலமொழி பேசுகின்றார்கள்.
பனிப்பாறைகள் சூழ்ந்த வடதுருவம், நடுநிசியில் தெரியும் சூரியன், பல வர்ணங்கள் கொண்ட நொதேன்லைட், வட அமெரிகாவிலே உயர்ந்த தெனாலி மலைத்தொடர், உலகிலே உயிர் வாழும் மிகப் பெரிய உயிரினமான திமிங்கிலங்கள், பனிக்காலத்தில் உறங்குநிலைக்குப் போகும் கரடிகள், வடதுருவ பனிக்கரடிகள், பனிக்கட்டி வீட்டில் வாழும் எஸ்கிமோக்கள் என்றெல்லாம் மாணவப் பருவத்தில் படித்ததை அங்கே நேரடியாகக் காணமுடிந்தது. இதைவிட முக்கியமான ஒரு காரணமும் இருந்தது, அது என்னவென்றால் ‘என்ன சொல்லப் போகிறாய்?’ என்ற, சேலம் தமிழ் சங்கத்தின் சிறந்தநாவல் -2020 க்கான பரிசு பெற்ற எனது நாவலின் தளமாகவும் பனி சூழ்ந்த அலாஸ்காதான் இருந்தது.
நாங்கள் ஒரு கரவன் வண்டியை அதாவது இங்கே ஆர்.வி. என்று சொல்லப்படுகின்ற வண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கிச் சென்றோம். அதில் சமையலறை, படுக்கையறை, குளியலறை எல்லாமே இருந்தன. பெயபாங் என்ற இடத்தில் இருந்து டல்ரன் நெடுஞ்சாலையில் சென்றால் வடதுருவத்தை அடையலாம். அங்கே உள்ள மொறிஸ் தொம்ஸன் கலாச்சார மண்டபத்திற்குச் சென்றால் வடதுருவத்தில் கால்பதித்தவர் என்று உங்களுக்கு ஒரு சான்றிதழ் தருவார்கள்.
வடஅமெரிக்காவில் மிக உயரமான மலைச்சிகரம் Mount McKinley இங்கேதான் இருக்கின்றது. உலகிலேயே மூன்றாவது பிரபலமான இந்த மலையின் உயரம் 20,310 அடியாகும். இந்த மலைத் தொடரில் பனிப்படலத்தால் உறைந்த ஐந்து கிளேஸியர்கள் இருக்கின்றன. சிலெட்டோக் என்று சொல்லப்படுகின்ற அலாஸ்கியன் நாய்கள் இழுத்துச் செல்லும் வண்டிகளில் பயணிப்பது, பனியில் சறுக்கி விளையாடுவது, கூடாரம் அடித்து தங்கி காம்பயர் செய்வது, மலை ஏறுவது, வேட்டையாடுவது, மீன் பிடிப்பது போன்ற பொழுது போக்குகள் இங்கே உண்டு. கருங்கரடிகள், கரிபோ மான்கள், மலை ஆடுகள் போன்றவற்றை அருகே சென்று பார்க்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் முடிந்தது. கழுகுகள், மலை எலிகள், நரிகள், மலை அணில்கள் போன்றவற்றையும் அங்கே காணமுடிந்தது. எஸ்கிமோக்கள் என்று நாங்கள் சிறுவயதில் படித்த, பனிக்கட்டிகளால் உருவான வீடுகளில் வாழ்ந்த முதற்குடி மக்களின் பரம்பரையினரை அங்கு சந்தித்து உரையாட முடிந்தது.
அங்கரேய்ச் நகரில் தங்கி அருங்காட்சியகம் போன்றவற்றைப் பார்த்தோம். கடல் உணவுக்குப் புகழ் பெற்றது. இரவுதங்கிவிட்டு தெற்கே 127 மைல்களுக்கு அப்பால் உள்ள சீவாட் என்ற இடத்திற்கு மறுநாள் காலையில் பயணமானோம். சீவாட்டில் சுமார் 3000 மக்கள் வசிக்கிறார்கள். கினாய் பியோட்ஸ் நேசனல் பார்க் என்ற இடத்திற்குச் செல்வதற்காக முற்கூட்டியே பதிவு செய்து வைத்திருந்தோம். இது றிசுரக்ஷன் குடாவின் கரையோரத்தில், மலைகள் சூழ்ந்த பகுதியில்; இருப்பதால் படகில்தான் செல்லவேண்டும். படகில் செல்லும் போது, ஒன்றல்ல, இரண்டு இடங்களில் கறுப்பு வெள்ளை நிறமான ‘கில்லவேல்’ என்ற திமிங்கிலங்களை மிக அருகே காணமுடிந்தது. எக்ஸிற் கிளேஸர் என்ற பனிமலை இப்பகுதியில் பிரபலமானது.
