அத்தியாயம் 15: கண்ணம்மா எழுதிய கவிதை!
"கண்ணா, எனக்கொரு கேள்வி அவ்வப்போது நினைவில் வருவதுண்டு."
மனோரஞ்சிதம் இவ்விதம் ஒருமுறை திடீரென்று கூறவே அவளை வியப்புடன் பார்த்தேன்.
"கண்ணம்மா, அப்படியென்ன கேள்வி. அது எது பற்றிய கேள்வி?" என்றேன்.
"எல்லாம் எழுத்து பற்றியதுதான். "
"எழுத்து பற்றியதா? எந்த எழுத்து பற்றி நீ கூறுகிறாய் கண்ணம்மா?"
"கண்ணா, உன்னைப்போன்ற எழுத்தாளர்களின் எழுத்தைப் பற்றித்தான் கண்ணா? வேறென்ன எழுத்தைப்பற்றி நான் கேட்கப்போகின்றேன்?"
"அப்படியா கண்ணம்மா, சரி கேளடி என் கண்மணி."
"எழுத்துக்குக் கட்டாயம் ஒரு நோக்கம் இருக்க வேண்டுமா? அல்லது அது தேவையில்லையா? கண்ணா?"
"கண்ணம்மா, நீ என்ன கேட்க வருகிறாய் என்பது புரிகிறது., கலை மக்களுக்காகவா அல்லது கலை கலைக்காகவா என்பதைத்தான் நீ எளிமையாக இப்படிக் கேட்கிறாய். காலம் காலமாக கலை, இலக்கிய உலகில் கேட்கப்படும், தர்க்கிக்கப்படும் கேள்விதான். இது பற்றி எப்பொழுதும் கருத்துகள் ஒன்றாக இருப்பதில்லை."
"இவ்விடயத்தில் உன் கருத்தென்ன கண்ணா? அதைச்சொல் முதலில். எனக்கு உன் கருத்துத்தான் முக்கியம் கண்ணா."
'கண்ணம்மா, எனக்கு இவ்வளவுக்கு முக்கியத்துவம் தருவது மகிழ்ச்சியைத் தருகிறது. என்னைப்பொறுத்தவரையில் எழுத்துக்கு நிச்சயம் ஒரு நோக்கமிருக்க வேண்டும். நோக்கமற்ற எழுத்து வாசிப்பதற்கு சுவையாகவிருக்கக்கூடும். ஆனால் சமுதாயப் பயனற்றுப் போய்விடும். ஆனால் அந்த நோக்கம் அந்த எழுத்தின் எழுத்தின் கலைத்துவத்தைச் சீர்குலைத்து விடக்கூடாது என்பதும் என்னைப்பொறுத்த வரையில் மிகவும் முக்கியம்."
"சரி கண்ணா, இன்னுமொரு கேள்வி. "
"என்ன கண்ணம்மா? என்ன புதுக்கேள்வி?"
"நோக்கம் ஒரு தீர்வினையும் கூற வேண்டுமா? அல்லது வாசகர்களே அதனை எழுத்திலிருந்து தீர்மானிக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டுமா கண்ணா?"
"கண்ணம்மா, உண்மையிலேயே மிகவும் சிறப்பானதொரு கேள்வி. இந்தக் கேள்வியை கேட்டதற்காக உன்னை மனம் நிறைந்து பாராட்டுகின்றேன். கண்ணம்மா, எழுத்தின் தேவையைப் பொறுத்து எழுத்தின் தன்மையும் வேறுபடும். பிரச்சார எழுத்தின் தேவையும் சில சமூக, அரசியல், மற்றும் பொருளியற் சூழலில் உண்டு. உதாரணத்துக்கு இவ்வகையான எழுத்துக்கு மார்க்சிம் கார்க்கியின் தாய் நாவலைக் குறிப்பிடலாம். தாய் நாவல் என் நூலகத்திலுண்டு. நேரம் கிடைக்கும்போது வாசித்துப்பார். உலகமெங்கும் இலட்சக்கணக்கில் பல்வேறு மொழிகளில் விற்பனையான நாவல். அடக்குமுறைகளுக்கு எதிராகப் புரட்சிகள் நடைபெறும் நாடுகளிலெல்லாம் மக்களால் , போராளிகளால் விருப்புடன் வாசிக்கப்படும் நாவல். அதே சமயம் நாவல் பிரச்சார நாவலாகவிருந்தாலும் அதன் பாத்திரப்படைப்பு, மொழி, கதைப்பின்னல் இவையெல்லாம் முக்கியம் . இவையெல்லாம் நன்கமைந்த நாவல் தாய் என்பேன். கண்ணம்மா, இன்னுமொரு வகையான நாவலில் பிரச்சாரமிருக்காது. ஆனால் அதனை வாசித்து முடிக்கையில் வாசகர் மனங்களில் ஏற்படும் உணர்வுகளை மையமாக வைத்து அவற்றை எழுதியவர்கள் கதைப்பின்னல், உரையாடல், பாத்திரப்படைப்பு ஆகியவற்றை அமைத்திருப்பார்கள். மொழியைக் கையாண்டிருப்பார்கள்.
