ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா ஊடாக பல முற்போக்கு எழுத்தாளர்களை அறிந்துகொண்டேன். அத்துடன் தமிழக முற்போக்கு இலக்கிய இதழ்கள் சரஸ்வதி, தாமரை முதலானவற்றில் எழுதிய படைப்பாளிகள் பற்றியும் தெரிந்துகொண்டேன். அவர்களில் ஒருவரான எச். எம். பி. மொஹிதீன் பற்றி ஜீவா சொன்ன செய்திகள் வியப்பூட்டுவதாக இருந்தது. இவர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் அங்கத்தவர் எனவும், 1971 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் நடந்த கிளர்ச்சியையடுத்து கைதாகி சிறைவைக்கப்பட்டிருந்தார் எனவும் ஜீவா சொன்னார். யாழ்ப்பாணம் சிறையில் அக்காலப்பகுதியிலிருந்தவர்களில் ஒருவர்தான் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான ரோகண விஜேவீரா. மற்றவர் எழுத்தாளர் எச். எம். பி. மொஹிதீன். ரோகண விஜேவீரா, தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்களை எழுச்சிகொள்ளச்செய்து ஆயுதக்கிளர்ச்சியை மேற்கொண்டமைக்காக கைதானவர். ஆனால், மொஹிதீன் எழுத்தாயுதம் ஏந்தியமையால் கைதானவர் என்பதை தெரிந்துகொண்டேன். வட கொரியாவின் கிம் இல் சுங் எழுதிய சில புத்தகங்களை மொஹிதீனும் அவர் மூலமாக அவரது நண்பர்கள் சிலரும் மொழிபெயர்த்தனர். 1971 ஏப்ரில் கிளர்ச்சிக்கு வடகொரியாவின் சித்தாந்தங்களும் காரணமாக இருக்கலாம் என அன்றைய ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசின் புலனாய்வுப்பிரிவு தீர்மானித்ததன் விளைவுதான் எச். எம். பி. மொஹிதீனின் சிறைவாசம்.
எச்.எம்.பி. கைதானதும் பல வதந்திகள் உலாவத் தொடங்கின. அவரது விரல் நகங்களில் ஊசிகள் ஏற்றப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. யாழ்ப்பாணம் சிறையிலிருந்து அவர் திடீரென விடுதலையானதுமே முதலில் அவர் யாழ். கஸ்தூரியார் வீதியில் இயங்கிக்கொண்டிருந்த மல்லிகை காரியாலயத்தில் டொமினிக் ஜீவாவை தேடிச் சென்றார். பின்னர் கொழும்பில் வசித்த தனது மனைவி பிள்ளைகளுக்காக யாழ்ப்பாணம் மாம்பழம் வாங்கிக்கொண்டு புறப்பட்டார்.
எச்.எம்.பி. கைதான சமயம் அவரது மனைவி கர்ப்பிணி. இரக்கமின்றி அவரை சிறை வைத்தது அம்மையாரின் அரசு. எச்.எம்.பி . சிறை மீண்ட பின்பே குழந்தையைப் பார்த்தார். “இது தான் எனது ஜெயில் பரிசு “ என்று அவர் நண்பர்களுக்கு குழந்தையை அறிமுகப்படுத்தும்போது நாம் நெகிழ்ந்து விடுவோம்.
முதல் முதலில் 1973 ஆம் ஆண்டு அவரை கொழும்பு சட்டக்கல்லூரியில் பூரணி காலாண்டிதழ் அறிமுகவிழாவில் பார்த்த சமயம் அவரின் கைவிரல்களைத்தான் தடவிப்பார்த்து நண்பனானேன். அவ்விரல்களில் காயங்களைத் தேடினேன். 1971 இல் எச். எம்.பி. மொஹிதீன் கைதான சமயம். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பணிப்பாளர் சபையிலிருந்தார். கைதுடன் அந்தப் பதவியும் பறிபோனது. உரத்துப் பேசுவது , அட்டகாசமாய் சிரிப்பது எச்.எம்.பி. க்கே உரித்தான இயல்பு. ஒரு காலத்தில் தீவிர இடதுசாரியாக விளங்கிய எச்.எம்.பி., பல போராட்டங்களிலும் கலந்துகொண்டார். எழுத்து அவருக்கு ஆயுதமாகவே பயன்பட்டது. ஜெயகாந்தன், ரஷ்ய எழுத்தாளர் விதாலி ஃபுர்ணிக்கா முதலானோரின் அன்புக்கும் இவர் பாத்திரமாகக் காரணம் , ரஷ்யாவின் உக்ரேயின் கவிஞர் தராஸ் செவ் சென்கோவை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் எச்.எம்.பியும் ஒருவர் என்பதுதான்.
