கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி எழுதும் பலர் போதிய ஆய்வின்றித் தவறான தகவல்களை உ ள்ளடக்கிக் கட்டுரைகளை எழுதி வருவதை அவதானிக்க முடிகின்றது. கனடாவிலிருந்து வெளியான முதலாவது சஞ்சிகை பற்றிப் பலரும் பலவாறு எழுதி வருகின்றார்கள். இவ்விதமான தவறான தகவல்கள் காலப்போக்கில் உண்மையான தகவல்களாகக் கருதப்பட்டு வரலாறு தவறாக எழுதப்பட்டு விடும் அபாயமும் உண்டு.
நானறிந்தவரை கனடாவில் வெளியான சஞ்சிகைகளைக் கையெழுத்துச் சஞ்சிகைகள், அச்சு வடிவில் வெளியான சஞ்சிகைகள், இரண்டையும் உள்ளடக்கி, வெட்டி ஒட்டல்களுடன் வெளியான சஞ்சிகைகள் எனப் பிரிக்கலாமென்று கருதுகின்றேன்.
தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் கனடாக் கிளை மொன்ரியாலிலிருந்து வெளியிட்ட 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகை 15.09.1984 தொடக்கம் 15.06.1985 வரை பத்து இதழ்கள் வெளியாகியுள்ளன. ஓரிரு இதழ்களில் பத்திரிகைச் செய்திகள் வெட்டி ஒட்டப்பட்டிருந்தாலும், சஞ்சிகை பெரும்பாலும் கையெழுத்துச் சஞ்சிகையாகவே வெளிவந்தது. எனது மண்ணின் குரல் நாவல், கவிதைகள் சில, கட்டுரைகள் சிலவும் இச்சஞ்சிகையில் வெளிவந்துள்ளன. ரவி அமிர்தன், கோமகன், செங்கோடன் எனப் பலரின் படைப்புகளும் இச்சஞ்சிகையில் வெளிவந்திருக்கின்றன. அடிப்படையில் இது ஒரு போராட்ட அமைப்பின் சஞ்சிகை என்றாலும் தமிழ் இலக்கியத்துக்கும் நாவல், கவிதை, கட்டுரை & கேலிச்சித்திரமெனப் பங்களிப்பு செய்துள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது.
வ.ந.கிரிதரனை ஆசிரியராகக் கொண்டு வெளியான கையெழுத்துச் சஞ்சிகை 'குரல்' . செப்டெம்பர் 1987 தொடக்கம் ஜனவரி 1989 வரையில் 11 இதழ்கள் வெளியான சஞ்சிகை. (செப்டெம்பர் 1987 தொடக்கம் ஆகஸ்ட் 1988 வரை 10 இதழ்களும், பின்னர் ஜனவரி 1989 இல் இன்னுமொரு இதழும் மொத்தம் 11) வெளியான சஞ்சிகை 'குரல்'.
பார்வை சஞ்சிகை மொன்ரியாலிருந்து எழுத்தாளர் செல்வத்தை ஆசிரியராகக்கொண்டு வெளியான சஞ்சிகை. கையெழுத்துச் சஞ்சிகையான பார்வையில் பிற சஞ்சிகைகளில் வெளியான படைப்புகள் வெட்டி ஒட்டப்பட்டு வெளிவந்திருந்தன. செழியன், சேரன், செல்வம், மூர்த்தி, வ.ஐ.ச.ஜெயபாலன், குமார் மூர்த்தி எனப் பலரின் படைப்புகளை உள்ளடக்கி வெளியான , காத்திரமான இலக்கியச் சஞ்சிகை 'பார்வை'. பார்வை 1987இன் இறுதியிலிருந்து அல்லது 1988இன் தை மாதத்திலிருந்து வெளியான சஞ்சிகை.
எழுத்தாளர் ஜோர்ஜ் இ.குருஷேவை ஆசிரியராகக்கொண்டு வெளியான தாயகம் பத்திரிகையாக ஜூலை 14, 1989 முதல் வெளிவந்து ஜூலை 30, 1993 இல் சஞ்சிகை வடிவுக்கு மாறி, மேலுமிரண்டு வருடங்கள் இயங்கி மே 12, 1995 தனது பயணத்தை நிறுத்திக்கொண்டது. கனடாத் தமிழ் இலக்கியத்துக்குக் காத்திரமான பங்களிப்பு செய்த பத்திரிகை, சஞ்சிகை.
தேடகம் அமைப்பினரின் தேடல் சஞ்சிகையும் 1989இன் இறுதிப்பகுதியிலிரிந்து வெளிவரத்தொடங்கியது. இதுவும் கனடாத் தமிழ் இலக்கியத்துக்குக் காத்திரமான பங்களிப்பு செய்த சஞ்சிகை.