திரும்பி வரும் வழியில் கோப் (ர்ழிந) என்ற மிகப் பழமையான ஒரு கிராமத்துக்குச் சென்றோம். இங்கு 1898 ஆம் ஆண்டு தங்கச் சுரங்கங்கள் கண்டு பிடிக்கப்பட்டதால், சியாட்டோவில் இருந்து மக்கள் வந்து குடியேறினார்கள். அங்கே உள்ள அருங்காட்சியகத்திற்குப் பொறுப்பாக இருக்கும் முதியவரான பெண்மணி, தான் அங்கே பிறந்து வளர்ந்ததாகவும், தனது தாத்தா, பாட்டி காலத்தில் அவர்கள் தங்கச் சுரங்கத் தொழில் நிமிர்த்தம் இங்கு வந்து குடியேறியதாகவும் குறிப்பிட்டார். ரொறன்ரோவில் இருந்து வந்திருக்கிறோம் என்று சொன்னதும் மிகவும் மகிழ்ச்சியோடு தேனீர் தந்து உபசரித்தார். எங்களுடன் நின்று படமும் எடுத்துக் கொண்டார். தங்கச் சுரங்கத்தில் பாவித்த மிகப்பழைய பொருட்களைக் காட்சிப் படுத்தி இருந்தார்கள். எப்படித் தங்கத்தை பிரித்து எடுப்பது என்றும் அதற்கான தொட்டியில் செய்து காட்டினார்.
வடதுருவத்தில் ஒரு எரிமலைத்தீவு
ஐஸ்லாந்து என்ற ஒரு சிறிய தீவு அத்திலாண்டிக் சமுத்திரத்தில், வடதுருவ எல்லையில் இருக்கின்றது. 103,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட, ரெக்காவிக்கைத் தலைநகராகக் கொண்ட இந்த எரிமலைத் தீவுக்குச் செல்வதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. படகில் சென்று வடதுருவத் திமிங்கிலங்களை அருகே பார்க்கக்கூடியதாக இருந்தது. இத்தீவில் சாமத்திலும் சூரியனைப் பார்க்க முடியும். நான் பயணத்தை முடித்துக் கொண்டு வந்ததன் பின் ஒருநாள் 24 மணி நேரத்தில் சுமார் 2200 நிலவதிர்வுகள் இத்தீவில் ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக எந்த நேரமும் எரிமலை வெடிக்கலாம் என்று அங்குள்ள மக்கள் பயந்து போனார்களாம். இந்தச் சிறிய தீவில் சுமார் 30 மேற்பட்ட எரிமலைகள் இருக்கின்றன. பூமிக்கடியில் உள்ள தட்டுகள் அடிக்கடி முட்டிக் கொள்வதால், இந்த நிலநடுக்கம் ஏற்படுகின்றது. இங்கே உள்ள எரிமலை ஒன்று 2010 ஆம் ஆண்டு வெடித்த போது விமானப் போக்குவரத்தே அப்பகுதியில் ஒருவாரகாலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த எரிமலை வெடிப்பால், புகையும், சாம்பலும் பல மைல் தூரங்களுக்குக் காற்றோடு பரவி சுற்றுவட்டத்தை மாசடைய வைத்திருந்தன.
ஐஸ்லாந்தின் பொருளாதார வசதிகளுக்காகச் சுற்றுலாப் பயணிகளையே அவர்கள் அதிகம் நம்பியிருக்கிறார்கள். பொருட்களை இறக்குமதி செய்வதால் பொருட்களின் விலை இங்கு சற்று அதிகமானது. ஆங்கிலமும் பேசும் இங்குள்ள மக்கள் மிகவும் அன்பாகப் பழகக்கூடியவர்கள். வீடுகள் கூட்டமாக இல்லாமல், தனித்தனியாகவே அங்குமிங்குமாக இருக்கின்றன. மலைச்சரிவில் உள்ள சில வீடுகளின் கூரைகளைப் புற்கள் வளர்ந்து மூடியிருக்கின்றன. பபின் என்று சொல்லப்படுகின்ற அழகிய பறவைகளை இங்கு காணமுடிந்தது. செம்மறி ஆடுகளும், குதிரைகளும் நிறை இருக்கின்றன. சிக்காக்கோவில் ‘பான்பிட்ஸா’ பிரபலமாக இருப்பது போல, இங்கே கிடைக்கும் ‘ஐஸ்லாண்டிக் கொட்டோக்’ மிகவும் ருசியானதால் பிரபலமானது. வரிசையில் நின்றுதான் வாங்கவேண்டி வந்தது.
