கனடாவில் கடந்த 34 ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கும் தமிழிதழ் என்ற பெருமையைக் கொண்டிருக்கும் தமிழர் தகவல் இதழின் வருடாந்த மலர் வெளியீடும், விருதுவிழாவும் ரொறன்ரோ நகரசபை அங்கத்தவர்களின் சபாபீடத்தில் ஏப்ரல் 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.. நேரம் தவறாமைக்கு ஒரு முன்னுதாரணமான தமிழர் தகவல் விழா வழமைபோலச் சரியாக மாலை மூன்று மணிக்குத் தொடங்கியிருந்தது. ‘இளமுகில் சுவடு ஆண்டு மலர் வெளியீடு’ என்ற முதலாவது பகுதியை இளையோரான பிறைட்னி ஆரம்பித்துவைக்க, மீதியை அக்க்ஷே தலைமைதாங்கி அழகு தமிழில் நடத்தினார்.
மலர் வெளியீட்டுரையைச் செய்திருந்த குயின்ரஸ் துரைசிங்கம் அவர்கள், 1991 பெப்ரவரி முதல் 34 வருடங்களாக மாதாமாதம் இலவசமாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘தமிழர் தகவல்’ இதழ், அதன் பிரதம ஆசிரியரான திருச்செல்வம் அவர்களின் மகன் அமரர் அகிலன் பிறந்ததிகதியான ஐந்தாம் திகதியில் வெளிவர என்றுமே தவறியதில்லை என்ற பெருமையான செய்தியையும், பல்வேறு வகையான தமிழ் ஒருங்குறிகளை உருவாக்கியிருக்கித் தமிழுக்கு அளித்திருக்கும் சசி பத்மநாதன் மலருக்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கிய ‘அகிலன்’ என்ற எழுத்துருவே மலரில் பயன்படுத்தப்படுகின்றது என்ற விசேட செய்தியையும் பகிர்ந்து கொண்டார்.
பேராசிரியர் ஜோசேப் சந்திரகாந்தன் அவர்களின் ‘பன்மையில் ஒருமை’ என்ற கட்டுரையுடன் ஆரம்பமாகி, தமிழர் தகவல் இணையாசிரியர் ரஞ்சி திரு அவர்களின் ‘வாசிப்பும் ஒரு போதையே’ என்ற கட்டுரையுடன் நிறைவுறும் இந்த மலரில் 64 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன.
‘புதிய குடிவரவாளர் சாம்பியன் விருது’ உள்ளடங்கலாக, ஊடகப் பணிக்கான பல்வேறு விருதுகளைக் கனடாவில் பெற்றிருப்பதுடன், இலங்கை ஊடகங்களிலும் பணியாற்றிய அனுபவமுள்ள முதன்மை ஆசிரியரான திரு திருச்செல்வம் அவர்கள், 14 வயது முதல் 84 வயதுவரையானவர்களின் ஆக்கங்கள் ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளிலும், விளம்பரங்கள் எதுவுமின்றி 164 பக்கங்களில் இடம்பெற்றிருப்பதைக் குறிப்பிட்டு, அவரின் துணைவியார் ரஞ்சி அவர்களும், வடிவமைப்பாளர் சசி பத்மநாதனும் எவ்வளவுதூரம் அர்ப்பணிப்புடன் மலரின் முக்கிய தூண்களான இருக்கிறார்கள் என்பதை உணரவைத்தார். அத்துடன் மலர் வெளிவருவதற்கான நிதியை வழங்கி உதவிசெய்யும் புரவலர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மூன்று சந்ததிகளை இணைக்கும் ஆண்டு மலருக்கான இளையோரின் பங்களிப்புகளைப் பார்த்தபோது, இந்தப் பயணம் தொடரவேண்டுமென்ற திருச்செல்வம் அவர்களின் தூரநோக்குடனான செயற்பாடு வெற்றியளிக்குமென்ற நம்பிக்கையை அது தந்தது. 4000 பிரதிகளுடன் மாதாமாதம் வெளிவரும் தமிழர் தகவல் இதழின் ஆண்டுமலர் 5000 பிரதிகளாக வெளிவருவது குறிப்பிடத்தக்கது.‘
மாண்பேற்றிக் கொண்டாடுவோம்’ என்ற கோட்பாட்டுடன், சமூகப் பற்றுடன் செயற்படுபவர்களுக்கு விருது வழங்கும் விழா இரண்டாம் அமர்வாக ரொறன்ரோ மேயர் Olivia Chowஇன் பாராட்டுரையுடன் ஆரம்பமானது. அந்த அமர்வை ரொறன்ரோ கல்விச் சபை அறங்காவலர்களில் ஒருவரும், தமிழ் பாரம்பரிய மாதத்தின் ஆரம்பத்துக்குக் காரணகர்த்தாவுமான நீதன் சண் ஆங்கிலத்தில் நிகழ்த்தினார்.
