இலங்கையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் சிலரை மாண்பு மிகு ஜனாதிபதி திரு. ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் விடுவித்திருப்பதற்கு நன்றியும், தெரிவித்து, ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிப்பதற்கு அவர் ஆவனசெய்யவேண்டும் எனக்கோரும் கடிதம் ஒன்றை அவுஸ்திரேலியா வாழ் மூவீனத்தையும் சேர்ந்த இலங்கையர்கள், தங்கள் இலங்கை நண்பர்கள் கழகத்தின் ஊடாக அனுப்பிவைத்துள்ளனர்.
இந்த வாரம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இலங்கையில் நெருக்கடியான நேரத்தில் ஜனாதிபதியாக தெரிவாகிய தங்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிக்கின்ற அதே சமயம், நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த சில அரசியல் கைதிகளை விடுவித்த தங்களது பெருந்தன்மையான நிலப்பாட்டை நம்நாட்டின் அமைதியை விரும்பும் அனைத்து குடிமக்களும் வரவேற்கிறோம். துரதிரஷ்டவசமாக, சட்டப்படி குற்றப் பத்திரிக்கை வழங்கப்படாமல் இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் குற்றவாளிகளா, குற்றம் சுமத்தப்பட்டவர்களா அல்லது இன்னும் குற்றம் சுமத்தப்படாதவர்களா என்பதைப் பொருட்படுத்தாமல் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீதான எல்லா நடவடிக்கைகளும் சட்டப்படி எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் கடுமையானது – விரும்பத்தகாதது. எனினும் தவிர்க்க முடியாமல் உருவாக்கப்பட்டது என்பதை இலங்கை அரசு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏற்றுக்கொண்டது. குறிப்பிட்ட இந்தச் சட்டத்தை நீக்க இலங்கை அரசு பல முயற்சிகளை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மேற்கொண்டு, ஏற்றுக் கொள்ளக்கூடிய உள்நாடு மற்றும் வெளிநாட்டுக் கோட்பாட்டிற்கு இணங்க புதிய சட்டம் ஒன்று இயற்றப்படவேண்டும். இலங்கை அரசு இன்னமும் இக்கடமையை நிறைவேற்ற தாமதிப்பதனால், , இந்தச் சட்டம் தொடர்ந்தும் நிறைவேற்றுச் சட்டத்தொகுப்பில் இடம்பெறுகிறது.
இச்சட்டத்தின் கீழ் கைதான பெரும்பாலானவர்களுக்கு எதிராக கிடைக்கும் ஒரே சாட்சியான அவர்களின் விருப்பத்துக்கு மாறாக பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் பெறப்பட்ட வாக்குமூலமானது நடைமுறையில் சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியததாகும். அவர்கள் மீதான வழக்கைத் தொடர்வதற்கு வழக்குகள் தயாராக இல்லாததால் இவ்வழக்குகளில் அநேகமானவை ஒத்திப்போடப்பட்டுள்ளன. அவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைவரும் வெகுகாலமாக காவலில் இருக்கிறார்கள். அவர்களை காவலில் எடுத்த உடனேயே நீதிவிசாரணை மேற்கொண்டிருந்தால், அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும். காவலில் இருப்பவர்களின் குடும்பத்தினர், குடும்பத்திற்காக உழைப்பவரின்றி வெகுகாலமாக துன்பமடைந்துள்ளனர். அதிமுக்கியமான இக்காரணிக்காக கொடுக்கவேண்டிய கவனத்தை பயங்கரவாத தடைச்சட்டம் கொடுக்கவில்லை.
குறிப்பிட்ட இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கடுமையான இயல்பைத் தவிர்த்தமையால்தான், 1971 ஆம் ஆண்டு காலத்தில் நடந்த உள்நாட்டுக்கிளர்ச்சியில் கைதானவர்கள் ( ஜே. வி. பி ) நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டார்கள். அவர்கள் பின்னர் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப் பட்டார்கள். ஏன் அதே வழிமுறையை தற்போது தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கடைப்பிடிக்க முடியவில்லை என்பதை எம்மால் அறியமுடியவில்லை. இந்த வழக்குகள் அனைத்தும் அரசாங்க சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆதிக்கவரம்பின் கீழ் வருவதாக கருதமுடியாது. மாண்புமிகு சட்டமா அதிபர், அரசின் தலைமைச் சட்ட ஆலோசகராகும்போது, இந்த வழக்குகள் அரசின் பரிமாணத்தைப் பெறுகிறது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையானது குறித்த காலத்தில் தீர்க்கப்பட்டிருக்குமேயானால், காவலில் இருக்கும் அதிகப்படியானோர் இப்போதுள்ள நிலையில் இருந்திருக்க மாட்டார்கள். நாட்டுக்கும் சமூகத்திற்கும் பலனளிக்கும் குடிமக்களாக இருந்திருப்பார்கள் என்று நியாயமாக சொல்லியிருக்க முடியும். எனினும் ஜனாதிபதியாக வந்த பின்னர் தாங்கள் இந்த அரசியல் கைதிகள் விடயத்தில் காண்பித்திருக்கும் கரிசனையை நாம் வரவேற்கின்றோம்.
எஞ்சியிருக்கும் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் மனிதாபிமான அடிப்படையில் தாங்கள் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும் எனக் கோருகின்றோம். இதுவிடயத்தில் மேலும் தாமதிக்காமல் இதர தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.