எழுத்தில் பல்வகை உண்டு கண்ணம்மா. தீவிர இலக்கியம், வெகுசன இலக்கியம், குழந்தை இலக்கியம், போராட்ட இலக்கியம், இப்படிப் பல்வகை உண்டு. இவை புனைவு, அபுனைவு இரண்டுக்குமே பொருந்தும். ஒவ்வொரு பிரிவிலும் பல்வேறு பிரிவுகளிருக்கும். உதாரணத்துக்கு வெகுசன இலக்கியத்தை புனைவுகளுக்கு எடுத்தால், சமூக, சரித்திர, அரசியல், மர்ம, அறிவியல் எனப் பிரித்துக்கொண்டே செல்லலாம். தீவிர இலக்கியத்தையும் இவ்விதம் பிரிக்கலாம். அவற்றை மேலும் பல பிரிவுகளாக அவற்றை உருவாக்கப் பாவித்திருக்கும் இலக்கியக் கோட்பாடுகள் அடிப்படையில் பிரிக்கலாம் கண்ணம்மா. உதாரணமாக ஒரு நாவலொன்றை யதார்த்தபூர்வமானதாகப் படைக்கலாம். மிகையதார்த்தபூர்வமானதாகப் படைக்கலாம். மாந்த்ரீக யதார்த்தபூர்வமானதாகப் படைக்கலாம். இவ்விதம் கூறிக்கொண்டே போகலாம் கண்ணம்மா."
நான் இவ்விதம் கூறுவதை வழக்கம்போல் இடையில் புகுந்து தடுக்காமல் , அமைதியாக, ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள் மனோரஞ்சிதம். மெய்ஞானக்கருத்துகளில் மூழ்கிக்கிடக்கும் இவளை என் பக்கமும் சிறிது திருப்பவேண்டுமென்ற என் நெடுநாள் ஆர்வம் விரைவில் நிறைவேறும் போலுணர்ந்தேன். அவளுடன் அண்மைக்காலமாக நான் நடத்தும் உரையாடல்களும், அவற்றில் ஆர்வத்துடன் பங்குகொள்வதும் இவ்வித உணர்வை எனக்கு ஏற்படுத்தின.
நான் நிறுத்தும்வரை ஆர்வத்துடன் அவதானித்துக்கொண்டிருந்த மனோரஞ்சிதம் கூறினாள்: " கண்ணா, நீ மிகவும் தெளிவாக, ஆழமாக நீ கூறும் விடயங்களைப் புரிந்து வைத்திருக்கின்றாய். அதனால் மிகவும் சிக்கலான விடயங்களையெல்லாம் மிகவும் எளிமையாக் எடுத்துரைக்கின்றாய். தெளிந்த தண்ணீரினூடு தெரியும் நீரின் உட்புறம்போல் மிகவும் தெளிவாக நீ கூறுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது கண்ணா."
"கண்ணம்மா, என் தனிப்பட்ட கொள்கை, இலக்கியக்கொள்கை என்ன தெரியுமா?"
"என்ன கண்ணா?"
"எழுத்து ஆழமாகவிருக்க வேண்டும். அதே சமயம் தெளிவாக, எளிமையாகவுமிருக்க வேண்டும். கண்ணம்மா, இவை முக்கியமான நல்ல இலக்கியத்தின் தன்மைகள் என்பேன்."