நரேஷ் கொட்வின் பன்முக ஆற்றல்மிகு பல்கலை மாணவன் விருதினாலும், ஒன்ராறியோ முதுதமிழர் மன்றத்தினர் சமூகப் பணிக்கான சிறப்பு விருதினாலும், ராஜி அரசரட்ணம் கனடிய தமிழ் ஊடக சாதனைப் பெண் விருதினாலும், பத்மநாதன் ரங்கநாதன் தங்கமனசு வணிக விருதினாலும், ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா நான்கு தசாப்த எழுத்துப் பணிக்கான விருதினாலும், இராஜலிங்கம் வாசுதேவன் நூறு அரங்கேற்றங்களின் மிருதங்க குரு விருதினாலும், அன்றைய நாள்களில் தமிழ் சேவை இரண்டில் தன் கணீரென்ற குரலால் பலரின் மனதை வசீகரித்த பி.எச் அப்துல் ஹமீத், வானலையில் தமிழ் பரப்பும் நூற்றாண்டின் குரல் விருதினாலும் கெளரவிக்கப்பட்டிருந்தனர்.
விருதாளர்களுக்கு அவரவரின் குடும்பத்தவர்/நண்பர் மூலம் பூச்செண்டு வழங்கியமை சிறப்பான ஒரு விடயமாக இருந்தது. தமிழர் தகவல் மாணவர் விருதினை 21 வருடங்களின் முன்பாக பெற்றிருந்த என் மகள் சிவகாமியிடமிருந்து பூச்செண்டை நான் பெற்றுக்கொண்டேன். இந்த ஏழு விருதாளர்களையும் சேர்த்து, இதுவரை மொத்தமாக 294 பேர் தமிழர் தகவல் அமைப்பினரால் வாழும்போதே கெளரவிக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வருட விருதாளர்களின் சார்பில் பேசிய, வாழ்நாள் சாதனை விருதாளரான பி.எச் அப்துல் ஹமீத் அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட நேரத்தையும் மேவி பல்கலைக்கழகக் கல்வி தமிழ் மொழியில் அமையவேண்டியதன் அவசியத்தைப் பற்றியே அதிகம் பேசியது தமிழ் மொழி மேல் அவரின் ஆர்வத்தைக் காட்டியிருந்தாலும், சபையோரின் பொறுமையை அது சோதித்திருந்தது என்பதும் உண்மையே.
விருதாளர்களைத் தெரிவுசெய்யும் குழுத் தலைவராக பேராசிரியர் ஜோசேப் சந்திரகாந்தன் செயற்பட்டுவருகிறார். விருதுக்காகக் கருதப்படுபவர்களின் சுயவிபரக் கோவைகளைப் பெற்றுக்கொள்ளல், தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு அழைப்பை நேரில் கொடுக்க ஒழுங்குசெய்தல், அவர்களின் விருந்தினர்களுக்கு அழைப்பனுப்பல், விழாவுக்கு வருவோரைக் கணக்கிடல், விழாவுக்கு நேரத்துக்கு வரவேண்டுமென்பதை நினைவுபடுத்த அழைத்தல் எனத் தமிழர் தகவல் ஆசிரியர் என்னுடன் விருதுசார்பாகத் தொடர்புகொண்ட கணங்களைப் பார்த்தபோது, விருது பெறுபவர்களுடனேயே இவ்வளவு நேரத்தைச் செலவழிக்கிறார் என்றால் முழுமையான விழாவுக்கும் எவ்வளவு நேரத்தை வருடாவருடம் அர்ப்பணிப்பார் என எனக்குப் பிரமிப்பாக இருந்தது.
இத்தகைய அர்ப்பணிப்புக்களாலும் மேன்மைகளாலும் நிறைந்திருந்த இவ்வருட நிகழ்வும் வழமைபோலத் தமிழ் மொழி வாழ்த்துடன் ஆரம்பமாகி, கனடா தேசிய கீதத்துடன் நிறைவடைந்திருந்தது. பின்னர் விருந்தினர்கள் சிற்றுண்டிகளை ருசித்தபடி, ஆளுக்கு ஆள் அளவளாவி மகிழ்ந்து வீடேகினர்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.