செல்வம் ஆசிரியராகவிருந்து வெளியிடும் காலம் சஞ்சிகை ஜூலை 1990 தொடக்கம் வெளிவரத்தொடங்கி இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கின்றது.
எழுத்தாளர் எஸ்.திருச்செல்வத்தின் 'தமிழர் தகவல்' மாத சஞ்சிகை பெப்ருவரி 1991 முதல் தன் பயணத்தை ஆரம்பித்து இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதன் பின்னரே எழுத்தாளர் க.நவத்தின் நான்காவது பரிமாணம் 1991இல் வெளிவரத்தொடங்கியது.
இங்கு கனடாவில் வெளியான ஆரம்பகாலச் சஞ்சிகைகள் பற்றிக் கவனம் செலுத்துவதால் அக்காலகட்டத்தில் வெளியான பத்திரிகைகள், பின்னர் வெளியான சஞ்சிகைகள் பற்றிப் பட்டியலிடவில்லை. (அக்காலத்தில் வெளியான முக்கியமான பத்திரிகைகளாகச் செந்தாமரை, மஞ்சரி, தமிழோசை , சூரியன் போன்றவை உடனடியாக நினைவுக்கு வருகின்றன.)
இந்நிலையில் ரிஃப்ளக்ஸ் நிறுவனம் வெளியிட்ட நிழல் சஞ்சிகைக்கு முக்கியமான ஓரிடமுண்டு. சஞ்சிகையாக வெளியான நிழல் ஈழத்துப்பூராடனாரின் நூல்களையும் வெளியிட்டுள்ளது. நிழல் சஞ்சிகையின் பிரதிகளை நூலகத்திலும் பெற முடியவில்லை. ஆனால் அது பற்றிய முக்கியமான தகவல்களை அது வெளியிட்ட ஈழத்துப் பூராடனாரின் 'பேனா முனையிலுருந்து...(எழுத்தாளர்களுக்கான கையேடு) நூலிலிருந்து பெற முடிகின்ற்து.
நிழல் சஞ்சிகை ஈழத்துப் பூராடனாரின் மகனான எட்வேட் இதயச்சந்திராவை ஆசிரியராகக்கொண்டு , அவரால் வெளியிடப்பட்ட சஞ்சிகை. இந்நூலின் ஆரம்பத்தில் இடம் பெற்றுள்ள எழுத்தாளர் அன்புமணியின் 'சில முதல் முதலாக மின் கணனியில் தமிழ்மொழி வளர்ச்சி' கட்டுரையில் நிழல் சஞ்சிகை முதன் முதலாக 1986ஆம் ஆண்டிலிருந்து வெளியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த மாதம் முதலாவது பிரதி வந்தது என்பது தெரியவில்லை. இது ஆய்வுக்குரியது. அத்துடன் முதன் முதலாகக் கண்னி மூலம் வடிவமைக்கப்பட்டு வெளியான சஞ்சிகை நிழல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் ஈழத்துப் பூராடனாரின் மூத்த மகன் இருதயராஜ் நிறுவிய றிஃப்ளக்ஸ் அச்சகம் மூலம் 1985ஆம் ஆண்டில் முதன் முதலாகக் கணனி மூலம் வடிவமைக்கப்பட்டு ஈழத்துப் பூராடனாரின் பெத்தலேகம் கலம்பகம்' என்னும் நூல் வெளியிடப்பட்டது என்னும் விபரத்தையும் இக்கட்டுரை குறிப்பிடுகின்றது. எனது 'மண்ணின் குரல்' நூலும் கணனி மூலம் வடிவமைக்கப்பட்டு , 4.1.1987 வெளியானது குறிப்பிடத்தக்கது.
இவற்றிலிருந்து கனடாவில் கணனி மூலம் வடிவமைக்கப்பட்டு வெளியான முதல் சஞ்சிகை என்னும் முக்கியத்துவத்தை நிழல் சஞ்சிகை பெறுகின்றது. இதன் இதழ்கள் சேகரிக்கப்பட்டு , முறையான ஆய்வுகள் செய்யப்பட வேண்டிய அவசியத்தை இது வேண்டி நிற்கின்றது.
ஈழத்துப் பூராடனாரின் 'பேனா முனையிலுருந்து...(எழுத்தாளர்களுக்கான் கையேடு) நூலை வாசிக்க - https://noolaham.net/project/51/5089/5089.pdf
- ற்ஃப்ளெக்ஸ் கணனி வடிவமைப்பில் வெளியான நூல்களில் சில..-
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.