இவ்விதம் நான் கூறவும் மனோரஞ்சிதம் பதிலுக்குக் கேட்டாள்:
"கண்ணா, எளிமையான எழுத்து , தெளிவான எழுத்து சிறந்த இலக்கியமொழியாக அமைய முடியுமா?"
"கண்ணம்மா, சிலப்பதிகாரம் எவ்வளவு எளிமையாக எழுதப்பட்டிருக்கிறது. மாசறு பொன்னே! வலம்புரி முத்தே, திங்கள் மாலை வெண் குடையான், இவை போன்ற எளிய, ஆனால் ஆழம் மிக்க மொழிநடையில் சிலப்பதிகாரம் இருப்பதால்தான் இன்று வரை அனைவராலும் வாசிக்கப்படுகின்றது. இதுபோல் தான் அவ்வையாரின் கவிதைகள், கம்பரின் காப்பியம், புகழேந்தியாரின் நளவெண்பா, திருக்குறள் இவை போன்று பல பழ்ந்தமிழ் நூல்களை உதாரணங்களாகக் கூற முடியும் கண்ணம்மா. இவையெல்லாம் எளிமையான மொழிநடையில் அமைந்த ஆழமான நூல்கள்."
குழந்தையொன்றின் ஆர்வத்துடன் மனோரஞ்சிதம் என்னையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். நான் கூறுவதை மனத்துக்குள் எடை போட்டுக்கொண்டிருந்தாள்.
"கண்ணம்மா, எழுத்தின் நோக்கம் பற்றி கேட்டாய். இந்தக் கேள்வி எனக்கு இலங்கைத் தமிழ்க் கவிஞனொருவனின் '*சிந்தனையும் மின்னொளியும்'கவிதையை நினைவூட்டுகின்றது. அதிலவன் கூறுவான் . மின்னலைப்போல் இருக்க வேண்டுமென்று. ஒரு கணமே வாழ்ந்தபோதும் அம்மின்னல் ஒளி தந்து மாண்டு விடுகின்றது. அச்சிறுவாழ்வில் அது சேவை செய்து முடிந்து விடுகின்றது. நம் வாழ்க்கை இப்படித்தான் பயனுள்ளதாகவிருக்க வேண்டும். இது இலக்கியத்துக்கும் பொருந்தும் கண்ணம்மா."
"'கண்ணா, கம்பன் வீட்டுக் கைத்தறியும் கவி பாடும்' என்பார்கள். உன்னுடன் இவ்விதம் உரையாடிக்கொண்டிருந்தாலே போதும் கல்விக்கூடங்கள் எவற்றுக்கும் போகத்தேவையில்லை. கவி கூடப் பாட முடியும் கண்ணா."
"கண்ணம்மா, நீ கடைசியாகக் கூறியது மிகவும் சரி. நிச்சயம் உன்னால் கவி பாட முடியும். ஏன் முயற்சி செய்து பார்த்தாலென்ன?"
"கண்ணா, ஏதோ ஆர்வக்கோளாறால் அவ்விதம் சொன்னேன். கவிதை இவளுக்கு வருமா?"
"நிச்சயம் வரும் கண்ணம்மா . வசனங்கள் சிலவற்றைக் கூறும் பார்ப்போம் . வருமா இல்லையா என்பதைப் பார்க்கலாம். "
"இவளுக்குக் கவிதை வருமா?
கண்ணா, வரும் என்கின்றாய் நீ.
ஆனால்,
இவளுக்குக் கவிதை வருமென்பதை
இவளால் இன்னும் நம்பமுடியவில்லையே!"
"கண்ணம்மா, இவளுக்குக் கவிதை வருமா எனறு கேட்டாய். வந்துள்ளதே. கவிதையென்பது உணர்வின் வெளிப்பாடு. இவ்வரிகள் உன் உணர்வுகளின் உண்மையான வெளிப்பாடு. இப்படியே உணர்வுகளைத் தொடர்ந்து வெளிப்படுத்து கண்ணம்மா. அவற்றை எழுதி வா."
"கண்ணா,
உணர்வுகளை வெளிப்படுத்தினேன்.
உணர்வுகளே கவிதை என்கின்றாய்.