‘நோர்ஸ்’ இனத்தைச் சேர்ந்த வைக்கிங் காலப்பகுதியில்தான் இத்தீவில் குடியேற்றங்கள் எற்பட்டன. சுமார் 3 லட்சம் மக்கள்தான் இங்கு வசிக்கிறார்கள். அரச கட்டுப்பாடுகள் காரணமாக, பெற்றோர் விரும்பியவாறு பிள்ளைகளுக்கு இங்கே பெயர் வைக்க முடியாது. தொடர்வண்டிகளும் இங்கு இல்லை. இவர்களது முன்னோர்கள் ஒரு காலத்தில் பயங்கரமான கடற்கொள்ளையர்களாக இருந்தார்கள். கழுத்தைக் கோடாரியால் வெட்டுவது, மரத்திலே கட்டி உயிரோடு எரிப்பது போன்ற தண்டனைகளைக் கொடுத்தார்கள். இங்குள்ள காட்சியகத்தில் இது போன்ற தண்டனைக் காட்சிகளை நிஜமாக நடப்பது போலப் பார்க்க முடிந்தது. இன்னுமொரு காட்சிப் பொருளாக 2 ஆம் உலகயுத்தத்தில் ஜெர்மனியால் சுட்டு விழுத்தப்பட்ட ரஸ்ய விமானத்தின் உடைந்த பாகங்கள் இருக்கின்றன. ஆனால் அதில் அமெரிக்கச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததைக் கவனித்த போது ஆச்சரியமாக இருந்தது. இதைப்பற்றித் தேடுதல் செய்தபோது அமெரிக்காவிடம் இருந்து ரஸ்யா அந்த விமானங்களை வாடகைக்கு எடுத்திருந்தது தெரியவந்தது.
நிலத்திற்கு அடியில் இருந்து திடீர் திடீரென ஒரு பனைமர உயரத்திற்கு நீர் ஊற்றுக்கள் சீறிப்பாய்கின்றன. நிறைய நீர்வீழ்ச்சிகளும் இருக்கின்றன. சுடுதண்ணிக் குளங்களும் இங்கு இருக்கின்றன. வீடுகளைச் சூடாக்க இந்த சூடான தண்ணீரையும், நிலவடிச் சூட்டுகாற்றையும் பயன்படுத்துகின்றார்கள். தீவைச் சுற்றி வருவதற்கு நல்ல நிலையில் ‘றிங்ரோட்’ என்ற நெடுஞ்சாலையை அமைத்திருக்கிறார்கள். வண்டியை வாடகைக்கு எடுத்து விரும்பிய இடங்களைச் சென்று பார்க்கக்கூடிய வசதிகள் உண்டு. பனிக்காலத்தில் சிறிய வீதிகளை மூடிவிடுகிறார்கள். இக்காலத்தில் ‘நொதேன் லைட்’ என்று சொல்லப்படுகின்ற வானத்தைப் பல வர்ணங்களில் பார்க்க முடியும். நோர்வே நாட்டு மன்னனின் ஆட்சிக்காலத்தில் இந்தத் தீவுகளுக்குப் பெயர்சூட்டும் போது தவறு செய்து விட்டார்கள். மாலுமிகள் தகவல் தெரிவித்தபோது ஒரு தீவு பனியாலும், அருகே உள்ள இன்னும் ஒரு தீவு பச்சைப் பசேலென்று தாவரங்கள் சூழ்ந்திருப்பதாகவும் அறிவித்தபோது, நேரடியாகச் சென்று பார்க்காததால் அருகே இருந்த பனியால் சூழப்பட்ட கிறீன்லாந்திற்கு அந்தப் பெயரையும், தாவரங்கள் வளர்ந்திருந்த இந்தத் தீவக்கு ஐஸ்லாந்து என்றும் வரலாற்றுத் தவறு காரணமாகப் பெயர் நிலைத்து விட்டது.
இங்குள்ள துறைமுகத்திற்கு அருகே சூடான நீரோட்டம் ஓடுவதால் துறைமுகத் தண்ணீர் உறைவதில்லை. குற்றங்களே நடக்காத நாடு என்பதால் வீதிகளில் பொலிசாரைக் காணமுடியாது. நான் அங்கு நின்ற நாட்களில் ஒரே ஒரு பொலிஸ்காரரைக் கோப்பிக் கடையில் சந்தித்து உரையாட முடிந்தது. பாதுகாப்பு வேலிகள் இல்லாததால், சில இடங்களில் தரை பிளந்து அதிலிருந்து புகை வெளிவருவதையும், சுடுநீர் கொதிப்பதையும் அருகே சென்று பார்க்கமுடிந்தது. சுற்றுலாப் பயணிகளுக்குப் பிடித்த இடமாக இது இருக்கின்றது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.