எச்.எம்.பி. யின் அரசியல் , இலக்கிய வாழ்வு பல தடவைகள் தடம்புரண்டமை விமர்சனத்துக்கும் கவலைக்குமுரியது. அவருக்குக்கிட்டிய பணிப்பாளர் பதவியும் இந்தத் தடம்புரளலுக்குக் காரணமாயிருந்த போதிலும் அப்பதவியையும் அவர் தக்க வைத்துக் கொள்ளத் தவறினார். ரஷ்ய சார்பு கம்யுனிஸ்டாகவும் பின்பு சீன சார்பாளராகவும் மாறிய எச்.எம்.பி 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்ரீமா அம்மையாரின் நண்பரானார். இந்த நட்பு வழங்கிய பதவிதான் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் பணி.
சிறை மீண்ட எச்.எம்.பி. முழு நேர எழுத்தாளனாகவும் பத்திரிகையாளனாகவும் மாறினார். மீண்டும் ஸ்ரீமா அம்மையாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, அவரது கட்சிப்பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் இணைந்தார். தினகரனில் அபியுக்தனாகி பத்தி எழுத்தாளர்களின் வரிசையில் சேர்ந்தார். புதுக்கவிதையாளர்கள் பலர் அறிமுகமாவதற்கும், பலர் கவிதை என்ற பெயரில் கவியுலகத்திற்கு அநியாயம் செய்வதற்கும் இந்த அபியுக்தன் வழிவகுத்தார் என்பதும் கசப்பான உண்மை.
எச்.எம்.பி . சில நூல்களை எழுதியபோதிலும், அவரது அறிஞர் அஸீஸ் சில நினைவுகள் நூலே பரபரப்புக்குள்ளானது. அறிஞர் அஸீஸ் சாஹிறாக் கல்லூரியின் முன்னாள் அதிபர். செனட்டர். பல படைப்பாளிகள், த்திரிகையாளர்கள், கல்விமான்களின் ஆசான். பேராசிரியர் சிவத்தம்பி, தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன், எச்.எம்.பி . முதலானோரும் அஸீஸின் அபிமானத்துக்குரிய மாணவர்கள். அஸீஸ் மறைந்ததும் அவரது நினைவுகளை தினகரன் மூலம் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட எச்.எம்.பி. பின்பு அதனை நூலாக்கி வெளியிட்டார். இதற்கு எதிர்வினையாக மேலும் இரண்டு நூல்கள் அக்காலப்பகுதியில் வெளிவந்தன. துடுக்காகப் பேசுவதிலும் , தனது மனதுக்கு சரியெனப் பட்டதை தயங்காமல் சொல்வதிலும் முன்னிற்கும் எச்.எம்.பி. க்கு அவரது பேச்சும் எழுத்துமே எதிரிகளாகிய உண்மையை அவர் பிற்காலத்தில் உணர்ந்தார்.
உண்மைகள் சுடும் ! அவை கசப்பானவை ! எச்.எம்.பி. பல உண்மைகள் சொன்னார். யதார்த்தவாதி வெகுசனவிரோதி என்பதற்கு எங்கள் எச்.எம்.பி.யும் ஒரு உதாரணம். படைப்பாளிகள், பத்திரிகையாளர்களுக்கு அவர் ஒரு பாடம். எச்.எம்.பி. மொஹிதீனுடன் இணைந்து கொழும்பு – குருநாகல் – நீர்கொழும்பு முதலான பிரதேசங்களில் சில இலக்கியக்கூட்டங்களிலும் உரையாற்றியிருக்கின்றேன். மினுவாங்கொடையில் நடந்த கூட்டமொன்றில் அவர் அல்லாமா இக்பால் பற்றி உரையாற்றியபொழுது உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டார். அதனைப்பார்த்த சபையினரும் அழுதுவிட்டார்கள். அவ்வாறு உணர்ச்சிகரமாகப் பேசவல்ல எச்.எம்.பி. பழகுவதற்கு இனிமையானவர். எவருடனும் சகஜமாக பேசுவார். பந்தாக்கள் அற்ற பண்புகள் அவரிடம் இருந்தன. அவர் சொன்ன பல சுவாரஸ்யமான கதைகள் அவரைப் போன்று நெஞ்சில் பதிந்தவை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.