உணர்வுகளின் உண்மை வெளிப்பாடே
உண்மைக்கவிதை என்கின்றாய்.
கண்ணா, இவளுக்குக் கவிதை வருமா?
இதயத்தில் இருந்ததைக் கொட்டினேன்.
இதுதான் கவிதையா கண்ணா?
சொல் கண்ணா!
இதுதான் கவிதையா?
"கவிஞை கண்ணம்மா அவர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள். கண்ணம்மா, நீ கூறியவற்றை ஒன்றாக்கினால் வருவது கவிதை.
இதுதான் கவிதையா?
இவளுக்குக் கவிதை வருமா?
கண்ணா, வரும் என்கின்றாய் நீ.
ஆனால்,
இவளுக்குக் கவிதை வருமென்பதை
இவளால் இன்னும் நம்பமுடியவில்லையே!"
கண்ணா,
உணர்வுகளை வெளிப்படுத்தினேன்.
உணர்வுகளே கவிதை என்கின்றாய்.
உண்ர்வுகளின் உண்மை வெளிப்பாடே
உண்மைக்கவிதை என்கின்றாய்.
கண்ணா, இவளுக்குக் கவிதை வருமா?
இதயத்தில் இருந்ததைக் கொட்டினேன்.
இதுதான் கவிதையா கண்ணா?
சொல் கண்ணா!
இதுதான் கவிதையா?
இவ்விதம் அவளது வரிகளை அடுக்கிக் கவிதையாக்கவே மனோரஞ்சிதத்துக்கு உற்சாகமும், உவகையும் புரண்டோடின. குழந்தைதையைப் போல் குதூகலத்திலாழ்ந்து போனாள்.
காலவெளியிடையே கண்ணம்மா உன்
கனிமனம் எண்ணி வியக்கின்றேன்.
காலவெளியிடையே கண்ணம்மா
கணமும் பறந்திட விளைகின்றேன்.
காலவெளிச் சிந்திப்பிலே கண்ணம்மா
களித்திட கணமும் எண்ணுகின்றேன்.
சூழலை மீறியே கண்ணம்மா அவன்போல்
சிந்திக்க விரும்புகின்றேன்.
காலமென்றொன்றில்லை கண்ணம்மா.
வெளியும் அவ்வாறே என்றான் கண்ணம்மா.
காலவெளி மட்டுமே கண்ணம்மா இங்கு
உண்மையென்றுரைத்தான்.
அவனறிவின் உச்சம் பற்றி கண்ணம்மா
பிரமித்துப்போகின்றேன்.
மனத்து அசை இன்னும் முடியவில்லை.
எப்பொழுதென்றாயினும் நீ கண்ணம்மா
எவ்விதம் அவனால் முடிந்ததென்று
எண்ணியதுண்டா ?
நான் எண்ணுகின்றேன் எப்பொழுதும் கண்ணம்மா.\
நான் வியந்துகொண்டிருக்கின்றேன் எப்பொழுதும்
கண்ணம்மா..
நான் எண்ணுவேன் எப்பொழுதும் கண்ணம்மா.
நான் வியந்துகொண்டிருப்பேன் எப்பொழுதும் கண்ணம்மா.
காலமற்ற வெளியில்லை கண்ணம்மா.
வெளியற்ற காலமில்லையா சொல்லம்மா.
காலம் நீயென்றால் கண்ணம்மா
வெளி நானன்றோ இல்லையா?
வெளி நானென்றால் கண்ணம்மா
காலம் நீயன்றோ இல்லையா?
காலவெளியன்றோ நாம் கண்ணம்மா!
காலவெளியன்றோ?
காலவெளியாகக் கண்ணம்மா - நாம்
உள்ளதெல்லாம் கண்ணம்மா
உண்மையா கண்ணம்மா? உண்மையா?
காலவெளிக் கோலமன்றோ கண்ணம்மா
ஞாலத்தில் நம்நிலை.
காலவெளிக் கடக்காக் கைதிகளா நாம் கண்ணம்மா?
கைதிகளா நாம்? ஆம்!
காலவெளிக் கைதிகளே நாம் கண்ணம்மா!
* சிந்தனையும் மின்னொளியும் கவிதையை எழுதியவர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்)
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.